Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி


திரு.நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற இந்த முதல் பத்து மாதங்களில் நிறைய நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.  அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை, சீனாவின் ஜின்பிங் வருகை, பிரதமர் மோடியின் அமெரிக்க, ஜி20 உச்சி மாநாடு மற்றும் சார்க் பயணங்கள் என உயர்மட்ட சந்திப்புகள் நிறைய நடந்திருக்கின்றன. உள்நாட்டிலும் பரபரப்பான நாடாளுமன்ற விவாதங்கள், புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல், மாநில மற்றும் உள்ளூர் தேர்தல்களில் பா.ஜ.க.வின் செயல்பாடு என பல விஷயங்கள் நடந்தேறியுள்ளன.  பிரதமர் மோடியின் அரசின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ள அதே சமயம், வணிகம் மற்றும் தொழிற்சாலை துறைகளில், தான் வாக்குறுதி அளித்ததைப் போல இந்த அரசு செயல்படவில்லை என்ற அதிருப்தியும் எழுந்துள்ளது.  பிரதமரானதற்கு பின் இந்திய ஊடகங்களில் தான் அளிக்கும் முதல் பேட்டியில் நமது  தலைமை ஆசிரியர் சஞ்ஜோய் நாராயணன் மற்றும் நிர்வாக ஆசிரியர் ஷிஷிர் குப்தா ஆகியோரிடம் மனம் திறக்கிறார் மோடி.

கேள்வி: ஆட்சிக்கு வந்த இந்த பத்து மாதங்களில் எவற்றையெல்லாம் உங்கள் பெரிய சாதனைகளாகச் சொல்வீர்கள்?

பதில்: சாதனைகள் என்பது இதற்கு முன்பு இருந்த அரசுடனான ஒப்பீட்டின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது. எந்தச் சூழலில் மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள்?  இப்போது சூழல் எப்படி உள்ளது?  கொள்கை அளவில் தேக்க நிலை இன்னமும் உள்ளதா? இல்லை. வெளிப்படைத் தன்மையில் பிரச்சினைகள் இருக்கிறதா? இல்லை.  நிர்வாகத்தில் தேக்க நிலை உள்ளதா? இல்லை.  அதற்குப் பதிலாக விரைவாக செயல்படும் தன்மை வந்திருக்கிறது.  ப்ரிக்ஸ் (ப்ரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) எனும் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா நீங்கிவிடுமோ என்ற அச்சம் இருந்தது.  இப்போது அந்த நிலை இல்லை.  நிர்வாகம், பொருளாதார வளர்ச்சி, உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்தல் ஆகியற்றின் வேகம் கூடியுள்ளது.  இதையெல்லாம் நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.

எங்கள் நோக்கமும், உறுதியும் நாட்டின் வளர்ச்சியிலும், மக்களின் மகிழ்ச்சியிலும், உலக நாடுகள் பட்டியலில் இந்தியா பெறப்போகும் இடத்திலும் உள்ளன.  எங்களின் வெளிப்படைத்தன்மை, வேகம், செயலாற்றும்விதம் ஆகியவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயலாற்றியிருக்கிறோம்.  நாட்டின் ஏழைகளை மனத்தில் வைத்து செயல்படுவதோடு, அவர்களின் மேம்பாடு எங்களுக்கு முக்கிய கொள்கையாக இருக்கிறது.  ஜன் தன் யோஜனா, ஸ்வச் பாரத் அபியான், சாயில் ஹெல்த் கார்ட்ஸ் ஆகியவை சராசரி மனிதனுக்கும் அதிக வருமானமும், மேம்பட்ட வாழ்க்கையும் தரும் வகையில் வகுக்கப்பட்ட திட்டங்கள்.  அது மட்டுமல்லாமல் இந்த திட்டங்களால் நம் நாட்டைப் பற்றிய முன்முடிவுகள் பலவும் மாறும்.  பேட்டி பச்சாவ் போன்ற திட்டங்கள், புதுப்பிக்க முடிந்த வளங்கள் மீதான எங்களின் ஆர்வம் ஆகியவை நிகழ்காலத்தின் மீது மட்டுமல்ல, வருங்கால தலைமுறை மீதும் எங்களுக்கு அக்கறை இருப்பதை காட்டுகிறது.  எங்கள் அரசு நடைபோடும் திசையை காட்டும் விதமாகத்தான் எங்களது பட்ஜெட், வருங்காலத்தையும் மனத்தில் வைத்து போடப்பட்ட ரயில்வே பட்ஜெட், தேக்க நிலையில் இருக்கும் ஆற்றல் ஆலைகள் மற்றும் உர ஆலைகளுக்கான வாயு சேமிப்பு ஆகியவை அமைந்திருக்கிறது.  வளம் மிக்க, ஆற்றல் மிக்க இந்தியாவை வடிவமைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

நல்ல நோக்கத்துடன் நடைபெறும் நல்ல நிர்வாகம் என்பதுதான் எங்கள் அரசின் தனித்தன்மை.  திட்டங்களை ஒன்றிணைந்து நிறைவேற்றுவதுதான் எங்கள் எண்ணம்.  காலம்காலமாக இருக்கும் சில பின்னடைவுகளைக் கூட வாய்ப்புகளாக மாற்றியிருக்கிறோம்.  சமீபத்தில் நடைபெற்ற நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம் என்பது சாத்தியமே என்பதை காட்டியிருக்கிறோம்.  அரசு மானியங்கள் வீணாவதைப் பற்றி கடந்தகால பிரதமர்கள் எல்லோரும் பேசியிருக்கிறார்கள்.  சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும் திட்டத்தைக் கொண்டுவந்ததன் மூலம் ஏழைகளுக்கு சரியான முறையில் உதவி கிடைப்பதை உறுதி செய்துள்ளோம்.  சமுதாயத்தில் பலவீனமான நிலையில் இருக்கும் மக்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் திட்டங்களை முதன்முறையாக கொண்டுவந்திருக்கிறோம்.  மேக் இன் இந்தியா திட்டம் பிரபலமடையத் தொடங்கியுள்ளது.  அதனால் திறன் மேம்பட்டுள்ளது.  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கும் இத்திட்டம் பெரிதும் உதவும்.

