Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நயா ராய்ப்பூர் வருகை

பிரதமர் நயா ராய்ப்பூர் வருகை


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டும் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார். சத்திஸ்கர் மாநிலத்தின் நயா ராய்ப்பூர் நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் தொகுப்பு மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதோடு, சத்திஸ்கர் மாநில அரசின் கண்டுபிடிப்பு மற்றும் நிறுவனத் திறன் வளர்ச்சிக்கான கொள்கை அறிக்கையையும் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாதவர்களுக்குப் பெரிதும் பலனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் வெறும் கட்டமைப்பை உருவாக்குவது மட்டுமல்ல; ஏழைகள் தங்களது கனவை நிறைவேற்றிக் கொள்ள உதவும் வழியும் ஆகும் என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டமானது பெருமளவில் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்கக் கூடியது என்று கூறிய அவர், அனைத்து மாநிலங்களிலும் உள்ள பொது அமைப்புகள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி என்ற இலக்கை நிறைவேற்றுவதற்கு இது முதல்படியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்டுபிடிப்பு மற்றும் நிறுவனத்திறன் குறித்த கொள்கை அறிக்கையை உருவாக்கியதற்காக பிரதமர், சத்திஸ்கர் மாநில அரசை பாராட்டினார். கடந்த 50 ஆண்டுகளில் கண்டுபிடிப்பிற்கு முக்கியத்துவம் அளித்த நாடுகளே பெரிதும் பயனடைந்ததோடு, பொருளாதார வளத்தையும் பெற்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இத்தருணத்தில், திறன் வளர்ச்சி மற்றும் முத்ரா திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் மத்திய அரசு எடுத்து வரும் முன்முயற்சிகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.

முன்னதாக, சத்ய சாய்பாபாவின் திருவுருவச் சிலையை பிரதமர் திறந்து வைத்ததோடு, மனித வளர்ச்சிக்கான மையமான ஸ்ரீசத்ய சாய் சவுபாக்யம் என்ற மையத்தினை துவக்குவதற்கான அடிக்கல் நாட்டி, குழந்தைகள் நலனைப் பேணும் மையமான ஸ்ரீசத்ய சாய் சஞ்சீவனி மையத்தை மனித குல சேவைக்காக அர்ப்பணித்தார்.

*******