பி.எம்.இந்தியா
தமிழ்நாட்டின் ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேக்கர் அவர்களே, மாநில முதலமைச்சர் திரு சி.ஜோசப் விஜய் அவர்களே, மத்திய அமைச்சர் திரு எல். முருகன் அவர்களே, திரு நயினார் நாகேந்திரன் அவர்களே, தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளே, வணக்கம்.
சென்னையில் உங்கள் அனைவருடனும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். இன்றைய நிகழ்ச்சி 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடர்பானதாகும். முடிவடைந்த பல்வேறு திட்டங்களை நாங்கள் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறோம். இவற்றில் சில திட்டங்கள் அன்றாடப் பயணத்தை எளிதாக்கும். மற்றவை தொழில்துறையையும், வர்த்தகத்தையும் வலுப்படுத்தும். இவை அனைத்தும் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த நன்னாளில் மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று புனித நவராத்திரிப் பண்டிகை தொடங்குகிறது. நவராத்திரியின் இந்த நன்னாளில், சிவபெருமானுக்கும் பராசக்திக்கும் உரிய புனித பூமியான தமிழ்நாட்டில், இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாக ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவபெருமானின் அருளாசியைப் பெறும் நல்வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. தமிழ்நாட்டின் இந்தப் புனித திருத்தலத்திலிருந்து, நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நவராத்திரி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
சற்று நேரத்திற்கு முன், ஐஐடியில் உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இத்துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், பொது சுகாதாரத் துறையில் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். இந்தப் பயணத்தைத் தவிர, சென்னை மெட்ரோவின் மற்றொரு வழித்தடத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
நண்பர்களே,
ஆலயம் முதல் மெட்ரோ சேவை வரை, தமிழ்நாட்டின் இந்த அனுபவங்கள், இன்றைய இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கின்றன. தனது கலாச்சார வலிமையிலிருந்து உத்வேகம் பெறும் இந்தியா, அறிவியல் முன்னேற்றம் மூலம் வளர்ச்சியடைந்து, நவீன உள்கட்டமைப்பு வாயிலாகப் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. நமது பாரம்பரியமும் எதிர்காலத்திற்கான லட்சியங்களும் ஒன்றிணைந்து முன்னேறி வருகின்றன.
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன், உங்கள் அன்பு மற்றும் ஆசிகளுடனும் அரசின் தலைமைத்துவத்தில் 25 ஆண்டுகள் என்ற முக்கிய மைல்கல்லை நான் எட்டினேன். அக்டோபர் 2001-ல் நான் முதலமைச்சராகப் பதவியேற்றேன். அப்போதிருந்து, முதலில் முதலமைச்சராகவும், பின்னர் பிரதமராகவும் பணியாற்றும் வாய்ப்பை நாட்டு மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். இந்த 25 ஆண்டுகளில், ஜனநாயகத்தின் இரண்டு ஆற்றல்சக்திகள் மீதான எனது நம்பிக்கை தொடர்ந்து வலுவடைந்துள்ளது. முதலாவது – நாட்டு மக்கள்; இரண்டாவது – கூட்டுறவுக் கூட்டாட்சி. மாநிலங்களின் வளர்ச்சியின் மூலமே நாட்டின் வளர்ச்சி அமைகிறது என்ற தாரகமந்திரத்தையே நான் எப்போதும் பின்பற்றி வருகிறேன்.
நண்பர்களே,
முதலமைச்சராக இருந்தபோது, மாநிலங்களின் எதிர்பார்ப்புகளை நான் நேரில் உணர்ந்திருந்தேன். எனவே, பிரதமரான பிறகு, அந்த விருப்பங்களை நிறைவேற்ற முயன்றது மட்டுமின்றி, ஒவ்வொரு மாநிலமும் தனது சொந்த லட்சிய இலக்குகளை அடைவதை உறுதிசெய்யவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
நண்பர்களே,
முதலமைச்சராக இருந்தபோது, கலைஞர் கருணாநிதி அவர்கள், ஜெயலலிதா அவர்கள் ஆகியோருடன் பலமுறை உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிரதமரான பிறகும், ஜெயலலிதா அவர்கள், ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்றும் மு. க. ஸ்டாலின் அவர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். அரசுகள் மாறினாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், அதன் மக்களுக்கு சேவையாற்றுவதிலும் நான் கொண்டிருந்த உறுதிப்பாடு எப்போதும் மாறாமல் இருந்தது. அதே உறுதிப்பாட்டுடன், இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுடன் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.
