பி.எம்.இந்தியா
தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளின் குடியிருப்புதாரர்களுக்கு உடைமை அல்லது அடமானம் / உரிமை மாற்றம் வழங்குவதற்கு / அங்கீகரிப்பதற்கான விதிமுறைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முடிவால், 175 சதுர கிலோமீட்டர் பரப்பில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள 40 லட்சம் குடியிருப்புதாரர்கள் பயனடைவார்கள். இதனால், இந்தப் பகுதிகளில் மேம்பாடு / மறுமேம்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதன் விளைவாகத் தூய்மையான, பாதுகாப்பான, ஆரோக்கியமான வாழ்க்கைச்சூழல் ஏற்படும்.
குறைந்த வருவாய்ப் பிரிவினராக அடையாளம் காணப்பட்டுள்ள 1,797 காலனிகளுக்கு மட்டுமே இந்த முடிவு பொருந்தும். இவைதவிர, தில்லி வளர்ச்சி ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள 69 வசதியுள்ளோரின் காலனிகளுக்கு இந்த முடிவு பொருந்தாது.
அந்தக் காலனிகளை சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கான கட்டணத்தைப் பொருத்து, அரசு நிலத்தில் உள்ள காலனிகளில் 100 சதுரமீட்டருக்குக் குறைவாக இருந்தால், 0.5% கட்டணமும், அதற்குமேல் 250 சதுரமீட்டர் வரை 1% கட்டணமும், 250 சதுரமீட்டருக்கு மேல் இருந்தால், 2.5% கட்டணமும் வசூலிக்கப்படும்.
தனியார் நிலத்தில் உள்ள காலனிகளுக்கு அரசு நிலத்தில் உள்ளவற்றின் கட்டணத்தில் பாதி வசூலிக்கப்படும்.