பி.எம்.இந்தியா
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.
மனதின் குரலின் செப்டம்பர் மாதப் பதிப்பின் வாயிலாக மீண்டும் ஒருமுறை உங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. நான் நாட்டுமக்கள் அனைவரையும் வரவேற்கிறேன். மனதின் குரலில் நாம் நாட்டுமக்களின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கிறோம். நாட்டின் சாதனைகள் குறித்துப் பேசுகிறோம். பாரதத்தின் ஒரு பெரிய வரலாற்றுப்பூர்வமான சாதனைக்கு இன்னும் ஒரு நாளுக்குப் பிறகு பத்தாண்டுகள் ஆகவிருக்கிறது. இந்தச் சாதனை தான் துல்லியத் தாக்குதல். பத்தாண்டுகளுக்கு முன்பாக செப்டம்பர் 2016ஆம் ஆண்டு 28-29ஆம் தேதிகளிலே, பாரதநாட்டு சேனையானது பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் மறைவிடங்களின் மீது துல்லியத்தாக்குதலை நடத்தியது. கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து சென்று நமது வீரர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தொடுத்த தாக்குதலைக் கண்டு உலகமே மூக்கிலே விரலை வைத்தது. துல்லியத்தாக்குதல் நடத்தியதன் மூலமாக பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாத தன்னுடைய கொள்கைக்கு ஒரு புதிய எடுத்துக்காட்டை உலகிற்கு பாரதம் எடுத்துக் காட்டியது. பயங்கரவாதம் காரணமாக பாரதம் நீண்ட காலம் வரையிலே வலியை சகித்து வந்தது; ஆனால் துல்லியத் தாக்குதலானது இந்தத் துயரத்திற்கு எதிராக தீர்மானமான எதிர்வினையை ஆற்றியது. கடந்த ஒரு பத்தாண்டுக்காலத்திலே, பாலாகோட்டின் மீதான விமானத் தாக்குதல் தொடங்கி ஆப்பரேஷன் சிந்தூர் வரை, பயங்கரவாதிகள் பாரதத்தை ஏறிட்டுப் பார்த்தார்கள் என்று சொன்னால் அவர்களுக்கு எதிராக கடுமையான எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியை பாரதம் மீண்டும் மீண்டும் தெளிவாக்கியது.
நண்பர்களே, பயங்கரவாதத் தாக்குதல்கள் நீண்டகாலமாகவே நம்மைக் காயப்படுத்தி வந்திருக்கின்றன. ஒரு காலத்திலே, பாரதத்திலே தொடர் குண்டு வெடிப்புகள் என்பவை சாதாரணமானவையாகப் பார்க்கப்பட்டன. செப்டம்பர் மாதமான இந்த மாதத்திலே, 2008ஆம் ஆண்டு, 13ஆம் தேதியன்று தில்லியிலே நடந்த தொடர் குண்டு வெடிப்பிலே பல அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டார்கள். இது நடந்த சில வாரங்கள் கழித்து நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று மும்பையிலே மிகப்பெரிய தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது. நண்பர்களே முன்பும் கூட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானத்தின் மீது எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தீவிரமாகக் கோரப்பட்டது ஆனால், அது கண்டுகொள்ளப்படவே இல்லை. காலம் கடந்து போக காத்திருக்கப்பட்டது. இப்போது, இன்றைய பாரதம், பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மையில்லாக் கொள்கையைப் பின்பற்றி நடக்கிறது. இதன் பலனை நாமும் கவனித்து வருகிறோம், இல்லையா!!
நண்பர்களே, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதியன்று, இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்து 25 ஆண்டுகள் ஆகின்றன. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்திலே உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கைக்குப் பிறகு அதிக அளவு மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் அது பாரதத்திலே தான். 2014ஆம் ஆண்டிலே, நான் பிரதமரான பிறகு அமெரிக்கா சென்றிருந்தது நினைவிருக்கிறது, அப்போது நியூயார்க்கிலே இந்த அப்பாவிக் குடிமக்களுக்கு நான் என் சிரத்தாஞ்சலிகளைச் செலுத்தச் சென்றிருந்தேன். இன்று மீண்டும் ஒருமுறை பாரதத்தின் கோடிக்கணக்கான குடிமக்களின் தரப்பிலிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான் என் பரிவுணர்வை அர்ப்பணிக்கிறேன்.
எனதருமை நாட்டுமக்களே, இப்போதெல்லாம் நாட்டிலே ஒரு மிகப்பெரிய வரைபடம் தயாராகி வருகிறது. இந்த வரைபடத்திலே நீங்களும் இருக்கிறீர்கள், உங்களுடைய குடும்பமும் இருக்கிறது, உங்கள் அக்கம்பக்கத்தாரும் இருக்கிறார்கள். நான் பாரதத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பற்றிப் பேசுகிறேன். தேசத்தின் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இதன் முதல் கட்டம் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. 32 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பற்றிய தகவல்கள் பதியப்பட்டு விட்டன. லத்தாக், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு கஷ்மீரம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் கடினமான, பனிமூடிய பகுதிகளிலும் கூட இப்போது இந்தப் பணி நடந்து வருகிறது. இங்கே பல உத்வேகம் அளிக்கும் அனுபவங்கள் நம் முன்னால் வெளியாகியிருக்கின்றன. உத்தராகண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தொடக்கம் சமோலியின் மாணா கிராமத்திலிருந்து தொடங்கியது. மாணா கிராமம், தேசத்தின் முதல் கிராமமாகக் கருதப்படுகிறது. மாணாவிலே மிக முதன்மையாக 83 வயதான பூர்ணிமா ராவத் அவர்களிடமிருந்து இது தொடங்கப்பட்டது. உத்தரகாசியின் பகோரி கிராமத்திலே வீட்டுத் தங்குமிடங்களை நடத்திவரும் ஹர்தேவ் சிங் ராணா அவர்கள், டிஜிட்டல் வழியாக தன்னைப் பற்றிய தகவல்களைத் தாமே பதிவு செய்திருக்கிறார்.