உலக அளவில் அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, நிர்வாகரீதியாக இந்தியா இழந்திருந்த இடத்தை மீட்டிருக்கிறோம்.  இதற்கு மூலகாரணம் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்ததே ஆகும்.  GDP வளர்ச்சியை பொறுத்தவரை சீனாவை பின்னுக்குத் தள்ளியிருக்கிறோம்.  எஃகு உற்பத்தியை பொறுத்தவரை அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியிருக்கிறோம்.  பற்றாக்குறை பெரிதும் குறைந்துள்ளது.  IMF, OECD போன்ற பெரிய அமைப்புகள் வருங்காலத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும் என கணித்திருக்கிறார்கள்.  இதன்மூலம் மீண்டும் இந்தியா உலக நாடுகளின் கண்களில் படத்தொடங்கியிருக்கிறது.   

 

PM's swearing-in ceremony
மே27, 2014ஆம் ஆண்டு வெளியான இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் முதல் பக்கம்.  தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து 63வயதான மோடி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியினால் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார்.

கேள்வி: பதவியேற்று ஒருமாதம் ஆகிவிட்ட சூழலில் நீங்கள் தில்லிக்கு புதிது என்பதால், உங்கள் நோக்கங்களையும், ஆக்கபூர்வமான மாற்றத்தையும் இந்த நாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற உங்கள் பொறுப்புணர்வையும் வெளிக்காட்டுவதில் சிக்கல் இருப்பதாக கூறினீர்கள்.  இன்னும் அந்த சவால் உங்களுக்கு இருக்கிறதா?  டில்லியை நீங்கள் மாற்றிவிட்டீர்களா, அல்லது தில்லி உங்களை மாற்றிவிட்டதா?  


பதில்: இதை நான் மத்திய அரசை மனத்தில் வைத்தே சொன்னேன்.  ஆனால் நிலைமை வேகமாக மாறி வருகிறது.  நான் ஒரு மாநிலத்தின் தலைவராக இருந்து வந்தவன் என்பதால் பிரச்சினைகளைப் பொறுப்புடனும், திறந்த மனத்துடனும் அணுகும் மனப்பான்மை எனக்கு இருந்தது.  எங்களுக்கு வாக்களித்த சாதாரண மனிதனின் கண்களின் வழியாகத்தான் நான் பிரச்சினைகளை பார்க்கிறேன்.  தொடர்ந்து பேச்சுவார்த்தையின் மூலம் கட்டுப்பாடுகள், நெருக்கடிகள் ஆகியவற்றைக் களைந்து வருகிறோம்.  தில்லிக்கு அப்பால் மிகப்பெரிய இந்தியா இருக்கிறது.  உண்மையான இந்தியா என்பது தேசமெங்கும் பரந்து விரிந்திருக்கும் கிராமங்களிலும், சிற்றூர்களிலும் உள்ள குடிசைகளிலும், சிறிய வீடுகளிலும்தான் உள்ளது என்பதையும், அவர்களுக்காகத்தான் நாம் வாழ்கிறோம் என்பதையும் தில்லிக்கு புரியவைப்பது சவாலாக இல்லை.  துறைகள், அலுவலகங்கள், கொள்கைகள், நடைமுறைகள் என எல்லாமே அவர்களுக்கு சேவை ஆற்றுவதைச் சுற்றித்தான் இருக்கவேண்டும்.  இப்போது மத்திய அரசும், மாநில அரசும் கொடுக்கல்-வாங்கல் பாணியில் வேலை செய்யாமல், ஒத்துழைப்பு என்ற புள்ளியில் இணைந்து செயலாற்றுகின்றன.  தேசத்தின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு இயங்கும் நல்லதொரு கூட்டணி உருவாகிவிட்டது.  பணியாற்றும் கலாசாரத்தை தொழில்முறை ரீதியாக, ஆக்கபூர்வமானதாக பெரிய அளவில் மாற்றியிருக்கிறோம். டில்லி தன் தலைமைக்கு ஏற்ப செயலாற்றும் வல்லமை வாய்ந்தது.  டில்லியை மாற்றுவதன் மூலமும், தில்லியின் மூலம் நாட்டையே மாற்றுவதன் மூலமும் மிகப்பெரிய நன்மைகள் வர இருப்பதாக நான் நம்புகிறேன்.

உதாரணத்திற்கு ஒரு சிறிய மாற்றத்தை நான் ஏற்படுத்தியுள்ளேன்.  செயலாளர்களுடன் (அதிகாரிகளுடன்) அமர்ந்து தேநீர் அருந்தும் பழக்கத்தை என் பணியின் அம்சமாக ஆக்கியிருக்கிறேன்.  குழுவாக வேலை செய்யும் உணர்வு இப்படித்தான் வளர்க்கப்படுகிறது.

செயலாளர்களுக்கு முதன்முதலில் எந்த ஊரில் பணியமர்வு கிடைத்ததோ அந்த ஊருக்கு சென்று பார்க்க சொல்லியிருக்கிறேன்.  25-30 ஆண்டுகளாக அந்த இடத்துக்கு அவர்கள் போகவே இல்லை.  அதுவும் குடும்பம் சகிதமாக சென்று, குழந்தைகளுடன் பணியை ஆரம்பித்த இடத்தைப் பற்றி பேசச் சொல்லியிருக்கிறேன்.  எங்கு ஆரம்பித்து எங்கு வந்திருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் சொல்லச் சொல்லியிருந்தேன்.  பெரும்பான்மையானோர் தங்கள் முதல் பணியிடத்தைச் சென்று பார்வையிட்டது எனக்கு மகிழ்ச்சி.

