Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காஷ்மீர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்விற்காக மாநில அரசு வேலை வாய்ப்பு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இடைத்தங்கல் வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்


காஷ்மீர் பகுதியிலருந்து இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்விற்காக மாநில அரசு வேலை வாய்ப்பு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இடைத்தங்கல் வழங்குவதற்கான ரூ 2000 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத வன்முறையால் பெருமளவில் காஷ்மீரி பண்டிட் சமூகம் சில சீக்கிய மற்றும் இஸ்லாமிய குடும்பங்களுடன் இடம் பெயர்ந்தனர். தற்போது 62,000 பதிவு செய்யப்பட்ட காஷ்மீரிலிருந்து இடம் பெயர்ந்த குடும்பங்கள் ஜம்மு, தில்லி, தேசிய தலைநகரப் பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் வசித்து வருகின்றன.

புதிய திட்டத்தின்படி காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடுதலாக 3000 மாநில அரசு வேலைவாய்ப்பும், மாநில அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இடைத்தங்கல் வசதியும் வழங்கப்படும். இதனால் ஏற்படும் நிதிச் சுமையை மத்திய அரசு ஏற்கும்.

இதற்கு முன்பு 2008ஆம் ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு திரும்பும் இடம் பெயர்ந்தவர்களுக்கு ரூ 1618.40 கோடி உதவி தொகை அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 3000 மாநில அரசு வேலைவாய்ப்பு மத்திய அரசு நிதியுடன் வழங்கப்பட வேண்டும். இதில் 1963 வேலைவாய்ப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு மீதம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 469 பேருக்கு இடைத்தங்கல் வசதி அமைக்கப்பட்டு, புதிதாக நிர்ணயிக்கப்பட்ட இடம்பெய்ர்ந்த ஊழியர்களுக்கு பகிர்வு முறையில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

*****