பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2017 புத்தாண்டை ஒட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

என சக குடிமக்களே,

இன்னும் சில மணி நேரங்களில் நாம் 2017 புத்தாண்டில் காலடி வைக்கப் போகிறோம். புதிய நம்பிக்கை, புதிய சக்தி மற்றும் புதிய கனவுகளுடன் புத்தாண்டை வரவேற்பதில், உலகின் மற்ற பகுதியினருடன், 125 கோடி இந்தியர்களும் சேர்ந்து கொள்ளப் போகிறோம்.

தீபாவளியில் இருந்து நமது நாடு தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளைப் பார்த்து வருகிறது.  125 கோடி மக்கள் காட்டிய பொறுமை, ஒழுக்கம் மற்றும் உறுதி ஆகியவை, வரப் போகிற பல ஆண்டுகளுக்கு நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும்.

 

 இறைவனின் படைப்பில், மனிதர்கள் அடிப்படை நற்குணத்துடன் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.

காலப்போக்கில், தீமையின் பாதிப்புகள் நுழைந்துவிட்டன. கெடுதலான சூழ்நிலையால் மக்கள் மூச்சுத் திணறுகின்றனர். அதில் இருந்து வெளியே வருவதற்குப் போராடுகின்றனர். ஊழல், கருப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டுகள் இந்தியாவின் சமூக அமைப்பில் மிகவும் அதிகமாகிவிட்டது. நேர்மையானவர்கள்கூட தாழ்ந்து போகும் நிலை ஏற்பட்டுவிட்டது.

தங்களுக்குள் புதைந்து கிடக்கும் நற்குணங்களையும் மீறி, சூழ்நிலைகளால் மக்கள் கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, தீமைகள் மற்றும் ஊழல்கள், நமது சமூகத்தில் தினசரி வாழ்வில்  ஒரு பகுதியாக அமைந்துவிட்டதைப்போல தெரிகிறது. இந்த மூச்சுத்திணறலில் இருந்து வெளியேறுவதற்கான வழியை இந்தியர்கள் எதிர்நோக்கி இருந்தார்கள் என்பது தீபாவளிக்குப் பிந்தைய முன்னேற்றங்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

1962, 1965, 1971 ஆம் ஆண்டுகளில் அந்நியர் ஆக்கிரமிப்புகள் மற்றும் கார்கில் போரின் போது, நமது குடிமக்களுக்கு இயற்கையாகவே உள்ள வலிமையைக் காண முடிந்தது. அந்நிய அச்சுறுத்தல்கள் வரும்போது அதுபோன்ற ஒருமித்த சக்தி மற்றும் தேசபக்தி வெளிப்படுவது புரிந்து கொள்ளக் கூடியதுதான். இருந்தபோதிலும், உள்ளுக்குள் உள்ள தீமைகளுக்கு எதிராகப் போரிடுவதற்கு கோடிக்கணக்கான இந்தியர்கள் ஒன்று சேருவது, இணையற்ற செயல்பாடாகும்.

 இந்தியர்கள் தியாகம் என்ற கோட்பாட்டுக்கு மறு வடிவம் தரும் வகையில் கஷ்டங்களை சமாளிப்பதில் உறுதியையும், எல்லையற்ற பொறுமையையும் புன்னகையுடன் காட்டியுள்ளனர். இந்த சித்தாந்தங்களில் நாம் வாழ்ந்திருக்கிறோம்.  உண்மை மற்றும் நற்குணத்துக்கான முக்கியத்துவம் கருதி, 125 கோடி இந்தியர்கள்  வலியிலும் துன்பத்தை சகித்துக் கொண்டுள்ளார்கள். இது வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.

தவறான தகவல்கள் என்ற சூறாவளிக்கு இடையே உண்மையை கண்டறிவதில் மக்களின் சக்தி, அதிகபட்ச ஒழுக்கம் ஆகியவற்றை இந்தியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.  நேர்மையின்மையை நேர்மை வென்றுவிடும் என்ற உறுதியை அவர்கள் காட்டியுள்ளனர்.

 ஒளிமிக்க இந்தியாவை கட்டமைப்பதில், எவ்வளவு ஏழ்மையில் சிக்கியவர்களாக இருந்தாலும், சேர்ந்து பங்களிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் காட்டியுள்ளார்கள். நாட்டின் ஒளிமிக்க எதிர்காலத்துக்காக, குடிமக்கள் எந்த அளவுக்கு ஈடில்லாத வகையில் தியாகம் செய்ய முடியும் என்பதை, சளைக்காத குணம், கடும் சிரமங்களை சமாளித்தல் மூலமாக அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

வழக்கமாக, மக்கள் இயக்கங்கள் உருவாகும்போது, மக்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல்கள் ஏற்படும்.

