Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கால்நடைப் பல்கலைக் கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கென அவீக்கா நகரில் உள்ள மத்திய செம்மறி ஆடு மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் ராஜஸ்தான் மாநில அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டது


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டம், மல்புரா தாலுக்கா, அவீக்கா நகரில் அமைந்துள்ள மத்திய செம்மறி ஆடு மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை ராஜஸ்தான் மாநிலம் பீகானீரில் உள்ள ராஜஸ்தான் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தின் சார்பில் கால்நடை மருத்துவ பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவுவதற்கென ராஜஸ்தான் மாநில அரசுக்கு இலவசமாக வழங்க ஒப்புதல் அளித்தது.

குறிப்பிட நோக்கத்திற்காக மட்டுமே இந்த நிலம் பயன்படுத்தப்படும் என ராஜஸ்தான் மாநில அரசு வழங்கும் உறுதிமொழியின் அடிப்படையில்தான் இந்த நில மாற்றம் நடைபெறும். ராஜஸ்தானில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் தொடர்பான பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மத்திய செம்மறி ஆடு மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை தேவையான தொழில்நுட்ப உதவியை [எவ்விதமான நிதிப் பொறுப்பும் இல்லாத வகையில்] வழங்கும். எதிர்காலத்தில் இந்தப் பயிற்சி மையம் செயல்படாமல் நின்று போகு நிலை ஏற்படுமானால், அதிலுள்ள கட்டமைப்பு வசதிகள் அனைத்துடனும் இதற்கென வழங்கப்பட்டுள்ள 50 ஏக்கர் நிலத்தையும் முழுமையாக, கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் தொடர்பான ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மத்திய செம்மறி ஆடு மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனத்திடம் இலவசமாக மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அவீக்கா நகரில் இத்தகைய மையம் ஒன்றை நிறுவுவதென்பது பல்கலைக் கழகத்திற்கும் மத்திய ஆராய்ச்சி நிறுவனத்திற்குமிடையே பரஸ்பர நலன்களுக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும். இந்த மையம் கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, வாழ்க்கைக்கான பாதுகாப்பையும், பாலின சமத்துவத்தையும் மேம்படுத்தும். இதன் விளைவாக, கிராமப்புற மக்கள், குறிப்பாக பெண்கள், சுயவலிமை பெறுவார்கள். மேலும் கால்நடை வளர்ப்பிலிருந்து பயன்பெறும் வகையில், உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், மிகக் குறைந்த செலவிலான, சுற்றுச் சூழலுக்கு உகந்த, நீடித்து நிற்கக் கூடிய தொழில்நுட்பத்தை, அந்தந்த பகுதிகளுக்கு உகந்த வகையில் வழங்குவது; அதைப் பற்றிய செயல்முறை விளக்கங்களை செய்து காட்டுவது போன்ற பணிகளை இந்த மையம் மேற்கொள்ளும்.

***