பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவில் உலக தொழில்முனைவோர் மாநாடு 2017-ஐ இணைந்து நடத்துவதற்காக இந்தியா – அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் உலக தொழில்முனைவோர் மாநாடு 2017-ஐ இணைந்து நடத்துவதற்காக இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாநாட்டை சுமூகமாக நடத்துவதற்காக இருதரப்புக்கும் இடையேயான தளவாடங்கள் மற்றும் இடம் தொடர்பான தேவைகள் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான பகுதிகள் மற்றும் பொறுப்புகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரையறுக்கிறது.

இந்த உலக தொழில்முனைவோர் மாநாடு 2017, தொழில்முனைவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் சர்வதேச தொழில் துறை தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பை அளித்தது. மேலும், இணைப்பு அமர்வுகள், போட்டிகளை ஏற்படுத்துதல், பாதுகாப்பு தொடர்பான பணிமனைகள் மற்றும் புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான துறை ரீதியான திட்டங்களை வகுத்தல் ஆகியவற்றுக்கும் வழிவகை செய்தது. இந்த மாநாடு, இளம் தொழில்முனைவோர்கள், குறிப்பாக பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு நீண்டகால அடிப்படையில் பொருளாதார வாய்ப்பை அதிகரிக்க அடித்தளம் அமைத்தது.

பின்னணி 

உலக தொழில்முனைவோர் மாநாடு 2017, ஐதராபாத்தில் நவம்பர் 28-30, 2017-ல் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 150 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதோடு, சர்வதேச நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கொள்கையை வகுப்பவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

8-வது சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டை, 2017-ம் ஆண்டில் இந்தியாவில் நடத்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கும், அப்போதைய அமெரிக்க அதிபர் திரு. பராக் ஒபாமாவுக்கும் இடையே 2016-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது, கூட்டு உடன்படிக்கையின்படி முடிவுசெய்யப்பட்டது. இதனை அமெரிக்காவுக்கு 2017-ம் ஆண்டு ஜூன் 25-27-ல் பயணம் மேற்கொண்டபோது பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவில் நடைபெற உள்ள சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க குழுவுக்கு தலைமைவகித்து வருமாறு அமெரிக்க அதிபருக்கான ஆலோசகர் செல்வி. இவாங்கா டிரம்ப்-புக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

வளர்ந்துவரும் தொழில்முனைவோருக்கு தலைசிறந்த அமைப்பாக சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு விளங்குகிறது. இந்த மாநாடு, சர்வதேச தொழில் துறை தலைவர்களை சந்திப்பதற்கும், சர்வதேச தொழில் முனைவோர்கள், புத்தாக்கம் செய்பவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை இணைக்கவும் வாய்ப்பை அளிக்கிறது. தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே போட்டிகள், பாதுகாப்பு பணிமனைகள் மற்றும் துறைரீதியான திட்டங்களில் புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்த வழிவகை செய்கிறது. இளம் தொழில்முனைவோர், குறிப்பாக பெண் தொழில்முனைவோர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய இந்த மாநாடு வழிவகை செய்கிறது.

*****