நண்பர்களே, மக்கள்தொகை கணக்கெடுப்பு நம்மனைவரின் தேசியக் கடமையாகும். இதன் பொருட்டு நீங்கள் சற்று நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று நான் விண்ணப்பத்திருந்தேன். மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்காக உங்களுடைய விபரங்களை நீங்களே பதிவு செய்யும் வசதி மிகவும் சுலபமானது. நீங்கள் உங்களுடைய செல்பேசி வாயிலாகவே, உங்களையும் உங்களுடைய குடும்பத்தார் பற்றிய தகவல்களையும் பதிவு செய்ய முடியும். இந்த வசதி ஹிந்தி மொழி உட்பட 16 மொழிகளில் இருக்கிறது. நண்பர்களே, இதற்காக நீங்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த தளத்தின் பெயர் se.census.gov.in. இங்கே சென்று, நீங்கள் உங்களுடைய செல்பேசி வாயிலாக உள்நுழையவும், உங்களுடைய இடத்தைப் பதிவு செய்யவும், உங்களுடைய குடும்பத்தோடு தொடர்புடைய தகவல்களை நிரப்பவும், பிறகு இதை சமர்ப்பித்து விடவும். இந்த மொத்தச் செயல்பாட்டிற்கும் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை மட்டுமே செலவாகிறது. இதற்கு எந்த ஆவணத்தையும் தரவேற்ற வேண்டியதில்லை. தகவல்களை சமர்ப்பித்த பிறகு உங்களுக்கு ஒரு சிறப்பு அடையாளக் குறியீடு கிடைக்கும். கணக்கெடுப்பு நடத்துவோர் உங்கள் வீட்டிற்கு வரும் வேளையில் நீங்கள் அவர்களிடம் இந்தக் குறியீட்டைத் தெரிவிக்கலாம். நீங்கள் அளித்திருக்கும் தகவல்களை சரிபார்த்த பிறகு அது கணக்கெடுப்பின் பகுதியாகிவிடும். நண்பர்களே, இதுவரை செல்பேசியில் மட்டும் 2 கோடி 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தளத்திலே தங்களைப் பற்றிய தகவல்களை நிரப்பி இருக்கிறார்கள், சுயவிபரப் பதிவைச் செய்திருக்கிறார்கள். நீங்களும் இதற்கு சற்று நேரம் ஒதுக்கினால் இது தேசத்திற்கு மகத்துவமானது. ஏனென்றால் நீங்கள் அளிக்கும் சரியான தகவல், உங்கள் குடும்பத்தார் பற்றிய சரியான தகவல், தேசத்தின் எதிர்காலத்தின் சரியான காட்சியை தயார் செய்ய உதவிகரமாக இருக்கும்.
என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்று செப்டம்பர் மாதம் 27-ம் தேதி, ஒரு சிறப்பான காரணத்தால் மேலும் சிறப்படைகிறது. இன்று ஒரு ஆளுமையின் பிறந்த நாளாகும்; இவர் கலாச்சாரம் மற்றும் தேசத்திற்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சமர்ப்பித்திருக்கிறார். நான் விசுவ ஹிந்து பரிஷதின் முன்னாள் சர்வதேச செயல் தலைவர் மதிப்பிற்குரிய காலஞ்சென்ற அஷோக் சிங்கல் அவர்களைப் பற்றித் தான் பேசுகிறேன். 1926-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று ஆக்ராவிலே இவர் பிறந்தார். இவர் சமூகத்திலே வாழ்ந்தாலும் கூட தவசீலர்களைப் போன்றே வாழ்க்கையை வாழ்ந்தார். இவர் இராமஜன்மபூமி போராட்டத்திற்கு திசையையும், சக்தியையும் அளித்ததன் விளைவாகவே இன்று நாம் அயோத்தியிலே மகோன்னதமான ஆலயத்தை எழுப்ப முடிந்திருக்கிறது. எனக்கு இது பெரும் பேறாக இருக்கிறது. அவ்ருடைய வாழ்க்கையை நான் அருகிருந்து பார்த்திருக்கிறேன் என்பதோடு, அவருடன் இந்தக் குறிக்கோளில் பங்கெடுக்கும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. நான் இராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டைக்கான அனுஷ்டானங்களில் பங்கெடுத்த போது, அப்போதும் கூட, எனக்கு மீண்டும் மீண்டும் அஷோக் அவர்களைப் பற்றிய எண்ணங்கள் மனதில் எழுந்தது மிகவும் இயல்பான ஒன்று தான். நண்பர்களே, அஷோக் அவர்கள் பற்றி எத்தனையோ விஷயங்கள் அந்த அளவுக்கு விவாதிக்கப்படுவதில்லை. இராமர் ஆலயப் போராட்டத்தோடு கூடவே அவர் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாட்டிற்கு எதிராகவும் பெரிய போராட்டத்தை நடத்தினார். அவர் ஒரு மிகவும் வளமான குடும்பத்திலே பிறந்தவர், அவருடைய தந்தை ஒரு சிவில் சேவை அதிகாரி, சகோதர சகோதரிகளில் பெரும்பாலானோர் பெரியபெரிய பதவிகளை வகித்தவர்கள். இவரே கூட ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக்கழக பட்டதாரி. ஆனால், இதையெல்லாம் தாண்டி இவர் சமூகம் மற்றும் கலாச்சாரத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார், இதுவே மகத்தானவர்களின் அடையாளம் ஆகும். இன்று நான் அவருடைய நூற்றாண்டுப் பிறந்த நாளன்று அவருடைய கோடிக்கணக்கான ஆதரவாளர்கள் சார்பாக அவரைப் போற்றுகிறேன். என் தரப்பிலிருந்து உணர்வுபூர்வமான நினைவாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
