பி.எம்.இந்தியா

திரு. குல்சாரி லால் நந்தா

மே 27, 1964 - ஜூன் 9, 1964 | காங்கிரஸ்

திரு. குல்சாரி லால் நந்தா

திரு. குல்சாரி லால் நந்தா 1898 ஜூலை 4ம் தேதி பிறந்தார். அவர் லாகூர், ஆக்ரா, அலகாபாத் ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். 1920 முதல் 1921 வரை அலகாபாத் பல்கலைகழகத்தில் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்தார். 1921ல், பம்பாயின் தேசிய கல்லூரியில் பொருளாதார துறை பேராசிரியரானார். அதே ஆண்டு அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1922-ல் அகமதாபாத் ஜவுளி தொழிலாளர் சங்கத்தின் செயலர் ஆனார். 1946 வரை அவர் இங்கு பணிபுரிந்தார். 1932-ல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக  அவர் சிறைபிடிக்கப்பட்டார். மீண்டும் 1942 முதல் 1944 வரை அதே காரணத்திற்காக அவர் சிறை வைக்கப்பட்டார்.

1937-ல் திரு. நந்தா பம்பாய் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 முதல் 1939 வரை பம்பாய் அரசின் நாடாளுமன்ற செயலராக (தொழிலாளர் மற்றும் கலால்) பணிபுரிந்தார். பின்னர் 1946 முதல் 1950 வரை பம்பாய் அரசின் தொழிலாளர் நல அமைச்சராகப் பணியாற்றிய அவர் தொழிலாளர் பிரச்சனைகள் மசோதாவை பம்பாய் சட்டமன்றத்தில் வெற்றிகரமாக இயற்றினார். கஸ்தூரிபாய் நினைவு அறக்கட்டளையின் செயலராகவும், ஹிந்துஸ்தான் மஸ்தூர் சேவக் சங்கத்தின்  செயலராகவும், பம்பாய் வீட்டு வசதி வாரியத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார். இந்திய தேசிய வர்த்தக யூனியன் காங்கிரஸை அமைக்கத் தூண்டுகோலாக இருந்த அவர் பிறகு அதன் தலைவரானார்.

1947-ல், ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச உழைப்பாளர் மாநாட்டிற்கு அரசின் பிரதிநிதியாகச் சென்றார். இந்த மாநாட்டுக் குழுவால் நியமிக்கப்பட்டு சங்கத்தின் குழுவில் அவர் பணிபுரிந்தார். உழைப்பாளர் நலன் மற்றும் வீட்டு வசதி சூழ்நிலை குறித்து பயில ஸ்வீடன், பிரான்ஸ், சுவிஸ்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டார்.

மத்திய திட்ட குழுவின் துணை தலைவராக 1950 மார்ச் மாதம் பதவியேற்றார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய அரசின் திட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். நீர்பாசனம், எரிசக்தி துறையின் கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. 1952 பொது தேர்கலின் போது மக்களவைக்கு பம்பாய் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபடியும் அவர் திட்டம், நீர்பாசனம் மற்றும் எரிசக்தி துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1955-ல் சிங்கப்பூரில் நடைபெற்ற திட்ட ஆலோசனை குழுவிற்கும் 1959-ல் ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டிற்கும் சென்ற இந்திய பிரதிநிதி குழுவிற்கு இவர் தலைவராக இருந்தார்.

திரு. நந்தா 1957-ல் நடைபெற்ற பொது தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகத்  தேர்வு செய்யப்பட்டார். மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை மற்றும் திட்ட அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, திட்ட குழுவின் துணைத் தலைவராகப் பதவியேற்றார். 1959ம் ஆண்டு பெடரல் ரிப்பப்ளிக் ஆப் ஜெர்மனி, யூகோஸ்லோவியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளக்குப்  பயணம் மேற்கொண்டார்.

1962ல் நடைபெற்ற பொது தேர்தலில் குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா தொகுதியிலிருந்து அவர் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-ல் ‘காங்கிரஸ் போரம் பார் ஸோஷியலிஸ்ட் ஆக்வின் என்ற அமைப்பைத் துவக்கி வைத்தார். 1962, 1963-ல் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும், 1963 முதல் 1966 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.

பண்டிட் நேருவின் மறைவிற்கு பிறகு, மே 27, 1964ல் அவர் இந்தியா பிரதமராக பதவியேற்றார். திரு. லால்பகதூர் சாஸ்திரி மறைவிற்கு பிறகு ஜனவரி 11, 1966 மீண்டும் அவர் பிரதமராக பதவியேற்றார்.