தீமைக்கு எதிரான இந்தப் போரில் மக்களும், அரசாங்கமும் ஒரே பக்கத்தில் இருந்தது வரலாற்று முக்கியத்துவமானது. இந்தக் காலக்கட்டத்தில் உங்களுக்குச் சொந்தமான பணத்தை எடுப்பதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டும், நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அரசுக்கு நன்கு தெரியும். மக்கள் பலரிடம் இருந்து எனக்குக் கடிதங்கள் வந்தன. அவர்கள் தங்கள் வலி மற்றும் சோகத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். ஆனால், எனக்கு தங்கள் ஆதரவை உறுதியாகத் தெரிவித்திருந்தனர். உங்களில் ஒருவனாக நீங்கள் என்னுடன் பேசினீர்கள். ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிரான இந்தப் போரில், எங்களுடன் தோளோடு தோளாக செயல்பட நீங்கள் விருப்பம் கொண்டிருந்தீர்கள் என்பது தெளிவாகியுள்ளது. அரசாங்கத்தில் உள்ள எங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

இந்தப் புத்தாண்டில் வங்கித் துறையை கூடிய விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு நான் முயற்சி எடுக்க வேண்டும். இந்த விஷயம் குறித்து கவனம் செலுத்துமாறு அரசில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக, கிராம மற்றும் எளிதில் அணுகமுடியாத பகுதிகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்குமாறு, அவர்களுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.

நண்பர்களே,

இந்தியா செய்துள்ள செயலுக்கு, உலகில் வேறு எங்கும் முன்னுதாரணம் கிடையாது. நம்மைப் போன்ற நாடுகளில், நம்மிடம் உள்ள அளவுக்கு ரூபாய் நோட்டுகள் இல்லை. கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சட்டபூர்வ பரிவர்த்தனையில் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டன. இணை பொருளாதார நடவடிக்கைளில் அவை அதிகம் பயன்படுத்தப் பட்டன. உபரியான ரொக்கம் பணவீக்கம் மற்றும் கள்ளச்சந்தை வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன. அதனால் ஏழைகளுக்கு உரிய பங்கு மறுக்கப்பட்டது. ரொக்கப் பற்றாக்குறை சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ரொக்கம் உபரியாக இருப்பதும் அதிக பிரச்சினையாக இருக்கிறது. இதில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது நம்முடைய நோக்கம். முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்துக்கு வெளியே ரொக்கம் இருந்தால், அது கவலைப்பட வேண்டிய விஷயம் என்று பொருளாதார நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அது பிரதானப் புழக்கத்துக்கு வந்தால், வளர்ச்சிக்கு அது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

 ஜெயப்பிரகாஷ் நாராயண், லால்பகதூர் சாஸ்திரி, ராம் மனோகர் லோகியா, காமராஜர் போன்ற இந்தியாவின் பெரும் தலைவர்கள் இப்போது இருந்திருந்தால், நாட்டு மக்களின் பொறுமை, ஒழுக்கம், உறுதிப்பாட்டை பாராட்டியிருப்பார்கள் என எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

கடந்த சில வாரங்களில், நிறைய நல்ல நிகழ்வுகள் நடந்துள்ளன – அவற்றைப் பட்டியலிடுவதற்கு வாரக் கணக்கில் அவகாசம் தேவைப்படும்.

சட்டத்தின் படி நடந்து கொண்டு, ஏழைகளுக்கு சேவை செய்ய அரசுக்கு உதவி செய்யும் பிரதான பணிகளில் கைகோர்த்துக் கொள்ள மக்கள் விருப்பம் தெரிவிப்பது, எந்தவொரு நாட்டிலும் ஆரோக்கியமான போக்கு ஆகும்.

