பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் விமான போக்குவரத்தின் மூலமான வருமானத்தின்மீது இரட்டை வரியைத் தவிர்க்க, இந்தியாவிற்கும் மாலத்தீவுகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதி அளித்தது. சர்வதேச பயணங்களுக்கான விமானங்களை இயக்கி வரும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் அடையும் வருமானத்தை மாலத்தீவுகள் நாட்டின் வரியிலிருந்து, அதேபோல் அந்த நாட்டின் விமான நிறுவனத்திற்கு இந்தியாவின் வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் இரட்டை வரியிலிருந்து விலக்கு அளிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, சர்வதேச பயணங்களுக்காக விமானங்களை இயக்கி வரும் நிறுவனத்தின் லாபத்திற்கு ஒரு நாட்டில் மட்டுமே வரி விதிக்கப்படும். இதன்படி அந்த நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததோ அந்த நாட்டிற்கு மட்டுமே வரிவிதிப்பதற்கான உரிமை இருக்கும். இந்தியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானச் சேவை நிறுவனங்களுக்கு வரி குறித்த ஒரு நிச்சயத் தன்மையை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது.
இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவது அல்லது விளக்கமளிப்பது ஆகியவற்றில் ஏற்படும் சந்தேகங்கள் அல்லது இடையூறுகள் ஏதும் இருந்தால் அதைத் தீர்ப்பதற்கு பரஸ்பர ஒப்பந்த வழிமுறைக்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.