பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

என் அன்புக்குரிய குடிமக்களே

தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடனும் புதிய நம்பிக்கையுடனும் கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்றைக்கு, சில முக்கியமான விஷயங்கள் குறித்தும் முக்கியமான முடிவுகள் குறித்தும் உங்களுடன் நான் பேசப் போகிறேன். இன்றைக்கு உங்கள் அனைவரிடமும் விசேஷமான கோரிக்கை ஒன்றை வைக்க விரும்புகிறேன். 2014 மே மாதம் கனமான பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்த போது இருந்த பொருளாதார நிலைமையை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். BRICS சூழ்நிலையில், BRICS -ல் உள்ள `I’ தடுமாற்றத்தில் உள்ளது என்று பேசப்பட்டது. அப்போதிருந்து, நமக்கு இரண்டு ஆண்டுகள் கடுமையான வறட்சி. இருந்தாலும், கடந்த இரண்டரை ஆண்டுகளில், 125 கோடி இந்தியர்களின் ஆதரவுடன், உலக பொருளாதாரத்தில் இந்தியா “பிரகாசமான இடமாக” மாறிவிட்டது. இதை வெறுமனே நாம் மட்டும் கூறவில்லை; பன்னாட்டு நிதியமும் உலக வங்கியும் இதைக் கூறியுள்ளன.

வளர்ச்சிக்கான இந்தய முயற்சியில், எங்களின் குறிக்கோள் `நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம் எல்லோரும் வளர்ச்சி காண்போம்’ என்பதாகத்தான் இருந்தது: அனைத்து குடிமக்களுடனும் நாம் இருக்கிறோம். அனைத்து குடிமக்களின் வளர்ச்சிக்காக நாம் இருக்கிறோம். இந்த அரசாங்கம் ஏழைகளுக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அவர்களுக்கான அர்ப்பணிப்பு தொடரும். ஏழ்மைக்கு எதிரான எங்களது போரில், ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து, பொருளாதார முன்னேற்றத்தில் அவர்களை தீவிர பங்கேற்பாளர்களாக ஆக்கிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய முதன்மையான கவனமாக இருந்தது.

பிரதமரின் ஜன் தன் திட்டம்,

ஜன சுரக்ஷா திட்டம்,

சிறு தொழில் முனைவோருக்கான பிரதமரின் முத்ரா திட்டம்,

தலித்கள், ஆதிவாசிகள் மற்றும் மகளிருக்கான ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம்,

ஏழைகளின் வீடுகளுக்கு எரிவாயு இணைப்புகள் தருவதற்கு பிரதமரின் உஜ்வாலா திட்டம்,

விவசாயிகளின் வருவாயைப் பாதுகாக்க பிரதமரின் பாஸ்கல் பீமா திட்டம் மற்றும் பிரதமரின் கிரிஷி சிஞ்சய் திட்டம்

விவசாயிகளின் நிலங்களில் சாத்தியமாகக் கூடிய சிறந்த சாகுபடியை உறுதி செய்வதற்கு மண் வள அட்டை திட்டம்

மற்றும்

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சரியான விலையை விவசாயிகள் பெறுவதை உறுதி செய்வதற்கு e-NAM தேசிய மார்க்கெட் பிளேஸ் திட்டம்

– இவை அனைத்தும் இந்த அணுகுமுறையின் பிரதிபலிப்புகள்.

கடந்த தசாப்தங்களில், ஊழல் மற்றும் கருப்புப் பணத்தின் தோற்றங்கள் அதிகரித்துவிட்டன. ஏழ்மையை அகற்றும் முயற்சியை அவை பலவீனப்படுத்திவிட்டன. ஒரு பக்கத்தில், பொருளாதார வளர்ச்சியில் நாம் இப்போது நம்பர் 1 ஆக இருக்கிறோம். ஆனால், மறுபுறத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் ஊழல் கண்ணோட்டத்தில் நாம் நூறாவது இடத்துக்கு அருகே ரேங்க்கில் இருந்தோம். பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், இப்போது நம்மால் எழுபத்தி-ஆறாவது இடத்தை மட்டுமே எட்ட முடிந்துள்ளது. மேம்பாடு இருந்திருப்பது உண்மைதான். ஊழலும் கருப்புப் பணமும் தங்கள் கரங்களை எந்த அளவுக்கு பரவலாக்கியுள்ளன என்பதை இது காட்டுகிறது.

