Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய நிறைவுரையின் தமிழாக்கம்.

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய நிறைவுரையின் தமிழாக்கம்.


நம் தோழர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் ஒரே குரலில், ஒத்த கருத்தை ஒலிப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய நிலையில் ஜம்மு காஷ்மீரைப் பற்றி பேசும்போது அம்மாநிலத்தின் ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என நான்கு பகுதிகளையும் பற்றி பேசியாக வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் பிரச்சினை குறித்து இங்கு தங்கள் அக்கறையை வெளிப்படுத்திய அனைத்து கட்சி தலைவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த அறுபது ஆண்டுகளாக நாம் கடைபிடித்துவரும் உயர்ந்த ஜனநாயக மரபுகள்தான் நமது ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. சில விஷயங்களில் நமக்குள் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் ஒரு பிரச்சினை எனும்போது நாம் எல்லோரும் ஒற்றுமையாக இணைந்தே நிற்கிறோம்.

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்து வரும் விஷயங்களை கேள்விப்பட்டு எல்லா இந்தியர்களும் எப்படி மனதளவில் காயமுற்றிருக்கிறார்களோ, அதைப் போலவே நானும் காயமுற்றிருக்கிறேன். குழந்தைகள் படிக்க முடியாமல் தவிப்பது, விளைந்த ஆப்பிள்கள் பழமண்டிகளை சேர முடியாமல் கிடப்பது, அன்றாட வியாபாரிகளுக்கு தொழில் நடக்காததால் அவர்கள் தினசரி வருமானம் இல்லாமல் திணறுவது, அரசு அலுவலர்கள் மக்கள் சேவை ஆற்ற முடியாமல் போனது என அங்கே நடப்பவை எல்லாமும் மிகுந்த வேதனையளிக்கும் விஷயங்களாக உள்ளன. இதில் ஏழை மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நாம் அரசியல் சேவகர்களாக இருப்பதே மக்களுக்காகத்தான். நமக்கு பலமாகவும், சக்தியாகவும் திகழ்வது அவர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் நம் பொதுவாழ்க்கையின் முக்கிய அம்சமே மக்கள் சக்திதான். காஷ்மீரில் காயம்படுவதும், கொல்லப்படுவதும் பொதுமக்களாக இருந்தாலும் சரி, பாதுகாப்புப்படை வீரராக இருந்தாலும் சரி நம் எல்லோருக்குமே வலிக்கிறது. அவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ வசதி அளிக்க உறுதி பூண்டுள்ளோம். காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதன் மூலம், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வகையில், வேலைக்கு செல்லும் வகையில், இரவு நிம்மதியாக உறங்கும் வகையில் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.

ஜம்மு காஷ்மீரில் நம் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிரந்தரமான அமைதித் தீர்வை ஏற்படுத்த உறுதி எடுத்துள்ளோம். திறந்த மனம் கொண்ட நமது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனின் நலனின் மீதும் நமக்கு அக்கறை உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண அடல் பிகாரி வாஜ்பேயி காட்டிய வழியில் பயணிக்கிறோம்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் கிரீடம் என அழைக்கப்படுகிறது. இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், இஸ்லாமியர்கள் என பல மதத்தை சேர்ந்தவர்களும் இங்கு ஒற்றுமையாக வாழ்கிறார்கள். ஒருவகையில் காஷ்மீர் நம் நாட்டில் நிலவும் சமூக சமநிலைக்கு ஒரு பாரம்பரிய உதாரணச் சின்னமாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை எல்லாம் மீறி நாம் இந்தியர் என்ற புள்ளியில் ஒருங்கிணைவோம் என்ற நம் முன்னோர்களின் நம்பிக்கைக்கு சின்னமாகவும் காஷ்மீர் விளங்குகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலப் பிரச்சினை நம் எல்லை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் தேசியமும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. நம் பாதுகாப்புப் படை வீரர்கள் குறிவைத்து தாக்கப்படுவதையும், அதனால் அவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாவதையும் நம்மால் மறுக்க முடியாது. ஆனால் இதையும் மீறி பாதுகாப்புப்படை உறுதியாக இருக்கிறது. புள்ளிவிவரங்களின்படி பாதுகாப்பு அதிகாரிகளே அதிக அளவில் காயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

