Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் அளித்த பதிலின் தமிழ் மொழியாக்கம்


மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

மாண்புமிகு குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அவையில் அதற்கான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். நேற்று அவையில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். திரு மல்லிகார்ஜூன், திரு முகமது சலீம், திரு வினோத்குமார், திரு நரசிம்மன் தோத்தா, திரு தாரிக் அன்வர், திரு பிரேம் சிங், திரு அன்வர், திரு ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ், திரு கல்யாண் பானர்ஜி, திரு பி வேணுகோபால், திரு ஆனந்த ராவ் அட்சல், திரு ஆர் கே பாரதி மோகன் ஆகியோர் உள்ளிட்ட மாண்புமிகு உறுப்பினர்கள் 34 பேர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். விரிவான விவாதம் நடைபெற்றுள்ளது. சில உறுப்பினர்கள் இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பேசியுள்ளனர்.

இந்த விவாதம் அர்த்தமுள்ளதாக இருந்தது. குடியரசுத்தலைவர் உரை எந்த கட்சியை சேர்ந்ததாகவும் எப்போதும் இருந்ததில்லை. அவரது உரை நாட்டின் அபிலாஷைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் வெளிப்பாடு. மேலும் இதை நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வெளிப்பாடும் ஆகும். அந்த வகையில் குடியரசுத்தலைவரின் உரைக்கு மதிப்பு அளித்து ஆக வேண்டும். அதனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்ப்பது நியாயமாகுமா?

அவைத்தலைவர் அவர்களே,

நமது நாட்டின் சில மாநிலங்கள் மதிப்பிற்குரிய திரு அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்களால் உருவாக்கப்பட்டவை. மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. உத்தரப்பிரதேசத்திலிருந்து உத்தராகண்டும், மத்தியப்பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கரும், பீகாரிலிருந்து ஜார்கண்டும் பிரித்து உருவாக்கப்பட்டன. எனினும், அரசு இது குறித்து கொண்டிருந்த தொலைநோக்கு காரணமாக மாநிலங்கள் பிரிவினை, அலுவலகங்கள் இடமாற்றம் மற்றும் இதுசார்ந்த முழு நடைமுறையும் தடங்கல் இன்றி சுமூகமாக நடைபெற்றது. தலைமை தொலைநோக்கு கொண்டதாக இருந்தால் சரியான முடிவுகளை எடுக்க இயலும். அரசியல் ஆர்வம் காரணமாக அவசர முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. நாடு கண்ட மிகப்பெரிய உதாரணங்கள் திரு அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்கள் மேற்கொண்ட மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்குதல் நடவடிக்கை ஆகும்.

ஆனால், நீங்கள் நாட்டைப் பிரித்து விஷ விதைகளை விதைத்துள்ளீர். இன்று விடுதலை பெற்ற 70 ஆண்டுகளுக்குப்பிறகு உங்களது பாவத்தின் பலன்களை 125 கோடி இந்தியர்கள் அனுபவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாட்டைத் துண்டாடி உள்ளீர்கள். வரும் தேர்தலை கருத்தில் கொண்டு நீங்கள் அவசரமாக தெலங்கானா மாநிலத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்தீர்கள். இது நாடாளுமன்ற கதவுகள் மூடியிருந்த சமயத்தில், சபை அமைதி இழந்திருந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. நாங்கள் கூட தெலங்கானா உருவாவதை ஆதரித்தோம்.

இன்று கூட தெலங்கானா முன்னேற வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அன்றைய நாளில் ஆந்திராவில் நீங்கள் விதைத்த விதை தெலங்கானாவை உருவாக்க தேர்தல் காரணமாக நீங்கள் எடுத்த அவசர நடவடிக்கை நான்கு ஆண்டுகளாக இன்னும் பிரச்சினையை உருவாக்கி வருகின்றது. இத்தகைய செயல்பாடுகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படவில்லை.

அவைத்தலைவர் அவர்களே,

காங்கிரஸ் தலைவர் திரு கார்கே ஆற்றிய உரையை நேற்று நான் கேட்டேன். ஆனால், அவர் ஆளும் தரத்தை நோக்கி பேசினாரா அல்லது கர்நாடகா மக்களுக்காக பேசினாரா அல்லது தனது சொந்த கட்சியின் கொள்கை வரைவாளர்களை திருப்திப்படுத்துவதற்காகப் பேசினாரா என்பது எனக்கு புரியவில்லை.

திரு கார்கே தனது உரையில் பஷீர் பாதர் கவிதையை மேற்கோள் காட்டினார். அவர் அந்த கவிதையை எடுத்துரைத்ததை கரநாடக முதலமைச்சர் கேட்டிருக்க வேண்டும்ஃ அவர் மேற்கோள் காட்டிய “மோதுகையில் பலமாகவே மோதுவோம், ஆனால் மனதில் ஒன்றை நிறுத்துவோம். மீண்டும் நாம் நண்பர்கள் ஆகிடும்போது நமக்குள் வெட்கம் இருந்திடக் கூடாது” – என்ற வரிகள் போட்டியிலும் கூட மீண்டும் நண்பர்களாவதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகின்றன. கர்நாடக முதலமைச்சர் இந்த வரிகளை கேட்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். ஆனால், திரு கார்கே அவர்கள், பஷீர் பாதரின் கவிதையில் கண்டுள்ள இதர வரிகளையும் குறிப்பிட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். அப்படி செய்திருந்தால் ஒரு வேளை நீங்கள் எந்த நிலையை எடுத்துள்ளீர்கள் என்பதை நாடு அறிந்திருக்கும். அதே கவிதையில் பாஷீர் பாதர் மேலும் கூறுகிறார்

“உண்மையைச் சொல்லத்தான் நினைக்கிறேன். ஆம் உண்மையைச் சொல்லத்தான் பெரிதும் விரும்புகிறேன் – ஆனால், என் செய, தைரியம் தான் இல்லை” அதாவது உண்மையை விளம்புவதற்கு தைரியம் போதவில்லை என்று.

கர்நாடகா தேர்தல்களுக்குப்பின்னர், திரு கார்கே அவர்கள் அதே இடத்தில் இருப்பாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. எனவே, அவரது இந்த உரை விடைபெறும் உரையாகவும் இருக்கக்கூடும். எனவே, பொதுவாகப் பார்த்தால் ஒரு உறுப்பினர் முதல் முறையாக அவையில் பேசும்போது அதனை அனைவரும் மரியாதையுடன் எதிர்நோக்குகின்றனர். அதே போல உறுப்பினரின் விடை பெறும் உரையும் கூட மரியாதையுடன் கவனிக்கப்படுகிறது. நேற்று அவையில் சில மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களை கட்டுப்படுத்திக்கொண்டு திரு கார்கே அவர்களின் உரையை அதே மரியாதையுடன் கேட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஜனநாயகத்திற்கு அது மிக அவசியமும் கூட. எதிர்ப்பு தெரிவிப்பதற்கு உரிமை உள்ளது, ஆனால் அவையை அவமரியாதை செய்வதற்கு எதிர்க்கும் உரிமை இல்லை.

அவைத் தலைவர் அவர்களே,

எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர், அரசின் கொள்கைகள் சிலவற்றை விமர்சிக்க வரும் போதெல்லாம், அவர்களிடம் அதற்கான ஆதாரங்களோ அடித்தளமோ இல்லாத நிலையில், அவர்கள் தங்களது சாதனைகள் குறித்த பழைய பல்லவியுடனே தொடங்குவதை நான் கவனித்தேன். இந்தியா விடுதலை பெற்றது என்பதையும் நமக்குப் பின்னர் பல நாடுகள் விடுதலை பெற்றதையும், ஆனால் அந்த நாடுகள் நம்மை விடப் பல மடங்கு முன்னேறி உள்ளது என்பதையும் மறந்து விடாதீர்கள். அந்த வேகத்தில் நம்மால் முன்னேற முடியவில்லை என்பதையும் இந்தியத் தாயை நீங்கள் துண்டாடிய பின்னரும் நாடு உங்களிடம் தான் இருந்தது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் தான் ஆட்சி செய்து கொண்டிருந்தீர்கள்.

முதல் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளில் எதிர்க்கட்சி என்பது பெயரளவிலேயே இருந்தது. அந்தச் சமயத்தில் ஊடகப் பரவல் குறைவாகவே இருந்தது என்பதுடன் இருந்த ஊடகமும் நாட்டுக்கு நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் அரசுக்கு சாதகமாகவே இருந்தது. வானொலி உங்கள் ராகத்திற்கு ஏற்பவே பாடியது. பின்னர் தொலைக்காட்சி வந்தபோது அதுவும் உங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகவே இருந்தது. அந்த சமயத்தில் நீதித்துறையில் உயர் பணியிடங்களும் காங்கிரஸ் கட்சியாலேயே நியமிக்கப்பட்டு வந்தது. உங்களுக்கு அனைத்து ஆடம்பர வசதிகளும் இருந்தது. அப்போது நீதிமன்றத்தில் பொது நல வழக்கு, அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் போதுமான அளவுக்கு இல்லை. அந்தச் சமயத்தில் இந்த சாதகமான சூழ்நிலை உங்களுக்கு இருந்தது என்பதால் நீங்கள் வளர்ச்சி கண்டீர்கள். திட்டங்கள் எதுவும் கிடையாது. பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை உங்கள் கொடியே பறந்து கொண்டிருந்தது. ஆனால் நீங்களோ ஒரு குடும்பத்தின் பெருமைகளைப் பாடுவதிலேயே உங்கள் நேரத்தை முழுவதுமாக செலவிட்டீர்கள். நாட்டின் வரலாற்றை புறக்கணித்து ஒரே ஒரு குடும்பத்தை நாடு நினைவில் வைத்துக் கொள்வதை உறுதி செய்வதில்தான் அனைத்து சக்திகளும் கவனம் செலுத்தி வந்தது. நாடு விடுதலை பெற்ற பின்னர் நாட்டு மக்களிடையே ஒட்டுமொத்தமாக ஒரு மாறுபட்ட ஆர்வம் மட்டுமே காணப்பட்டது. நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அந்த ஆர்வம். நீங்கள் மட்டும் கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால், இந்த நாட்டு மக்களின் சக்தி இந்த நாட்டைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்றிருக்கும்.

