பி.எம்.இந்தியா

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லி லோக் கல்யாண் மார்க்கில் 140 க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளை இன்று (29.06.2018) சந்தித்து கலந்துரையாடினார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பிரதமருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
2018-19ஆம் ஆண்டின் கரீஃப் பருவ பயிர்களுக்கு, அவற்றின் சாகுபடி விலையைப் போல 150% அளவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை, தனது எதிர்வரும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கும் என்று பிரதமர் தெரிவித்தார். விவசாயிகளின் வருமானத்தை கணிசமான அளவுக்கு பெருக்க இது உதவும்.
2018-19 ஆம் ஆண்டுக்கான சர்க்கரைப் பருவத்தில் கரும்புக்கு நியாயமான, லாபகரமான விலையும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் கூறினார். 2017-18ஆம் ஆண்டின் விலையைவிட, இது அதிகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். 9.5% பிழிதிறன் கொண்ட கரும்பை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகளிடம் பிரதமர் விளக்கினார். புதிய கொள்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதன் பலனாக, கடந்த 10 நாட்களுக்குள் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்குவதற்கு உரிய தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் உறுதியளித்தார்.
விவசாயிகள் தெளிப்பான்கள், சொட்டு நீர்ப்பாசனம், நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், சூரியசக்தி மோட்டார்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். விவசாயிகள் தங்கள் நிலங்களில் சூரியசக்தி தகடுகளை அமைத்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ளவும், அதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டவும் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்கள் மூலம் மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரிக்கவேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். வேளாண் கழிவுகளை உரமாக கொண்டு கூடுதல் வருவாய் ஈட்டுமாறும் விவசாயிகளை அவர் வலியுறுத்தினார். 2022ஆம் ஆண்டுவாக்கில் ரசாயன உரங்களில் 10% அளவுக்கு குறைப்பதை நோக்கமாகக் கொண்டுச் செயல்படவேண்டும் என்று விவசாயிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, வேளாண் மதிப்புக் கூட்டு பொருள் உற்பத்தி, சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன நிலையங்கள், தரமான சிறந்த விதைகள், சந்தைத் தொடர்புகள் ஆகியவற்றில் தனியார் துறை பெருமளவு முதலீடு செய்ய வேண்டும் என்று அண்மையில் பெரு வணிக நிறுவன பிரதிநிதிகளுடன் தாம் நடத்திய கலந்துரையாடலின்போது, வலியுறுத்தியதை விவசாயிகளிடம் பிரதமர் எடுத்துக் கூறினார்.
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.21,000 கோடிக்கும் அதிகமாக சேர்ந்து விவசாயிகளுக்கு பெரும் சுமையாக இருந்த நிலையில், அதற்குத் தீர்வுகாண மத்திய அரசு 2014-15, 2015-16 ஆகிய ஆண்டுகளில் தலையிட்டு, மேற்கொண்ட நடவடிக்கைகளை, கலந்துரையாடலின்போது பிரதமர் நினைவுகூர்ந்தார். இந்த தொகையை வழங்குவதற்கு சர்க்கரை ஆலைகளிடம் உறுதிமொழிப் பெறப்பட்டது.
சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 50% லிருந்து 100%ஆக உயர்த்தியது, ரூ.1,540 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு வழங்க சர்க்கரை ஆலைகளுக்கு திறன் அடிப்படையில் குவிண்டாலுக்கு ரூ.550 வீதம் மானியம் வழங்கியது உட்பட மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக பிரதமருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு ஏதுவாக, சர்க்கரை ஆலைகள் 30 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கையிருப்பை வைத்துக் கொள்ள ரூ.1,175 கோடி அளவுக்கு வட்டி மானியம் வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கையையும் விவசாயிகள் பாராட்டினர்.
சர்க்கரைத் தொழில் நிலைத்திருக்கும் வகையில் நீண்டகால தீர்வாக, பெட்ரோலில் பத்து சதவீத எத்தனாலைக் கலக்கும் அரசின் அணுகுமுறை குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.
================