காஷ்மீரில் இருக்கும் சிலரின் தவறான பிரச்சாரத்திற்கு மாறாக பிரச்சினையையும், குழப்பத்தையும் விளைவிப்பவர்களின் எண்ணிக்கையும், இளைஞர்களையும் தூண்டிவிடுகின்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதனால்தான் பிரிவினைவாதிகளை புறந்தள்ளிவிட்டு ஒவ்வொருமுறை தேர்தல் வரும்போதும் காஷ்மீர் மக்கள் இந்திய ஜனநாயகத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை நிலைநாட்டுகிறார்கள். சமீபத்திய பிரச்சினைகள் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புகூட முதலமைச்சர் மெஹ்பூபா அவர்களின் தொகுதியில் நிறைய வாக்குகள் பதிவாகியிருக்கின்றது. இதையெல்லாம் கவனித்துப் பார்த்தால் நடந்துகொண்டிருப்பது மக்களின் புரட்சி என்ற பரப்புரை முற்றிலும் பொய் என்பது புரியும்.

சில இடங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இது நிர்வாக ரீதியிலான வழி. இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தால் அமைதியை விரும்பும் மக்களின் வாழ்வும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். பிரிவினைவாதிகள் அறிவித்த தொடர் வேலை நிறுத்தங்கள் ஏற்படுத்திய எந்த பாதிப்பையும் சராசரி மனிதனுக்கு இந்த கட்டுப்பாடுகள் ஏற்படுத்தவில்லை.

இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையே கூட அமர்நாத் யாத்திரை சுமூகமாக நடந்தது. மேலும் மாநில அரசு லடாக் பகுதியில் சூரியசக்தி தொடர்பான முன்னெடுப்புகளை செய்துகொண்டிருக்கிறது. NEET, CET, UPSC உள்ளிட்ட தேர்வுகளும் அட்டவணைப்படி நடந்து முடிந்திருக்கிறது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டது. சுற்றுலா சூடுபிடிக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு ஆப்பிள் அறுவடை காலமும் நெருங்குகிறது. ஆப்பிள் அறுவடை என்பது ஒரு சராசரி காஷ்மீரிக்கு அவர் வாழ்க்கையில் முக்கிய அம்சமாகும். பிரிவினைவாதிகள் இந்த தருணத்தை பயன்படுத்தி காஷ்மீரின் அமைதியை குலைக்கவும், அமைதியை விரும்பும் மக்களின் வாழ்க்கையை பிரச்சினைக்குள்ளாக்கவும் முயற்சிக்கிறார்கள்.

காஷ்மீரில் நிலவும் பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணம் நம் அண்டை நாடு ஊக்குவிக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதம். பயங்கரவாதத்தினால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் ஆரம்பித்த 1989-1990களில் இருந்து இப்போதுவரை நம் பாதுகாப்பு படையினரால்,

• 30000க்கும் அதிகமான ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

• 5000க்கும் அதிகமான கிரனேட் லான்ச்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

• கிட்டத்தட்ட 90 LMGக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

•12000க்கும் அதிகமான கைதுப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

• 3 பீரங்கி தாக்கும் துப்பாக்கிகளும், 4 விமானம் தாக்கும் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

• 350க்கும் மேலான ஏவுகணை லான்ச்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

• RDX உள்ளிட்ட 63,000 கிலோ வெடிமருந்தும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கிரனேடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

•இந்த காலவெளியில் 5000 அந்நியநாட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஐந்து பட்டாலியன்களுக்கு சமம்.