கேள்வி: அதிகாரிகள் சுயமாக செயல்பட அதிகாரம் அளித்திருக்கிறீர்கள்.  தத்தமது மாநிலங்களுக்குச் சென்று பார்வையிட சொல்லியிருக்கிறீர்கள்.  நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல அவர்களின் செயல்பாடுகள் உள்ளதா?

 

பதில்: ஊடகங்கள் செயலாற்றும் வேகத்தைப் போல அதிகாரிகளின் வேகமும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.  உதாரணத்திற்கு ஒரு சாக்கடை இருக்கிறது என்றால் அதை படம்பிடித்து வெளியிட ஊடகத்திற்கு இரண்டு நிமிடங்கள்தான் ஆகும்.  ஆனால் அதை மணலைப் போட்டு மூடுகின்றவருக்கு குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது ஆகும்.  அதிகாரிகளின் செயல்பாடு எனக்கு திருப்திகரமாக இருக்கிறது.  

கேள்வி: வணிக வட்டாரம் தாங்கள் தொழில் செய்ய எளிமையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், நிறைய வரிகள் போடப்பட்டிருப்பதாகவும் வருந்துகிறார்களே?  உங்கள் அரசு தேவையான மாற்றத்தை செய்துவிட்டதாக நினைக்கிறீர்களா?


பதில்: முதலில் எங்கள் அரசு ஏழை மக்களுக்கான அரசு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  ஏழைகளுக்குதான் நாங்கள் முதலில் முக்கியத்துவம் கொடுப்போம்.  தங்குதடையற்ற, வேகமாக செயல்படக்கூடிய ஒரு நிர்வாகத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  எல்லா துறைகளில் அப்படி செயல்படுவதால் ஏற்படும் நன்மைகள் கண்கூடாக தெரிகிறது.  நாங்கள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள தொழில்துறை முன்வர வேண்டும்.

காங்கிரஸ் எங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு மற்றும் தொழிலதிபர்கள் எங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு என இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஊடகங்கள் சமமாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்.  காங்கிரஸ் எங்களை தொழிலதிபர்களுக்காக வேலை செய்யும் அரசு என்கிறது, தொழிலதிபர்களோ நாங்கள் அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்கிறார்கள்.  

எங்கள் பணி கொள்கைசார் அரசை நடத்துவது.  கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது என்றால் முகேஷ் அம்பானிக்கு மட்டும் கட்டுப்பாடுகள் இருக்க கூடாது, சராசரி மனிதனுக்கு இருக்கலாம் என்று அர்த்தமாகாது.  நாங்கள் அந்த வகையில் பணியாற்றவில்லை.  

எல்லோருக்கும் சேர்த்து நல்ல நிர்வாகத்தை அளித்தால்தான் அது நல்ல நிர்வாகம்.  எங்கள் அரசு கொள்கைகளை உருவாக்கும்.  அந்த கொள்கைகள் உங்களுக்கு பொருந்தினால் உள்ளே வாருங்கள்.  இல்லையென்றால் நீங்கள் நிற்கும் இடத்திலேயே நில்லுங்கள்.  தனியார்துறை, வரி பயங்கரவாதம், வரி திரிபு, தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் சலுகைகள் என பாரம்பரியமிக்க சில நிர்வாகப்பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறது.  அதனால்தான் எங்கள் 2015-2016 பட்ஜெட்டில் இந்த பிரச்சினைகளை எல்லாம் சரிசெய்யும் விதமாக சில மாறுதல்களைக் கொண்டு வந்தோம்.  இந்த நடவடிக்கைகள் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என நம்பினோம்.  நான் மீண்டும் சொல்கிறேன்.  முன்னேற்றத்தை நோக்கி நீங்கள் ஒரு அடி வைத்தால், நாங்கள் உங்களுக்காக இரண்டு அடி எடுத்து வைப்போம்.

கேள்வி: உங்களுக்கும் காங்கிரசுக்கும் இடையில் உங்களில் யார் ஏழைப்பங்காளன் என்ற போட்டியே நாடாளுமன்றத்தில் நடந்ததே!  உங்கள் கருத்து என்ன?

 

பதில்: காங்கிரசின் 60ஆண்டுகால ஆட்சியில் இந்த நாட்டின் ஏழைகள் வறுமை ஒழிப்பு வேளையில் தேக்க நிலையிலேயே இருந்தது.  தேர்தல் நேரத்தில் மட்டும் ஏதேனும் பெரிய சட்டத்தை இயற்றி தங்களை ஏழை பங்காளர்கள் போல காட்டிக்கொள்வார்கள்.  ஆனால், வறுமை என்னும் வரலாற்றில் புரையோடிப் போன பிரச்சினையை ஒழிக்க முதல் ஐந்து ஆண்டுகளிலேயே நாங்கள் திட்டங்கள் தீட்டும்போது அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.  ஏழைகளாகவே இருக்கிறார்கள், அல்லது இன்னும் பெரிய ஏழைகளாக மாறியிருக்கிறார்கள். பல நாடுகள் வறுமையை ஒழிப்பதில் வெற்றி பெற்றுவிட்டன.  ஆனால், தேர்தலில் அரசியல் செய்வதற்காக காங்கிரஸ்

நிலக்கரி ஊழலோ, ஸ்பெக்டர் ஊழலோ ஏழைகளுக்கு நன்மை செய்யவில்லை.  காமன்வெல்த் விளையாட்டில் நிகழ்ந்தேறிய கொள்ளையும் உதவவில்லை.  யாரெல்லாம் நன்மை அடைந்தார்கள் என தெளிவாக எல்லோருக்குமே தெரியும்.  வறுமை இன்னும் நம் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதுதான் காங்கிரசின் 60 ஆண்டுகால ஆட்சியின் சாதனை.  நான்கில் ஒரு குடும்பம் வீடின்றி இருக்கிறது.  சுகாதாரம், கல்வி, நீர், மின்சாரம், சாலைகள் போன்ற வசதிகள் எல்லாம் இன்னமும் பலருக்கு கனவாகவே இருக்கிறது.

