Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹேக்கில் உள்ள நெதர்லாந்துப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நெதர்லாந்து பிரதமர் திரு. ராப் ஜெட்டனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாநெதர்லாந்து உறவை வலுப்படுத்துவது குறித்து இரு பிரதமர்களும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட விழுமியங்கள், நம்பிக்கை, அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பு, வளர்ந்து வரும் ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், இருதரப்பு உறவை உத்திசார் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு உயர்த்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, வளர்ந்து வரும் முக்கிய தொழில்நுட்பங்கள், கடல்சார் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, ஒரு லட்சியமிக்க செயல்திட்டத்தை செயல்படுத்துவதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். விரிவடைந்து வரும் வணிகம், முதலீடு, தொழில்நுட்பம், புத்தாக்கங்களைக் கருத்தில் கொண்ட தலைவர்கள், இந்தியாவின் வளர்ச்சியால் உருவாகும் வாய்ப்புகள் நெதர்லாந்து நிறுவனங்களுக்கு நம்பிக்கைக்குரிய வணிக வாய்ப்புகளை வழங்குகின்றன என்று குறிப்பிட்டனர்.

தொடர்ச்சியான உயர் நிலைப் பரிமாற்றங்களால் அதிகரித்துள்ள இருதரப்பு ஒத்துழைப்பை இரு தலைவர்களும் திருப்தியுடன் குறிப்பிட்டனர். நீர், விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பெரிய அளவிலான நீர் திட்டங்களில் ஒத்துழைப்பதன் மூலம் நீருக்கான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். சுகாதார ஆராய்ச்சி, டிஜிட்டல் சுகாதாரம், விவசாயம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் விரிவடைந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பையும் இரு பிரதமர்களும் வரவேற்றனர்.

பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டு உறவை விரிவுபடுத்துவதற்கு தலைவர்கள் முக்கியத்துவம் அளித்தனர். இந்தியாஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்த்த்தை விரைவில் செயல்படுத்த அவர்கள் அழைப்பு விடுத்தனர். முக்கிய கனிமங்களில் இந்தியாநெதர்லாந்து ஒத்துழைப்பு, மீட்சித் திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளுக்கு ஆதரவளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அதிக ஒத்துழைப்புக்கு இரு தலைவர்களும் அழைப்பு விடுத்தனர். இரு நாடுகளின் இளைஞர்களை உள்ளடக்கிய ஹேக்கத்தான்களை நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்த அவர்கள், நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக பசுமை ஹைட்ரஜன், உயிரி எரிபொருள்கள், பசுமை கப்பல் போக்குவரத்து, கடல்சார் சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். போக்குவரத்து ஒத்துழைப்பு, உயர்கல்வியில் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகளுக்கு இரு பிரதமர்களும் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக, நாளந்தா பல்கலைக்கழகத்திற்கும் கிரோனிங்கன் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை அவர்கள் குறிப்பிட்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கலாச்சார உறவுகளை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, 11-ம் நூற்றாண்டின் சோழர் கால செப்பேடுகளை இந்தியா திரும்பப் பெறுவதற்கு வசதி செய்து கொடுத்ததற்காக நெதர்லாந்து அரசுக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக, லைடன் பல்கலைக்கழக நூலகத்திற்கும் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் இரு தலைவர்களும் வரவேற்றனர். இந்த ஒத்துழைப்பு, இந்த வரலாற்றுப் பொருள்கள் குறித்த அறிவை மேம்படுத்த உதவும்.

அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி, வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, கலாச்சாரம் ஆகிய துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்தப் பயணத்தின் போது ஒரு கூட்டு அறிக்கை, உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் ஜெட்டனை இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவும் நெதர்லாந்தும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், பல்வேறு துறைகளில் பன்முக ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வலுவான இருதரப்பு உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணம் இந்த ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

***

(Release ID: 2261881)

TV/PLM/RJ