சமூகத்தில் சில பிரிவினர் தங்கள் சுய லாபத்துக்காக ஊழல் என்ற கெடுதலை பரப்பியுள்ளனர். ஏழைகளை அவர்கள் புறக்கணித்துவிட்டு, பலன்களை அபகரித்துக் கொள்கிறார்கள். சிலர் தங்கள் அதிகாரத்தை சுய லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துகின்றனர். மற்றொரு புறத்தில், இந்தக் கொடுமைக்கு எதிராக நேர்மையானவர்கள் போராடுகிறார்கள். கோடிக்கணக்கான சாமானிய மனிதனும் பெண்களும் நேர்மையான வாழ்க்கை வாழ்கின்றனர். தன்னுடைய ஆட்டோவில் விட்டுச் செல்லப்பட்ட தங்க நகைகளை உரிய உரிமையாளர்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் திருப்பித் தந்ததைப் பற்றி நாம் கேள்விப் படுகிறோம். தனது டாக்சியில் விட்டுச் செல்லப்பட்ட செல்போன்களின் உரிமையாளரை கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்கும் டாக்சி ஓட்டுநர்கள் பற்றி நாம் கேள்விப் படுகிறோம். வாடிக்கையாளர்கள் கூடுதலாக தந்த பணத்தை திருப்பித் தரும் காய்கறிக்காரரைப் பற்றி கேள்விப் படுகிறோம்.

வலுவான மற்றும் உறுதியான நடவடிக்கை தேவை என உணரப்படும் நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கான வரலாற்றில் ஒரு நேரம் வந்துவிட்டது. ஊழல், கருப்புப் பணம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை, வளரும் புண்களைப் போன்றவை என்றும், வளர்ச்சிக்கான நமது ஓட்டத்தில் நம்மை பின்னுக்கு இழுப்பவை என்றும் ஆண்டாண்டு காலமாக இந்த நாடு கருதி வந்துள்ளது.

தீவிரவாதம் என்பது அச்சுறுத்தலான ஆபத்து. அதனால் பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். ஆனால் இந்தத் தீவிரவாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா? எல்லைக்கு அப்பால் இருந்து பகைவர்கள் கள்ள நோட்டுகள் மூலமாக தங்கள் நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இது நடந்து கொண்டிருக்கிறது. ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருப்பவர்கள் பல முறை பிடிக்கப்பட்டு, அந்த நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

சகோதர சகோதரிகளே,

ஒரு கையில் தீவிரவாதம் என்ற பிரச்சினை ; மற்றொரு கையில் ஊழல் மற்றும் கருப்புப் பணத்தால் ஏற்படுத்தப் பட்டுள்ள சவால். நாம் பதவியேற்ற உடனேயே ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து, ஊழலுக்கு எதிரான நமது போரை நாம் தொடங்கினோம். அப்போதிருந்து

• வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பண விவரத்தை தெரிவிப்பதற்கு 2015-ல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது;

• வங்கி செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன;

• ஊழல் மூலம் ஈட்டப்பட்ட கருப்புப் பணத்தை பிரித்து வைப்பதற்கான பினாமி பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவதற்கு ஆகஸ்ட் 2016ல் இருந்து கடுமையான ஒரு சட்டம் அமலுக்கு வந்தது;

• கடுமையான அபராதம் செலுத்திய பிறகு கருப்புப் பணத்தை அறிவிக்கும் ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது;

என் அன்புக்குரிய நாட்டு மக்களே,

கடந்த இரண்டரை ஆண்டுகளில், இந்த அனைத்து முயற்சிகள் மூலமாகவும், ஊழல்வாதிகளுக்குச் சொந்தமான சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை நாம் வெளியில் கொண்டு வந்திருக்கிறோம். ஊழல், கருப்புப் பணம், பினாமி சொத்து, தீவிரவாதம், கள்ளநோட்டுக்கு எதிரான இந்தப் போர் தொடர்ந்திட வேண்டும் என்று நேர்மையான குடிமக்கள் விரும்புகறார்கள். அரசு அதிகாரிகளின் படுக்கைகளுக்கு கீழே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் பதுக்கப்பட்டிருக்கும் தகவலை அறிந்து, அல்லது சாக்குப் பைகளில் பணம் கிடப்பதாக வரும் தகவலை அறிந்து எந்த நேர்மையாளருக்குதான் மன வலி ஏற்படாமல் இருக்கும்?

புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவுக்கும், ஊழலின் அளவுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. ஊழல் வழிகளில் ஈட்டப்படும் பணம் புழக்கத்தில் வரும்போது பணவீக்கம் மோசமாகிறது. இதன் பாதிப்பை ஏழைகள் சுமக்க வேண்டியதாகிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியின் மீது இது நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு நிலம் அல்லது ஒரு வீடு வாங்கும்போது, காசோலையாக தரும் தொகை தவிர, பெரியதொரு தொகை ரொக்கமாக கேட்கப்படுவதை, நீங்களே நேரடியாக அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள். ஒரு சொத்து வாங்கும்போது நேர்மையானவர்களுக்கு இது பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. பணத்தை தவறாக பயன்படுத்தும்போது, வீடுகள், நிலம், உயர் கல்வி, ஆரோக்கியம் பேணுதல் உள்ளிட்ட பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான செலவு செயற்கையாக அதிகரிக்கிறது.

பணம் அதிகமாக புழக்கத்தில் வரும்போது ஹவாலா வர்த்தகமும் வலுவடைகிறது. அது கருப்புப் பணம் மற்றும் ஆயுதங்களில் சட்டவிரோத வர்த்தகம் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கிறது. தேர்தல்களில் கருப்புப் பணத்தின் பங்கு குறித்த விவாதங்கள் ஆண்டுக் கணக்கில் நடந்து கொண்டிருக்கின்றன.

சகோதர சகோதரிகளே,

ஊழல் மற்றும் கருப்புப் பணத்தின் பிடியை உடைப்பதற்கு, தற்போது பயன்பாட்டில் உள்ள ஐநூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, இன்று நள்ளிரவில் இருந்து, அதாவது 8 நவம்பர் 2016 நள்ளிரவில் இருந்து, சட்டபூர்வமாக மாற்றத்தக்கதாக இருக்காது என அறிவிக்க நாம் முடிவு செய்திருக்கிறோம். அதாவது நள்ளிரவுக்குப் பிறகு இந்த நோட்டுகள் பரிவர்த்தனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தேச விரோதிகள் மற்றும் சமூக விரோத சக்திகள் பதுக்கி வைத்துள்ள ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள், மதிப்பற்ற வெறும் காகிதத் துண்டுகளாகிப் போகும். நேர்மையாளர்கள், கடின உழைப்பாளி மக்களின் உரிமைகளும் நலன்களும் முழுமையாக பாதுகாக்கப்படும். நூறு, ஐம்பது, இருபது, பத்து, ஐந்து, இரண்டு மற்றும் ஒரு ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் சட்டபூர்வமாக மாற்றத்தக்கவையாக இருக்கும் என்றும், அவை பாதிக்கப்படாது என்றும் நான் உறுதியளிக்கிறேன்.

ஊழல், கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான போரில், சாமானிய மக்களின் கரங்களை இந்த நடவடிக்கை வலுப்படுத்தும். வரும் நாட்களில் குடிமக்களின் சிரமங்களை குறைந்தபட்ச அளவுக்குக் குறைப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.

1. பழைய ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி அல்லது தபால் நிலைய கணக்குகளில் நவம்பர் 10 ஆம் தேதியில் இருந்து 30 டிசம்பர் 2016 வங்கி நேரம் முடியும் வரையில் வரம்பு ஏதும் இன்றி டெபாசிட் செய்து கொள்ளலாம்.

2. அந்த வகையில் உங்களுடைய நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு உங்களுக்கு 50 நாட்கள் இருக்கின்றன. பதற்றம் அடையத் தேவையில்லை.