ஜன் தன் போன்ற திட்டங்களை முதல் ஐந்து மாதங்களுக்குள்ளாகவே கொண்டுவந்தோம்.  12 கோடி வங்கிக்கணக்குகளை, ஏழைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக திறந்தோம்.  இத்தனை ஆண்டுகளாக வங்கிகளும் இருந்தன, வங்கி கணக்கு இல்லாத மக்களும் இருந்தார்கள், ஆனால் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்?

பழைய நிர்வாகங்களின் வேகத்தில் சென்றால் அனைத்து பள்ளிகளுக்கும் கழிப்பறை வசதி வர இன்னும் 50 ஆண்டுகள் கூட ஆகும்.  ஆனால் முதல் நான்கு மாதங்களிலேயே அந்த வேலையை எடுத்துக்கொண்டு அடுத்த சில மாதங்களில் முடிக்கும் வண்ணம் விரைவுபடுத்தியிருக்கிறோம்.  ஏழை மக்களின் குழந்தைகள் தானே இந்த பள்ளிகளில் படிக்கிறார்கள். ஏழைப் பங்காளனாக தங்களைக் காட்டிக்கொள்கின்றவர்கள் அரசு மானியம் வீணாகிறது என வெறுமனே பேசிக்கொண்டிருந்தார்கள்.  நாங்கள்தான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமையல் எரிவாயு மானியம் தேவையானவர்களுக்கு நேரடியாக சென்று சேரும்படி செய்தோம். ஆறு கோடி சிறு, குறு தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் வண்ணம் முத்ரா வங்கிகளை தொடங்கியுள்ளோம்.  அதில் 61% பேர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர்.  ஏழைகள், முதியவர்கள் மற்றும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டம் ஒன்றையும் கொண்டுவந்திருக்கிறோம்.  திறன் வளர்ப்பு அமைச்சகம் என்ற ஒன்றை தொடங்கி இளைஞர்களுக்கு மேக் இன் இந்தியா போன்ற முன்னெடுப்புகளின் மூலம் வேலை கிடைக்க உறுதிபூண்டிருக்கிறோம்.  ஆனால் கடந்தகாலங்களிலோ மெதுவாக வளர்ச்சி காணும் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பின்மையையும் தான் நாடு கண்டிருக்கிறது

இதெல்லாம் சிறிய உதாரணங்கள்தான்.  இவை ஏன் கடந்த அறுபது ஆண்டுகளில் செய்யப்படவில்லை?  யார் தடுத்தார்கள்?  ஆனால் இதையெல்லாம் காங்கிரஸ் தேர்தல் நேரத்திற்கு சற்று முன்பு செய்திருந்தால் ஏழைப்பங்களான் என முத்திரை குத்திக்கொள்ளலாம்.  ஆனால், நாங்கள் தேர்தல் வரை காத்திருக்காமல், ஆரம்பத்திலேயே செய்திருக்கிறோம்.  இதை யாரும் கவனிக்க மறுக்கிறார்கள்.

காங்கிரசின் பிரச்சினை நாங்கள் ஏழைகளுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதல்ல.  அவர்கள் யார் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டதே என்பதுதான்.  “மோடி அரசால் இவ்வளவு விஷயங்களை ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்குள் சிந்திக்க முடிந்து, செய்ய முடிந்தால் நீங்கள் ஏன் இவற்றைப் பற்றியெல்லாம் 60 ஆண்டுகளாக சிந்திக்கவே இல்லை,” என மக்கள் காங்கிரசிடம் கேட்கிறார்கள்.  பதில் மிகவும் எளிமையானது.  ஒவ்வொரு தேர்தல் நெருங்கும்போதும் நாங்கள் செய்த இவ்வளவு விஷயங்களில் கொஞ்சமாக ஏதாவது செய்வதற்காக காத்திருந்திருப்பார்கள்

கேள்வி: மாநிலங்களவையில் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?  ராஜ்யசபாவில் உங்களுக்கு இருக்கும் நெருக்கடியான நிலையை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

 

பதில்: நாங்கள் 2014, மே மாதம் பதவியேற்றதில் இருந்து நடந்த நான்கு நாடாளுமன்ற கூட்டங்களும் அர்த்தமுள்ளதாக முடிந்ததற்கு உதவிய கட்சிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  குறிப்பாக பட்ஜட் கூட்டம் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் முடிந்துள்ளது. கட்சிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவுடன் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன், கொள்கைசார்ந்து இயங்கும் அரசை நடத்த விழைகிறோம் என்பதைக் காட்டியிருக்கிறோம்.  நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் துறையில் கொண்டுவரப்பட்ட இரண்டு மசோதாக்களும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.  இதன்மூலம் நிலக்கரி மற்றும் பிற தாதுக்களை ஒதுக்குவதில் அரசுக்கு விருப்ப உரிமை உள்ளது என்கிற அவப்பெயர் நீங்கியது.  இதன்மூலம் ஊழல், முறைகேடுகள் ஆகியவையும் தடுக்கப்படும்.  எங்களின் நேர்மையான நோக்கத்தை ஆதரித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி.

