Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றினார்


ஜகார்த்தாவில் இந்தியச் சமூகத்தினர் தமக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் மற்றும் அவர்களது இந்தோனேசிய நண்பர்கள், பிரதமருக்கு உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்தோனேசிய அதிபர் மாண்புமிகு திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

 

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்திய சமூகத்தினர் அளித்த உற்சாகமான வரவேற்பிற்கு நன்றி தெரிவித்தார். அதிபர் திரு  பிரபோவோவின் வருகைக்காக அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், அவரை ஒரு சிறந்த தலைவர் என்றும், இந்தியாவின் உண்மையான நண்பர் என்றும் குறிப்பிட்டார். இந்தோனேசியாவின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்திய வம்சாவளியினர் ஆற்றிய பங்களிப்பையும், இரு நாடுகளுக்கும் இடையே நட்பின் வாழும் பாலமாக அவர்கள் செயல்படுவதையும் அவர் பாராட்டினார். பரஸ்பர நம்பிக்கை, பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் கடல்சார் தொடர்புகளின் அடிப்படையில் இந்தோனேசியாவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பண்டைய நாகரிகத் தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பாலி யாத்திரை, வெசாக் புனிதப் பயணம் மற்றும் நாளந்தா பல்கலைக்கழகம் வாயிலான நவீன காலத் தொடர்புகள், மக்களுக்கிடையிலான பன்முகத்தன்மை கொண்ட மற்றும் துடிப்பான உறவுகளைத் தொடர்ந்து வளர்த்து வருவதாகக் குறிப்பிட்டார்.

 

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதில் அடுத்தத்  தலைமுறை உள்கட்டமைப்பு மேம்பாடு, புத்தொழில் நிறுவனப் புரட்சி மற்றும் 25 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து மீட்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் கணிசமான விரிவாக்கம் ஆகியவை அடங்கும். கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா திகழ்வதையும், இதன் மூலம் உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக நாடு மாறியிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை, 140 கோடி மக்களின் விருப்பங்களாகவே பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.   

 

வளர்ச்சியடைந்த இந்தியா 2047 மற்றும் இந்தோனேசியா எமாஸ் 2045 ஆகியவற்றின் பகிரப்பட்ட லட்சியங்களை நனவாக்குவதற்கு சமூகம் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  மேலும், இந்தோனேசியாவிலும் ஆசியான் பிராந்தியத்திலும் முன்னேற்றத்தையும் செழிப்பையும் கொண்டு வருவதற்கான ஒரு ஆற்றல் சக்தியாகச் செயல்பட இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

இந்தியாவும் இந்தோனேசியாவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, நெருக்கமான நாகரிக, கலாச்சார மற்றும் மக்கள் இடையிலான உறவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இன்று, இந்தோனேசியாவில் சுமார் 1,50,000 இந்திய வம்சாவளியினரும், ஏறக்குறைய 15,000 வெளிநாடு வாழ் இந்தியர்களும் வசிக்கின்றனர். அங்குள்ள இந்தியச் சமூகம் இந்தோனேசியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்புகளைத் தொடர்ந்து அளித்து வருவதுடன், இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான ஒரு முக்கிய இணைப்புப் பாலமாகவும் திகழ்கிறது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282273&reg=3&lang=1

****

TV/BR/SH