ஆனால் உங்களது தனிப்பட்ட செயல்திட்டத்தில் நீங்கள் முழு ஈடுபாடு காட்டினீர்கள். நீங்கள் மட்டும் சரியான திசையில் பயணித்திருந்தால், உங்கள் எண்ணம் நேர்மையாக இருந்திருந்தால், பொறுப்பான முயற்சிகள் மற்றும் கொள்கைகளை நீங்கள் மேற்கொண்டிருந்தால் தற்போது நாடு மிகவும் முன்னேறிய நிலையில் இருந்திருக்கும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. இதை நீங்கள் மறுக்க முடியாது. இந்தியா என்ற நாடு 1947, ஆகஸ்ட் 15ம் தேதிதான் பிறந்தது என்றும் அதற்கு முன் இந்த நாடு இருந்ததேயில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கருதினர் என்பது துரதிருஷ்டமாகும். மேலும் நான் நேற்று ஏதோ ஒன்றைக் கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்தேன். அதை அகந்தை என்பதா, அறியாமை என்பதா? அல்லது மழைக்காலத்தில் தனது நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி என்பதா? நாட்டில் ஜனநாயகத்தை நேரு கொண்டுவந்தார்; நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது என அவர்கள் கூறியதைக் கேட்டேன்.

கார்கே அவர்களே, இது மிகவும் இக்கட்டானது. ஜனநாயகம் பற்றி நீங்கள் பேசும் போது, நமது நாட்டில் லிச்சாவிய பேரரசிலும், புத்தமதம் இருந்தபோதும் கூட ஜனநாயகம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியாதா? ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சியோ, நேரு அவர்களோ கொண்டு வரவில்லை.

விவாதங்கள், ஆலோசனைகள் மற்றும் வாக்கெடுப்பு முறையில் புத்தமத சங்கம் தீர்ப்புளை அளிக்கும் முறையைக் கொண்டதாகும். திரு. கார்கே அவர்களே நீங்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர். ஒரு குடும்பத்தின் மீது நீங்கள் கொண்ட பக்தி காரணமாக கர்நாடகாவில் தேர்தல் முடிந்து உங்களுக்கு இங்கு இருக்க வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் ஜகத்குரு பசவேஸ்வரரை அவமதிக்காதீர்கள். ஜகத்குரு பசவேஸ்வரர் 12வது நூற்றாண்டில் அனுபவ மண்டபம் என்ற அமைப்பை உருவாக்கி கிராமத்தில் அனைத்து முடிவுகளையும் ஜனநாயக முறையில் எடுத்தார் என்பதை கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் மேலாக மகளிருக்கு அதிகாரமளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த சபையில் மகளிர் இருப்பது கட்டாயமாகும். 12வது நூற்றாண்டில் ஜகத்குரு பசவேஸ்வரர் காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகம் தழைத்தது. ஜனநாயகம் என்பது நமது ரத்தத்திலும் பாரம்பரியத்திலும் உள்ளது. இதற்கு பீஹாரின் வரலாறு சாட்சியாக உள்ளது. லிச்சாவி அரசாட்சியின் பண்டைய வரலாற்றைக் காணும்போது, 2500 ஆண்டுகளுக்கு முன்பே நமது நாட்டில் குடியரசு முறை இருந்தது. இது ஜனநாயகத்தின் முறையாகும். மக்களின் ஒப்புதல் மற்றும் எதிர்ப்புக்கு நாம் அங்கீகாரம் அளித்துள்ளோம்.

ஜனநாயகத்தைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்களா? தேர்தலின் போது திரு. மன்மோகன் சிங் அரசில் மந்திரியாக இருந்த ஒருவர் ஊடகங்களின் முன் ஏதோ கூறினார். ஜஹாங்கீருக்கு அடுத்த ஷாஜகானும், ஷாஜகானுக்குப் பின்னர் அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்ததாக அவர் கூறினார். அந்தக் காலத்தில் ஏதேனும் தேர்தல் நடத்தப்பட்டதா? அதே போல் தான் இங்கும் நடந்தது. ஜனநாயகத்தைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். எந்த மாதிரியான ஜனநாயகம் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என நான் கேட்க விரும்புகிறேன். ஐதராபாத் விமான நிலையத்தில் தம்மை வரவேற்க வந்த உங்கள் கட்சியைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த முதலமைச்சரை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவமதித்தார். ஒரு புறம் நேருஜியின் பெயரில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள், மறு புறம், திரு. ராஜீவ் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்த தில்லி முதல்வர் டி. அஞ்சய்யாவை ஐதராபாத் விமான நிலையத்தில் அவமதிக்கிறார். தலித் முதலமைச்சருக்கு ஏற்படுத்தப்பட்ட இந்த அவமரியாதைதான் நடிகராக இருந்த என்.டி.ராமராவை தெலுங்கு தேசம் கட்சி தொடங்கத் தூண்டியது.

நீங்கள் எங்களுக்கு ஜனநாயகம் கற்றுத்தருகிறீர்களா? இந்த நாட்டில் 90 முறை, 90 முறைகளுக்கு மேல் அரசியல் சாசனத்தின் பிரிவு 356 தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் கட்சிகள் இந்த மாநிலங்களில் உருவாக்கிய அரசுகளை நீங்கள் தாக்கி இருக்கிறீர்கள். பஞ்சாபில் அகாலி தளத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழ்நாட்டில் நீங்கள் என்ன செய்தீர்கள்? கேரளாவில் நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த நாட்டில் ஜனநாயகம் தழைக்க நீங்கள் அனுமதிக்கவில்லை. உங்கள் குடும்ப ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம் என நீங்கள் கருதுகிறீர்கள். நீங்கள் நாட்டை தவறாக வழிநடத்துகிறீர்கள். காங்கிரஸ் கட்சி பின்பற்றிய ஜனநாயகம் என்ன? உள் ஆன்மாவில் குரல் எழுந்த ஒவ்வொரு சமயமும் ஜனநாயகம் நசுக்கப்பட்ட்து.

நீலம் சஞ்சீவ ரெட்டியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்தது உங்களுக்குத் தெரியும். ஒரே இரவில் அவர் முதுகில் குத்தப்பட்டார். அவர் தோற்கடிக்கப்பட்டார். கவனியுங்கள், அவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்தான். நீங்கள் சஞ்சீவ ரெட்டி மற்றும் டி. அஞ்சையா ஆகிய இருவரையும் அவமதித்தீர்கள். ஜனநாயகம் பற்றி நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள்? அதுமாத்திரமல்ல, நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையைக் கூட்டி ஒரு முடிவை எடுக்க, மன்மோகன் சிங் அமைச்சரவை நிறைவேற்றிய அந்த அவசர சட்டத்தை உங்கள் கட்சியின் நிர்வாகி ஒருவர் கிழித்தெறிந்தார். உங்களால் உச்சரிக்கப்படும் ஜனநாயகம் நன்றாக இல்லை. எனவே எங்களுக்கு ஜனநாயகம் பற்றி கற்பிக்காதீர்கள்.

