Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தி்லிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தி்லிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவரின் இதயத் துடிப்பும், இல்லமும் மூவர்ணக் கொடியின் உணர்வாலும் புதிய தீர்மானங்களாலும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமீபத்திய கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்திய பிரதமர், இந்த இக்கட்டான நேரத்தில் தேசத்தின் அசைக்க முடியாத ஆதரவு அவர்களுக்கு உள்ளது என்று உறுதியளித்தார்.

ஒரு நாடு தனது சொந்த லட்சியங்களையும் வலுவான ஆற்றல்களையும் சார்ந்திருக்கும்போதுதான் உண்மையான சாதனை அடையப்படுகிறது என்று அவர் கூறினார். எந்தவொரு நாடும் தனது கனவுகள், தீர்மானங்களின் தூய வலிமையினால் முன்னேறிச் செல்லும்போதுதான் மகத்தானதாகி, தனது இலக்குகளை அடைகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

மகத்தான தேசிய தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் அளவற்ற வேகத்தையும் திறமையையும் உலகம் அங்கீகரிக்கும் வகையில், 2047-ம் ஆண்டுக்குள் நாட்டை முழுமையான வளர்ச்சி பெற்ற தேசமாக மாற்றுவதற்கான உறுதியான தீர்மானத்தை அறிவித்தார். 140 கோடி நாட்டு மக்களின் கடின உழைப்பால், சுதந்திரத்தின் 100-வது ஆண்டுக்குள் நாம் நிச்சயமாக வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்று திரு நரேந்திர மோடி உறுதியாக கூறினார்.

அனைத்துத் தரப்பு மக்களின் கூட்டு அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர், கடந்த 12 ஆண்டுகளில் மனித மேம்பாடு, பொருளாதார மாற்றம் குறித்த விரிவான விவரங்களை எடுத்துரைத்தார். அதில், 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும், ‘பலவீனமான ஐந்து’ நாடுகளில் இருந்து வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

வலுவான தற்சார்பு, தேசியப் பெருமிதம் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், வெளிநாட்டு இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதை மாற்றி, அதற்குப் பதிலாக வலிமையான உள்நாட்டுத் திறன்களை வளர்க்கும் முயற்சிகளை எடுத்துரைத்தார். நாம் நமது சொந்தத் திறன்களை முறையாக அதிகரித்து, நமது நலன்களை நாமே உறுதியாகப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 

அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளுடன் தொழில்நுட்ப முன்னேற்றத்தை இணைத்துப் பேசிய பிரதமர், சாந்தி சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க எரிசக்தி சீர்திருத்தங்களை எடுத்துரைத்தார்.

ரயில்வே உள்கட்டமைப்பில் நிலவிய வரலாற்று ரீதியான தேக்கநிலையை நவீன செயல்திறனுடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், முந்தைய கொள்கைகள் 90 ஆண்டுகளில் 30 சதவீத மின்மயமாக்கலை மட்டுமே அளித்தன என்றும், ஆனால் தற்போதைய அரசு வெறும் பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட முழு ரயில்வே துறையிலும் மின்மயமாக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

2047-ம் ஆண்டுக்கான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய பயணத்தையும், கொவிட்-19 பெருந்தொற்று, உக்ரைன், மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட புவிசார் அரசியல் மோதல்கள் போன்ற கடுமையான உலகளாவிய நெருக்கடிகளைக் கடந்து வந்ததையும் நினைவுகூர்ந்த பிரதமர், இந்தியாவின் மீள்திறனைப் பாராட்டினார். மேலும், வதந்திகளைப் பரப்புபவர்களைக் கடுமையாக விமர்சித்த அவர், முன்கூட்டிய திட்டமிடலும் வலுவான தயாரிப்புகளுமே முழுமையான உள்நாட்டு ஸ்திரத்தன்மையை உறுதி செய்தன என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

