பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள கடல்களில் எண்ணெய் மற்றும் ரசாயனக் கழிவுகளை கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இந்தியாவுக்கும், தெற்கு ஆசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏற்படும் மாற்றம்:
தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் கடல் சூழலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் இந்தியாவுக்கும், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் கடல் பகுதிகளைக் கொண்ட வங்காளசேம், மாலத்தீவுகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
செயல்படுத்துதல்:
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், “பிராந்திய எண்ணெய்க் கசிவு கட்டுப்படுத்துதல் திட்ட”த்தை செயல்படுத்தும் தேசிய செயல்பாட்டு தொடர்பு மையமாகவும், அதிகாரம்பெற்ற தேசிய ஆணையமாகவும் இந்திய கடலோர காவல் படை இருக்கும். எண்ணெய் மற்றும் ரசாயனக் கசிவு ஏற்படும்போது, இந்திய அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும், கடல் பகுதியில் ஏற்படும் சம்பவங்களுக்கு தேசிய அவசரகால நடவடிக்கையாக இந்திய கடலோர காவல் படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள் இருக்கும்.
பின்னணி:
தெற்கு ஆசிய பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கவும், ஆதரவு அளிக்கவும், மேலாண்மை செய்யவும், மேம்படுத்தவும் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் அரசுகள், தெற்கு ஆசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தை இலங்கையில் 1982-ம் ஆண்டில் ஏற்படுத்தின. தெற்கு ஆசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டமானது சர்வதேச கடல்சார் அமைப்புடன் கூட்டாக இணைந்து பிராந்திய எண்ணெய் கசிவு கட்டுப்படுத்துதல் திட்டத்தை உருவாக்கியது. இதன்மூலம், வங்காளதேசம், இந்தியா, மாலத்தீவுகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய கடல்சார் நாடுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் பெருமளவில் ஏற்படும் எண்ணெய்க் கசிவை எதிர்கொள்வதில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி வழங்கப்பட்டு வருகிறது.
****