இன்னொரு சம்பவத்தையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல்கள் உள்ளன என்பது உண்மையா? 15 காங்கிரஸ் கமிட்டிகளில் 12 சர்தார் வல்லபாய் படேலைத் தேர்வு செய்தது. மூன்று நோட்டாவை, அதாவது யாருக்கும் வாக்களிப்பதில்லை என முடிவு செய்தது. எனினும் தலைமை சர்தார் வல்லப பாய் படேலுக்கு அளிக்கப்படவில்லை. இது எத்தகைய ஜனநாயகம். அவருக்கு பதிலாக பண்டித நேரு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். சர்தார் வல்லப பாய் படேல் மட்டும் முதல் பிரதமர் ஆகியிருந்தால், காஷ்மீரத்தின் ஒரு பகுதி இன்று பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருக்காது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சமீபத்தில் டிசம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது தேர்தலா அல்லது முடிசூட்டு விழாவா? உங்கள் கட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பி குரல் எழுப்பினார். இதை நீங்கள் அனுமதிக்காமல் ஜனநாயகம் பற்றி பேசுகிறீர்கள். இந்தக் குரலை நசுக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகும் என்பது எனக்குத் தெரியும். விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். எனவே அவைத் தலைவர் அவர்களே, பல்வேறு பணிக் கலாச்சாரம் என்பது இந்த அரசின் சிறப்பாகும். திட்டங்களை அறிவித்து அதை நாளேடுகளில் தலைப்புச் செய்தியாக்கிவிட்டு மக்களை ஏமாற்றுவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது எங்களது பணிக் கலாச்சாரம் இல்லை. எட்டுவதற்கு சாத்தியமானவற்றை மட்டுமே நாங்கள் அறிவிக்கிறோம். ஜனநாயகத்தில் அரசுகள் வரும், போகும் ஆனால் நாடு என்பது எப்போதும் இருக்கும் என்பதால் முந்தைய அரசுகளின் தடைபட்டிருக்கும் நல்ல முயற்சிகளை நிறைவு செய்யவும் நாங்கள் முயற்சிக்கிறோம். அந்த சித்தாந்தத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதே கோப்புகள் மற்றும் அதிகாரிகள் எனப்து உண்மையில்லையா? முந்தைய அரசு நாளொன்றுக்கு 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே தேசிய நெடுஞ்சாலையை அமைக்க முடிந்த நிலையில் தற்போதைய அரசு நாளொன்றுக்கு 22 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையை அமைக்க முடிவதற்கு காரணம் என்ன? ஒவ்வொரு அரசும் சாலைகளை அமைக்கின்றது. முந்தைய அரசால் கடைசி மூன்று ஆண்டுகளில் 80 ஆயிரம் கிலோமீட்டருக்கு மட்டுமே புதிய சாலைகளை அமைக்க முடிந்த நிலையில் எங்களது அரசு மூன்றாண்டுகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டருக்கு புதிய சாலைகளை அமைத்துள்ளது. முந்தைய அரசு கடைசி 3 ஆண்டுகளில் 1100 கிலோ மீட்டருக்கு மட்டுமே புதிய ரயில் பாதைகளை அமைத்தது, ஆனால் எங்களது அரசு 2100 கீலோ மீட்டருக்கு புதிய ரயில் பாதைகளை அமைத்துள்ளது. முந்தைய அரசு கடைசி 3 ஆண்டுகளில் 2500 கிலோ மீட்டர் ரயில் பாதையை மின்மயமாக்கியுள்ளது, ஆனால் எங்களது அரசு 3 ஆண்டுகளில் 4300க்கும் கூடுதலான கிலோ மீட்டர் ரயில் பாதையை மின்மயமாக்கியுள்ளது. கண்ணாடி இழை கட்டமைப்பு – இந்தத் திட்டம் எங்களால் உருவாக்கப்பட்டது என்றும் இதன் பெருமை எங்களையே சேரும் என நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் செயல்பட பின்பற்றிய வழி என்ன? நீங்கள் பாகுபாடு அரசியலில் நம்பிக்கை கொண்டிருந்தீர்கள். 2011 மற்றும் 2014 இடையே உங்களால் கண்ணாடி இழைக் கட்டமைப்பை 59 பஞ்சாயத்துக்களில் மட்டுமே பரவச் செய்ய முடிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மிகக் குறுகிய காலத்தில் நாங்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான பஞ்சாயத்துக்களுக்கு இதனை அளித்துள்ளோம். ஒரு புறம் மூன்றாண்டுகளில் 60க்கும் குறைவான கிராமங்கள், ஆனால் மறுபுறம் அதே மூன்றாண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள். இந்த எண்ணிக்கை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு மிகவும் அதிக இடைவெளி கொண்டவையாகும். முந்தைய அரசு ஷஹாரி ஆவாஸ் திட்டத்தை 939 நகரங்களில் நடைமுறைப் படுத்தியது எனில் இன்று பிரதமர் வீட்டு வசதி திட்டம் (நகர்ப்புறம்)4320 நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் எண்ணிக்கை ஆயிரத்திற்கு குறைவு என்றால் எங்கள் எண்ணிக்கை 4000த்திற்கும் கூடுதலானது. முந்தைய ஆண்டில் கடைசி 3 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 12000 மெகா வாட் புதிய திறன் மட்டுமே சேர்க்கப்பட்ட்து ஆனால், இந்த அரசு 3 ஆண்டுகளில் 22000 மெகா வாட் கூடுதல் திறனை இணைத்துள்ளது. கப்பல் துறையில் சரக்கு கையாளும் திறன் எதிர்மறை வளர்ச்சியைக் காட்டிய நிலையில் இந்த அரசின் கீழ் இந்தத் துறை 11%த்திற்கு கூடுதலான வளர்ச்சியை 3 ஆண்டுகளில் காட்டியுள்ளது. நிஜத்தில் நீங்கள் கவனம் செலுத்தி இருந்தால் இத்தகைய குழப்பத்திற்கு நீங்கள் ஆளாகி இருக்க மாட்டீர்கள். ரயில்வே மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு விஷயங்கள் பற்றி கார்கே அவர்கள் குறிப்பிட்டதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிதார் குல்பர்கா ரயில் பாதை பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள். இந்த நாடு உணமையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை காங்கிரஸ் குறிப்பிடவே இல்லை – தொடக்க விழாவிலும் கூட. இந்த 110 கிலோமீட்டர் ரயில் பாதைக்கான ஒப்புதல் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் அரசால் அளிக்கப்பட்டது என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் அரசு 2013 வரை ஆட்சியில் இருந்ததுடன் நீங்கள் ரயில்வே அமைச்சராகவும் இருந்தீர்கள். அது உங்களது நாடாளுமன்ற தொகுதியும் கூட. அடல்ஜி அரசுக்குப் பின் பல ஆண்டுகள் ஆன பின்னரும் 37 கிலோமீட்டர் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த்து, வெறும் 37 கிலோ மீட்டர். மேலும் இந்த சிறிய பணியும் கூட முதல்வர் எடியூரப்பாவின் முயற்சியால் நடைபெற்றது. மத்திய அரசு விடுத்த கோரிக்கைகளுக்கு அவர் ஒப்புதல் அளித்தார். அதன் பின்னர் தான் அடல்ஜியின் கனவை உங்கள் அரசு செயல்படுத்தத் தொடங்கியது. மேலும் அந்த நேரத்தில் தேர்தல்கள் வந்தன. இந்தப் பணிகளை தொடங்குவது உங்களுக்கு தேர்தலில் சாதகமாக இருக்கும் என நீங்கள் கருதினீர்கள். 110 கிலோ மீட்டரில் 30.5 கிலோ மீட்டரிலேயே நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்.

இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டு எஞ்சிய 72 கிலோ மீட்டர் ரயில் பாதை பணியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவு செய்தோம். எதிர்கட்சியின் கையில் இந்த நாடாளுமன்ற தொகுதி இருப்பதால் இதை புறக்கணிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. அது உங்கள் தொகுதி, ஆனால் அந்தப் பணி நாட்டுக்கானது. நாட்டின் நலனுக்காகவே நாங்கள் அந்தப் பணியை நிறைவேற்றினோம். இந்த ரயில் பாதையை நான் தொடங்கி வைத்தேன் எனப்து உங்களுக்கு மன வலியை ஏற்படுத்தியது. இந்த வலிக்கான மருந்து இந்த நாட்டு மக்களால் உங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டு விட்டதாக நான் நம்புகிறேன்.

அவைத் தலைவர் அவர்களே,

பார்மர் சுத்திகரிப்பு ஆலை குறித்து அவர்கள் பேசினார்கள். தேர்தலுக்கு முன்பு அடிக்கல் நாட்டினால் வெற்றி கிட்டும் என அவர்கள் கருதினர். நீங்கள் பார்மர் சுத்திகரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டினீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், அடிக்கல் மட்டும் நாட்டப்பட்டு மற்றவை எல்லாம் காகிதத்தில் மட்டும் இருந்ததை கண்டோம். நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை. திட்டத்திற்கு அனுமதியோ நிலமோ அல்லது மத்திய அரசுடன் எந்தவித உடன்படிக்கையோ காணப்படவில்லை. மத்திய அரசும், ராஜஸ்தான் மாநில அரசும் உங்களது தவறுகளை சரி செய்வதில் ஏராளமான இடையூறுகளை எதிர்நோக்க வேண்டி இருந்தது. அந்த திட்டத்தை ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்து குறைகள் களையப்பட்டு தற்போது பணியை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

அசாமில் நான் டோலா சதியா பாலத்தை தொடங்கி வைத்த போது அதை சிலர் அவ்வளவாக விரும்பவில்லை. இது தங்கள் முன்முயற்சியால் வந்தது என அவர்கள் கூறத் தொடங்கினர். ஆனால் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு அதற்கு வாஜ்பாய் அரசு ஒப்புதல் தந்ததைக் குறிப்பிடும் நேர்மை அவர்களுக்கு இருக்கவில்லை. விரிவான ஆராய்ச்சிக்கு பின் ஒரு பிஜேபி தலைவர் இந்தத் திட்டம் பற்றி கோரிக்கை விடுத்தார். 2014 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை மேம்படுத்த முன்னுரிமை அளித்தோம். அதன்படி பணி துரிதப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பாலம் அமைக்கப்பட்டு நனவாகியிருக்கிறது. நீண்ட தொலைவுக்கு சுரங்கப்பாதை, எரிவாயு குழாய் அமைத்தது, கடலுக்கு மேல் நெடுஞ்தொலைவுக்கு பாலம் அமைத்தது, அதிவிரைவு ரயில் விட்டது ஆகியவற்றுக்கு முன்முயற்சியை இந்த அரசுதான் எடுத்தது என்பதை அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இத்தகைய முடிவுகளை இந்த அரசால் மட்டுமே எடுக்க முடியும். மேலும் கூடுதல் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டுள்ளன. ஆகையால் இந்த காலக்கட்டத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஒன்றாக செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தமது உரையில் குறிப்பிட்ட உண்மைகளை நம்மால் மறுக்க முடியாது. ஜனநாயகம் என்றால் என்ன? எப்படி இந்த ஆட்சியில் ஒவ்வொருவரும் மதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்க நான் விரும்புகிறேன். செங்கோட்டை கொத்தளத்தில் நாட்டின் பிரதமர்கள் ஆற்றிய ஒவ்வொரு உரையையும் பாருங்கள். யாராவது ஒவ்வொரு அரசும் ஏதாவதொரு விதத்தில் பங்களித்துள்ளதை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்களா? எந்த காங்கிரஸ் தலைவராவது இந்த உண்மையை எப்போதாவது ஏற்றுக் கொண்டிருக்கிறாரா? இந்த நரேந்திர மோடிதான், அனைத்து முந்தைய அரசுகளும், மாநில அரசுகளும் அதை போல மக்களும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர் என்று கூறி இருக்கிறேன். இதை மிகப் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துணிச்சல் எங்களுக்கு உள்ளது. இதுதான் எங்கள் குணம்.