3. உங்கள் பணம் உங்களுடையாதகவே இருக்கும். இந்த விஷயம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

4. உங்கள் கணக்கில் உங்கள் பணத்தை டெபாசிட் செய்த பிறகு, உங்களுக்கு தேவைப்படும் போது நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

5. புதிய நோட்டுகளை வழங்க வேண்டியிருப்பதைக் கருத்தில் கொண்டு, முதலில் சில நாட்களுக்கு, ஒரு நாளுக்கு பத்தாயிரம் ரூபாய், வாரத்திற்கு இருபதாயிரம் ரூபாய் என்ற வரம்பு இருக்கும். வரும் நாட்களில் இந்த வரம்பு அதிகரிக்கப்படும்.

6. உங்கள் நோட்டுகளை உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வது தவிர, இன்னொரு வசதியும் உள்ளது.

7. உங்களுடைய உடனடி தேவைகளுக்கு, எந்த வங்கி, தலைமை தபால் நிலையம் அல்லது துணை தபால் நிலையத்துக்கும் நீங்கள் சென்று, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், PAN அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு அத்தாட்சிகளைக் காட்டி, உங்களுடைய பழைய ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

8. நவம்பர் 10-ல் இருந்து நவம்பர் 24 வரையில் அவ்வாறான பரிமாற்றத்துக்கான வரம்பு நான்காயிரம் ரூபாயாக இருக்கும். நவம்பர் 25ல் இருந்து டிசம்பர் 30 வரையில், அந்த வரம்பு அதிகரிக்கப்படும்.

9. சிலருக்கு ஏதாவது காரணத்தால் 30 டிசம்பர் 2016-க்குள் தங்களுடைய பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியாமல் போகலாம்.

10. அவர்கள் பாரத ரிசர்வ் வங்கியின் (RBI) குறிப்பிட்ட அலுவலகங்களுக்கு 31 மார்ச் 2017 வரையில் சென்று, அறிவிப்புப் படிவம் சமர்ப்பித்து நோட்டுகளை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

11. நவம்பர் 9 மற்றும் சில இடங்களில் நவம்பர் 10-லும், ATM-கள் செயல்படாது. ஆரம்பத்தில் சில நாட்களுக்கு ஓர் அட்டைக்கு ஒரு நாளுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்ற வரம்பு இருக்கும்.

12. பின்னர் இது நான்காயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.

13. நள்ளிரவில் இருந்து ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சட்டபூர்வமாக மாற்றத்தக்கதாக இருக்காது. இருந்தபோதிலும், மனிதாபிமான காரணங்களுக்காக, குடிமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக, முதல் 72 மணி நேரங்களுக்கு, அதாவது நவம்பர் 11 நள்ளிரவு வரையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

14. இந்த காலக்கட்டத்தில், அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கட்டணத்துக்காக பெற்றுக் கொள்ளும்.

15. குடும்பத்தினர் சுகவீனமாக இருக்கும் குடும்பங்களுக்கு இது பயனளிக்கும்.

16. அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களிலும், டாக்டர்களின் பரிந்துரை சீட்டுகளைக் கொண்டு வாங்கும் மருந்துகளுக்கு இந்த நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும்.

17. 72 மணி நேரங்களுக்கு, நவம்பர் 11 நள்ளிரவு வரையில், ரயில்வே டிக்கெட் புக்கிங் கவுண்ட்டர்கள், அரசுப் பேருந்துகளுக்கான டிக்கெட் புக்கிங் கவுண்ட்டர்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள விமான டிக்கெட் கவுண்ட்டர்களில் டிக்கெட் வாங்குவதற்கு பழைய நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த காலக்கட்டத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது பயனளிக்கும்.

18. 72 மணி நேரத்துக்கு, ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கீழ்க்கண்ட இடங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படும்.

• பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் மற்றும் CNG வாயு நிலையங்கள்

• மாநில அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் கூட்டுறவு அங்காடிகள்

• மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பால் பூத்கள்

• சவக் கிடங்குகள் மற்றும் மயானங்கள்.