அதே நேரத்தில், ஏராளமான எண்ணிக்கையில் அந்நிய நாட்டு பயங்கரவாதிகள் அழிவையும், மரணத்தையும் ஏற்படுத்துவதற்காக நம் நாட்டில் ஊடுருவியிருக்கிறார்கள். பாகிஸ்தான் எவ்வளவுதான் பசப்பினாலும், எத்தனை ஆயிரம் பொய்யுரைத்தாலும் உலகம் அதன் கூற்றை நம்பத் தயாராக இல்லை.

தன் நாட்டு மக்கள் மீதே போர்விமானங்களைக் கொண்டு குண்டுமழைபொழிந்த நாடுதான் பாகிஸ்தான் என்பதை அது மறந்துவிட்டது போலும். பலுசிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பாகிஸ்தான் போட்ட ஆட்டத்திற்கு உலகத்திற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.

மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு நாம் உறுதி பூண்டிருக்கிறோம். ஏனைய ஜனநாயக நாடுகளின் சட்டங்களோடு ஒப்பிடும்போது பயங்கரவாதத்திற்கு எதிரான நம் நாட்டின் சட்டங்கள் மிகுந்த மனிதாபிமானம் வாய்ந்தவை. இருப்பினும் நம் அரசும், நம் பாதுகாப்பு படையும் இத்தகைய மோசமான சம்பவங்களை முடிந்தவரை தடுத்தும், எதிர்கொண்டும் வருகிறது.

இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக தன் முழு பலத்தோடும், உறுதியோடும் போராடும். அது நம் தேசிய கடமையும் கூட. இந்தியா சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்பட்டு நடந்துகொள்வதை நம் எதிரிகள் தங்கள் பலமாக கருதினால் அது அவர்கள் போடும் தப்புக் கணக்கு. பயங்கரவாதத்தை முற்றிலும் அழிப்பதை இந்தியா தன் கடமையாக கொண்டுள்ளது. நமக்கு பாதை, இலக்கு என இரண்டுமே முக்கியம். இந்த இரண்டு விஷயங்களிலுமே இந்தியா பலமிக்கதாக திகழ்கிறது.

நூற்றாண்டுகாலம் பழமையான தங்கள் மூதாதையர் வீடுகளில் இருந்து காஷ்மீரி பண்டிட்கள் விரட்டப்பட்டதை யாரும் மறக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான இந்த குற்றச்செயல் பாகிஸ்தானால் ஆயுதமும், பயிற்சியும் கொடுக்கப்படும் பயங்கரவாதிகளாலும், அவர்களின் ஆதரவாளர்களாலும் நிகழ்த்தப்பட்டது. ‘காஷ்மீரியாத்’ எனும் கொள்கையின் மீது நம்பிக்கை கொண்ட யாரும் இந்த வேலையை செய்யமாட்டார்கள்.

காஷ்மீர் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக 80000கோடி ரூபாயை ஒதுக்க மாநில அரசின் ஆலோசனையோடு முடிவெடுக்கப்பட்டுள்ளது. சாலை, மின்சார வசதிகளுக்கான திட்டங்கள் மட்டுமல்லாது, ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு பகுதி, ஒவ்வொரு சமூகமும் வளர்ச்சியுரும் வகையில் இத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தரமான கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, நவீன மருத்துவ வசதி, சுற்றுலாத்துறை வளர்ச்சி, பழ விவசாயத்தை மேம்படுத்துவதற்கென்ற தனி ஏற்பாடுகள் என பலவகையான திட்டங்கள் அடங்கியது.

உடனடி வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு 10000 புதிய சிறப்பு காவல்துறை அதிகாரிகள் (SPOs), 1200 பாரா மிலிட்டரி, 5 படைப்பிரிவுகளில் 4000 பேர் தேர்வுசெய்யப்படுவார்கள். இதற்கும் மேல் உதான் மற்றும் HIMAYAT திட்டங்களின் கீழ் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்படும். இதன்மூலம் வேலையில்லாத ஆட்கள் தங்கள் திறமைக்கேற்ற வேலைகளை பெறுவார்கள்.