நான் குஜராத் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், குஜராத் பொன் விழாவை கொண்டாடினோம். அந்த பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சி ஆளுனரின் உரையாகும். ஆளுனர்கள் எப்படி உரையாற்றுகிறார்கள்? ஆளுனர் உரை என்பது குடியரசுத் தலைவர் உரை போல, அப்போது இருக்கும் அரசின் நடவடிக்கைகளை விளக்குவதாக அமையும். மாநில அரசு செய்துள்ள பணிகள் பற்றி விளக்குவதாக ஆளுனர் உரை இருக்கும். இருப்பினும் குஜராத் மாநிலம் உருவாகி 50 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் அந்த மாநிலத்தை ஆண்ட போது, ஆளுனர்கள் ஆற்றிய அனைத்து உரைகளும் பாதுகாக்கப்பட்டன. இதற்கு பெயர்தான் ஜனநாயகம். நீங்கள் செய்த மற்றும் அந்த குடும்பம் செய்த அனைத்தை பற்றியும் நீங்கள் பேசலாம். இந்த மனப்பான்மையால்தான் நீங்கள் அந்தப் பக்கம் அமரும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் நாட்டை ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. இப்போது ரயில் பாதைகள் துரித கதியில் விரிவாக்கப்படுகின்றன. துறைமுக மேம்பாடு கவனத்தில் கொள்ளப்படுகின்றது. தரைக்கு அடியில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. மூடப்பட்ட உரத் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

காங்கிரஸில் உள்ள எனது நண்பர்களையும், வேலையில் உள்ளவர்களையும், வேலை இல்லாமல் இருப்பவர்களையும் பார்த்து நான் கேட்க விரும்புகிறேன். எப்போதெல்லாம் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து எண்ணிக்கையில் நீங்கள் கூறுகிறீர்களோ அது நாடு முழுமைக்குமானது. அதே சமயம் நாடு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரத்தை ஏன் நீங்கள் தெரிவிப்பதில்லை? இப்போது என்னை நீங்கள் நம்ப மாட்டீர்கள். உங்களது மேலான கவனத்திற்கு நான் சிலவற்றை தெரிவிக்க விரும்புகிறேன். பதிவேடுகளை சோதனை செய்து பாருங்கள். மேற்குவங்க அரசு, கர்நாடக அரசு, ஒடிசா அரசு, கேரளா அரசு ஆகியவை இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் சுமார் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறியுள்ளன. அந்த மாநிலங்களில் எங்கள் கட்சி அரசு அமைக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியே அங்கு இல்லை. ஆனால் இந்த உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? அதை வேலைவாய்ப்பாக நீங்கள் கருத மாட்டீர்களா? இங்கு நாட்டின் வளர்ச்சியடைந்த மாநிலங்களை பற்றி நான் பேசவில்லை. பிஜேபி அல்லது தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களை பற்றி பேசவில்லை. நான் உங்கள் கட்சிகள் அல்லது கூட்டணிகள் ஆளும் மாநிலங்களை பற்றித்தான் பேசுகிறேன். அவர்களது மாநிலங்களில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு பற்றி அவர்கள் கூறுகின்றனர். கர்நாடக அரசு கூறுவது பொய் என்று உங்களால் மறுக்க முடியுமா கூறுங்கள்.

எனவே நாட்டை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்காதீர்கள். இந்திய அரசு எடுத்த முயற்சிகளின் பயன்களை இந்த மாநிலங்கள் பெற்றுள்ளன. 70 லட்சம் புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகள் ஒரு ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அவை 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கணக்குகளாகும். இது வேலைவாய்ப்பு இல்லையா? மேலும் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள் தங்களது வர்த்தகத்திலும், நிறுவனங்களிலும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அளித்துள்ளனர். அவர்கள் தங்களது வணிகத்தையும், வருமானத்தையும் பெருக்கியுள்ளனர்.

ஆனால் அவர்களை நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர்கள். அமைப்பு சார்ந்த பிரிவின் ஊழியர்கள் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். எஞ்சிய 90 சதவீதம் பேர் அமைப்புச் சாரா பிரிவுகளில் வேலை பார்க்கின்றனர். அமைப்புச் சாரா பிரிவை அமைப்பு ரீதியில் மாற்ற தேவையான ஊக்கத்தையும், திட்டங்களையும் நாங்கள் வெற்றிகரமாக அளித்து வருகிறோம். மேலும் நடுத்தர வகுப்பு குடும்பங்கள் தற்போது வேலைக்காக யாரிடமும் பிச்சை எடுக்க விரும்புவதில்லை. அவர்கள் தனிப்பட்ட முறையில் கண்ணியத்துடன் வாழவே விரும்புகிறார்கள்.

நான் பல ஐஏஎஸ் அதிகாரிகளிடம் அவர்கள் குழந்தைகள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று கேட்டேன். அவர்கள் பாரம்பரியத்தை பின்பற்றி அரசு வேலையில் சேர விரும்புவார்கள் என்று என்னிடம் கூறுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது காலம் மாறி விட்டது என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

நாங்கள் நமது முன்னோர்களின் பாரம்பரியத்தை பின்பற்றி வருகிறோம் என்ற போதிலும் எங்களது குழந்தைகள் அரசுப் பணிகளில் சேர்வதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் தொழில் தொடங்க விரும்புவதாக என்னிடம் கூறினர். வெளிநாட்டில் படித்து முடித்த எங்கள் மகன், தொழில் தொடங்கவே விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர். வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் இளைஞர்களின் விருப்பம் இதுவாகத்தான் இருக்கிறது. எனவே நாட்டின் ஒவ்வொரு அரசும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களின் வைராக்கியமான விருப்பத்தை செயல்படுத்த முயற்சிகளை எடுக்க வேண்டும். நாம் அவர்களை ஏமாற்றக் கூடாது. அதனால்தான் முத்ரா யோஜனா, திறன் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் பயிற்சி ஆகியவை இளைஞர்களின் வைராக்கியமான விருப்பத்தை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். இதன் பயனாக இன்று பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது வரை கடன் வழங்குவதில் தடங்கல் இருப்பதாகவோ, இடைத் தரகர் உள்ளதாகவோ எந்த புகாரும் வரவில்லை. இது அரசின் பணிக் கலாச்சாரத்தின் பயனாகும்.

நமது விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின் பயனாக எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் வங்கிகளுக்கு சென்று கடனுதவி பெற்றுக் கொள்ள முடியும். 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. அதில் 4 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் கடன் கேட்பவர்களில் 3 கோடி பேர் புதிய தொழில் முனைவோர் இவர்கள் நீண்ட காலமாக வாய்ப்புகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள். இது நாட்டின் வேலைவாய்ப்பை பெருக்கும் முயற்சி இல்லையா? நீங்கள் உங்கள் கண்கணை மூடிக் கொள்கிறீர்கள். அதனால் நீங்கள் உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மனப்பான்மை உங்களை வளர விடாது. அடல்ஜி ஒரு அருமையான வாக்கியத்தை கூறினார். குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் உயர முடியாது. உடைந்த மனது கொண்டவர்கள் எழுந்து நிற்க முடியாது. எனவே இது போல நீங்கள் ஒருபோதும் வளர முடியாது. நீங்கள் எப்போதும் இதே இடத்தில் இருக்க வேண்டியதுதான்.

நீங்கள் எப்போதும் உங்களை பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சிலவற்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 1980-களில் 21 ஆம் நூற்றாண்டு வரப் போவது பற்றி எல்லா இடத்திலும் ஒரு எதிரொலி கேட்டது. அந்த காலகட்டத்தில் ஒரு காங்கிரஸ் தலைவர் 21 ஆம் நூற்றாண்டு கனவை மக்களுக்கு காட்டினார். அவர் ஒரு புதிய இளம் தலைவர். தனது தாத்தாவை விட அதிக இடங்களில் வென்றார். அந்த சமயத்தில் நானொரு சுவையான கேலிச் சித்திரத்தை பார்த்தேன். ஒரு மனிதர் ரயில் நிலைய நடைமேடையில் நின்றுக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு ரயில் அவரை கடந்து செல்கிறது. அந்த ரயிலில் 21 ஆம் நூற்றாண்டு என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது. அந்த மனிதர்அந்த ரயிலை பிடிப்பதற்காக ஓடுகிறார். அப்போது அவருக்கு பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு வயதானவர் கூறுகிறார், “பொறுத்திருந்து போன ரயில் எப்படியும் வந்து சேரும். நீ அதற்காக எதையும் செய்ய வேண்டியதில்லை”

1980-களில் இவ்வாறு மக்களுக்கு 21 ஆம் நூற்றாண்டு கனவு காட்டப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டு பற்றி பேசிய அரசு, ஒரு விமானப் போக்குவரத்து கொள்கையைக் கூட வகுக்க முடியவில்லை. 21 ஆம் நூற்றாண்டில் விமான போக்குவரத்துக் கொள்கை வகுக்கப்படவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அந்த அரசு மாட்டு வண்டிக்கு உரியதா? நீங்கள் அந்த வேகத்தில்தான் நகர்ந்தீர்கள்?