நண்பர்களே,

நம்மை கேலி செய்யக் கூடிய நிஜங்களை எவ்வளவு காலத்துக்குதான் நாம் பார்த்துக் கொண்டே இருப்பது ? நான் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவை உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம் அல்லது கோபத்தை ஏற்படுத்தலாம். அரசுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்தியாவில் தங்களின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது என்று ஒப்புக்கொண்டிருப்பவர்கள் வெறும் 24 லட்சம் பேர்தான். இதை நம்மால் ஜீரணித்துக் கொள்ள முடிகிறதா ? உங்களைச் சுற்றிலும் உள்ள பெரிய பங்களாக்கள் மற்றும் பெரிய கார்களைப் பாருங்கள்.

 

எந்த பெரிய நகரத்தை நாம் பார்த்தாலும், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள லட்சக்கணக்கானவர்கள் இருப்பார்கள். நாட்டின் நன்மைக்காக, நேர்மையான இந்த இயக்கம் மேலும் வலிமையாக்கப்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா ?

ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிரான இந்தப் போரில், நேர்மையற்றவர்களின் தலைவிதியைப் பற்றி விவாதிப்பது இயல்பானதுதான். அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? சட்டம் முழு வீச்சில் தன் கடமையைச் செய்யும். ஆனால் நேர்மையானவர்களுக்கு உதவுவது, அவர்களைப் பாதுகாப்பது, அவர்களின் சிரமங்களை குறைப்பது ஆகியவைதான் இப்போது அரசுக்கு முன்னுரிமையான விஷயங்கள். நேர்மைக்கு அதிக பெருமை எப்படி கிடைக்கும் ?

 

இந்த அரசு நல்லவர்களுக்கு நண்பன். நேர்மையற்றவர்கள், நற்குணமான பாதைக்குத் திரும்புவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தருவதற்கு அரசு விரும்புகிறது.

அரசு இயந்திரத்தில், மற்றும் சில அரசு அதிகாரிகளிடம் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டன என்று மக்கள் புகார் கூறுவது கசப்பான உண்மை.

இந்த உண்மையை புறந்தள்ளிவிட முடியாது. சாதாரண குடிமக்களைவிட அரசு அதிகாரிகளுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே, சாதாரண மக்களைப் பாதுகாப்பது, நேர்மையானவர்களுக்கு உதவுவது, நேர்மையற்றவர்களை தனிமைப்படுத்துவதில் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அளவில் உள்ள அனைத்து அதிகாரிகளின் பொறுப்பாக உள்ளது.

நண்பர்களே,

பயங்கரவாதம், நக்சல் செயல்பாடு, மாவோயிச செயல்பாடு, கள்ளநோட்டு தொழில், போதை மருந்து தொழில், விபச்சாரத்துக்கு ஆள்கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் கருப்புப் பணத்தை சார்ந்தே இருக்கின்றன என்பது உலகெங்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்.

இந்தத் தீமைகள் சமூகம் மற்றும் அரசுக்கு காயங்களை அதிகமாக்குகின்றன.

இந்தத் தொழில்களுக்கு பணம் மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கை சாவுமணி அடித்துவிட்டது.

இன்றைக்கு, தவறான பாதையில் சென்ற இளைஞர்கள், பெரும் எண்ணிக்கையில் நல்லவழிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நாம் விழிப்புடன் இருந்தால், வன்முறை மற்றும் கொடூரத்தனமான தீமையான பாதைக்கு செல்லாமல் நமது பிள்ளைகளை நம்மால் இப்போது காப்பாற்ற முடியும். புழக்கத்தில் இருந்த பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள விஷயம், இந்த நோக்கம் வெற்றி பெற்றதைக் காட்டுவதாக உள்ளது.

கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்வுகள், நேர்மையற்றவர்கள் தப்புவதற்கான பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன என்பதைக் காட்டுகின்றன. இதில் தொழில்நுட்பம் பெரிய பங்காற்றியுள்ளது. தவறு செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் தங்கள் தவறுகளைக் கைவிட்டு பிரதான நல்ல பாதையில் சேருவதற்கான கட்டாயம் ஏற்படும்.

நண்பர்களே,

நாட்டின் வங்கித் துறைக்கு ஒரு பொன்னான வாய்ப்பு என்பதையும் இது அடையாளப் படுத்துகிறது. இந்த காலக்கட்டத்தில் வங்கி அலுவலர்கள் இரவு பகலாக உழைத்தார்கள்.

இந்த நோக்கத்தின் அங்கமாக, பெண் அலுவலர்களும்கூட, அதிக நேரம் உழைத்தார்கள்.

தபால் நிலைய அலுவலர்கள், வங்கித் தொடர்பாளர்கள் – எல்லோருமே அற்புதமாகப் பணியாற்றினார்கள்.