இந்த மையங்கள் இருப்பு மற்றும் கலெக்சனுக்கு முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

19. சர்வதேச விமான நிலையங்களில் வருகை மற்றும் வெளியில் செல்லும் பயணிகளுக்கு, ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, ஐந்தாயிரம் ரூபாய்க்கு மிகாத அளவில் புதிய நோட்டுகளாக அல்லது சட்டபூர்வ நோட்டுகளாக மாற்றிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும்.

20. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.5000 க்கு மிகாத வெளிநாட்டு கரன்சி அல்லது பழைய நோட்டுகளை சட்டபூர்வ நோட்டுகளாக பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

21. இன்னொரு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். ஒட்டுமொத்தமான இந்த நடவடிக்கையில், காசோலைகள், டிமாண்ட் டிராப்ட்கள், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் மின்னணு பணம் அனுப்புதல் போன்ற பணமாக அல்லாத பட்டுவாடாக்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

சகோதர சகோதரிகளே,

இந்த அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும், நேர்மையான குடிமக்களுக்கு தற்காலிகமான சிரமங்கள் ஏற்படக் கூடும். நாட்டின் நன்மைக்காக சாமானிய குடிமக்கள் தியாகங்கள் செய்யவும் சிரமங்களை எதிர்கொள்ளவும் எப்போதும் தயாராக இருப்பார்கள் என்பதை அனுபவங்கள் நமக்குக் கூறுகின்றன. ஏழை விதவை ஒருவர் எல்.பி.ஜி. மானியத்தை விட்டுக் கொடுத்த போது, தூய்மையான பாரதம் திட்டத்துக்கு ஓய்வுபெற்ற பள்ளிக்கூட ஆசிரியை தனது ஓய்வூதியத்தை பங்களிப்பு செய்தபோது, கழிவறை கட்டுவதற்கு ஏழை ஆதிவாசி தாய் ஒருவர் தனது ஆடுகளை விற்றபோது, தனது கிராமத்தை தூய்மையாக்குவதற்காக ஒரு வீரர் 57 ஆயிரம் ரூபாய் அளித்தபோது இந்த ஊக்கத்தை நான் கண்டேன். நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவக் கூடிய செயலுக்காக எதையும் செய்வதற்கு சாதாரண குடிமக்கள் உறுதியுடன் இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.

எனவே, ஊழல், கருப்புப் பணம், கள்ள நோட்டுகள் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தப் போரில், நாட்டை தூய்மைப்படுத்தும் இந்த இயக்கத்தில், சில நாட்களுக்கு நம்முடைய மக்கள் சிரமங்களைப் பொருத்துக் கொள்வார்களா ? குடிமக்களில் ஒவ்வொருவரும் உறுதியுடன் நின்று இந்த `மகா யக்ஞத்தில்’ பங்கேற்பார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. என் அன்புக்குரிய நாட்டு மக்களே, தீபாவளி பண்டிகைக்குப் பிறகு, நாட்டுக்காக ஒன்று சேர்ந்து இந்த Imandaari ka Utsav, this Pramanikta ka Parv, -வில் கரம் கோர்த்திடுங்கள். இந்த நேர்மையின், நம்பகத்தன்மையின் திருவிழாவில் கை கோர்த்திடுங்கள்.

அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அரசுகள், சமூக சேவை அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இதில் உற்சாகத்துடன் பங்கேற்று, இதை வெற்றிகரமானதாக ஆக்குவார்கள் என்று நம்புகிறேன்.

என் அன்புக்குரிய நாட்டு மக்களே,

இந்த செயல்பாட்டுக்கு ரகசியம் பிரதானமாக இருந்தது. இப்போதுதான், உங்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கும் போதுதான், வங்கிகள், தபால் நிலையங்கள், ரயில்வேக்கள், மருத்துவமனைகள் மற்றும் இதரர்களுக்கும் தெரிவிக்கப் படுகிறது. ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் குறுகிய அவகாசத்தில் நிறைய ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது. நேர அவகாசம் தேவைதான். எனவே அனைத்து வங்கிகளும் நவம்பர் 9 ஆம் தேதி மக்களுக்கு மூடப்பட்டிருக்கும். உங்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மகத்தான பணியை வங்கிகளும், தபால் நிலையங்களும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இருந்தபோதிலும், வங்கிகளும் தபால் நிலையங்களும் இந்தச் சவாலை பாரபட்சமின்றியும், உறுதியுடனும் சமாளிப்பதற்கு உதவி செய்திட வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

