பி.எம்.இந்தியா

PM's Message

எனதருமை குடிமக்களே!

நமது இந்திய மரபுகளில் சேவைதான் முதன்மையான கடமை – சேவா பர்மோ தர்ம. ஒரு வருடத்திற்கு முன்பு முதன்மை சேவகனாக உங்களுக்கு பணியாற்றும் பொறுப்பையும், கவுரவத்தையும் என்னிடம் ஒப்படைத்தீர்கள். ஒரு நாளின் ஒவ்வொரு தருணத்தையும், என் உடலின் ஒவ்வொரு அணுவையும், உற்சாகத்தையும், முழுமையான நேர்மையுடனும், ஒழுங்குடனும் இப்பணியை நிறைவேற்ற அர்ப்பணித்தேன்.

இந்தியா தனது நம்பிக்கையை இழந்து கொண்டிருந்த சமயத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். ஊழலும், முடிவற்ற தன்மையும் அரசை செயலற்ற நிலைக்கு தள்ளியிருந்தன. அதிகரிக்கும் பண வீக்கம், பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவற்றால் மக்கள் உதவி இழந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். அவசரமான, தீர்மானமான செயல்பாடு தேவைப்பட்டது.

இந்த சவால்களை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டு செயல்பட்டோம். ஏறும் விலைவாசி உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நிலையான, கொள்கை அடிப்படையில், முன்முயற்சி எடுக்கும் நிர்வாக கட்டுமானத்தில் நலிவுற்ற பொருளாதாரம் சீரமைக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு தன்னிச்சையாக நமது அரிய இயற்கை வளங்கள் ஒதுக்கப்பட்டது, மாற்றப்பட்டு வெளிப்படையான ஏலமுறை கொண்டுவரப்பட்டது. சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்பது, கறுப்புப் பணத்திற்கு எதிரான கடுமையான சட்டம், இந்த விசயத்தில் சர்வதேச கருத்தொற்றுமையை ஏற்படுத்துவது போன்ற கறுப்புப் பணத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தூய்மையான கொள்கையை செயல் வடிவிலும் நோக்கத்திலும் எந்த சமரசமும் இன்றி பின்பற்றி ஊழலற்ற அரசாங்கம் உறுதி செய்யப்பட்டது. பணிக் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தொழில் திறனும், நேயமும் இணைந்த பணிச் சூழல் ஏற்படுத்தப்பட்டது. நாட்டு வளர்ச்சியிலும், இந்தியா ஒரு குழு என்ற மனப்பான்மையை ஏற்படுத்துவதிலும் மாநில அரசுகள் சம பங்காளிகள் ஆக்கப்பட்டன. மிக முக்கியமாக, அரசின் மீதான நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுக்க முடிந்திருக்கிறது.

அந்தியோதயா கொள்கையின் வழிகாட்டுதல்படி, நமது அரசை ஏழைகள், விளிம்புநிலையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அர்ப்பணித்துள்ளோம். அவர்களுக்கு அதிகாரம் அளித்து வறுமைக்கு எதிராக போராடும் வீரர்களாக்கவும் நாங்கள் பாடுபடுகிறோம். ஏராளமான முயற்சிகளும், திட்டங்களும் துவக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கழிவறைகள் கட்டுவதிலிருந்து அகில இந்திய தொழில்நுட்ப பயிலகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், அகில இந்திய மருத்துவக் கழகங்கள் அமைப்பது வரை, நமது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதிலிருந்து தூய்மை இந்தியா மக்கள் இயக்கத்தை முன்னெடுப்பது வரை, நமது தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்வதிலிருந்து, சாதாரண மனிதனுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பது வரை, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட நமது விவசாயிகளுக்கு ஆதரவை அதிகரிப்பதிலிருந்து உலக வர்த்தக நிறுவனத்தில் அவர்களது நலன்களைப் பாதுகாப்பது வரை, சுய சான்றொப்பம் அளிக்கச் செய்து அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதிலிருந்து மக்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியத்தை செலுத்துவது வரை, வங்கி முறையை அனைவருக்குமாக ஆக்குவதிலிருந்து சிறிய தொழில்களுக்கு நிதி உதவி செய்வது வரை, வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதிலிருந்து கங்கையை தூய்மைப்படுத்துவது வரை, 24×7 மணி நேரமும் மின்சாரத்தை அளிப்பதிலிருந்து நாடு முழுவதும் சாலை, ரயில் வசதிகளை அளிப்பது வரை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவதிலிருந்து, ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது வரை, வடகிழக்கை இணைப்பதிலிருந்து கிழக்கு இந்தியா வளர்ச்சியை முதன்மைப்படுத்துவது வரை இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நண்பர்களே, இது துவக்கம் மட்டுமே. நமது நோக்கமானது வாழ்க்கைத் தரத்தையும், உள்கட்டுமான மற்றும் சேவைகளையும் மேம்படுத்துவதுதான். நாம் ஒன்றிணைந்து உங்கள் கனவுகளுக்கு ஏற்றவாறு, நமது சுதந்திரப் போராட்ட தியாகிகள் விரும்பியவாறு இந்தியாவைக் கட்டமைப்போம். இதற்காக உங்களது ஆசிகளையும், தொடர் ஆதரவையும் நான் வேண்டுகிறேன்.

எப்பொழுதும் உங்கள் சேவையில்,

ஜெய் ஹிந்த்!

நரேந்திர மோடி

 
நரேந்திர மோடி
PM's Message