பாரத ரத்னா விருது பெற்ற டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (நவம்பர் 29, 2026) மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
டாக்டர் பூபேன் ஹசாரிகா 1926 செப்டம்பர் 8 அன்று அசாம் மாநிலத்தின் சதியா பகுதியில் பிறந்தார்.
அவர், பிரம்மபுத்திராவின் கவிஞர் என்றும் அவர் அழைக்கப்பட்டார். அசாம் மாநிலத்தின் பண்பாட்டு வரலாற்றிலும், நாட்டின் பண்பாட்டு வரலாற்றிலும் அவருக்கு தனி இடம் உண்டு. அவர் புகழ்பெற்ற பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் எனப் பல திறமைகளைக் கொண்டிருந்தார். தமது படைப்புகள் மூலம் சாதாரண மக்களின் விருப்பங்கள், உணர்வுகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றுக்கு அவர் குரல் கொடுத்தார்.
அசாம் மாநில இசை, வடகிழக்கு இந்தியாவின் நாட்டுப்புறக் கலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவரது இசை அமைந்திருந்தது. அவரது இசை மொழி, புவியியல் எல்லைகளைக் கடந்து சென்றது. இதன் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தின் செழுமையான பண்பாட்டு மரபுகளை இந்தியா முழுவதும் உள்ள மக்களிடமும், உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்களிடமும் அவர் கொண்டு சேர்த்தார்.
கலைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளைத் தாண்டி, டாக்டர் ஹசாரிகா மனிதநேயவாதியாகவும், சமூகச் சிந்தனையாளராகவும் விளங்கினார். அவரது படைப்புகள் சமத்துவம், மனித மாண்பு, சமூக நல்லிணக்கம், உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தின.
அசாம் மாநிலத்தின் பண்பாட்டு அடையாளத்தை வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் பன்முகப் பண்பாட்டு மரபை வளப்படுத்துவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். இந்திய இசை, திரைப்படம், பண்பாடு ஆகியவற்றுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காகப் பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில் தாதாசாகேப் பால்கே விருதும் அடங்கும்.
2019-ம் ஆண்டு, நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, அவந்து மறைவுக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் ஹசாரிகாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 2025 செப்டம்பர் 8 அன்று தொடங்கின. இசை, இலக்கியம், திரைப்படம், சமூகம் ஆகிய துறைகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை மீண்டும் நினைவுகூர்ந்து, அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள இந்தக் கொண்டாட்டங்கள் வாய்ப்பளித்தன. அவரது உயரிய கொள்கைகளின் இன்றைய முக்கியத்துவம், காலத்தைக் கடந்த அவரது படைப்பாற்றலின் சிறப்பு, மனிதநேயம், நல்லிணக்கம், உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவை இந்தக் கொண்டாட்டங்களில் எடுத்துரைக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2343016®=3&lang=1
****
SK/PLM/RJ