மெஹ்பூபா முஃப்தி அவர்களின் தலைமையில் செயல்படும் PDP-BJP அரசு மாநில அரசின் பிரச்சினைகளை களைய எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கடந்த மாதம் நிலைமை மிக மோசமாக இருந்தாலும் மாநில அரசு அந்த சூழ்நிலையை மிக கவனமாக கையாண்டது. ஒட்டுமொத்த இந்தியாவும் மெஹ்பூபாவின் நடவடிக்கைகளுக்கு துணையாக நிற்கிறது.

பொதுமக்களின் குறைகளைக் கேட்கவும்,மாநிலத்தில் மீண்டும் அமைதி நிலவச் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. வன்முறை, பயங்கரவாதம் அற்றும் தேசவிரோத செயல்களுக்கு எதிராக அரசுகளின் நடவடிக்கை கடுமையாக இருக்கும். அதே நேரத்தில் மக்களின் நியாயமான புகார்களுக்கு செவிமடுக்கப்படும்.

இந்த நேரத்தில் அனைத்து கட்சியினரும், இந்தியர்களும் பயங்கரவாதத்திற்கும், அழிவு சக்திகளுக்கும் எதிரான போரில் ஓரணியில் நிற்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். உலகம் முழுதும் பயங்கரவாதம் இறக்கை விரித்து பறக்கும் சூழலில், நம் அண்டை நாட்டினாலேயே பயங்கரவாதம் தூண்டப்படும் சூழலில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நாம் ஒற்றுமையாகத் தான் எதிர்கொள்ள வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தில் தங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசுகளுக்கு உள்ளது. அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து காஷ்மீரில் அமைதியையும், வளத்தையும் நிலைநாட்ட தங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும். மாநில அரசின் நடவடிக்கைகளாலும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பினாலும் கூடிய விரைவில் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பச் செய்ய முடியும்.

காஷ்மீரை பொறுத்தவரை நாம் மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கைகளையும், கொள்கைகளையும் மீண்டும் தெரிவிக்கிறேன்.

1) சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே அரசின் கடமை. பயங்கரவாதத்தை கையாள்வதில் சமரசம் என்பதே கிடையாது.

2) இன்றைய காலச்சூழலுக்கு ஏற்பவும், ஜனநாயக பாரம்பரியங்களுக்கு ஏற்பவும் குடிமைச்சமூகத்தில் குடிமக்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவோம்.

3)அரசியல் நகர்வுகளை ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ப முன்னெடுப்போம்.

4) மாநில அரசின் பொருளாதார செயல்பாடுகளோடு காஷ்மீர் இளைஞர்களை தொடர்புபடுத்தும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்.

5) பிற மாநிலங்களில் வாழும் ஜம்மு காஷ்மீர் மக்கள், ஜம்மு காஷ்மீரில் வாழும் தங்கள் உறவினர்களோடு, அவர்கள் இஸ்லாமியர், இந்துக்கள், சீக்கியர், புத்தமதத்தினர் என எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு மாநிலத்தில் நடந்து வரும் மேம்பாடுகளைப் பற்றியும், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியைப் பற்றியும் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்.

6) உலகின் பிற நாடுகளில் வாழும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த மக்களிடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் மோசமான நிலைமை பற்றிய தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் பெற்று, அந்த விவரங்களை உலகத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.

உங்கள் முக்கியமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியதற்காக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசுக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி. நாம் அனைவருமே தேசாபிமானத்திற்கு கட்டுப்பட்டிருக்கிறோம். இந்தியாவின் எல்லை விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து தரப்பினரின் குறைகளையும் கேட்க நாம் தயாராகவே இருக்கிறோம்.

நன்றி.