பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, விமான நிலைய ஆணையத்துக்கு சொந்தமாக விசாகபட்டினத்தில் உள்ள 11.45 ஏக்கர் நிலத்தை, அதற்கு சமமான அளவில், விசாகப்பட்டினம் துறைமுக கழகத்தின் நிலத்துக்கு பதிலாக பரிமாற்றம் செய்து அந்த நிலத்தில், பல்முனைய தளவாட மையத்தை கண்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்க, ஒப்புதல் அளித்தது.
இந்த நில பரிமாற்றம், விமான நிலைய ஆணையத்துக்கும், விசாகப்பட்டின துறைமுகப் பொறுப்புக் கழகத்துக்கும் பயனுள்ளதாக அமையும். தற்போது விசாகப்பட்டின துறைமுகப் பொறுப்புக் கழகம் வழங்கும் நிலம், ஏற்கனவே விமான நிலைய ஆணையத்தின் நிலத்தை ஒட்டியே அமைந்துள்ளதால், விசாகப்பட்டினம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு இந்த நிலம் பயன்படும். கண்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் அமைக்கப்பட உள்ள பல்முனைய தளவாட மையம், ஆந்திராவில், சரக்கு கையாளும் திறனை அதிகரித்து, சாலை மற்றும் ரயில் இணைப்புகளை மேம்படுத்தி, அம்மாநிலத்தின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் மேம்படுத்த உதவும்.
பின்னணி :
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கண்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும், விசாகப்பட்டின துறைமுகப் பொறுப்புள் கழகத்துக்கு சொந்தமான 98 ஏக்கர் நிலத்தை, கன்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து, பல்முனைய தளவாட மையத்தை உருவாக்க உள்ளது. கண்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ள 98 ஏக்கர் நிலத்தில், விமான நிலைய ஆணையம் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகக் கழகம் இடைய பரிமாறப்பட உள்ள 11.45 ஏக்கர் நிலமும் அடங்கும்.