இந்த இரண்டு சட்டத்திருத்தங்களும் வெளிப்படைத்தன்மை வாய்ந்த அரசை அமைப்பதில் மிகப்பெரிய திருப்புமுனையையும், பொருளாதார வளர்ச்சியை நாடு எதிர்நோக்கியுள்ள சூழலில் செயல்திறனுடன் இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்யும் நிலையையும் உண்டாக்கியுள்ளது. காப்பீட்டு சட்டங்களை (திருத்தம்) தாக்கல் செய்ததும் முக்கியமான ஒன்று.  முதலீடு இன்றி தவிக்கும் காப்பீட்டு துறையில் அந்நிய நாட்டு முதலீடு வருவதற்கு ஆவண செய்யும் இந்த திருத்தங்களின் மூலம் ஏழு ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்தது.  வெளியிடப்படாத அந்நிய நாட்டு வருமானம் மற்றும் சொத்து (வரிவிதிப்பு) சட்டம் 2015ஐ மக்களவையில் அறிமுக செய்ததன் மூலம் கறுப்புப்பணத்தை வெளிக்கொணர்வதில் வரலாற்று சிறப்புமிக்க ஆரம்பப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

கூட்டணி கட்சிகளுடனும், எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.  நானே நாடாளுமன்றத்தில் மாற்றுக்கருத்து கொண்டிருப்போரிடம் எல்லா விஷயங்களையும் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என அறிவித்துள்ளேன்.  தேசிய நலனைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய பிரச்சினைகளில் எல்லா கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என நம்புகிறேன்.

கேள்வி: ஃபிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பயணப்பட இருக்கிறீர்கள்.  இந்த பயணங்களின் மூலம் என்ன நன்மைகளை எதிர்பார்க்கிறீர்கள்?


பதில்: ஒரே நேரத்தில் நிறைய சர்வதேச பயணங்களை மேற்கொள்வது, நிறைய வேலைகளைச் செய்து முடிப்பதற்காகத்தான். அஹமதாபாதில், “பயணக்கூலி ஒன்று.  பயணங்கள் இரண்டு,” என்ற சொலவடை உண்டு.  இந்த மூன்று நாடுகளும் பெரிய பொருளாதார நாடுகள்.  அவற்றுக்கும் நம் நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.  முதலீடு, தொழில்நுட்பம், நடைமுறைகள் என பலவகைகள் அந்த நாடுகளால் நமக்கு உதவ முடியும்.  கனடா ஹைட்ரோ கார்பன்ஸ் மற்றும் பிற இயற்கை வளங்கள் மிக்க நாடு.  இந்தியப் பிரதமர் ஒருவர் கனடா செல்வது பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நடக்கிறது.  ஃப்ரான்ஸிலும், ஜெர்மனியிலும் உள்ள தயாரிப்பு நிறுவனங்களும், திறன் முதலீடும் நமக்கு பயன்படும்.  ஃப்ரான்ஸ் நாம் நம்பத்தகுந்த கூட்டாளி.  அதுமட்டுமல்லாமல் ஜெர்மனியில் நடைபெறும் மதிப்புமிக்க ஹென்னோவெர் கண்காட்சியில் இந்தியா ஒரு பங்குதாரராக கலந்துகொள்கிறது.  என் பயணம் ‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்புக்கு பெருமளவில் உதவும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்.  மேலும் சுமுகமான வணிகத்தை மையமாக வைத்து நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் என் சந்திப்புகளில் முக்கிய இடத்தை பெறும்.

 

கேள்வி: பாகிஸ்தான் பிரதமரை உங்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்தீர்கள்.  ஆனாலும் இந்திய-பாகிஸ்தான் உறவு சரிவை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது.  இருதரப்பு பேச்சுவார்த்தையை நாம் எப்போது எதிர்பார்க்கலாம்?  அதற்கென எதுவும் வரைமுறைகள் வகுக்கப்படுமா?


பதில்: தெற்காசியாவில் சமாதானத்தையும், செழுமையையுமே நாம் விரும்புகிறோம்.  ‘சார்க்’ செழிக்கவே விரும்புகிறோம்.  பகுதிசார்ந்த ஒத்துழைப்பு நிலவ வேண்டும் என்பதே நான் பாகிஸ்தான் பிரதமரையும், பிற சார்க் தலைவர்களையும் அழைக்க காரணம்.  நம் வெளிநாட்டு கொள்கைகளைப் பொறுத்தவரை இந்த செயல் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது.  நேபாளம், பூடான், வங்காள தேசம், இலங்கை ஆகிய நாடுகளுடனான உறவில் இது ஆக்கபூர்வமாக எதிரொலிக்கிறது.  ஆனால் சமாதானமும், பயங்கரவாதமும் ஒரே இடத்தில் இருக்க முடியாதுதானே?  நல்ல சூழல் நிலவும் போதுதான் சமாதானம் நிலவும்.  பயங்கரவாதம், வன்முறையற்ற ஒரு சூழலை உருவாக்க பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். சிம்லா உடன்படிக்கை மற்றும் லாகூர் பிரகடனத்தை சார்ந்துதான் அந்த பேச்சுவார்த்தை அமைய முடியும்.


கேள்வி: உங்கள் சீனப் பயணத்திற்கு முன் எல்லை குறித்த பேச்சுவார்த்தைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம்?