என் கனிவான நாட்டுமக்களே, இந்த ஆண்டின் தொடக்கத்தை நாம் சுயமரியாதையின் ஒரு மகத்தான நாளோடு கொண்டாடினோம். அந்தப் புனித நாள் தான் சோமநாதர் சுயமரியாதைத் திருநாள். இன்றிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் முன்பாக 1026ஆம் ஆண்டிலே மொஹம்மத் கஜினி முதன்முறையாக சோமநாதர் ஆலயத்தைத் தரைமட்டமாக்கினான். ஆனால் சோமநாதர் ஆலயத்தைத் தகர்த்து பாரதத்தின் அடையாளத்தை அழிக்க வந்தவர்களின் இருப்போ அடையாளமோ ஏதும் இல்லை. ஆனால் சோமநாதர் ஆலயமோ பிரும்மாண்டமாக, விசாலமான கடற்கரையிலே, பாரதத்தின் சாகாத்தன்மைக்கு நல்லாசிகள் அளித்து வருகின்றது. ஆகையால் தான் நாம் நிறை பெருமிதம் பொங்க இந்த ஆண்டு சோமநாதர் சுயமரியாதைத் திருநாளைக் கொண்டாடினோம். நண்பர்களே, இந்த விவாதத்தை இன்று மனதின் குரலிலே மீண்டும் நான் ஏன் கூறுகிறேன் என்றால் இதற்கும் கூட ஒரு சிறப்பான காரணம் உண்டு. 1026ஆம் ஆண்டிலே கஜினி வாயிலாக சோமநாதர் ஆலயம் தகர்க்கப்பட்ட அதே ஆண்டிலே தான் குஜராத்தின் மோடேராவின் பிரசித்தி பெற்ற சூரியனார் ஆலயத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டு தகர்க்கப்பட்டது. அதாவது மோடேராவின் ஆலயமும் தகர்க்கப்பட்டும் கூட இந்த ஆண்டோடு ஓராயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டு ஓராண்டே ஆகியிருந்தது. 1025ஆம் ஆண்டிலே இந்த ஆலயம் ராஜா பீமதேவரால் கட்டப்பட்டது. நண்பர்களே, நீங்கள் அந்தக் காலகட்டம் பற்றி சிந்தித்துப் பாருங்கள், அப்போது நம்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு, சோமநாதர் ஆலயம் போன்ற நம்பிக்கையின் மிகப்பெரிய மையம் தவிடுபொடியாக்கப்படுகிறது, மேலும் பல இடங்களும் தாக்கப்படுகின்றன எனும் போது, எந்த ஒரு சமூகமாகட்டும், நிர்வாகமாகட்டும், அதன் மனோபலம் பலவீனமாகிவிடும். ஆனால் ராஜா ஒன்றாம் பீமதேவர், கஜினியை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், சில காலத்திற்குள்ளாகவே மோடேராவின் சூரியனார் கோயிலையும் புனரமைத்தார். இந்த உயிர்ப்புணர்வு காரணமாகவே சோமநாதர் ஆலயமும் மீண்டும் மீண்டும் நாசப்படுத்தப்பட்ட போது புனர்நிர்மாணமும் தொடர்ந்து நடைபெற்றது.
நண்பர்களே, மோடேரா சூரியனார் கோயிலுக்குப் பிறகான காலகட்டத்தில் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறின. பிறகு அலாவுத்தீன் கில்ஜி மீண்டுமொரு முறை சிற்பக்கலை கொழிக்கும் இந்த மகத்தான ஆலயத்தைத் தகர்த்தான் என்றாலும் நண்பர்களே, நமது பாரத நாட்டவர்கள் சூரிய வழிபாட்டினை வெறும் கட்டடக்கலை மற்றும் ஆலயங்கள் வாயிலாக மட்டுமே செய்யவில்லை, நமது சூரிய வழிபாடு, அதன் மேலும் ஒரு பொருள் என்னவென்றால் ஒளி, சக்தி, அறிவியல் மற்றும் நீடித்ததன்மைக்கான உத்வேகம். ஆகையால் மோடேராவும் கூட இன்று சூரியனார் கோயிலுக்காக மட்டுமே அறியப்படுவதில்லை, மாறாக குஜராத்தின் இந்த கிராமம், தேசத்தின் முதல் சூரிய கிராமம் என்ற வகையிலும் புகழ் பெற்றிருக்கிறது. மோடேரா இன்று முழுமையான வகையிலே சூரிய சக்தியால் இயங்குகிறது, மேலும் தேசத்தின் முன்பாக நீடித்ததன்மையாக ஒரு எடுத்துக்காட்டையும் இது முன்வைக்கிறது. மோடேராவிலே சுற்றுலாப் பயணிகளுக்கு பல கவரக்கூடியவையும், வசதிகளின் தொடக்கமும் ஏற்பட்டிருக்கிறது. ஜனவரியின் மகர சங்கராந்திக்குப் பிறகு அங்கே மோடேரா நாட்டியத் திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதிலே பாரதத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய நடனங்களின் அருமையான அரங்கேற்றம் நடைபெறும். நீங்களனைவரும் ஒருமுறை அவசியம் மோடேராவுக்கு வாருங்கள், பாரதத்தின் இந்த கௌரவம் மிக்க பாரம்பரியத்தை தரிசனம் செய்யுங்கள் என்று உங்களனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன்.
