Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் மாற்றங்களைச் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்கான 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும்போது, மாற்றங்களைச் செய்வதுதொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக, இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு கடந்த ஜூன் 2016-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால், மத்திய அரசுக்கு 2016-17-ல் கூடுதலாக ரூ.84,933 கோடி (2015-16-ம் ஆண்டில் 2 மாதங்களுக்கான நிலுவைத் தொகை உள்பட) கூடுதல் செலவு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பரிந்துரைகளை மாற்றியமைப்பதன் பலன்கள், ஜனவரி 1, 2016 முதல் கிடைக்கும். அதாவது, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட தேதியிலிருந்து கிடைக்கும். மத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதல் மூலம், மத்திய அரசின் வருடாந்திர ஓய்வூதிய செலவு மட்டுமே ரூ.1,76,071 கோடியாக உயரும். அமைச்சரவையின் முக்கிய முடிவுகளில் சிலவற்றை கீழே காணலாம்:

1. 2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைத்தல்
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், செயலாளர் (ஓய்வூதியம்) தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், 2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கு 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளில், ஓய்வூதியத்தை கணக்கிடும் முறையை மாற்றியமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டபடி, ஓய்வூதிய கணக்கீட்டு முறையை மாற்றியமைப்பதன்மூலம், ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். இதனால், ஏற்கனவே ஓய்வூதியத்தை மாற்றியமைப்பதற்காக இரண்டாவது வழிமுறையான பொருத்த காரணியை (fitment factor) அமல்படுத்தியதால் ஏற்பட்ட செலவை விட, மத்திய அரசுக்கு 2016-17-ம் ஆண்டில் கூடுதலாக சுமார் ரூ.5,031 கோடி செலவுபிடிக்கும். இதனால், 2016-ம் ஆண்டுக்கு முந்தைய பாதுகாப்புத் துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறை சாராத ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் என 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலனடைவார்கள்.

7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த ஜூன் 29, 2016-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அப்போது, 2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை மாற்றியமைக்க இரண்டு மாற்று வழிமுறைகளுடன் 7-வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், முதல் வழிமுறையை அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து குழு ஆய்வுசெய்தது.

அமைச்சரவையின் முடிவின்படி, 2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியதாரர்களுக்கு இரண்டாவது வழிமுறைகளின் அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, ஏற்கனவே பெற்றுவரும் ஓய்வூதியத்தை நிலையான காரணி அடிப்படையில், 2.57 மடங்காக வழங்க முடிவுசெய்யப்பட்டது. எனினும், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், இரண்டு வழிமுறைகளில் அதிக பயன் அளிக்கக் கூடியதை ஓய்வூதியதாரர்கள் தேர்வுசெய்துகொள்ளலாம் என்று வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஓய்வூதியதாரர்களுக்கு அதிக பயனுள்ள வழிமுறையை வழங்கும் வகையில், ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணையில் (Pension Payment Order – PPO) இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், ஓய்வூதியத்தை மாற்றியமைக்க ஊதியக் குழு பரிந்துரை செய்திருந்தது. மாற்றியமைக்கப்பட்ட வழிமுறைகளின்படி, ஓய்வூதியத்தை நிர்ணயிப்பது என்பது, அதிக அறிவியல்பூர்வமான, சீரான மற்றும் அனைத்துப் பிரிவிலும் அமல்படுத்தக் கூடிய வகையில் உள்ளது. நூற்றுக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் அளித்த தகவல்களை ஆய்வுசெய்ததன் அடிப்படையில், இறுதி முடிவை ஊதியக் குழு எடுத்தது. 7-வது ஊதியக் குழு ஏற்கனவே பரிந்துரைத்த வழிமுறையைவிட, மாற்றியமைக்கப்பட்ட வழிமுறை மூலம், அதிக அளவிலான ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். முதலில் அமல்படுத்தப்பட்ட வழிமுறையில், ஏராளமான ஓய்வூதியதாரர்களின் ஆவணங்கள் இல்லாததால், அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லாத நிலை இருப்பது தெரியவந்தது. மேலும், பல்வேறு குறைபாடுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

2. பாதுகாப்புப்படை ஓய்வூதியதாரர்களுக்கான உடல் ஊன ஓய்வூதியம்
6-வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்ட, உடல் ஊனமுற்றவர்களுக்கு சதவீத அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கும் முறையை மீண்டும் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த முறையை பல அடுக்கு முறையாக மாற்ற 7-வது மத்திய ஊதியக் குழு பரிந்துரை செய்தது.

ஆனால், பல அடுக்கு முறையை அமல்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் ஏராளமானோர் எதிர்ப்புத் தெரிவித்து மனு அளித்தனர். இதனடிப்படையில், உடல் ஊன ஓய்வூதிய விவகாரத்தை தேசிய முரண்பாடுகள் தீர் குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பிவைத்தது. பல அடுக்கு முறையைப் பின்பற்றுவதால், ஏற்கனவே உள்ள ஓய்வூதியதாரர்கள் பெற்றுவரும் உடல் ஊன ஓய்வூதியத் தொகை, சதவீத அடிப்படையை பின்பற்றுவதால் கிடைக்கும் ஓய்வூதியத்தைவிட குறைவாக இருப்பதாக ஓய்வூதியதார்கள் தெரிவித்தனர். இதேபோல, எதிர்காலத்தில் ஓய்வுபெறும் பாதுகாப்புப் படையினருக்கும் குறைவான ஓய்வூதியமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால், ஏற்கனவே உள்ள பாதுகாப்புப் படை ஓய்வூதியதாரர்கள் மற்றும் எதிர்கால ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதன் காரணமாக, ஆண்டுக்கு சுமார் ரூ.130 கோடி கூடுதல் செலவு பிடிக்கும்.

****