பதில்: ஜனாதிபதி சீ்ஜீ அவர்கள் இந்தியா வந்தது நிச்சயம் இந்திய-சீன உறவுக்கு புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது.  உறவை மேலும் வலுப்படுத்த எனது சீனப் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.  எல்லைப் பிரச்சினையை பொறுத்தவரை இப்போதைய முக்கியத் தேவை சமாதானத்தைச் சீர்குலைக்காமல் இருப்பது.  சமாதானம் நிலவினால்தான் பரஸ்பரம் நல்லதொரு முடிவை எட்ட முடியும். இது கொஞ்சம் பழைய, சிக்கலான விஷயம்.  கவனத்துடன்தான் அணுக முடியும்.  நல்லது நடக்கும் என்று எனக்கு இருக்கும் நம்பிக்கை ஜனாதிபதி சீ அவர்களுக்கும் இருக்கிறது.  இப்போது இரண்டு நாடுகளுக்குமே முக்கியமாகப்படுவது மக்களின் பொருளாதார வளம்.  சிக்கல், பிரச்சினையாக வளர்ந்துவிட கூடாது என்பதில் நாங்கள் இருவருமே உறுதியாக இருக்கிறோம்.  இருநாட்டுத் தலைமைகளுமே நடைமுறை சாத்தியங்களை மனதில் வைத்து, திறந்த மனத்துடன்தான் இதை அணுகுகிறோம் என்பதால் எங்களுக்கு நடைமுறையில் சாத்தியப்படும் எதிர்பார்ப்புகளே உள்ளன.  

கேள்வி: பிற உலகத்தலைவர்களுடன் இருப்பது போலவே, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடனும் உங்களுக்கு நல்ல உறவு இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.  ஆசியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவின் புவியியல்சார் திட்டங்களில் ஏதேனும் மாற்றத்தை இந்தியா கவனித்திருக்கிறதா?


பதில்: பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நலன்கள் சார்ந்தே நட்பு ஏற்பட்டிருக்கிறது.  ஒபாமாவுடனான எனது நெருக்கமான பேச்சுவார்த்தைகளை வைத்து அமெரிக்காவின் புவியியல் மற்றும் பொருளாதார யுக்திகளை பொறுத்தவரை இந்தியாவுக்கு முக்கியமான இடம் இருக்கிறது என உறுதியாக சொல்லமுடியும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்கிற பலமும், நம்மிடம் இருக்கும் இளைஞர்களின் பலமும் சேர்ந்து, உலகின் பழமையான ஜனநாயக நாடும், திறமைகளை மதிக்கும் நாடுமான அமெரிக்காவுடன் பணியாற்ற எல்லா சூழல்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.  கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக இருக்கிறது.  இரு நாடுகளுமே வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகள் என்பதால் ஒருவருக்கொருவர் பெரும் அளவில் உதவ முடியும்.  இருநாடுகளின் ஆர்வங்களும் அருகருகே பயணிப்பதால் இந்திய-அமெரிக்க உறவு வருங்காலங்களில் இன்னும் நெருக்கமாகும்.  

PM meets NRIs in New York
செப்டம்பர் 29, 2014 தேதியிட்ட இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் முதல் பக்கம். நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான அமெரிக்க இந்தியர்கள், மேடிசன் ஸ்குயரில் மோடியை வரவேற்ற காட்சி.

கேள்வி: பருவம் மாறி பெய்யும் மழை, நாசமாகும் தானியங்கள், காய்கறிகள் என விலைவாசி ஏறிக்கொண்டே இருக்கிறது.  இதைக் கவனிக்கிறீர்களா?  விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது?  

பதில்: நாங்கள் பதவியேற்றபோது விலைவாசி விண்ணைமுட்டும் அளவில் இருந்தது.  சூழலை இன்னும் மோசமாக்குவதைப் போல் பருவமழையும் தாமதமானது.  ஆனாலும் எங்களால் முடிந்தவரை முயற்சிசெய்து பணவீக்கத்தை குறைத்தோம்.  கொஞ்சம் நிம்மதிப்பெருமூச்சு விடும்போது, பருவம்தாண்டி பெய்த மழை விவசாயத்திற்கு பெரிய சிக்கலை கொண்டுவந்துவிட்டது.  எங்கள் அரசுக்கு நிச்சயமாக இது முக்கியமான பிரச்சினைதான்.

விவசாய சகோதரர்கள் அனைவருக்கும் ஒரு உறுதியை தருகிறேன்.  எங்கள் அரசு காலத்திற்கு ஏற்ப அனைத்து உதவிகளையும் செய்யும்.  மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும் ஏற்கனவே தேவைகளை ஆராய ஆரம்பித்துவிட்டார்கள்.  நானும் காணொளிக் காட்சி மூலமாகவும், மாநிலங்களுக்குச் சென்று நேரில் பார்ப்பது மூலமாகவும் சூழலை ஆராய்ந்து வருகிறேன்.  உணவுப்பொருள் விநியோகத்தை சுமுகமாகவும், தேவையான அளவில் தொடர்ந்து நடத்திட அரசு உறுதி பூண்டிருக்கிறது.  இப்போது தேவைக்கு ஏற்ப விநியோகம் இருக்கிறது.  ஆனாலும் அதிக லாபத்துக்காக இடைத்தரகர்கள் உணவுப்பொருட்களை பதுக்குவது நடக்கிறது.  கள்ளச்சந்தையில் பதுக்குகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயலாற்றும்போது நிச்சயமாக நன்மைகள் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  


கேள்வி: பொருளாதார ரீதியில் பலமாக இருக்கும் இந்தியர்களை, அரசு செலவீனங்களை குறைக்கும் வகையில் தங்கள் மானியத்தை விட்டுக்கொடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தீர்கள்.  கூடியவிரையில் இதை அரசின் கொள்கை ஆக்குவீர்கள் என எதிர்பார்க்கலாமா?  