அவைத் தலைவர் அவர்களே, விமானப் போக்குவரத்துக் கொள்கையை நாங்கள் வகுத்திருக்கிறோம். அதை பயன்படுத்தி சிறு ஓடுபாதைகளை தொடங்கியுள்ளோம். இன்று நம்மிடம் 16 புதிய ஓடுபாதைகள் உள்ளன. விமானப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அந்த திசையை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களுக்கும் விமானங்கள் பறக்க உள்ளன. தற்போது 450 விமானங்கள் இயங்குகின்றன. இந்த ஆண்டில் 900 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய விமானங்களை வாங்க நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இது எங்களது உறுதியான முடிவுகளால் மட்டும் கைகூடவில்லை. தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தியதும், பணிகளைத் திடமாக கண்காணித்ததாலும் இதை எட்ட முடிந்துள்ளது.

ஆளற்ற விமானங்கள் உதவியுடன் சாலைகள் மற்றும் ரயில்வே பணிகளையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தையும் இதில் நாங்கள் பயன்படுத்தி உள்ளோம். மேலும் கட்டப்பட்ட கழிவறைகள் படம் பிடிக்கப்பட்டு செல்போன்களில் பதிவிடப்படுகின்றன. கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி காரணமாக அதிக வேகத்தில் பணிகள் முன்னேற்றம் காண முடிந்துள்ளது. கண்காணிப்பால் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் தேர்தலில் வெற்றியடைந்தபோது, உங்கள் ஆதார் திட்டத்திற்கு மோடி முடிவு கட்டிவிடுவார் என்று உங்கள் கட்சி சந்தேகம் எழுப்பியது கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அதனால்தான் ஆதார் அகற்றப்படுமென நம்பிய நீங்கள் அதை கொண்டே தாக்குதல் நடத்துகின்றீர்கள். ஆனால் மோடி ஆதாரை தொழில்நுட்பத்துடன் இணைத்தார். உங்கள் கற்பனைக்கும் எட்டாத வகையில் மோடி அதனை புதிய வழியில் மீண்டும் அறிமுகப்படுத்துவார். இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைய தொடங்கிய போதுதான் நீங்கள் அது பற்றி மோசமாக உணர்ந்தீர்கள். தலை விழுந்தால் நான் வெற்றி, பூ விழுந்தால் நீங்கள் தோல்வி என்ற எண்ணம் வேலைக்கு ஆகாது.

தற்போது 115 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அதனால்தான் ஆதார் அட்டைகளை வைத்துள்ளனர். மத்திய அரசின் 450 திட்டங்கள் மூலமாக ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் சென்று சேருகிறது. பல ஆண்டுகளாக நீங்கள் கணவனை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வந்தீர்கள். ஆனால் வெறும் காகித்ததில் மட்டுமே அது இருந்தது. இடைத் தரகர்கள் அதனை சுரண்டிக் கொண்டிருந்தனர். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் நிலையும் இதே போல்தான் இருந்தது. 57 ஆயிரம் கோடி ரூபாய் இடைத் தரகர்களுக்கு சென்றது. இப்போது ஆதார் நேரடி பயனை அளித்து வருகிறது. இருப்பினும் நீங்கள் இடைத்தரகர்கள் தங்களது தொழிலை இழந்து விட்டதை பற்றி கவலை அடைகிறீர்கள். நாட்டின் நிதியை கொள்ளை அடித்த மோசடிக்காரர்கள் தான் தங்கள் வருமானத்தை இழந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவைத் தலைவர் அவர்களே,

நான்கு கோடி ஏழை மற்றும் நடுத்தர வருவாய்க் குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் சௌபாக்யா திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இப்போது நீங்கள் சொல்வீர்கள் இத்தகைய திட்டத்தை ஏற்கெனவே தொடங்கியிருந்தோம் என்று. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மக்களுக்கு மின்சார வசதி கிடைத்ததா? போதுமான மின்சாரம் எடுத்துச்செல்லும் கம்பி இணைப்புகள் இருந்தனவா? மின்சார கம்பங்கள் கூட நகர்த்தப்படவில்லை. மக்கள் 18ஆம் நூற்றாண்டின் நிலைகளிலேயே வாழ்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். இப்போது இது உங்கள் திட்டம் என்று பெருமையடித்துக் கொள்கிறீர்கள். மேம்பாடு எதையும் நாங்கள் தனித்துப் பார்ப்பதில்லை. ஒட்டுமொத்த, ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் நீண்டகால நெடுநோக்கை நாங்கள் பின்பற்றுகிறோம்.

நான் மின்சாரம் என்ற பொருள்பற்றி பேச விரும்புகிறேன். நீங்கள் அரசின் பணி முறை குறித்து அறிந்து கொள்வீர்கள். நாட்டில் உள்ள 25 கோடி வீடுகளில் நான்கு கோடி வீடுகளில் மின்சார இணைப்பு வசதி இல்லை. அதாவது ஏறத்தாழ 20 சதவீத மக்கள் இன்னும் இருளிலேயே வாழ்கிறார்கள். இது ஒன்றும் பெருமைப்படத்தக்க விஷயம் இல்லை. இந்த பெருமையைத்தான் நீங்கள் எங்களுக்கு விட்டுச் சென்றுள்ளீர். தற்போது நாங்கள் இந்த குறைபாட்டைத் தீர்த்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் அதனை எவ்வாறு செய்கிறோம்? இந்த பணியை நான்கு பகுதிகளாக பிரித்துக்கொண்டுள்ளோம் – மின்சார உற்பத்தி, மின்சாரம் கொண்டு செல்லுதல், மின்சாரம் விநியோகம் மற்றும் மின் இணைப்பு. இவை அனைத்தையும் ஒரு சேர மேம்படுத்தி வருகிறோம்.

முதலாவதாக, மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கு சூரியசக்தி, நீர் மின் சக்தி, அனல் மின் சக்தி, அணுமின்சக்தி போன்றவற்றின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின்சாரத்தை கொண்டு செல்லும் கட்டமைப்பை விரைவான விதத்தில் மேம்படுத்தி வருகிறோம். கடந்த மூன்றாண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடிக்கும் கூடுதலான செலவில் இந்தத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இது சென்ற அரசின் கடைசி மூன்றாண்டு பணிகளுடன் ஒப்பிடுகையில் 83% கூடுதலாகும். 2014-க்குப்பிறகு எமது அரசின் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் கம்பி கட்டமைப்பு விரிவாக்கம் 31% அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மின் மாற்றிகளின் திறனை 49% உயர்த்தியுள்ளோம். மின்சாரத்தை கொண்டுசெல்வதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் முதல் காம்ருப் வரையிலும் முழு கட்டமைப்பையும் ஏற்படுத்துகிறோம். மின்சார விநியோக அமைப்பை வலுப்படுத்துவதற்காக நாங்கள் உஜ்வால் டிஸ்காம் உறுதியளிப்பு திட்டத்தை கொண்டுவந்துள்ளோம்.

அதாவது, உதய் திட்டமும், மாநில அரசுகளுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இணைந்த திட்டம். மின்சார விநியோக நிறுவனங்களும், நிதி மேலாண்மையும் சிறப்பாக செயல்படவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அதனையடுத்து, வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் சௌபாக்யா திட்டத்தை தொடங்கியுள்ளோம். ஒருபுறம் மின்சார இணைப்புக்கு கவனம் செலுத்தும். அதே சமயம், மறுபக்கம் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்கென 28 கோடி எல்இடி பல்புகளை விநியோகம் செய்துள்ளோம். இவ்வகையில், மின்சார கட்டணங்களில் சுமார் ரூ.15,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் காலவிரயத்தையும் பண விரயத்தையும் தடுப்பதற்காக நேர்மையாக முயற்சி எடுத்துள்ளோம்.

அவைத் தலைவர் அவர்களே,

விவசாயிகள் பிரச்சினையை அரசியலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகிய பின்னரும் விவசாயிகளின் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மலர்கள் போன்ற ரூ. 1 லட்சம் கோடி உற்பத்திப்பொருட்கள் அவ்வப்போது சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச்செல்கையிலும், சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் போதும் திறன்பட்ட விநியோகத் தொடர் இல்லாத காரணத்தால் விரயமாகின்றன. இதனை தடுக்கும் வகையில் அடிப்படை வசதியை வலுப்படுத்த பிரதம மந்திரி விவசாயிகள் சம்பாத திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சரியான சேமிப்பு வசதியை கட்டுப்படியாகும் விலையில் பெற்று தங்கள் விளைபொருட்கள் சேதமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

விநியோகச் சங்கிலி அடிப்படை வசதியை உயர்த்துவதற்கு உதவ அரசு முடிவுசெய்துள்ளது. அடுத்து வரும் காலத்தில் சேமிக்கப்படவுள்ள ரூ.1 லட்சம் கோடி நடுத்தர வகுப்பு இளைஞர்களுக்கென உணவு பதனீட்டுத்துறையில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும். நாட்டில் வேளாண்மையைப் போன்றே கால்நடை வளர்ப்பும் மிகமுக்கியமானது. இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்த செயல்பாடுகள். கால்நடை வளர்ப்புத் துறையில் வசதிக்குறைவு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.40,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்தத் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளோம். இதற்கென காமதேனு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு காமதேனு திட்டம் பெரிய நிவாரணத்தைக் கொண்டுவரும். நாம் இப்போது விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டு வாக்கில் இரட்டிப்பாக்குவது குறித்து பேசி வருகிறோம். 21ஆம் நூற்றாண்டு குறித்து 1980களில் பேசத்தொடங்கினால் அது சரியாக இருக்கும். ஆனால், மோடி 2018-ஆம் ஆண்டில் 2022 குறித்து பேசினால் அதனை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு கடினமாக உள்ளது. 21ஆம் நூற்றாண்டின் கனவுகளை 80களின் பத்தாண்டில் நீங்கள் காட்டி வந்தீர்கள். தற்போது எனது அரசு காலக்கெடுவுடன் கூடிய அடிப்படையில் செயல்பட்டு சுதந்திரம் பெற்ற 75ஆவது ஆண்டில் மக்களை எழுச்சிப்பெற செய்யும் வகையில் 2022க்கு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கும்போது நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள். 2022 வாக்கில் விவசாயிகளின் வருமானத்தில் இரட்டிப்பாக்கும் எமது இலக்கு குறித்து சந்தேகத்தை எழுப்புகிறீர்கள்.

