பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்
(அ) இளைஞர் மற்றும் விளையாட்டு விஷயங்களில் ஒத்துழைப்பிற்காக இந்தோனேசியாவுடனும்;
(ஆ) இளைஞர் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பிற்காக கிர்கிஸ் குடியரசுடனும்
இந்தியா மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்தோனேஷியா, கிர்கிஸ் குடியரசு ஆகியவற்றுடன் இளைஞர் பரிமாற்றத் திட்டங்களை மேற்கொள்ளவும், இதர இளைஞர் மற்றும் விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழிவகை செய்கின்றன.
சர்வதேச இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள் கருத்துக்கள், மதிப்பீடுகள், கலாச்சாரம் ஆகியவற்றை இளைஞர்களிடையே பரிமாற்றம் செய்து கொள்வதை ஊக்குவிப்பதோடு இளைஞர்களிடையே சர்வதேச கண்ணோட்டத்தை வளர்த்தெடுக்கவும் உதவுகின்றன. மேலும் இத்திட்டங்கள் அமைதி மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றை வளர்த்தெடுப்பதோடு, நாடுகளுக்கிடையே சுமுகமான உறவுகளையும் வலுப்படுத்துகின்றன. இதில் பங்கேற்கும் நாடுகளில் இளைஞர்கள் மேம்பாடு மற்றும் விளையாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு உதவுவதோடு இதர இளைஞர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஒத்துழைப்பிற்கும் இவை வழிவகுக்கின்றன.
இளைஞர்கள், விளையாட்டு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான பரிமாற்றத் திட்டங்களின் மூலம் பெறப்படும் பயன்கள் சாதி, மதம், பாலினம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்த வகையில் அனைத்து இளைஞர்களையும் சென்றடைவதாகவும் இருக்கும்.
இத்தகைய இளைஞர் பரிமாற்றம் மற்றும் இதர திட்டங்களில் பங்கேற்பதற்கான இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முறை வெளிப்படையானதாக, குறிப்பிட்ட நோக்கம் கொண்டதாக இருக்கும் என்பதோடு, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கீழான திட்டங்களின் கிடைக்கும் பயன்கள் பொதுமக்களின் மேலாய்விற்கு உட்பட்டதாகவும் இருக்கும்.
இதன் அடிப்படையிலான இளைஞர் பரிமாற்றம் மற்றும் இதர திட்டங்கள் இளைஞர்களிடையே சர்வதேச கண்ணோட்டத்தை வளர்த்தெடுக்க உதவும் என்பதோடு அவர்களின் அறிவு, திறன் ஆகியவற்றை விரிவுபடுத்துவதாகவும் இருக்கும்.