Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரூ.1,491 கோடி ஒதுக்கீட்டில் அஞ்சல் துறையின் சொத்து மேலாண்மைத் திட்டத்தைத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்


16-வது நிதிக்குழு காலத்தில் (நிதியாண்டு 2026-27 முதல் 2030-31 வரை) ஐந்தாண்டுகளுக்கு ரூ.1,491 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில், மத்திய அரசுத் திட்டமான அஞ்சல் துறையின் சொத்து மேலாண்மைத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கான அஞ்சல் துறையின் முன்மொழிவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அஞ்சல் அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்களைக் கட்டுதல், மறுகட்டுமானம் செய்தல், புதுப்பித்தல், சீரான அடையாளக் குறியீடுகளை அமைத்தல், பாரம்பரிய அஞ்சல் கட்டடங்களைப் பாதுகாத்தல் மூலம் அஞ்சல் துறையின் உள்கட்டமைப்பை முழுமையாக நவீனமயமாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா ஆகிய தொலைநோக்குப் பார்வைகளுக்கு ஏற்ப குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளையும் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவையையும் வலுப்படுத்துகிறது.

ஊரகப் பகுதிகளில் உள்ள 1,49,385 அஞ்சலகங்கள் உட்பட 1.65 லட்சம் அஞ்சலகங்களுடன் உலகின் மிகப்பெரிய அஞ்சல் கட்டமைப்புகளில் ஒன்றாகத் திகழும் இந்திய அஞ்சல் துறை, அஞ்சல் சேவைகள், அஞ்சலக சேமிப்பு வங்கி, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஆதார் சேவைகள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக ஏற்றுமதி மையங்கள் மூலம் முக்கியப் பங்காற்றுகிறது. இத்திட்டத்தின் கீழ், காலி இடங்களில் ரூ.280 கோடியில் 190 புதிய துறைசார் அஞ்சலகக் கட்டடங்கள் கட்டுதல், ரூ.108 கோடியில் 50 பழைய கட்டடங்களை மறுகட்டுமானம் செய்தல், ரூ.318 கோடியில் 2,550 துறைசார் துணை அஞ்சலகங்களைப் புதுப்பித்துச் சீரான அடையாளக் குறியீடுகளை அமைத்தல், ரூ.37.50 கோடியில் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் 2,500 அஞ்சலகங்களை மேம்படுத்திச் சீரான அடையாளக் குறியீடுகளை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரூ.180 கோடியில் 20 பாரம்பரிய அஞ்சல் கட்டடங்களைப் பாதுகாத்தல், ரூ.357.50 கோடியில் 150 அஞ்சல் குடியிருப்பு வளாகங்களைப் புதுப்பித்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.

இத்துடன், சூரிய சக்தி, மழைநீர் சேகரிப்பு, சுகம்ய பாரத் அபியான் இயக்கத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளங்கள், பிரெய்லி பலகைகள், மகளிர் கழிப்பறைகள், பாலூட்டும் அறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ.100 கோடியும், மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப சேவைகளை இயக்கவும் உள்நாட்டுத் திறந்த மூல தொழில்நுட்பத் தொகுப்பை ஆதரிக்கவும் பெங்களூருவில் உள்ள அஞ்சல் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையத்திற்கு நிரந்தர உள்கட்டமைப்பை உருவாக்க ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341181&reg=3&lang=1   

——-

TV/SE/SH