இந்த மிகப்பெரிய முயற்சியில், சில வங்கிகளில் சில அதிகாரிகள், சில பெரிய குற்றங்களை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. சில அரசு அதிகாரிகளும் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு, இந்தச் சூழ்நிலையில் ஆதாயம் தேட முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் விட்டுவைக்கப்பட மாட்டார்கள்.

வரலாற்று முக்கியத்துவமான இந்தத் தருணத்தில், வங்கிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க நான் விரும்புகிறேன்.

 இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு பெரிய தொகையை இந்தியாவின் வங்கித் துறை ஒருபோதும் பெற்றதில்லை என்பதை வரலாறு காட்டுகிறது.

 வங்கிகளின் தன்னாட்சியை மதிக்கும் அதேவேளையில், தங்களுடைய வழக்கமான முன்னுரிமைகளைத் தாண்டி வந்து, ஏழைகள், கீழ்நிலையில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது தங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என வங்கிகளை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டு விழாவை கரீப் கல்யாண் வர்ஷ் – ஆக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்பை வங்கிகள் கைநழுவ விட்டுவிடக் கூடாது. பொதுமக்களின் நன்மைகளை முக்கியமாகக் கொண்டு வங்கிகள் பொருத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

மனதில் தெளிவான நோக்கங்களை வைத்து கொள்கைகளும், திட்டங்களும்  உருவாக்கப்படும்போது, பயனாளிகள் அதிகாரம் பெறுவது மட்டுமின்றி, குறுகிய கால மற்றும் நீண்டகால ஆதாயங்களும் கிடைக்கின்றன. செலவிடுதல் கவனமாக ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறது. நல்ல விளைவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகபட்சமாக ஆக்கப்படுகின்றன.

எந்த அளவிற்கு அதிகமான அளவில் கிராமங்களும், ஏழைகளும், விவசாயிகளும், தலித்களும், ஆதிவாசிகளும், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களும், பெண்களும் சுய வலிமை பெற்று, பொருளாதார ரீதியாக தங்கள் சொந்தக் கால்களில் நிற்க முடிகிறதோ அந்த அளவிற்கு நாடும் வலிமையடைகிறது; அதன் வளர்ச்சியின் வேகமும் அதிகரிக்கிறது.

நண்பர்களே! அனைவரோடும் சேர்ந்து, அனைவரின் முன்னேற்றத்திற்கு என்ற குறிக்கோளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், புத்தாண்டை ஒட்டி, அரசு சில புதிய திட்டங்களை மக்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறது.

நாடு விடுதலை பெற்று பல ஆண்டுகள் ஆன போதிலும், பல லட்சக்கணக்கான ஏழைகள் இன்னமும் தங்களுக்கென சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாமல்தான் இருக்கின்றனர். நமது பொருளாதாரத்தில் கருப்புப் பணத்தின் அளவு அதிகரிக்கும்போது, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கூட வீடு என்பது எட்டாத கனியாகி விடுகிறது. ஏழைகளுக்கும், நவீன நடுத்தர வர்க்கத்தினருக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் வீடுகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

நகர்ப்புறப் பகுதிகளில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ( பிரதமர் வீட்டு வசதித் திட்டம்)வின் கீழ் இரண்டு புதிய நடுத்தர வருமானப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டில் ரூ. 9 லட்சம் வரையில் பெறும் கடன்களுக்கான வட்டியில் 4 சதவீத வட்டியை அரசே ஏற்றுக் கொள்ளும். 2017ஆம் ஆண்டில் ரூ. 12 லட்சம் வரையில் பெறும் கடன்களுக்கான வட்டியில் 3 சதவீதத்தை அரசே ஏற்றுக் கொள்ளும்.

கிராமப் புறங்களில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்காகக்  கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.

 அதுபோக, கிராமப் புறங்களில் உள்ள நவீன நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்கத்தினருக்கென மற்றொரு திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வீடு கட்டுவதற்கோ, அல்லது கிராமப்புறங்களில் உள்ள வீட்டை விரிவுபடுத்தவோ 2017ஆம் ஆண்டில் வாங்கப்படும் ரூ. 2 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டியில் 3 சதவீதத்தை அரசே ஏற்றுக் கொள்ளும்.