நண்பர்களே, கடந்த காலத்துடனான நமது பந்தம் இன்றும் கூட மிகவும் உயிர்ப்போடு இருக்கிறது. இதன் பின்புலத்தில் இதை மேலும் ஆழப்படுத்திக் கொண்டுவருவோரின் அர்ப்பணிப்பு உணர்வும், உழைப்பும் இருக்கின்றது. தமிழ்நாட்டிலே திருச்சிராப்பள்ளியின் மணப்பாறையிலே இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சி நடைபெற்று வருகிறது. ஒரு கல்லூரியிலே, தமிழ்க்கல்வித் துறையோடு தொடர்புடைய ஏ செல்வராஜு அவர்கள் இதை மேலும் முன்னெடுத்து வருகிறார். ஒரு உரையாடலின் போது, அவருக்கு தனது மாணவனிடமிருந்து சில தொன்மையான உருவச்சிலைகள் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. இந்த விஷயம் தொடர்பான விவாதங்களுக்குப் பிறகு அவர் கள ஆய்வுக்குத் திட்டமிட்டார். இந்த வருகையின் போது அவருக்கு பல்வேறு இடங்களில் பல உருவச்சிலைகளும், தொன்மையான ஆலயமும் கிடைத்தன. கடந்த காலத்தோடு தொடர்பு கொள்ள இது ஒரு சுவாரசியமான முயற்சியாகும். இதைப் போலவே நாம் நமது மரபுகளைப் பற்றி மேலும் சிறப்பான முறையிலே தெரிந்து கொள்ளலாம். தேசத்தின் பிற பாகங்களிலும்கூட இப்படிப்பட்ட முயற்சிகள் செய்யப்படலாம். நமது வரலாற்றை மேலும் அணுக்கமாகப் பார்க்கும் வாய்ப்பினை நமக்கு இவை அளிக்கின்றன.
என் உளம்நிறை நாட்டுமக்களே, சில நாட்களிலே அக்டோபர் மாதம் 2-ம் தேதி வணக்கத்துக்குரிய பாபுவின் ஜயந்தி வருகிறது. பாபு நமக்கு வாழ்க்கையின் பல மந்திரங்களை அளித்திருக்கிறார். தூய்மையும் அவற்றில் ஒன்று. நமக்கருகே தூய்மையோடு தொடர்புடைய அநேக முயற்சிகளை நாம் காண்கிறோம். இந்த முயற்சிகள் எல்லாம் மிகவும் உள்ளெழுச்சியும், உற்சாகமும் அதிகமேற்படுத்துபவை. சமூக வலைத்தளங்களிலும் கூட இப்படிப்பட்ட படங்கள், காணொளிகள், ரீல்கள் மீண்டும் மீண்டும் நமது கவனத்தைக் கவர்கின்றன. தற்போதைய நாட்களில் நான் இப்படிப்பட்ட பல முயற்சிகளைப் பார்க்க நேர்ந்தது. மத்திய பிரதேசத்தில சில இளைஞர்கள் நதியைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுடைய சிறிய முயற்சி வாயிலாக ஒட்டுமொத்த சமூகத்தையும் இணைத்து வருகிறார்கள். இப்படியே ஆந்திரத்திலேயும் இளைஞர்கள் பழைய குளங்களையும் குட்டைகளையும் தூய்மைப்படுத்தி வருகிறார்கள். இதிலே நமது பழைய மரபுச் சின்னங்கள் மீண்டும் புத்துயிர் பெறும் பணியும் நடந்தேறி வருகிறது. மும்பையிலே சில இளைஞர்கள் கடற்கரைகளைத் தூய்மையாக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு கடற்கரையிலே பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு, தூய்மைப்பணி மூலம் சேவையாற்றி வருகிறார்கள். இங்கே தில்லியைச் சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோர், மக்கும் குப்பை-மக்கா குப்பை ஆகிய்வற்றைத் தனித்தனியே வைப்பதோடு, அருகில் இருக்கும் இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பது குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார்கள். மேற்கு வங்கத்திலே இளம் மாணவர்களும், உள்ளூர் மக்களும் இணைந்து இன்பச்சுற்றுலா செல்லும் இடங்களில் இருக்கும் சந்தைகளைச் சுத்தம் செய்து வருகிறார்கள். நண்பர்களே, இவர்கள் அனைவரின் முயற்சிகள் வாயிலாகவும் ஒரு விஷயம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. எங்கேயோ ஒரு தொடக்கத்தை ஒரு தனிநபர் செய்ய, பிறகு அவரோடு வேறு சிலரும் இணைய, இதுவே சங்கிலித் தொடராகிறது, இது தானே மக்கள் பங்கெடுப்பு!! பாபுவுக்கு நாம் செலுத்தக்கூடிய மிக அழகான சிரத்தாஞ்சலியும் கூட தூய்மை தான்.
எனதருமை நாட்டுமக்களே, நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறோம் எனும் போது, தாவரங்கள்-செடி-கொடிகள் அல்லது உயிரினங்களை மட்டும் காப்பதில்லை, நாம் அந்த ஒட்டுமொத்த சூழலமைப்பையுமே பலப்படுத்துகிறோம். தேசத்தின் பல்வேறு பாகங்களில் நடந்து வரும் சில முயற்சிகள் எல்லாம் இந்த உணர்வை மிகவும் அழகான முறையிலே காட்சிப்படுத்துகின்றன.
நண்பர்களே, அசாமிலே சோனாயி ரூபாயி வனவிலங்கு சரணாலயம் உள்ளது. ஒரு சமயத்திலே இங்கே யானைகள் வசித்து வந்தன, ஆனால் மெல்லமெல்ல வனங்களின் மீது மனிதர்களின் ஆக்கிரமிப்பு அதிகரிக்கத் தொடங்கிய காரணத்தால் யானைகள் இந்தப் பகுதியிலிருந்து விலகத் தொடங்கின. மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்த நிலப்பகுதி, ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இப்போது, மிக அற்புதமான விளைவுகள் புலனாகின்றன. யானைகள் இங்கே மீண்டும் திரும்பி வந்திருக்கின்றன. எந்தப் பகுதிகளில் எல்லாம் பல ஆண்டுகளாக அவற்றின் இயக்கம் தென்படவில்லையோ, இன்று அங்கே மீண்டும் யானைகளின் கூட்டங்களைப் பார்க்க முடிகிறது. நண்பர்களே, அசமிலே மேலும் ஒரு அழகான முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. இந்த முயற்சி மிகவும் சிறிய உயிரினமான பிக்மி ஹாக் – இதைக் காப்பதற்கானது. ஒரு காலத்தில் இதன் இருப்பு ஒரு கேள்விக்குறியானது, அப்போது வெறும் 6 பிக்மி ஹாக்குகள் மட்டுமே இருந்தன. இவற்றைக் கொண்டு ஒரு பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, இவை மீண்டும் வனங்களில் விடப்பட்டன. இவை வசிக்க புல்வெளிகளும் உருவாக்கப்பட்டன. இன்று இந்தத் திட்டம் காரணமாக பிக்மி ஹாகின் எண்ணிக்கை 190க்கும் அதிகமாகி இருக்கிறது.
