Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்


ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும்  இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். ‘வசுதைவ குடும்பகம்’ (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் ‘பின்னேக துங்கல் இகா’ (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார்.  இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தையும், வளர்ச்சியடைந்த இந்தியா 2047, பொன்னான இந்தோனேஷியா 2045 (இந்தோனேஷியா ஈமாஸ் 2045) ஆகிய தொலைநோக்குப் பார்வைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புகளையும் எடுத்துரைத்த பிரதமர், வர்த்தகம், முதலீடு, போக்குவரத்து, உணவு, எரிசக்திப் பாதுகாப்பு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஆழமான ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தார். உலகளாவிய தெற்கின் குரலை வலுப்படுத்தவும், சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, விதிமுறைகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கவும் இந்தோனேசியாவுடன் இணைந்து செயல்பட இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282082&reg=3&lang=1

****

TV/SMB/SH