இதற்கு காரணம் நீங்கள் ஒருபோதும் பெரிய அளவில் கனவு கண்டதே இல்லை. குறுகிய மனத்துடன் எதையும் சாதிக்க முடியாது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இடுப்பொருட்கள் விலையை நாம் குறைக்க முடியாதா? மண்வள அட்டை, சூரிய சக்தி பம்புகள், வேப்பெண்ணெய் பூசிய யூரியா உரம் போன்றவை விவசாயிகளின் இடுபொருள் செலவினத்தை குறைக்கும் திட்டங்களாகும். அதேபோல, தங்களது வருமான வாய்ப்பை பெருக்க விவசாய நிலத்தின் எல்லைகளில் மூங்கில் பயிரிடுவதை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். மூங்கிலுக்கு உறுதியளிக்கப்பட்ட சந்தை உள்ளது. இன்று நாடு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மூங்கிலை இறக்குமதி செய்கிறது. உங்களது தவறான கொள்கையே இதற்கு காரணம். மூங்கிலை நீங்கள் தவறாக மரம் என வகைப்படுத்தினீர்கள் அதன் காரணமாக மூங்கிலை எவரும் வெட்டிப்பிளக்க இயலாது.

இதனால் வடகிழக்கில் உள்ள மக்கள் பெரிய அசௌகரியத்துக்கு ஆளானார்கள். நாங்கள் மூங்கிலை புல் வகை எனப் பாகுபடுத்தும் தைரியம் கொண்டுள்ளோம். இதனால் விவசாயிகளின் வருமானம் உயரும். விவசாயி தனது வயல் விளிம்புகளில் மூங்கிலை நட்டால் அதன் நிழல் அவரது பயிரை பாதிக்காது. இவ்வகையில் அவர் தனது வருமானத்தை பல மடங்கு உயர்த்த முடியும். பால் உற்பத்தியை பெருக்க நாங்கள் விரும்புகிறோம். தேனீ வளர்ப்பதை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம். தேனீ வளர்ப்பில் சுமார் 40% உயர்வு ஏற்பட்டுள்ளது என்பதை அறிய நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மிகக்குறைந்த நபர்களே இந்த உண்மையை உணர்ந்திருப்பார்கள்.

இன்று உலகம் ஒட்டுமொத்த சுகாதார பராமரிப்பு மற்றும் வாழுதலில் எளிமை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. எனவே அவர்கள் வேதியியல் மெழுகுக்கு பதிலாக தேனீ மெழுகை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். உலகில் தேனீ மெழுகுக்கு அதிக அளவு தேவை உள்ளது. நமது விவசாயிகள் தற்போது விவசாயத்துடன் தேனீ வளர்ப்பிலும் ஈடுபடலாம். தேனீ மெழுகு காரணமாக மட்டுமே அவரது வருவாய் பல மடங்கு உயரும். தேனீக்கள் பயிர் வளர்ச்சியில் பெரிதும் உதவுகின்றன என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மூங்கில் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விவசாயிகள் வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. ஆதார் திட்டம் அமல்படுத்தப்படமாட்டாது என நம்பியவர்கள் ஜிஎஸ்டியை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் நம்பினார்கள். அரசு மூழ்கிப்போவதை அவர்கள் விரும்பினார்கள். இப்போது ஆதார், ஜிஎஸ்டி ஆகிய இரண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, அரசுக்கு பிரச்சினைகளை உருவாக்கவும், அதனைக் குறைகூறவும் புதிய வழி வகைகளை அவர்கள் தேடத்தொடங்கி உள்ளனர். அவர்கள் இந்த விளையாட்டை தொடர்ந்து ஆடி வருகின்றனர். நாட்டை ஏமாற்றும் சாத்தியக்கூறு உள்ள எதையும் செய்வதை ஒவ்வொரு அரசியலமைப்பும் தவிர்த்து வருகிறது. ஆனால் ஒரு குழுவினர் மக்களை ஏமாற்றுவதற்காக இந்த பாதையை பயன்படுத்துகின்றனர். இங்கு ஜிஎஸ்டி பொருள் போக்குவரத்துக்கு பெரிதும் நன்மை விளைவித்துள்ளது. முன்பு பொருட்களை கொண்டு செல்லும்போது, போக்குவரத்து இடையூறுகள், சாலை சுங்கவரி ஆகியவை காரணமாக நிறைய விரயம் ஏற்படுவது வழக்கம். இன்று அவற்றை தடுக்க முடியும். பொருட்களை எடுத்துச்செல்லும் நமது திறன் 60% உயர்ந்துள்ளது. லாரி ஒன்று ஐந்து அல்லது ஆறு நாட்களில் நிறைவு செய்யும் பயணத்தை தற்போது இரண்டரை அல்லது மூன்று நாட்களில் நிறைவு செய்ய இயலும். இதனால் நாடு பெரிய அளவில் பயன் பெற்றுள்ளது. நாட்டின் முன்னேற்றத்தில் நடுத்தர வகுப்பு மக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. வதந்திகளை பரப்பி நடுத்தர வகுப்பினரை ஏமாற்றுவதற்கு சிலர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

நாட்டின் நடுத்தர வகுப்பினர் நல்ல ஆளுகை, சிறந்த வசதிகளை விரும்புகின்றனர். ஒரு நபர் ரயில்வே டிக்கெட் வாங்குகிறார் என்றால் ரயிலில் அவர் அனைத்து வசதிகளையும் தனது உரிமை என்ற வகையில் எதிர்பார்க்கிறார். அவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார் என்றால் அந்த குழந்தைகளுக்கு நல்ல கல்வி வேண்டுமென விரும்புகிறார். அவர் உணவுப்பொருட்களை வாங்கும்போது அவை நல்ல தரம் உள்ளதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். அரசின் பொறுப்புகளில் அவருக்கு நல்ல கல்விக்கான சிறந்த நிறுவனங்களை ஏற்படுத்தி தருதல், கட்டுப்படியாகும் விலையில் நியாயமான வீட்டுவசதி வழங்குதல் போன்றவை அடங்கும். சரியான சாலைகள், சிறந்த போக்குவரத்து வசதிகள், நகர்ப்புற அடிப்படை வசதிகள் போன்றவற்றை வழங்குவதும் அரசின் பொறுப்பு ஆகும். அடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடுத்தர வகுப்பினரின் வாழுதலில் எளிமை சார்ந்த உள்ளக் கிடக்கைகளை நிறைவேற்ற தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

உலகிலேயே நுழைவு நிலையில் மிகக்குறைந்த வருமானவரியாக 5 சதவீதத்தை இந்தியா நிர்ணயித்துள்ளது என்பதை அறிய நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எந்த ஒரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் இதுபோன்ற வசதி ஏதும் இல்லை. 2000க்கு முந்தைய ஆண்டு பட்ஜெட்டுகளில் வரி விலக்கு வரம்பு ரூ.50,000 உயர்த்தப்பட்டு ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.40,000 ஒரே தன்மைக்கான விலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000 வரையிலான நடுத்தர வகுப்பினருக்கான நன்மைகளை உயர்த்தி அளிக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

பிரதமர் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்துக்கு நாங்கள் ரூ.31,000 கோடிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக நடுத்தர வகுப்பினர் கடன்களில் சலுகை பெறவுள்ளனர். இதனை எமது அரசு செய்துள்ளது. புதிய ஐஐடிக்கள், ஐஐஎம்கள், எய்ம்ஸ்கள் ஆகியவற்றை தொடங்கி உள்ளோம். 11 புதிய பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி உள்ளோம். 32 லட்சத்துக்கும் கூடுதலான எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் புதிய தொழிற்சாலைகளையும், குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவுகளையும் ஊக்குவித்து வருகின்றன என்பதை எவரும் மறுக்க இயலாது. சிறு, குறு, நடுத்தர தொழில்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது உயர் நடுத்தர வகுப்பு குழுமங்களைச் சேர்ந்தவர்கள். நடுத்தர பிரிவு மக்களின் நலனுக்கென ரூ.2.5 கோடி மொத்த விற்பனை உள்ள பிரிவுகள் மீதான வரி வீதத்தை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்துள்ளோம்.

ரூ.2 கோடி வரையிலான வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் வங்கிகள் மூலம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். அரசு அவர்களது வருமானத்தை மொத்த விற்பனையில் 8%-க்கு பதிலாக 6%-மாக குறைத்துள்ளது. அதாவது அவர்களுக்கு 2 சதவீத வரிச்சலுகை அளிக்கப்படுகிறது என்று பொருள். ஜிஎஸ்டியின் கீழ் மொத்த விற்பனை ரூ.1.5 கோடி உள்ளவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு அவர்கள் மொத்த விற்பனையை 1 சதவீதம் மட்டுமே வரி செலுத்தினால் போதும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவும்கூட உலகிலேயே மிக்குறைந்த அளவுகளாகும்.