நண்பர்களே,
தமிழ்நாட்டில் நகர்ப்புற மேம்பாடு என்பது எங்களின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். நகர்ப்புறமயமாக்கல் என்பது ஒரு சவாலல்ல, மாறாக அது ஒரு வாய்ப்பு என்று நான் எப்போதும் நம்புகிறேன். இதில் பொதுப் போக்குவரத்து மிக முக்கியப் பங்காற்றுகிறது. போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருக்கும்போது, மக்களின் வாழ்க்கைச் சூழல் மேம்படுகிறது. சிறந்த போக்குவரத்து வசதியை உருவாக்கச் சாலைகளை அகலப்படுத்துவது மட்டும் போதாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நவீன நகரங்களில் நமக்கு ஒரு முழுமையான உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. எனவேதான், கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் கட்டமைப்புகளைப் பெருமளவில் விரிவுபடுத்தும் பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். 2014-ம் ஆண்டில், நாட்டின் ஐந்து நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவைகள் இயங்கி வந்தன. இன்று, நாடு முழுவதும் 25 நகரங்களில் மெட்ரோ சேவைகள் உள்ளன. 2014-ல் இந்தியாவின் மெட்ரோ ரயில் கட்டமைப்பு சுமார் 250 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டிருந்தது. இன்று, இந்தக் கட்டமைப்பு 1,100 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வளர்ந்துள்ளது. சென்னை மெட்ரோவின் இந்த விரிவாக்கத்தின் மூலம், இந்தக் கட்டமைப்பு மேலும் விரிவடைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையில் வசிக்கும் சாமானிய மக்கள், பணிபுரியும் குடும்பத்தினர், மாணவர்கள், முதியவர்கள் என அனைவரும் எளிதாகவும் , குறைந்த நேரத்திலும் தங்கள் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நண்பர்களே,
நமது மாநிலங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவை நாம் வலிமைப்படுத்த வேண்டும். எனவே, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உற்பத்தித் துறையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை, அதன் சிறு தொழில்கள், அவற்றில் பணியாற்றும் ஒவ்வொரு தனிநபர் குறித்தும் ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கின்றனர். இன்று, ‘இந்தியாவில் உற்பத்தி செய்தல்’, ‘உள்ளூர் தயாரிப்புகளுக்குக் குரல் கொடுத்தல்’ போன்ற மத்திய அரசின் முன்முயற்சிகள் தமிழ்நாட்டிற்கும் பயனளிக்கின்றன.
நண்பர்களே,
இன்று, உதிரிபாகங்கள் முதல் தொழில்நுட்பம் மற்றும் முழுமையான தயாரிப்புகள் வரை, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒட்டுமொத்த உற்பத்திச் சங்கிலியையும் மத்திய அரசு வலுப்படுத்தி வருகிறது. இத்தகைய முயற்சிகளின் விளைவாக, அலைபேசி உற்பத்தியில், இன்று நாம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகத் திகழ்கிறோம். 2014-ம் ஆண்டு முதல், நமது மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 11 மடங்கு அதிகரித்துள்ளது. பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதி 50 மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், பொறியியல் துறை ஏற்றுமதியும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.
நண்பர்களே,
உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சியின் காரணமாக, நாட்டின் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த உற்பத்தித் துறை வளர்ச்சியில், தமிழ்நாட்டு மக்கள் போற்றத்தாக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இன்று, மேம்பட்ட மசகு எண்ணெய் உற்பத்தித் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறோம். இது இங்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், நாட்டின் இறக்குமதியைக் குறைப்பதற்கும் பெரிதும் உதவும். வலுவான உற்பத்தித் துறையை உருவாக்க நமக்குச் சிறந்த சாலைகள் தேவை. மூலப்பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ரயில்வே, துறைமுகங்கள் முதலியவை அவசியம். இத்தகைய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்போது, அவை பல்வேறு நிலைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.
கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. சிமெண்ட், எஃகு, உபகரணங்கள் சார்ந்த தொழிற்சாலைகளிலும், சிறு நிறுவனங்களிலும் கூட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. மேலும், ஒரு திட்டம் நிறைவடையும்போது, தொழில்துறைகளும் சேவைத் துறைகளும் முன்னேற, மேம்பட்ட போக்குவரத்து வசதிகள் உதவுகின்றன. அதனால்தான், இன்று தொடங்கி வைக்கப்படும் ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவையாக அமையவுள்ளன.
கப்பல் போக்குவரத்துத் துறை புதிய உயரங்களை எட்டும் வகையில், இன்று நாடு முழுவதும் துறைமுகக் கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாடும் மிக முக்கியப் பங்காற்றுகிறது. அந்த வகையில், மத்திய அரசு சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. சுமார் 17,000 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடியில் உள்ள வ. உ. சிதம்பரனார் துறைமுகம் உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்டமான கொள்கலன் மற்றும் பசுமை எரிசக்தி மையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நிறைவடைந்ததும், உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்கள் கூட இங்கு எளிதாக வந்து நிற்கும் வசதி ஏற்படும். இது தமிழ்நாட்டைத் தொழில் மற்றும் போக்குவரத்திற்கான ஒரு உலகளாவிய மையமாக மாற்ற உதவும்.
கடந்த சில ஆண்டுகளில், இந்தியத் துறைமுகங்களின் வேகமும் செயல்திறனும் மேம்பட்டுள்ளன. வேகம் அதிகரித்ததன் காரணமாக, துறைமுகங்களில் கப்பல்கள் வந்து சென்று திரும்புவதற்கான நேரம் பாதியாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியத் தயாரிப்புகள் இப்போது முன்பை விட விரைவாக உலகச் சந்தைகளைச் சென்றடைகின்றன.
கடல்சார் பொருளாதாரம் குறித்த தொலைநோக்குப் பார்வையில், நமது மீனவர்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றனர். எனவே, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மீன் இறங்குதளங்கள் உருவாக்கப்படுகின்றன. குளிர்பதனச் சங்கிலி வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும், மீன்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, அவற்றைக் கொண்டு செல்லும் வாகனங்களை வாங்குவதற்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
நண்பர்களே,
நமது மீனவ சகோதரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சென்னை மீன்பிடித் துறைமுகத்தை நவீனமயமாக்குவது, தமிழ்நாட்டில் கடற்பாசிப் பூங்காவை உருவாக்குவது போன்ற முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவளித்து வருகிறது. கிசான் கடன் அட்டை திட்டத்தின் மூலம், மீனவர்கள் இப்போது தங்களது தொழில் செயல்பாடுகளுக்கான மூலதனத்தை எளிதாகப் பெற முடிகிறது. இன்று, நாட்டில் மீன் உற்பத்தி வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், நமது கடல் உணவு ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. இது மீனவக் குடும்பங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது.
நண்பர்களே,
தொடர்ந்து புதிய உயரங்களை எட்டும் ஒரு தமிழகத்தை உருவாக்க விரும்புகிறோம். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு, முழு உறுதிப்பாட்டுடன் நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம். வளர்ச்சியடைந்த தமிழகத்தின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நாம் இணைந்து நனவாக்குவோம். இந்த உணர்வுடன், இத்திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!!!
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2321939®=48&lang=2
****
TV/PLM/RJ
Works over Rs. 13,000 crore being launched in Chennai! https://t.co/76Uo9a3UaS
— Narendra Modi (@narendramodi) October 11, 2026
It is a pleasure to be in Chennai with all of you. This is a historic day for Tamil Nadu. Today’s programme involves projects worth thirteen thousand crore rupees. We are inaugurating many completed projects and laying foundations for new ones: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 11, 2026
भारत अपनी सांस्कृतिक शक्ति से प्रेरणा लेता है, विज्ञान की प्रगति से आगे बढ़ता है और आधुनिक infrastructure के जरिए नए अवसरों का निर्माण कर रहा है। हमारी विरासत और भविष्य की हमारी आकांक्षाएं साथ-साथ आगे बढ़ रही हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 11, 2026
आधुनिक शहरों में हमें holistic infrastructure की जरूरत होती है। और इसलिए बीते एक दशक में, हमने पूरे देश में metro network का बहुत बड़ा expansion किया है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 11, 2026
आज देश में port infrastructure को भी मजबूत बनाया जा रहा है, ताकि shipping sector नई ऊंचाइयों तक पहुंच सके: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 11, 2026