பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாரணாசியில் பிரதமர்

வாரணாசியில் பிரதமர்

• தீனதயாள் கைவினைப்பொருள் விற்பனையகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

• வாரணாசிக்கும் வதோதராவுக்கும் இடையில் மஹாமனா எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

• ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

கைவினைப் பொருட்கள் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மையமான – தீனதயாள் கைவினைப்பொருள் விற்பனையகத்தை வாரணாசியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த மையத்துக்கு 2014 நவம்பரில் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இன்று, அவர் இந்த மையத்தைப் பார்வையிட்டார். அர்ப்பணிப்புக்காக மேடைக்கு வருவதற்கு முன்னதாக, மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள வசதிகள் பற்றி அவருக்கு விவரிக்கப்பட்டது.

திரு. நரேந்திர மோடி மஹாமனா எக்ஸ்பிரஸ் ரயிலை காணொளி இணைப்பு மூலமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார், இந்த ரயில் வாரணாசியையும் குஜராத்தில் சூரத் மற்றும் வதோதராவையும் இணைக்கிறது.

நகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் அர்ப்பணிப்பு மற்றும் அடிக்கல் நாட்டுவதைக் குறிக்கும் வகையில் தகவல் கல்வெட்டுகளை பிரதமர் திறந்து வைத்தார். உத்கர்ஷ் வங்கியின் வங்கி சேவைகளை அவர் தொடங்கி வைத்தார். வங்கியின் தலைமையக கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுதலைக் குறிக்கும் வகையில் கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார்.

வாரணாசி மக்களுக்காக நீர் வழி ஆம்புலன்ஸ் சேவையையும் நீர் வழி வாகன சேவையையும் காணொளி இணைப்பு மூலமாக பிரதமர் அர்ப்பணித்து வைத்தார். நெசவாளர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் உபகரண தொகுப்புகள் மற்றும் சூரியசக்தி மின்விளக்குகளை அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர், ஒரு மேடையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியின் மூலமாக சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன என்று கூறினார்.

வர்த்தக ஊக்குவிப்பு மையம் நீண்டகாலத்துக்கு வாரணாசிக்கான மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். கைவினைஞர்களும், நெசவாளர்களும் தங்களின் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்தவும், அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும் இந்த மையம் உதவிகரமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இந்த மையத்தை பார்வையிடுவதற்கு அனைத்து மக்களும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனால் கைவினைப் பொருட்களின் தேவை அதிகரிக்கும் என்றும், இதனால் வாரணாசிக்கு சுற்றுலா வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். சொல்லப்போனால் நகரின் பொருளாதாரம் வளரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு, வளர்ச்சி என்பதில்தான் இருக்கிறது என்று பிரதமர் கூறினார். ஏழைகளின் வாழ்விலும், அடுத்து வரும் தலைமுறையினரிடத்திலும் ஆக்கபூர்வமான மாற்றத்தை கொண்டு வருவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் உத்கர்ஷ் வங்கியின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

இன்று தொடங்கப்பட்ட நீர் ஆம்புலன்ஸ் மற்றும் நீர் வழி வாகன சேவை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், நீர் வழிகளிலும் வளர்ச்சிக்கான உந்துதல் இருப்பதை இவை காட்டுகின்றன என்று கூறினார்.

மஹாமனா எக்ஸ்பிரஸ் ரயிலைப் பொருத்தவரையில், 2014 தேர்தலில் தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளான வதோதரா மற்றும் வாரணாசி இப்போது ரயில் சேவை மூலம் இணைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்றைக்கு நாடு வெகுவேகமாக முன்னேறி வருகிறது என்று பிரதமர் கூறினார். தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு உறுதியான முடிவுகள் எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கிழக்குப் பகுதி, நாட்டின் மேற்குப் பகுதியின் முன்னேற்றத்துக்கு ஈடாக வளர்ச்சி அடைய வேண்டும். இன்றைக்கு தொடங்கப்படும் திட்டங்கள், இந்த நோக்கத்தை அடைவதில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.