பதில்: ஏழைகளைக் கவனித்துக்கொள்வது அரசின் கடமை. அதனால் மானியம் என்பது தேவையானர்களுக்கு சென்றுச்சேரவேண்டும்.  சரியான மக்களுக்கு, சரியான நேரத்தில், சரியான நேரத்தில் மானியம் கிடைக்க வேண்டும்.  இது மனிதாபிமான பிரச்சினையே தவிர, வெறும் பொருளாதார பிரச்சினை இல்லை.  நம் நாட்டின் கலாசாரம் கொடுக்கும் கலாசாரமே தவிர, அடுத்தவருக்கு உரியதை பெற்றுக்கொள்ளும் கலாச்சாரம் அல்ல.  அதனால்தான் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளவர்கள் மானியம் பெறுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன்.

மானியம் வழங்குவதில் ஏற்படும் கசிவுகளை, சீரான நிர்வாகத்தின் மூலம் குறைப்பதுதான் அரசின் கொள்கை.  அதனால் சமையல் எரிவாயு மானியம் சார்ந்து இயங்கும் உலகின் மிகப்பெரிய பணமாற்று திட்டமான PAHAL நல்ல பலன்களைக் கொடுத்துவருகிறது.  மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என பணம் படைத்தவர்களைக் கோருவது, அவர்களாகவே தங்களின் மானியத்தை விட்டுக்கொடுக்க வைத்து அந்த மிச்சப்படும் பணம் ஏழைகளுக்கு உதவும் என்பதால்தான்.  இன்னமும் விறகு அடுப்பு உபயோகித்து புகை சார்ந்த நோய்களால் துன்பப்படும் ஏழைகளின் வீடுகளில் எரிவாயு அடுப்பெரிய அந்தப் பணத்தை பயன்படுத்துகிறோம்.

கேள்வி: இந்திய தொழிற்சாலைகளும் சரி, உலக அளவிலான தொழிற்சாலைகளும் சரி, இந்திய தொழிலாளர் சட்டங்கள் கொஞ்சம் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருக்கவேண்டும் என தொடர்ந்து கூக்குரல் எழுப்பி வருகின்றன.  இதனால், நிச்சயம் சமூக மற்றும் அரசியல் எதிர்வினைகள் இருக்கும்.  இந்திய தொழிலாளர் சட்டங்களை எப்படி திருத்தியமைக்கலாம் என நினைக்கிறீர்கள்.

பதில்: இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் என்பது தொழிற்சாலைகளை மையமாக வைத்தே பார்க்கப்படுவது வருந்தத்தக்கது.  நாங்கள் முன்னெடுக்கும் திருத்தங்கள் ஒட்டுமொத்த தொழிலாளிகளுக்கும் வலுசேர்ப்பது.  தொழிலாளர்களின் பாதுகாப்பையும், நல்வாழ்வையும் உறுதிசெய்யும் பொறுப்பு எங்களுக்கு உண்டு.  அதும்போக வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.  லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வேண்டும்.  அதனால் வேலைவாய்ப்பு சந்தையை விரிவு செய்ய வேண்டும்.  அதனால், நம் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் இவை இரண்டையும் மனதில் வைத்தே நிகழ வேண்டும்.

எனவே, இதை மனத்தில் வைத்து, தொழிலாளிகளின் பாதுகாப்பு மற்றும் நலத்தை உறுதிசெய்யும் வகையில் திருத்தங்களை செய்துள்ளோம்.  ‘ஷ்ரமேவ் ஜெயதே’ போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினேன்.  இந்த ஆண்டு பட்ஜட்டில் EPF, புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ESI அல்லது மற்றொரு நலக் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றும் எதை வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற வகையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தோம்.  தொழிலாளர்களுக்கு EPF தொகை செலுத்தப்படவில்லை போன்ற புகார்களையும் சந்தித்து வருகிறோம்.  அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு ஏற்ப, தொழிலையும் கடினமாக்கி, தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யாத சில தொழிலாளர் சட்டங்களை இலகுபடுத்தியிருக்கிறோம்.  மேலும் பயிலுனர்கள் சட்டத்திலும் சில திருத்தங்களைக் கொண்டுவந்து புதிய திறமைசாலிகளை பலருக்கு வேலை கிடைக்க வகை செய்திருக்கிறோம்.  ஆக, ஒட்டுமொத்தமாகவும், சமநிலையோடும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.

கேள்வி: தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கு நிறைய ஆற்றல் உள்ளது.  ஆனால் தற்சமயம் தொழில்நுட்பத் துறையில் ஆளுகை செலுத்துவதென்னவோ அமெரிக்கா போன்ற வளர்ந்த பொருளாதாரத்தை கொண்ட நாடுகள்தான்.  இச்சூழலில் தொழில்நுட்பத்திற்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இடையில் நிலவும் தூரத்தை எப்படி அடைப்பது?


பதில்: ஆம். இது நிச்சயம் முக்கியமானதொரு வேலைதான்.  இந்தியாவை அறிவுசார் சமூகமாக மாற்றுவதுதான் எங்கள் நோக்கம். திறமைமிக்க நம் இளைஞர்களின் ஆற்றலை, நம் வாழ்க்கைமுறையை மேம்படுத்தவும், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் பயன்படுத்த வேண்டும்,  அதனால்தான் எங்கள் அரசு பதவியேற்றவுடனேயே திறன் வளர்ப்பு மற்றும் தொழில்முனைவோருக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது.  சமீபத்திய பட்ஜெட்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்கென அடல் இன்னொவேஷன் மிஷன் (AIM), சுயவேலைவாய்ப்பு மற்றும் திறன் பயன்பாடு (SETU) என்ற இரண்டு திட்டங்கள் அறிமுக செய்யப்பட்டது.  நிதி ஆயோக் மூலம் கல்வித்துறையும் இதில் ஈடுபட்டு செயலாற்றும்.  வருங்காலங்களில் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அடைகாப்பு மற்றும் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்.  டிஜிட்டல் இந்தியாவுக்கென நான் ஏற்கனவே ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளேன்.  IPR குழுவைப் பலப்படுத்தும் வேலைகளும் நடக்கிறது.  இதற்கென ஒரு தனிக்குழு வேலை செய்கிறது.

