பி.எம்.இந்தியா
இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே தண்ணீர் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிலும் ஐரோப்பிய யூனியனிலும் நீர் நிர்வாக துறையில் தொழில்நுட்ப, அறிவியல், நிர்வாக திறன்கள் வலுப்படுத்தப்படும். சமத்துவம், திறன் பரிமாற்றம், பரஸ்பர நன்மை அடிப்படையில் இது நடைபெறும். நதிப்படுகைகள் சார்ந்த ஒருங்கிணைந்த நீர் ஆதாரங்கள் நிர்வாக திட்டங்கள் உள்ளிட்ட தண்ணீர் பற்றிய பிரச்சினைகளில் தொழில்நுட்ப பரிவர்த்தனையை இது வழங்கும். ஆய்வு பயணங்கள் வழியாக இது நடைபெறும்.
நிலைத்த மேம்பாட்டை நோக்கிய முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் அணுகுமுறைகளை அடையாளம் காண்பது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். அனுபவங்கள் பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே நீர் நிர்வாகத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி மேம்படுத்துவதற்கு உதவியாக அமையும். இந்தியாவில் மேலும் நிலைத்த தன்மை கொண்ட நீர் ஆதாரங்கள் நிர்வாகத்தையும் இந்த ஒப்பந்தம் குறிக்கோளாகக் கொண்டது. பெருகிவரும் மக்கள் தொகை, போட்டியுடன் கூடிய தண்ணீர் தேவைகள், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் பின்னணியில் நீர் நிர்வாகத்தில் ஏற்படும் சாவல்களை எதிர்கொள்வதும் இதன் நோக்கமாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் வகையில் நடத்தப்படும் செயல்பாடுகளை கண்காணிக்க கூட்டுப் பணிக்குழு ஒன்று உருவாக்கப்படும்.
பின்னணி
மத்திய நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு, கங்கை புத்துயிரூட்டல் அமைச்சகம் நீர் ஆதாரங்கள் மேம்பாடு மற்றும் நிர்வாகத் துறையில் இதர நாடுகளுடன் இருதரப்பு ஒத்துழைப்புக்கு ஏற்பாடு செய்து வருகிறது. கொள்கை பகிர்வு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம், பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள், விஞ்ஞான தொழில்நுட்ப கருத்துக்கோவைகள் நடத்துதல், நிபுணர்கள் பரிமாற்றம் மற்றும் ஆய்வுப் பயணங்கள் மூலம் இது நடைபெறும். நீர் ஆதாரங்கள் பகிர்வு, தண்ணீர் விலை நிர்ணயம், தண்ணீர் திறன்பட்ட பயன்பாடு ஆகியவற்றில் ஐரோப்பிய யூனியன் பெற்றுள்ள வெற்றியை கருத்தில் கொண்டு இஸ்ரேல் நாட்டுடன் அவர்களது அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உடன்பாடு ஒன்றை செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டது. வேளாண் நடைமுறைகளில் மாற்றங்கள் மூலம் நீர் ஆதாரங்களை பாதுகாத்து அவற்றின் தரத்தை உயர்த்துவது மற்றும்
குறைந்த தண்ணீர் தேவைப்படும் பயிர்களை ஊக்குவிப்பது போன்ற ஐரோப்பிய யூனியனின் வெற்றிகள் கருத்தில் கொள்ளப்பட்டன. நீர் ஆதாரங்களை தண்ணீர் பயன்படுத்துவோர் திறம்பட பயன்படுத்துவதை ஊக்குவிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் தண்ணீர் விலை நிர்ணய
கொள்கையை கடைபிடிக்கின்றன. இதன்மூலம் அவை சுற்றுச்சூழல் நோக்கங்களை நிறைவேற்ற பங்களிக்கின்றன.