நண்பர்களே! கடந்த சில வாரங்களில் இந்தியாவின் விவசாயத் துறையே முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது  என்றதொரு தோற்றம் உருவாக்கப்பட்டது.  அவ்வாறு செய்பவர்களுக்கு விவசாயிகளே தக்க பதிலடியைத் தந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரபி பருவகால பயிர்கள் நடும் நிலத்தின் அளவு 6 சதவீதம் அதிகரித்துள்ளது. அவர்களால் வாங்கப்பட்டுள்ள உரத்தின் அளவும் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. விதைகள், உரங்கள், கடன் ஆகியவற்றைப் பெறுவதில் விவசாயிகள் எவ்வித சிரமமும் அடையாமல் இருப்பதையும் அரசு உறுதிப்படுத்தியிருந்தது. இப்போது, விவசாயிகளின் நலனுக்காக மேலும் சில முடிவுகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

மாவட்ட கூட்டுறவு வங்கிகள், ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிலிருந்து ரபி பருவ பயிர்களுக்கென கடன் வாங்கியுள்ள விவசாயிகள் அதற்கான வட்டியில் 60 நாட்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை. கடந்த இரண்டு மாதத்தில் அவ்வாறு வட்டியை செலுத்தியுள்ள விவசாயிகளுக்கு அந்தத் தொகை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிற்கு திருப்பி அளிக்கப்படும்.

கூட்டுறவு வங்கிகள், ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் விவசாயிகள் கடன் பெறுவதற்கான வசதியை மேலும் சிறப்பானதாகச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில் நபார்ட் அமைப்பு ரூ. 21,000 கோடி மதிப்புள்ள நிதியை உருவாக்கியுள்ளது. இப்போது இந்த நிதியில் அரசு மேலும் ரூ. 20,000 கோடியை கூடுதலாகச் செலுத்துகிறது. குறைந்த வட்டி விகிதத்தில் கூட்டுறவு வங்கிகள், ஆரம்ப கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கு நபார்ட் வழங்கும் கடனால் ஏற்படும் நட்டத்தை அரசு ஏற்றுக் கொள்ளும்.

கிசான் கடன் அட்டைகளை வைத்துள்ள 3 கோடி விவசாயிகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் அவர்கள் கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளும் வகையிலான ருபே டெபிட் அட்டைகளை வழங்குவதென்று அரசு முடிவு செய்துள்ளது. 1998ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் துவங்கப்பட்ட  போதிலும்  அதைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் வங்கிக்குச் செல்லவேண்டியிருந்தது. இப்போது, விவசாயிகளிடம் கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளும்படியான ருபே டெபிட் அட்டைகள் கைவசமிருப்பதால் அவர்கள் அவற்றை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விவசாயம் என்பது எவ்வாறு பொருளாதாரத்திற்கு உயிர்நாடியானதோ அதைப் போன்றுதான் நடுத்தர, சிறு தொழில் நிறுவனங்களும். வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கு உதவுகின்ற சிறிய, நடுத்தர நிறுவனங்களின் நலனைக் கருதி அரசு சில முடிவுகளை மேற்கொண்டுள்ளது.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான பொறுப்பை இந்திய அரசு அறக்கட்டளை மூலம் ஏற்றுக் கொள்கிறாது. இதுவரையில் ரூ.1 கோடி வரையிலான கடன்கள் இந்த முறையில் அடங்கியிருந்தது. இப்போது இந்த அளவு ரூ. 2 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. இதற்கு இந்தத் திட்டம் வங்கியிலிருந்து பெறப்படும் கடன்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. இனி வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களையும் உள்ளடக்கியதாக இது இருக்கும். இதன் மூலம் சிறு கடை வியாபாரிகள், சிறு நிறுவனங்களை நடத்தி வருவோர் எளிதாகக்  கடன் பெறுவதற்கு உதவும். இதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், வங்கிகளும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் இந்த வகைப்பட்ட கடன்களுக்கு அதிக வட்டியை வசூலிக்காது.