அவைத் தலைவர் அவர்களே,

ஜன் தன் யோஜனா (மக்கள் நிதி திட்டம்) கீழ் 31 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 90 பைசா அல்லது மாதத்திற்கு ஒரு ரூபாய் பிரீமியத்துடன் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 18 கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் பயனடைவார்கள். சிக்கலில் இருந்த அந்த ஏழைக் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் 2000 கோடி ரூபாய் பெற்றுள்ளனர் என்பதை அறியும் போது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இத்தகைய அசாதாரண பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உஜ்ஹலா திட்டத்தின் 3 கோடி 30 லட்சம் தாய் மற்றும் மகள்கள் பயன் பெற்றுள்ளனர். முன்பு சமையல் எரிவாய் இணைப்பு பெற மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னால் செல்ல வேண்டி இருந்தது. ஆனால் நாங்கள் சமையல் எரிவாயு இணைப்பை அவர்கள் வீடுகளுக்கே கொண்டு செல்கிறோம். இந்த எண்ணிக்கையை 8 கோடியாக உயர்த்த நாங்கள் நோக்கம் கொண்டுள்ளோம்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம் – ஏழைகளின் உடல்நலத்தில் நாம் ஏன் கண்ணோட்டம் செலுத்தக் கூடாது? கையில் பணம் இல்லை என்பதால் ஏழைகள் சிகிச்சைக்கு செல்வதை தவிர்த்து உயிரைத் துறக்க முன்வருகின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை கடன்காரர்களாக ஆக்க விரும்புவதில்லை. ஏழைக் குடும்பங்களுக்கு உதவும் இந்த முடிவு தவறானதா? எனினும் இந்த திட்டத்தை திருத்தியமைக்க நீங்கள் விரும்பினால் அதன் காரணமாக நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். இதற்கான யோசனைகளை நான் நிச்சயமாக பரிசீலிப்பேன். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை செலவு செய்யும் ஏழைக்கு இந்த அரசு உதவ முடியும். ஆனால் நீங்கள் துரதிருஷ்டவசமாக அவர்கள் மீது இத்தகைய விமர்சனங்களை வைக்கிறீர்கள்! உங்களிடம் ஒரு நல்ல திட்டம் இருந்தால் தயவு செய்து என்னிடம் தெரிவிக்கவும். அதற்கு நாம் தீர்வு காணலாம்.

அவைத் தலைவர் அவர்களே

இந்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மக்களின் சிந்தனை முறையையும் மாற்றியுள்ளது. மக்கள் நிதி திட்டம் ஏழைகளின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. அவர் தன்னிடம் உள்ள ரொக்கத்தை வங்கியில் செலுத்தி ரூ பே டெபிட் கார்டைப் பயன்படுத்துகிறார். இன்று அவர் தன்னை வளமான குடும்பமாக தன்னைக் கருதிக் கொள்கிறார். தூய்மை இந்தியா இயக்கம் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. அது பெரும் வலியில் இருந்து அவர்களை விடுவித்த காரணங்களுள் ஒன்றாக உள்ளது. முன்பெல்லாம் பணியாளர்கள் அதுவரை சேர்ந்துள்ள ரொக்கத்தை இழக்க நேரிடும் என்பதால் பழைய வேலையை விட்டு விலகுவதற்கு பயப்படுவார்கள். யுனிவர்செல் கணக்கு எண் உதவியுடன் நாங்கள் கோரப்படாத 27 கோடி ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளோம். ஒரு ஏழைத் தொழிலாளி இப்போது தனது வங்கிக் கணக்கை தன்னுடன் எடுத்துச் செல்லலாம்.

ஊழல் மற்றும் கறுப்புப் பணம் – நீங்கள் உங்கள் தூக்கத்தை இழந்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களுடைய இந்த மனக்குழப்பத்திற்கு என்ன காரணம் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் இனி சுதந்திரமாக சுற்ற முடியாது. ஒருவரும் தப்ப முடியாது! இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக நான்கு முன்னாள் முதல்வர்கள் ஊழல் செய்ததாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையை சிறைகளில் கழிக்க வேண்டியுள்ளது. நாட்டின் வளத்தை கொள்ளையடித்தவர்கள் அவற்றை திருப்பி அளிக்க வேண்டும் என்பதுடன் எனது இந்த முயற்சியில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. நான் ஒரு போர் வீரன். எனவே இன்றைய தினம் நாட்டில் நேர்மையான சூழல் நிலவுகிறது. நாம் நேர்மையைக் கொண்டாடி வருகிறோம். அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருமான வரி செலுத்த முன்வருகின்றனர். அரசின் கஜானாவுக்கு செல்லும் தங்களது ரொக்கம் சரியாக பயன்படுத்தப்படும் என அவர்களுக்கு அரசின் மீது நம்பிக்கை வந்துள்ளது.

இது பற்றி விவரமாக கூற விரும்புகிறேன். ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறும் போக்கு அதிகரித்துள்ளது. உண்மை நிலவரம் என்ன என்பதை எனது நிதி அமைச்சர் மீண்டும் மீண்டும் விளக்கியுள்ளார். ஆனால் சிலர் உண்மைகளை மறைத்து பொய்களை வெளிப்படையாகவும் உரத்த குரலிலும் கூறி வருகின்றனர். வாராக்கடன்கள் குறித்த பிரச்சனை இது. மக்களவைத் தலைவர் அவர்களே, உங்கள் மூலமாக நாட்டு மக்களுக்கு வாராக்கடன் பிரச்சனைகள் குறித்து கூற விரும்புகிறேன். வாராக்கடன்கள் பிரச்சனைக்கு முந்தைய அரசே 100 சதவீதம் பொறுப்பு என்பது நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். வேறு யாரும் இதறகு ஒரு சதவீதம் கூட பொறுப்பாக முடியாது. வங்கிகளுக்கு அழுத்தத்தைத் தரும் கொள்கைகளை அவர்கள் வகுத்துள்ளனர். அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது. வங்கிகள், அரசியல்வாதிகள், அரசு மற்றும் தரகர்கள் அவற்றை மறுசீரமைக்கின்றனர். வெளியே கொடுக்கப்படும் ரொக்கம் மீண்டும் வங்கிக்கு திரும்புவதேயில்லை. பரிவர்த்தனைகள் காகிதத்தில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. நாடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. நான் மட்டும் இதை அரசியலாக்க விரும்பி இருந்தால் இந்த உண்மைகள் அனைத்தையும் முதல் நாளன்றே நாட்டு மக்கள் முன் வைத்திருக்கலாம். அவ்வாறு வங்கியின் பின் தங்கிய நிலையை எடுத்துக் காட்டியிருந்தால் அது பொருளாதாரத்தை சீரழித்திருக்கும். பொருளாதாரத்துக்கு ஆபத்து ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு உங்களது பாவச்செயல்களுக்கு ஆதாரங்கள் இருந்தும் நான் அமைதியாக இருந்தேன். இது நாட்டின் நன்மைக்காகத்தான். நாட்டின் நன்மைக்காகவே உங்களது குற்றச்சாட்டுக்களையும் நான் சகித்துக் கொண்டேன். தற்போது வங்கி கட்டமைப்புக்குக் ஊக்கம் அளிக்கப்பட்டு நாட்டு மக்களிடையே உண்மையை வெளிப்படுத்துவதற்கான உரிய தருணம் வந்துவிட்டது. இன்றைய தினம் இந்த அவையில் நின்று கொண்டு உங்கள் தவறுகளால் தான் வாராக்கடன்கள் இருப்பதாக அறிவிக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டை ஜனநாயகத்தின் கோயிலில் நின்று கொண்டு சொல்கிறேன். வாராக்கடனாக மாறக்கூடிய ஒரு கடனைக் கூட எங்கள் அரசு அளிக்கவில்லை. மேலும் நீங்கள் உண்மைகளை மறைத்துவிட்டீர்கள். உண்மையான அளவை நீங்கள் கூறவில்லை. வாராக்கடன் விகிதம் 36% என நீங்கள் கூறினீர்கள். உண்மையில் வாராக்கடன் விகிதம் என்ன என்பதை கூறுமாறு 2014-ம் ஆண்டு நாங்கள் வலியுறுத்தினோம். பொய் சொல்லாதீர்கள். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆவணங்களை பார்த்த போது உண்மையான விகிதம் 82% ஆக இருந்தது. 2008 மார்ச்சில் அளிக்கப்பட்ட மொத்த கடன் 18 லட்சம் கோடியாகும். 2014ம் ஆண்டில் இது 52 லட்சம் கோடியாக அதிகரித்தது. வங்கிகள் அளித்த மொத்த கடன் 18 லட்சம் கோடியில் இருந்து 52 லட்சம் கோடியாக உயர்ந்தது. 6 ஆண்டுகளில் இந்த பெரும் வித்தியாசம்.