நிலையான அரசியல் சூழலும், துடிப்பான ஜனநாயகமுமே நாட்டின் உயர்ந்து வரும் சர்வதேச மதிப்பிற்குக் காரணம் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு ஸ்திரத்தன்மையானது, 2014-க்குப் பிறகு சுமார் 40 நாடுகளுடனான  தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை எளிதாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

மாபெரும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளைத் தீவிரமாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு உள்நாட்டுத் தொழில் துறையினரை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

சப்த சிந்துவின் பழைய நாகரிக வலிமையை நினைவு கூர்ந்த பிரதமர் ஒரு சக்திவாய்ந்த புதிய வியூகக் கட்டமைப்பை அறிவித்தார். மேலும், மாற்றத்தை உருவாக்கும் சப்ததாரா அல்லது சப்த சக்தி எனப்படும் ஏழு வலமையான தூண்கள் அடங்கிய திட்டத்தை வெளியிட்டு, நாட்டின் அடுத்தகட்ட முன்னேற்றத்துக்கான தொலைநோக்குப் பார்வையை அறிவித்தார்.

‘உற்பத்தித் திறனை’ மிக முக்கியமான முதல் நீரோட்டமாகக் கூறிய பிரதமர், உற்பத்தித் துறையைத் தீவிரமாக விரிவுபடுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

‘வேளாண்மை, உணவு பதனப்படுத்துதல்’ துறையை  இரண்டாவது முக்கியத் துறையாகக் குறிப்பிட்ட பிரதமர், நாடு தழுவிய அளவில் ரசாயனமற்ற விவசாயத்திற்கு மாற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

‘தொழில்நுட்பம், புத்தாக்கம்’ என்பதை இன்றியமையாத மூன்றாவது முக்கிய தூணாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியா அதிநவீனத் துறைகளில் புத்தாக்கத்தின் உச்ச மையமாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விரைவு சக்தியை இன்றியமையாத நான்காவது நீரோட்டமாக விவரித்த பிரதமர், அதிவேக ரயில், நவீன நெடுஞ்சாலைகள், உள்நாட்டு நீர்வழிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தடையற்ற பல்முனைப் போக்குவரத்துச் சேவையை உருவாக்குவதற்கும், துறைமுகங்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கு ஒரு தீவிரமான உள்கட்டமைப்பு சீரமைப்பை அறிவித்தார்.

‘பாதுகாப்பு சக்தியை’ முக்கியமான ஐந்தாவது தூணாக வகைப்படுத்திய பிரதமர், முழுமையான உத்திசார் தற்சார்பை ஒரு சமரசமற்ற தேசிய முன்னுரிமையாக அறிவித்தார்.

‘பசுமை, நீலப் பொருளாதாரத்தை’ நிலையான ஆறாவது தூணாக பிரதமர் கூறினார்.

இந்தியாவின் ‘மென் சக்தியை’ இறுதி ஏழாவது தூணாக அடையாளம் காட்டிய பிரதமர், யோகாவை உலகை ஒன்றிணைக்கும் ஆற்றலாகப் போற்றினார்.

தேசிய மாற்றத்தின் மையமாக இளைஞர்கள் இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த விரைவான முன்னேற்றத்தின் முதன்மை சிற்பிகளும் இறுதிப் பயனாளிகளும் இளம் இந்தியர்களே என்றார்.

மக்கள் பிரதிநிதிகளாகப் பணியாற்றும் ஆற்றல்மிக்க பெண்கள் வழங்கும் உயர் திறன்மிக்க தலைமைத்துவத்தைப் பிரதமர் பாராட்டினார்.  நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை விரைவாகச் செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள் டிஜிட்டல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் தீவிரமாகவும் முழுமையாகவும் பங்கேற்று துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

ஐந்து தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்தி தமது சுதந்திர தின உரையை நிறைவு செய்த பிரதமர், நாட்டின் ஒவ்வொரு நபரும் சுயநலத்தை விட நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு கூட்டாக உழைக்கவும் வேண்டும் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299848&reg=3&lang=1

***

SS/PLM/RJ