சிறுதொழில்களுக்கான கடன் அளவை அவற்றின் மொத்த வரவு-செலவில் 20 சதவீதம் என்பதிலிருந்து 25 சதவீதமாக உயர்த்தும்படியும் அரசு வங்கிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மின்னணு முறை பரிமாற்றத்தில் செயல்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் செயல் முதலீட்டிற்கான கடனை அவற்றின் மொத்த வரவு செலவில் 20 சதவீதத்திலிருந்து  30 சதவீதமாக உயர்த்தும்படியும் வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இத்துறையைச் சேர்ந்தவர்களில் பலரும் கடந்த சில வாரங்களில் பணமாகச் செலுத்தியுள்ளனர். செயல் முதலீடு பற்றிய முடிவெடுக்கும்போது இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

 ஒரு சில நாட்களுக்கு முன்பு, சிறு நிறுவனங்களுக்கான  மாபெரும் வரிச்சலுகையை அரசு அறிவித்திருந்தது. ரூ. 2 கோடி வரையில் வரவு செலவு செய்யும் நிறுவனங்களின் வருமானம் அத்தகைய வரவு-செலவில் 8 சதவீதம் என கணக்கிடப்பட்டிருந்தது. இப்போது மின்னணு முறையிலான பரிமாற்றத்தில் செயல்படும் அத்தகைய நிறுவனங்களின்  வருமானம் 6 சதவீதமாக கணக்கிடப்படும். இது ஒட்டுமொத்தத்தில் அவை செலுத்த வேண்டிய வரியை 25 சதவீதம் குறைப்பதாக இருக்கும்.

நண்பர்களே!

முத்ரா திட்டத்தின் முன்னேற்றம்  மிகுந்த உற்சாகமூட்டுவதாக உள்ளது. கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட மூன்றரை கோடி பேர் இதன் மூலம் பயன்பெற்றனர். தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பெண்கள் ஆகிய பிரிவினருக்கு முன்னுரிமை  கொடுப்பதன் மூலம் இதை இரட்டிப்பாக்க அரசு இலக்கு வைத்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கென புதிய திட்டம் துவக்கப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி செய்ய நாடு தழுவிய திட்டம் ஒன்றை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். நிறுவனரீதியான பிரசவம், பிறக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது ஆகியவற்றை மேற்கொள்ளும் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ. 6,000/- நேரடியாகச் செலுத்தப்படும். கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழப்பதை இது பெருமளவிற்குத் தடுக்க உதவும். பிரசவத்திற்கு முன்பும் பின்பும் உரிய ஊட்டச் சத்து பெறுவதை உறுதிப்படுத்தவும் இது உதவி செய்து, தாய் – சேய் இருவரின் உடல்நலனை மேம்படுத்தும். இதற்கான முன்னோடி திட்டத்தின் கீழ் இதுவரை நாட்டின் 53 மாவட்டங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மூத்த குடிமக்களுக்கான திட்டமொன்றையும் நாங்கள் துவக்கியுள்ளோம். வங்கிகள் முதலீட்டிற்கான தங்கள் வட்டி விகிதத்தை அடிக்கடி குறைக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் 10 ஆண்டு காலத்திற்கு ஆண்டுக்கு 8 சதவீதம் என ரூ. ஏழரை லட்சம் வரையிலான முதலீட்டிற்கு நிலையான வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். இந்த வட்டி மாதந்தோறும் வழங்கப்படும்.

நண்பர்களே!

ஊழல், கருப்புப் பணம் ஆகியவை குறித்த எந்தவொரு விவாதத்திலும் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், தேர்தல் காலச் செலவுகள் ஆகியவை தவறாமல் முக்கியமாக இடம்பெறுகின்றன.

நாட்டின் நேர்மையான குடிமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும், மக்களின் கோபத்தைப் புரிந்து கொள்ளவும் அனைத்து அரசியல் தலைவர்களும் கட்சிகளும் மதிப்பளிக்க வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது.

 இந்தத் தேர்தல் முறையை மேம்படுத்த அரசியல் கட்சிகளும் அவ்வப்போது செயலூக்கமிக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளன என்பதும் உண்மைதான்.

“உன்னை விட நான் நல்லவன்” என்ற அணுகுமுறையிலிருந்து விலகி வந்து, வெளிப்படைத் தன்மைக்கு முன்னுரிமை அளிக்கவும், அரசியலை கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிலிருந்து விலக்கி வைக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றுகூடுமாறு அனைத்து கட்சிகளையும் தலைவர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நமது நாட்டில் சாதாரண மனிதரிலிருந்து குடியரசுத் தலைவர் வரையில் ஏதாவதொரு தருணத்தில் நாடுதழுவிய பொதுத் தேர்தல்களையும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என கூறி வந்துள்ளனர்.