கேள்வி: தில்லி தேர்தலில் பா.ஜ.கட்சியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது.  மோடி அலையின் முடிவாக இதைப் பல நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இது முழுக்கமுழுக்க ஓர் அரசியல் கேள்வி. மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம்.  2014 தேர்தலின் போது மோடி அலையைப் பற்றி பேசாதவர்கள் அதைப் பற்றி இப்போது பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.    

நாடாளுமன்ற தேர்தல் நடந்துமுடிந்தபின் நடந்திருக்கும் தேர்தலில் மக்களின் தீர்ப்பை மதிக்கத்தான் வேண்டும்.  ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் சட்ட தேர்தல்களையும், அசாம், பஞ்சாப், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.  முழுக்கமுழுக்க பா.ஜ.க. ஆதிக்கம்தான் உள்ளது. நாடு முழுக்க மக்களின் அன்பும், நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.   

கேள்வி: ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே ஜம்மு காஷ்மீரின் பி.டி.பி- பா.ஜ.க. அரசு பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.  ஹுரியத் தலைவர் மசரத் ஆலம் விடுதலை பற்றி உங்களிடம் ஆலோசிக்கவேயில்லை என நாடாளுமன்ற தேர்தலின் போது கூறியிருந்தீர்கள்.  ஸ்ரீநகரில் இப்போது இருக்கும் அரசின் செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா?


பதில்: சில சிக்கல்கள் உள்ளன.  நாம் பொறுமையாக இருக்க வேண்டும். நானும் எனது கட்சியும், பிரிவினைவாதிகளையும், பயங்கரவாதிகளையும் பொறுத்தவரை எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாக சொல்லிவிட்டோம். எனினும் மாநில நலனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.  ஜம்மு-காஷ்மீர் அரசுடனான கூட்டணி அரசியல்ரீதியாக பெரிய முன்னேற்றம்.  தேசத்தின் மிகப்பெரிய பிரச்சினையான காஷ்மீர் பிரச்சினையை மக்களுடன் இணைந்து தீர்க்கும் ஆற்றல் இந்த கூட்டணிக்கு உள்ளது.

கேள்வி: உங்கள் தேர்தல் பிரசாரத்தின்போது வடகிழக்கு மாகாணங்களை தேசிய நீரோட்டத்தில் கொண்டுவரவேண்டும் என சொல்லியிருந்தீர்கள்.  அந்தத் திட்டம் வேலை செய்கிறதா?
பதில்: ஆம். நான் சொன்னதைப் போல வடகிழக்கின் எட்டு மாநிலங்களும் தேசத்தின் ஆற்றல்மிக்க அஷ்டலட்சுமிகள்.  தேசத்தின் நலனுக்கு இந்த மாநிலங்களால் பெரிதும் உதவ முடியும். கடந்த பத்து மாதங்களில் வடகிழக்கு மாநிலங்களுக்கு இரண்டுமுறை பயணப்பட்டுள்ளேன்.  மக்களுடன் அவர்களின் முக்கியமான தருணங்களில் பங்கேற்பதுடன், நீர், ஆற்றல், ரயில்வே போன்ற உட்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளேன்.  உட்கட்டமைப்பையும், தொடர்பையும் மேம்படுத்து மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.  லும்டிங்க்-, சில்சார் நகரங்களுக்கு இடையிலான ரயில்வே பாதையின் முதல்கட்ட பணி கடந்த எட்டுமாதங்களில் முடிக்கப்பட்டுவிட்டது.  சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

மேலும், மக்களிடம் வடகிழக்கு மக்களை மரியாதையாக நடத்துவதுடன், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளேன்.  இந்த நோக்கத்தை மையமாக வைத்தே வடகிழக்கு DGக்களின் மாநாடு ஒன்றை நடத்தினோம்.  இது ஆரம்பம்தான்.  தொடர்முயற்சிகளின் மூலம், தேசத்தின் வடகிழக்கு மாநிலங்கள் நம் தேசவளர்ச்சியின் மிகப்பெரிய பங்காற்றும் பகுதிகளாக நிச்சயம் மாறும்.

கேள்வி: சமீபத்தில் நீதித்துறை நட்சத்திர சமூக ஆர்வலர்களுக்கு வளைந்து கொடுக்கக் கூடாது என பேசியிருந்தீர்கள்.  அது மக்களின் மனத்தில் சர்ச்சைகளைக் கிளப்பியது.  நீதித்துறையின் தலையீடு பல வழக்குகளில் அதிகாரிகளின் மெத்தனத்தால்தான் நடக்கிறது என நினைக்கிறீர்களா?

பதில்: நீதித்துறையை நான் ஆய்வு செய்ய விரும்பவில்லை. நிபுணர்கள்தான் அதை செய்யவேண்டும்.  பல சமயங்களில் நீதித்துறையின் தலையீடு பல நல்ல முடிவுகளைத் தந்துள்ளது.  சில சமயங்களில் வேதனையையும் கொணர்ந்துள்ளது.  அதே நேரம் நிர்வாகத்தில் இருக்கும் தேக்கநிலை சில நேரங்களில் வலியை கொண்டுவந்துள்ளதைப் போல, நிர்வாகத்தின் விரைவுத்தன்மை நன்மைகளையும் கொண்டுவந்துள்ளது.  அதனால் யாருடைய நடவடிக்கைகளையும் சந்தேகப்படுத்தல் என்பது ஆகாது.