நீங்கள் நாட்டை கொள்ளையடித்து விட்டீர்கள். நாங்கள் ஆவணங்களைத் தொடர்ந்து கண்காணித்து எப்போது இந்தக் கடன்கள் அளிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது என பார்த்தோம். நீங்கள் இடைத்தரகர்களை தொடர்ந்து பாதுகாத்து வந்தீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களுக்கு பிடித்தமானவர்கள். இதனால் நீங்கள் தனிப்பட்ட முறையில் லாபமடைந்தீர்கள். இதனால் தான் நீங்கள் இந்தச் செயலை செய்தீர்கள். இந்த நாட்டைத் தூய்மைப்படுத்த ஒவ்வொரு வலியையும் சகித்துக் கொள்ள நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். தூய்மை இயக்கம் இந்த இடத்துடன் மட்டும் நிற்கவில்லை. இது எனது நாட்டு மக்களின் உரிமைக்கான இயக்கம் என்பது எங்கள் சிந்தையில் ஊன்றியுள்ளது. எனவே தான் நாங்கள் இதைச் செய்தோம்.

நாங்கள் திட்டத்தை வகுத்து அதை கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். மறு முதலீட்டுக்காக நாங்கள் பணியாற்றினோம். மற்ற நாடுகளில் வங்கித் துறை செயல்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் அதற்கு ஊக்கம் அளித்தோம். அதனை வலுப்படுத்திய பின்னரும் நான் உங்கள் பொய்களை தொடர்ந்து பொறுத்துக் கொண்டிருக்கிறேன். 18 லட்சம் கோடியிலிருந்து 52 லட்சம் கோடியாக நீங்கள் நாட்டை கொள்ளையடித்தீர்கள் என நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இவையெல்லாம் உங்கள் பாவங்கள். இந்தப்பணம் நமது அரசு கொடுத்த பணம் அல்ல. இந்த பாவத்துக்காக நாடு உங்களை ஒருபோதும் மன்னிக்காது. உங்கள் பாவங்களுக்கான விலையை நீங்கள் ஒருநாள் கொடுக்க வேண்டியது இருக்கும்.

இது மோதி விட்டு ஓடும் வகையிலான அரசியல். சேற்றை வாரி இறைத்து விட்டு ஓடுகிறீர்கள். நீங்கள் விரும்புவதையெல்லாம் செய்யுங்கள். நீங்கள் சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரை அதிக அளவில் மலரும். இப்போது நான் குற்றச்சாட்டுகள் இல்லாமல் சிலவற்றை கூற விரும்புகிறேன். நாடு தீர்மானிக்கட்டும். நீங்கள் கத்தாருடன் 20 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டீர்கள். நாங்கள் கத்தாருடன் பேசி எங்கள் நிலையை முன் வைத்தோம். எங்களது உறுதிப்பாடு காரணமாக நீங்கள் ஆரம்பித்த வேலையை நாங்கள் முடிக்க வேண்டியதாயிற்று. இது ஒவ்வொரு அரசுக்கும் நேரிடும் கட்டாயமாகும். நாங்கள் கத்தாரிடம் மீண்டும் பேசி எரிவாயுவை கொள்முதல் செய்வதில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளோம். இதை இந்த புனிதமான அவையில் நின்று கொண்டு எனது நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் நான் மிகுந்த திருப்தியடைகிறேன்.

நீங்கள் கூடுதலாக 8 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்து வந்தீர்கள். இது எப்படி ஏன் கொடுக்கப்பட்டது என்ற வினாக்கள் எழும்பக் கூடும். அது பற்றி நாடு முடிவு செய்யட்டும். இது பற்றி இதற்கு மேல் எதையும் தெரிவிக்க நான் விரும்பவில்லை. இதே போல இந்திய அரசு ஆஸ்திரேலியாவுடன் எரிவாயுக்காக ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டிருந்தது பற்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாம் வழக்கமாக அவர்களிடமிருந்து எரிவாயுவை கொள்முதல் செய்து வந்தோம். அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்படி எரிவாயு கொள்முதலுக்கான கால வரம்பை நீட்டித்தோம். இந்த வகையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டது. பொதுமக்களின் இந்தப் பணம் எப்படி, எங்கு, ஏன், எப்போது போனது என்ற வினாக்களை நாடு உங்களை நோக்கி கேட்கும். உங்களிடமிருந்து இதற்கு அவர்கள் பதில்களை கோருவார்கள்.

எல்.இ.டி. பல்புகள்-உங்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு எல்.இ.டி.பல்பு 300 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்பட்டதற்கு என்ன காரணம்? இந்திய அரசு 300 முதல் 350 ரூபாய் விலையில் அவற்றை கொள்முதல் செய்து வந்தது. அதே தரத்திலான, அதே தொழில்நுட்பம் கொண்ட பல்புகளை அதே நிறுவனங்கள் எப்படி தற்போது 40 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றன? இதற்கு என்ன காரணம்? இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். உங்கள் காலத்தில் சூரிய சக்தி மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு 13 அல்லது 14 அல்லது 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதற்கு என்ன காரணம்? நீங்கள் இந்த நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தீர்கள். நாட்டைக் கொள்ளையடிப்பதன் மூலம் நீங்கள் ஆதாயம் பெற விரும்பினீர்கள். நீங்கள் பின்பற்றிய தாரகமந்திரம் இதுதான். தற்போது சூரிய சக்தி மின்சாரம் ஒரு யூனிட் 2 அல்லது 3 ரூபாய்க்கு கிடைப்பதற்கு என்ன காரணம்? இருந்தாலும் நாங்கள் ஊழல் குற்றச்சாட்டு கூறப் போவதில்லை. நாட்டு மக்கள் விரும்பினால் அவர்கள் உங்களைக் குறை கூறட்டும். என்னுடைய எல்லையைத் தாண்ட நான் விரும்பவில்லை. ஆனால் இதுதான் உண்மை. அதனால்தான் நமது நாட்டின் பெருமை அதிகரித்துள்ளது.

இன்று இந்திய பாஸ்போர்ட்டின் வலிமை உலகில் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர் வெளிநாட்டில் யாரையாவது சந்திக்கும் போது பெருமிதத்துடன் அவரை பார்க்கின்றனர். நீங்கள் நாட்டின் குறைபாடுகளை வெளிநாட்டில் பரப்பி வந்தது குறித்து உங்களுக்கு வெட்கமாக இல்லையா? டோக்லாம் பிரச்சனையின் போது நீங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தீர்கள். ஜனநாயகத்தின் விதிமுறைகளை நீங்கள் மறந்து விடக் கூடாது. பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்றால் என்ன ? என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானபோது, முக்கிய எதிர்க்கட்சியாக நாங்கள் இருந்தோம். அப்போது இந்திராகாந்தியிடம் நேரம் ஒதுக்கக் கோரி அடல் பிகாரி வாஜ்பாய் அவரைச் சந்தித்தார். இந்த முடிவு தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர் நாம் எந்தச் சேதமுமின்றி நாட்டை பாதுகாத்தோம். இதுதான் நாட்டு நலனுக்கான எங்களின் பொறுப்புணர்வு.

நமது ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்திய போது அந்த நடவடிக்கை பற்றி நீங்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தீர்கள். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பற்றி மக்களின் மனதில் ஏராளமான கேள்விகள் இன்னும் இருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். இந்த அரசு 54 நாடுகளுடன் இந்தியா, ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது. பிரிக்ஸ் உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய முன்முடிவுகள் எடுக்கப்பட்டன. ஜனவரி 26-ந் தேதி ஆசியான் நாடுகளின் 10 தலைவர்கள் நமது குடியரசு தின விழாவில் கலந்து கொண்டனர். நமது மூவர்ணக் கொடி வானில் பட்டொளி வீசி பறந்தது. எனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். நீங்கள் நினைத்துக் கூட பார்த்திராத விஷயத்தை எப்படி சாதிக்க முடிந்தது என வியப்படைந்தீர்கள். குறுகிய மனதால் மிகப் பெரிய விஷயங்களை எண்ணிப் பார்க்க முடியாது.

அவைத்தலைவர் அவர்களே,

நாட்டினை எங்கள் கருத்தான புதிய இந்தியா என்ற கருத்துடன் மேம்படுத்த விரும்புகிறோம். மகாத்மா காந்தியடிகள் இளைய இந்தியா பற்றி பேசினார். சுவாமி விவேகானந்தர் புதிய இந்தியா பற்றியும், முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியும் புதிய இந்தியா பற்றி பேசினார்கள். நமது நாட்டைப் புதிய இந்தியாவாக உருவாக்கும் கனவை நனவாக்க வாருங்கள். அனைவரும் உறுதியேற்போம். ஜனநாயகத்தில் விமர்சனம் செய்வது என்பது அதன் வலுவாகும். மேலும் விமர்சனம் கட்டாயத்தேவை. ஏனெனில், அப்போதுதான் ஜனநாயகத்தின் தேனைக் கடைந்தெடுக்க முடியும். அதே சமயம் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு ஜனநாயகத்தில் அனுமதி இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் மக்களை விரக்தியடையச் செய்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. எனவே குடியரசுத்தலைவரின் உரையை விமரிசனம் செய்தவர்கள் அதனை மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும். முதல் முறை வாசிக்கும்போது அதனை புரிந்து கொள்ளவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும். உரையின் மொழி தெளிவாக விளங்க வேண்டும் என்றால் வேறு எவரின் உதவியையாவது நாடுங்கள் ஆனால் அதில் என்ன எழுதியிருக்கிறதோ அதுவே உண்மை. அதை நீங்கள் மறுக்க முடியாது. குடியரசுத்தலைவரின் உரை மீது கருத்து தெரிவித்த அனைத்து மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுக்கள். குடியரசுத்தலைவரின் உரையை ஒருமனதாக நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்வதை நான் விரும்புகிறேன். உங்களது பொன்னான நேரத்திற்காக உங்களுக்கு நன்றி. இந்த எதிர்ப்பார்ப்புடன் மீண்டும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

***