என் அன்புக்குரிய குடிமக்களே,

அவ்வப்போது, கரன்சி தேவையின் அடிப்படையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் ரிசர்வ் வங்கி அதிக மதிப்புள்ள நோட்டுகளை வெளியிடுகிறது. ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும் என்று 2014-ல் ரிசர்வ் வங்கி பரிந்துரை அனுப்பியது. கவனமாகப் பரிசீலித்த பிறகு, அது ஏற்கப்படவில்லை. இப்போது, இந்த செயல்பாட்டின் ஓர் பகுதியாக, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிடலாம் என்ற ரிசர்வ் வங்கியின்பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது. புதிய ஐநூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், முற்றிலும் புதிய வடிவமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், புழக்கத்தில் உள்ள ஒட்டுமொத்த கரன்சியில் அதிக மதிப்புள்ள நோட்டுகளின் பங்கை ஒரு வரம்புக்குள் வைக்க ரிசர்வ் வங்கி இனிமேல் ஏற்பாடுகளைச் செய்யும்.

ஒரு நாட்டின் வரலாற்றில், குறிப்பிட்ட ஒரு தருணத்தில் தானும் ஓர் அங்கமாக இருக்க வேண்டும், நாட்டின் வளர்ச்சிக்கு தானும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவரும் கருதும் தருணங்கள் வரும். அத்தகைய தருணங்கள் வரும், ஆனால் அபூர்வமாக. ஊழல், கருப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டுகளின் கேடுகளுக்கு எதிரான மகா யாக்ஞத்தில் குடிமக்களில் ஒவ்வொருவரும் இணைந்து கொள்வதற்கு, இப்போது நமக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் பிரச்சாரத்தில் நீங்கள் அளிக்கும் அதிகம் உதவினால், அது அதிக அளவில் வெற்றிகரமாக அமையும்.

ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டுமோ என்பது ஒரு கவலையாக இருந்து வந்து. இத்தகைய சிந்தனை நமது அரசியலை, நமது நிர்வாகத்தை மற்றும் நமது சமூகத்தை கரையான்களைப் போல அரித்துவிட்டன. நமது அரசு அமைப்புகள் எதுவுமே இந்தக் கரையான்கள் அற்றதாக இல்லை.

நேர்மையற்றதை ஏற்பதா அல்லது அசவுகரியத்தை பொறுத்துக் கொள்வதா என்ற கேள்வி வந்தபோதெல்லாம், அசவுகரியத்தைப் பொறுத்துக் கொள்வதையே சராசரி குடிமக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதை, திரும்பத் திரும்ப நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் நேர்மையற்றத்தனத்தை ஆதரிக்க மாட்டார்கள்.

இன்னொரு முறை, தீபாவளியின் போது உங்கள் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ததைப் போல, நமது நாட்டை தூய்மைப்படுத்தும் இந்த மகத்தான தியாகத்தில் உங்களது பங்களிப்பை செய்யுங்கள் என அழைக்கிறேன்.

தற்காலிக சிரமங்களை மறப்போம்

நேர்மை மற்றும் நம்பகத்தன்மைக்கான இந்தத் திருவிழாவில் இணைவோம்
வரும் தலைமுறையினர் கண்ணியத்துடன் வாழ்வதற்கு நாம் வழி செய்வோம்
ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிராக போரிடுவோம்
நாட்டின் சொத்து ஏழைகளுக்கு பயன் தருவதை உறுதி செய்வோம்
சட்டத்துக்கு அஞ்சும் குடிமக்கள் தங்களுக்கு உரிய பங்கை பெறுவதற்கு வகை செய்வோம்.

125 கோடி மக்கள் கொண்ட இந்தியா மீது நான் நம்பிக்கை கொள்கிறேன், நாடு நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

மிகுந்த நன்றி. மிக்க நன்றி

நமஸ்காரம்

பாரத் மாதா கீ ஜெய்.

***