நண்பர்களே, இயற்கையோடு கூட நமது உறவு வெறும் பராமரிப்போடு மட்டும் தேங்கிப் போவதில்லை. பல வேளைகளில் இயற்கையை நாம் கவனித்துக் கொள்ளும் போது அதே இயற்கை நம் வாழ்க்கைக்கும் துணையாகிறது. மேற்கு வங்கத்தின் சுந்தர்வனத்திலே சில பெண்கள் இந்த உறவின் உத்வேகம் நிறைந்த எடுத்துக்காட்டை அளித்து வருகிறார்கள். ஜார்க்காலியின் இந்தப் பெண்கள் சதுப்புநிலக்காடுகளைத் தயார் செய்து வருகிறார்கள். இவர்களின் பெரும்பாலானோரின் கணவன்மார்கள் புலித்தாக்குதலில் மாண்டு போனவர்கள். கணவனை இழந்த பிறகு இவர்கள் சுந்தர்வனக் காடுகளையே தங்களுடைய வாழ்வாதாரமாக ஆக்கிக் கொண்டார்கள். இவர்களால் நடப்பட்டிருக்கும் அலையாத்திக் காடுகள், இன்று கிராமங்களுக்கான ஒரு இயற்கையான பாதுகாப்புக் கவசமாக ஆகி வருகின்றன, மேலும் இவற்றை நட்டதன் வாயிலாக இந்தப் பெண்களுக்கு வருவாயும் உண்டாகிறது. நண்பர்களே, நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும், இயற்கையின் சீர்த்தன்மையைப் பராமரிக்க வேண்டும், அதன் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும். நம்முடைய இப்படிப்பட்ட அனைத்து முயற்சிகளும் எதிர்காலச் சந்ததிகளுக்கான நமது கடமையாகும்.
என் இதயம் நிறை நாட்டுமக்களே, தற்போது தான் தேசத்தின் இலட்சக்கணக்கான இளைஞர்கள் போதைப்பழக்கத்துக்கு எதிராக, போதைப் பொருட்களுக்கு எதிராக, ஒரு மிக மகத்துவமான உறுதிப்பாட்டை மேற்கொண்டார்கள். இளைஞர்கள் தாமும் போதையிலிருந்து விலகி இருக்கும் உறுதிப்பாட்டை மேற்கொண்டதோடு, இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பையையும் ஏற்றுக் கொண்டார்கள். இவையனைத்தும் போதையில்லா இளைஞர்கள் இயக்கத்திலே. இந்த இயக்கமானது 100 வாரங்கள் வரை நடத்தப்படும். இதிலே மை பாரத்தின் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். நாட்டுப்பணித் திட்டத்தோடு இணைந்த நமது இளைஞர்களும் கூட இதில் அங்கம் வகிக்கிறார்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் கூட இதில் பயணிக்கிறார்கள். மேலும் பல சமூக மற்றும் ஆன்மீக அமைப்புகளும் கூட இதோடு இணைந்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களாகவே நாடெங்கும் ஆயிரக்கணக்கான உறுதிப்பாட்டுக் கூட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்திருக்கின்றன. நண்பர்களே, இந்த இயக்கத்திலே எனக்கு ஒரு விஷயம் மிகவும் பிடித்திருந்தது, அது தான் போதைப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான செய்தி. நமது இளைஞர்கள் தாங்களே தங்களுடைய மொழியிலே, தங்களுடைய வழிமுறையிலே இந்தச் செய்தியை முன்னெடுத்து வருகிறார்கள். தங்களுடைய படைப்புத்திறனை இந்த இயக்கத்தோடு இணைக்க வேண்டும் என்று நானும் கூட மனதின் குரலில் இளைய நண்பர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த அறைகூவலுக்கு செவிமடுத்திருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. MY Bharatஇல் பாடல், முழக்கங்கள் எழுதல், தெருமுனை நாடகங்கள் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தன. இதைப் போலவே, சமூக வலைத்தளத்தில் நமது இளைஞர்கள், #போதையில்லா இளைஞர்கள் என்பதிலே தங்களுடைய படைப்புத்திறன் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதாவது செய்தியும் இளைஞர்களுடையது, ஊடகமும் இளைஞர்களுடையது, மேலும் இதை முன்னெடுத்துச் செல்லும் சக்தியும் இளைஞர்களுடையதே. இனிவரும் நாட்களிலே இந்த இயக்கத்தின்படி உடல்நலப் பரிசோதனை, தியான முகாம்கள் போன்ற நடவடிக்கைகளும் நடக்கும்.
நண்பர்களே, விரைவிலேயே நமது அநேக திருநாட்களும், பண்டிகைகளும் வரவிருக்கின்றன. இந்த முறை பண்டிகைகளின் சந்தோஷத்திற்கு இடையே நாம் நமக்கருகே பார்வையைச் செலுத்துவோம். ஏதாவது இளைஞன் தவறான பழக்கத்தை நோக்கிச் செல்கிறார் என்றால் அவரோடு உரையாடுவோம். யாரேனும் போதைப்பழக்கத்திலிருந்து வெளியேற விரும்புகிறார் என்றால் அவருக்குத் துணை நிற்போம். போதையில்லா இளைஞர்கள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இந்த மனவுறுதியை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுத்துச் செல்வோம்.
