பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த “மாற்றத்துக்கான சாம்பியன்கள்” நிகழ்ச்சியில் இளம் தொழில்முனைவோர் மத்தியில் பிரதமர் உரை

நிதி ஆயோக் அமைப்பு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மையத்தில் (பிரவாசி பாரதீய கேந்திரா) ஏற்பாடு செய்திருந்த “மாற்றத்துக்கான சாம்பியன்கள்” நிகழ்ச்சியில் இளம் தொழில்முனைவோருடன் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

மென்மையான அதிகாரம் : அற்புதமான இந்தியா 2.0; கல்வியும் தொழில்திறன் மேம்பாடும்; ஆரோக்கியமும் சத்துணவும்; நீடித்த எதிர்காலத்துக்கு சக்தி உருவாக்குதல்; மற்றும் டிஜிட்டல் இந்தியா ; 2022ல் புதிய இந்தியா போன்ற தலைப்புகளில் இளம் தொழில்முனைவோர்களின் ஆறு குழுக்கள் பிரதமர் முன் கருத்துகளை முன்வைத்தன.

தொழில்முனைவோர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தபோது முன்வைத்த புதிய எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளைப் பாராட்டிய பிரதமர், கடந்த காலத்தில் அவ்வப்போது சமூக தூண்டுதல்கள் பரவலாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருந்தன என்றும், இந்த இயக்கங்கள் சமூகத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டன என்றும் கூறினார்.

“மாற்றத்துக்கான சாம்பியன்கள்” என்ற இந்த தூண்டுகோல் முயற்சி, நாட்டின் மற்றும் சமூகத்தின் பயனுக்காக பன்முக பலங்களை ஒன்று சேர்க்கும் ஒரு முயற்சியாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்த முயற்சி இயன்ற அளவுக்கு சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட்டு, முறைப்படுத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இப்போது கருத்துகளை முன்வைத்த குழுக்களை மத்திய அரசின்  தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன்  இணைந்து செயல்படும்படி செய்வது அதில் ஒரு சாத்தியக்கூறாக இருக்கும் என்றார் அவர்.

சமூகத்தில் வெளியில் அறியப்படாத கதாநாயகர்களை அங்கீகரிக்கும் வகையில் பத்ம விருதுகளுக்கான நடைமுறைகள் எவ்வாறு மாற்றப்பட்டன என்ற உதாரணத்தை அவர் குறிப்பிட்டார்.

மக்களின் மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் வழிகளை ஆராய்வதில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். தொழில்முனைவோர் அந்தந்தக் குழுக்களில் தங்கள் சிந்தனைகளைத் தொடர வேண்டும் என்று அவர் ஊக்கப்படுத்தினார். அவர்கள் அவ்வாறு செய்தால் ஆட்சி நிர்வாகத்தின்  நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவர்கள் நீண்டதூரம் செல்ல முடியும் என்று தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஏராளமான சிறிய மாறுதல்கள், கணிசமான பயன்களைத் தந்துள்ளதாக பிரதமர் கூறினார். தாங்களே சான்றொப்பக் கையெழுத்திடலாம் என்ற சாமானிய மக்கள் மீது நம்பிக்கை வைக்கும் நடவடிக்கை, அதுபோன்ற முயற்சி என பிரதமர் குறிப்பிட்டார். மத்திய அரசில் குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளுக்கு நேர்காணல் செய்யும் முறையை ரத்து செய்தது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைக்கு எந்தவொரு இடைவெளியையும் நிரப்புவதற்கு ஒரு “செயலி” வந்துவிட்டது என்றும் கூறினார். ஆட்சி நிர்வாகத்தை மாற்றி அமைப்பதில் தொழில்நுட்பமும் புதுமை சிந்தனையும் செம்மையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கிராமப்புற பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு, பரவலாக்கப்பட்ட கட்டமைப்பு முறைகள் முக்கியம் என்றும் கூறினார். இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில், மாற்றங்களை ஊக்குவிப்பதில் ஸ்டார்ட்அப் தொடக்க முயற்சிகளின் பங்கு பற்றியும் குறிப்பிட்டார்.

சமூகத்தில் நல்ல ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் ஒரு பெரிய உந்துதலைத் தர முடியும் என்று குறிப்பிட்டார்.

அரசின் சமூக நலத் திட்டங்களை தங்கள் ஊழியர்களிடம் பரப்புவதில் தொழில்முனைவோர்  முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

கோடிக்கணக்கான சாதாரண குடிமக்களின் முயற்சிகளால் மட்டுமே புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார். இந்த முயற்சியில் தொழில்முனைவோர்களும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பல மத்திய அமைச்சர்களும், நிதி ஆயோக் துணைத் தலைவர் திரு. அரவிந்த் பனகாரியாவும், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த் ஒருங்கிணைப்பு செய்தார்.