பி.எம்.இந்தியா
கூட்டுறவு வங்கிகளில் குறுகியகால பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 2016ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாதங்களுக்கு வட்டித் தள்ளுபடி அளிக்க, செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதலை பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் அளித்தது. மேலும், கூட்டுறவு வங்கிகளுக்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) கூடுதல் நிதி அளிக்கும் வகையில், நபார்டுக்கு வட்டிச் சலுகை அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் குறுகிய கால பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
ராபி பருவ சாகுபடியை மேற்கொள்வதற்கு போதிய அளவில் ரொக்கம் கிடைக்காமல் பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் எளிதில் பயிர்க்கடன் கிடைப்பதற்கு கூட்டுறவு வங்கிகளில் போதிய நிதி இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் வட்டித் தள்ளுபடி அளிக்கப்பட்டதால், கூட்டுறவு வங்கிகளுக்கு நபார்டு மூலம் கூடுதல் நிதி வழங்கப்படும். இதனை நடப்பு நிதியாண்டான 2016-17-ல் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் வழங்கும். இந்தத் திட்டத்துக்கு கூடுதல் நிதிச் சுமையாக ரூ.1,060.50 கோடி தேவைப்படும். வட்டி தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2016-17ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.15,000 கோடி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பின்னணி:
அ. வட்டி தள்ளுபடி திட்டத்தை கடந்த 2006-07 முதலே இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை குறுகிய கால பயிர்க்கடன்களை ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் பொதுத்துறை வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வழங்கி வருகின்றன. ரூ.3 லட்சம் வரையான குறுகிய கால கடனை உரிய காலத்துக்குள் திருப்பிச் செலுத்தினால், விவசாயிகளுக்கு 3% வட்டிச் சலுகை அளிக்கப்படுகிறது. இதன்மூலம், இந்த பயிர்க்கடன்களுக்கு விவசாயிகள் 4% மட்டுமே வட்டி செலுத்தினால் போதும் என்ற நிலை ஏற்படுகிறது.
ஆ. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, விவசாயிகள் தாங்கள் விளைவித்த காரீப் பருவ விளைபொருட்களுக்கு அங்காடிகளில் பெறப்படும் காசோலைகளை பணமாக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், ராபி பருவ சாகுபடிகளை மேற்கொள்வதற்கு போதிய பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. குறுகிய கால பயிர்க்கடன்களுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு வட்டித் தள்ளுபடி அளிக்கப்பட்டது. அதாவது, கூட்டுறவு வங்கிகளில் கடந்த 1.04.2016 மற்றும் 30.9.2016-க்கு இடைப்பட்ட காலத்தில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 2016-ம் ஆண்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட்டித் தள்ளுபடி அளிக்கப்பட்டது.
இ. ரூ.1,060.50 கோடி அளவுக்கு கூடுதல் நிதி ஆதாரத்துக்கு வழிவகை செய்யப்படுவதன் மூலம்,
1. விவசாயிகளுக்கு 1.4.2016 முதல் 30.9.2016 வரை கூட்டுறவு வங்கிகள் வழங்கிய பயிர்க்கடனுக்கு இரண்டு மாதங்களுக்கு (நவம்பர், டிசம்பர் 2016) வட்டி தள்ளுபடி அளிப்பதால் ஏற்படும் செலவு எதிர்கொள்ளப்படும்.
2. நடப்பு நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்குவதற்காக குறுகிய கால கடனாக ரூ.20,000 கோடியை நபார்டு பெறுவதற்கு வழங்கப்படும் வட்டிச் சலுகை மற்றும் நிர்வாக செலவு எதிர்கொள்ளப்படும்.