என் உயிருக்கு உயிரான நாட்டுமக்களே, செங்கோட்டையிலிருந்து நான் இந்த முறை விளையாட்டுக்களுக்கான திற்மைகள் தேடல் இயக்கத்தை அறிவித்திருந்தேன். பாரதம் தொடர்ந்து மிகச் சிறப்பான வகையில் விளையாட்டுக்களில் திறமைகளை வெளிப்படுத்தி வரவேண்டும் என்பதற்காக கிராமங்கள்-குடியிருப்புத் தொகுப்புகள் வரை சென்று திறமைகளைத் தேட வேண்டும். இந்தப் பணிக்காகவே தங்களையே அர்ப்பணித்தவர்களூம் பலர் இருக்கிறார்கள். திறமைகளைத் தேடிப்பிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதை அவர்கள் ஒருமுனைப்போடு செய்து வருகிறார்கள். பஞ்சாபிலே இந்தப் பணியை ராஜிந்தர் சிங் அவர்கள் செய்து வருகிறார். ராஜிந்தர் சிங் அவர்கள் பெயரிலேயே கூட சீனியர் என்ற சொல்லும் இணைந்திருக்கிறது. இவர் 1980ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலே ஹாக்கி போட்டியிலே தங்கப் பதக்கம் வென்ற குழுவினரின் அங்கமாக இருந்தார். 1982ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலே விளாசினார். 2001ஆம் ஆண்டு, பாரதம் முதன்முறையாக ஆடவருக்கான இளநிலை உலகக் கோப்பையை வென்றது. அதே போல 2003ஆம் ஆண்டிலே நம் நாடு சீனியர் ஆசியக் கோப்பை விருதையும் தன்னுடையதாக்கியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இவர் பயிற்றுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் Round Glass Hockey Academy வாயிலாக, தனது பேரார்வத்தை முன்னெடுத்துச் சென்று வருகிறார். இவருடைய முயற்சிகளால் கிராமங்களில் புதிய ஹாக்கி ஆஸ்ட்ரோ மைதானங்கள் போடப்பட்டு வருகின்றன. ராஜிந்தர் அவர்களின் கவனம் தெளிவாக இருக்கிறது. சிறப்பான பயிற்சிகள் குறைவாக இருக்கும் கிராமங்களை அடையாளம் கண்டு கவனம் செலுத்தும் முயற்சிகளின் காரணத்தால் பல விளையாட்டு வீரர்கள், பாரதத்தின் இளநிலை மற்றும் முதுநிலையில் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடிந்திருக்கிறது. ராஜிந்தர் சிங் அவர்களின் இந்த அர்ப்பணிப்பை நாம் எத்தனை பாராட்டினாலும் தகும்.
என் இனிமையான நாட்டுமக்களே, நெல்லிக்காயை நாமனைவரும் நன்கறிவோம். பெரும்பான்மையான வீடுகளில் நெல்லிக்காயில் போடப்பட்டிருக்கும் ஊறுகாய்களும், முரப்பாக்களும் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நெல்லிச்சாற்றை விரும்பிச் சுவைக்கிறார்கள், மேலும் பல நூற்றாண்டுகளாகவே சியவன்பிராஷ் நமது அன்றாட வாழ்க்கையின் முக்கியமான அங்கமாகிவிட்டது. நமது பெரியோர்-முதியோர் எல்லாம் தலைமுறை தலைமுறையாக நெல்லியின் குணங்களைப் பற்றிக் கூறி வந்திருக்கிறார்கள். நண்பர்களே, இதே நெல்லிதான், இன்று உத்தர பிரதேசத்தின் பிரதாப்கட்டிலே புதிய சாத்தியக்கூறுகளின் ஊடகமாக ஆகி வருகிறது. பிரதாப்கட் மற்றும் நெல்லிக்கும் இடையேயான உறவு மிகவும் பழமையானது. பல தலைமுறைகளாகவே இங்கிருக்கும் விவசாயிகள் நெல்லியை சாகுபடி செய்து வருகிறார்கள். நெல்லியானது பிரதாப்கட்டிற்கு ஒரு பலமான அடையாளத்தை அளித்திருக்கிறது. மேலும் இப்போது இதே பழைய அடையாளம் இங்கே இருக்கும் விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் புதிய சந்தர்ப்பத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ஒரு மாவட்டம் ஒரு பொருள் அதாவது ODOP வாயிலாக இங்கே நெல்லியோடு தொடர்புடைய உள்ளூர் தொழில்முனைவோருக்கு ஊக்கம் கிடைத்திருக்கிறது. இன்று பிரதாப்கட்டிலே நெல்லி பதப்படுத்தலோடு தொடர்புடைய 100 அலகுகள் செயல்பட்டு வருகின்றன, மேலும் இவற்றிலே சுயவுதவிக் குழுக்களோடு தொடர்புடைய பெண்களும் அதிக அளவிலே பங்களிப்பு செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சமூகம் தான் தேவ்கட்டின் கமாசி கிராமத்தில் இருப்பது. சாவித்ரி ஃபுலே சுயவுதவிக் குழுவோடு தொடர்புடைய பெண்கள் நெல்லியிலிருந்து மிட்டாய், முரப்பா, பழச்சாறு போன்றவற்றைத் தயாரிக்கிறார்கள். ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின்படி, புதிய சந்தைகள் வரை வீச்சு அதிகரித்திருப்பதால் அவர்களின் வருமானத்திலும் பெருக்கம் அதிகரித்திருக்கிறது. இதைப் போலவே ஒரு கிராமத்தில் விந்தியவாசினி சுயவுதவிக் குழு ஒன்று இருக்கிறது. இந்தக் குழுவின் பெண்கள், நெல்லிக்காயிலிருந்து ஊறுகாய், செரிமானப் பொடி போன்ற பல பொருட்களைத் தயாரிக்கிறார்கள். இந்தப் பெண்களுக்கு பதப்படுத்தலுக்காக இயந்திரங்கள் கிடைத்திருக்கின்றன, கடன் வசதிகளும் கிடைத்திருக்கின்றன. உள்ளூர் வியாபாரச் சந்தைகளோடு இணையும் வாய்ப்புகளும் கிடைத்து, குறுகிய காலத்திலேயே அவர்களுடைய வருவாய் கணிசமாக அதிகரித்துவிட்டது.