இது முடிவேயின்றித் தொடரும் தேர்தல்களுக்கு இடைவெளி வழங்கும் என்பதோடு, தேர்தலுக்கான செலவுகளையும் குறைத்து, நிர்வாக இயந்திரத்தின் மீதான நெருக்கடியையும் குறைக்கும்.

 இது குறித்து தீவிரமாக பரிசீலித்து, விவாதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

 நேர்மறையான மாற்றங்களுக்கு நமது நாட்டில் எப்போதுமே இடமுண்டு.

இப்போது இந்தியாவில் மின்னணு முறையிலான பரிமாற்றத்தை நோக்கிய நேர்மறையான வேகம் பிடித்துள்ளது என்பதை நம்மால் இப்போது காண முடிகிறது.

மேலும் மேலும் அதிகமான மக்கள் மின்னணு முறையிலான பரிமாற்றத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

பாபா சாஹேப் அம்பேத்கர் பெயரில் அமைந்த பீம் என்ற மின்னணு முறையிலான பரிமாற்றங்களுக்கான உள்நாட்டிலேயே தயாரான புதிய செயல்முறையை அரசு நேற்று துவக்கியது.

 பணத்திற்கான இந்திய வழிமுறை என்பதே பீம் என்பதன் பொருளாகும். இந்த பீம் செயல்முறையில் முடிந்த வரை தங்களை இணைத்துக் கொள்ளுமாறு நாட்டின் இளைஞர்களையும், வர்த்தகர்களையும் விவசாயிகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன். நண்பர்களே! தீபாவளிக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கொள்கைகள், முடிவுகள், வளர்ச்சிப் போக்குகள் ஆகியவை குறித்து பொருளாதார நிபுணர்கள் நிச்சயமாக மதிப்பீடு செய்வார்கள்.

 

சமூக விஞ்ஞானிகளும் கூட அத்தகைய முயற்சியை மேற்கொண்டால் அதுவும் நல்லதாகவே இருக்கும்.

ஒரே நாடு என்ற வகையில் இந்தியாவின் கிராமங்களும், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், படித்த, படிக்காத ஆண்கள், பெண்கள் ஆகிய அனைவருமே முடிவேயில்லாத பொறுமையையும், மக்களின் வலிமையையும் இந்த நாட்களில் வெளிப்படுத்தியிருந்தனர். இன்னும் சற்று நேரத்தில் புதிய ஆண்டான 2017 துவங்கவிருக்கிறது. மிகச் சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னால் மகாத்மா காந்தி சம்பரானில் சத்தியாகிரகப் போராட்டத்தைத் துவக்கினார். இப்போது, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு உண்மை, நன்னடத்தை ஆகியவை குறித்த உணர்வை இந்திய மக்கள் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகின்றனர் என்பதையும் நாம் காண முடிந்தது.

இன்று, மகாத்மா காந்தி நம்மிடையே இல்லை. என்றாலும், அவர் நமக்குக் காட்டிய உண்மையை நோக்கிய பாதைதான் இப்போதும் பொருத்தமானதாக இருக்கிறது. சத்தியாகிரகத்தின் நூற்றாண்டைத் துவங்கவுள்ள இந்த நேரத்தில், மகாத்மாவை மீண்டும் நினைவு கூர்ந்து உண்மை, நன்னடத்தை ஆகியவற்றுக்கான அவரது செய்தியை பின்பற்றுவோம் என உறுதி மேற்கொள்வோம்.

 கருப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் எதிரான இந்தப் போராட்டம் நின்றுபோவதையோ அல்லது வேகம் குறைந்து போவதையோ நாம் அனுமதிக்கலாகாது. உண்மையின் மீதான உறுதியே வெற்றியை உறுதிப்படுத்துவதாகும்.  125 கோடி பேர்களைக் கொண்ட, அதில் 65 சதவீதம் பேர் 35 வயதிற்கும் கீழானவர்களைக் கொண்ட நமது நாடு, அதற்கான வழிவகைகளையும், ஆதாரங்களையும், திறனையும் கொண்டுள்ள நிலையில் பின் தங்கியிருப்பதில் எவ்வித காரணமும் இல்லை. 

புதிய ஆண்டின் புதிய உதயம் புது வெற்றிக்கான உறுதிப்பாட்டுடன் உதயமாகிறது.

 தடைகளையும், இடர்ப்பாடுகளையும் களைந்தெறிந்து முன்னேறிச் செல்ல நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஜெய்ஹிந்த்!!!

 

                                       *  * * * *