நண்பர்களே, நமது நாட்டிலே அனைத்துத் துறைகளிலும் இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. ஏதோ இடத்திலே சிறப்பான பழம் இருக்கிறது என்றால், ஓரிடத்தில் பாரம்பரியமான கலை இருக்கிறது, ஓரிடத்தில் விநோதமான திறன் இருக்கிறது. ஒரு மாவட்டம் ஒரு பொருள் இந்தச் சிறப்புகளை முன்னெடுத்துச் செல்லும் இயக்கமாகும். நமது முயற்சி என்னவாக இருக்க வேண்டுமென்றால், நமது கிராமம் மற்றும் சிறிய நகரங்களின் இந்த அடையாளம் வெறும் உள்ளூர் சந்தைகள் வரை மட்டும் குறுகியிருக்கக் கூடாது. நாட்டின் பிற பாகங்களுக்கும், உலகின் சந்தைகள் வரையும் இவற்றின் தாக்கம் சென்றுசேர வேண்டும். இதனால் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் விஷயத்திலும் வலு சேர்க்கப்படுகிறது. இவை தேசத்தை தற்சார்புடையதாக ஆக்குவதிலும் கூட உத்வேகம் அளிக்கின்றன. வரவிருக்கின்ற பண்டிகைகளின் போதும்கூட நாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை எப்போதும் மறந்துவிடக் கூடாது.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, செப்டம்பர் மாதமானது ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஊட்டச்சத்து மாதத்திலே பல்வேறு துறைகளோடு தொடர்புடைய மக்களும், அமைப்புகளும் இந்த சீரிய பணிக்காக ஒன்றிணைந்து வருகின்றன. ஊட்டச்சத்துக் குறைபாட்டினை எதிர்கொள்ள இந்த ஆண்டு பல பாராட்டத்தக்க முன்னெடுப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. சத்திஸ்கட்டிலே ஹர் கர் முலகா, கர் கர் முலகா – இல்லம் தோறும் முருங்கை இல்லமெங்கும் முருங்கை என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. இதிலே ஊட்டச்சத்துமிக்க முருங்கையை தங்களுடைய உணவுமுறைகளில் இணைத்துக் கொள்ள ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. குஜராத்திலும் கூட வாங்கிப் போட்டி அதாவது சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உண்டிகளின் போட்டிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த முன்னெடுப்பு வாயிலாக விலைமலிவான- ஊட்டச்சத்து மிக்க உள்ளூர் உணவுகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போட்டியிலே கலந்து கொண்டு விட்டார்கள். மகாராஷ்டிரத்திலும் கூட இந்தக் கோணத்தில் பாராட்டத்தகுந்த முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கே ஆசிரியர்கள், ஆங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் குழந்தைகளின் தாய் தந்தையரும் விழிப்புணர்வு இயக்கத்தோடு இணைந்திருக்கிறார்கள். மிசோரமிலேயும் கூட, இந்த ஆண்டு மக்களோடு இணைந்து ஊட்டச்சத்துத் தோட்டங்களைப் பராமரிக்கும் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இது மிஸோ சமூகத்தின் தலோ-மட்-யனா என்ற பாரம்பரியத்துக்கு இசைவானது. இதன் பொருள் என்னவென்றால், சுயநலமற்ற சேவையிலும் மற்றவர்களுக்கு உதவுவதிலும் எப்போதும் முன்னே இருத்தல். இப்படிப்பட்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியவை. இவை போன்ற முன்னெடுப்புகளில் ஈடுபடும் ஆங்கன்வாடி மையங்களோடு தொடர்புடைய அனைவர் குறித்தும் பெருமிதம் கொள்கிறேன். இந்த ஆங்கன்வாடி மையங்கள் இப்போது ஊட்டச்சத்து ட்ராக்கர்களால் டிஜிட்டல் முறையில் இணைந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 9 கோடி பயனாளிகள் இதிலே தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக குழந்தைகள், கருவுற்ற பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மார்கள் ஆகியோரின் சிறப்பான பராமரிப்பு சாத்தியமாகி இருக்கிறது. நாம் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான இந்தப் போரினை இதைப் போலவே மேலும் முன்னேற்றிச் செல்ல வேண்டும். நாம் நமது சமூகத்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும்.
நண்பர்களே, நாமனைவரும் இந்த மாதம் முழுமையான சிரத்தையோடும், உற்சாகத்தோடும் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடினோம். நாடெங்கிலும் நிறைவான பக்தியுணர்வோடு கணபதி பப்பாவை வரவேற்றோம். இந்தப் பவித்திரமான வேளையானது ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை உற்சாகம்-பூரிப்பினால் நிறைத்து விடுகிறது. நண்பர்களே, விக்கினங்களை அகற்றும் பகவான் ஸ்ரீ கணபதி, ஞானம், புத்தி மற்றும் மங்கலச் செயல்களின் தொடக்கத்தின் அடையாளம். அவரிடத்தில் அளவில்லா சிரத்தை உணர்வு பாரதத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை; எடுத்துக்காட்டாக, திருவாளர் பந்தௌன் தீர்கானோன் அவர்கள் விஷயத்தையே எடுத்துக் கொள்வோமே. இவர் தாய்லாந்தைச் சேர்ந்தவர். இங்கே பகவான் கணபதி ஃப்ரா ஃப்ரிகானேத் என்ற ரூபத்திலே பூசிக்கப்படுகிறார். மேலும் அவருக்கு 19 வயதான போது, அவருடைய தந்தையார் பகவான் கணபதியின் ஒரு சிறிய படத்தை அவருக்கு பரிசாக அளித்தார். இதிலிருந்து அவரிடத்திலே அற்புதமான பக்திப் பெருக்கெடுக்கத் தொடங்கியது. அவர் பகவான் கணபதியோடு தொடர்புடைய பாரம்பரியங்களை ஆய்வு செய்து 40 ஆண்டுக்காலத்திற்கும் அதிகமான காலத்தை இதில் செலவு செய்திருக்கிறார். அவர் பாரதம் மற்றும் நேபாளம் உட்பட ஆசியாவின் பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். மகாராஷ்டிரத்தோடு அவருக்கு விசேஷமான ஈர்ப்பு இருந்து வந்திருக்கிறது. அஷ்டவிநாயகர்கள் பாரம்பரியம் பற்றித் தெரிந்து கொள்ள பல முறை இங்கே வந்திருக்கிறார். அவருடைய முயற்சிகள் காரணமாக தாய்லாந்த் நாட்டு பக்தர்களிடையே அஷ்டவிநாயகர் யாத்திரை மிகவும் பிரபலமாகிவிட்டது. 2002ஆம் ஆண்டிலே இவர் வடக்கு தாய்லாந்தின் சியாங்க் மாயிவிலே கணேஷ் ஹிமால் மியூசியத்தை நிறுவினார். இன்று இதிலே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகள் இருக்கின்றன. பாரதம் வரமுடியாத பக்தர்களுக்காக வேண்டி அஷ்டவிநாயகர்களின் திருவுருவச் சிலைகள் தாய்லாந்து அருங்காட்சியகத்திலே இருக்கின்றன. இங்கே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை சுமார் 10 மணிக்கு பிள்ளையார் பூஜை அர்ச்சனை செய்யப்படுகிறது. கணபதியோடு தொடர்புடைய விசேஷ காலங்களிலும் கூட இந்தச் செயல்முறை பின்பற்றப்படுகிறது. பாரதத்தின் நம்பிக்கை, கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியங்கள் பிற தேசங்களிலும் கூட எவ்வாறு பிரசித்தி பெற்று இருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. கணபதி பப்பாவின் நல்லாசிகள் அனைவருக்கும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
நண்பர்களே, மனதின் குரலின் ஒவ்வொரு பதிப்பிற்குப் பிறகு எனக்கு பல விஷயங்களில் உங்களிடமிருந்து செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. நீங்கள் இதைப் போன்றே உத்வேகமளிக்கும் தகவல்களை எனக்கு அனுப்பி வாருங்கள். உங்கள் அக்கம்பக்கத்தில், அருகில் நடக்கும் இத்தகைய முயற்சிகளைப் பாராட்டிச் சீராட்டும் போது, அவர்களுடைய உற்சாகம் மேலும் அதிகமாகிறது. மனதின் குரல் வாயிலாக அவர்களைப் பற்றிய தகவல்கள் தேசத்தின் பிற பாகங்களில் இருக்கும் மக்களையும் சென்று சேர்ந்து அவர்களையும் ஊக்கப்படுத்துகிறது. இந்தப் பயணத்திலே இதைப் போன்றே உங்களுடைய ஒத்துழைப்பு தொடர்ந்து இனியும் கிடைத்து வர வேண்டும். வரவிருக்கின்ற பண்டிகைகளை நீங்கள், உங்கள் குடும்பத்தாரோடும், நண்பர்களோடும், நிறை மகிழ்ச்சியோடும், களிப்போடும் கொண்டாடுங்கள். உங்களனைவருக்கும் மீண்டுமொரு முறை நல்வாழ்த்துக்கள். பலப்பல நன்றிகள். வணக்கம்.
*****
(Release ID: 2315491)
RJ
Do listen to this month's #MannKiBaat as we discuss a range of subjects. https://t.co/uNlANtGly7
— Narendra Modi (@narendramodi) September 27, 2026
India has made it clear that terrorism will be met with a strong and decisive response.#MannKiBaat pic.twitter.com/xwDUFCAGZs
— PMO India (@PMOIndia) September 27, 2026
The Census is a national responsibility and every citizen has a role to play.#MannKiBaat pic.twitter.com/DikrJ8RimG
— PMO India (@PMOIndia) September 27, 2026
Tributes to Shri Ashok Singhal Ji on his birth centenary. His lifelong dedication to society and the nation continues to inspire generations.#MannKiBaat pic.twitter.com/rWa6GJaNyL
— PMO India (@PMOIndia) September 27, 2026
From the historic Sun Temple to becoming a solar village, Modhera beautifully connects our rich heritage with a sustainable future.#MannKiBaat pic.twitter.com/QAY9ynzcwI
— PMO India (@PMOIndia) September 27, 2026
Tamil Nadu's A. Selvaraju Ji's efforts are helping people discover ancient idols and temples. Such initiatives help us connect with and better understand our heritage.#MannKiBaat pic.twitter.com/gMUU959cih
— PMO India (@PMOIndia) September 27, 2026
Nature conservation is bringing positive change in Assam.#MannKiBaat pic.twitter.com/Xmi5Ft1ncy
— PMO India (@PMOIndia) September 27, 2026
In the Sundarbans, women are planting mangroves that protect villages and support their livelihoods. pic.twitter.com/1Hyh0nX8PM
— PMO India (@PMOIndia) September 27, 2026
India's youth are coming together against drugs. Through the Nasha Mukt Yuva Abhiyan, they are spreading awareness through creative campaigns and activities.#MannKiBaat pic.twitter.com/iL0Rqd5MR3
— PMO India (@PMOIndia) September 27, 2026
Rajinder Singh Senior Ji is helping discover and train young hockey talent. His efforts are giving children in villages better opportunities to pursue the sport.#MannKiBaat pic.twitter.com/xZmiA246mW
— PMO India (@PMOIndia) September 27, 2026
Pratapgarh's famous Amla is creating new opportunities for farmers and women working in Self-Help Groups.#MannKiBaat pic.twitter.com/iVggcTUp5q
— PMO India (@PMOIndia) September 27, 2026
Across India, people are coming together to promote better nutrition and support healthier communities.#MannKiBaat pic.twitter.com/pmiG3ueyo6
— PMO India (@PMOIndia) September 27, 2026
Bhagwan Shri Ganesh's devotion goes beyond India... In Thailand, the Ganesh Himal Museum has over 10,000 Ganesh idols, reflecting the deep cultural ties shared between the two countries.#MannKiBaat pic.twitter.com/RSSGBGqwYB
— PMO India (@PMOIndia) September 27, 2026