பி.எம்.இந்தியா
பெர்லினில் இன்று நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 4-வது கலந்தாய்வுக் கூட்டத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடியும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லும் கூட்டாக தலைமைவகித்தனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஐரோப்பா மற்றும் உலகத்துக்காக பிரதமர் மெர்க்கல் வைத்துள்ள தொலைநோக்கு திட்டத்தை வரவேற்றார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவில், நம்மால் காணத்தக்க வகையிலான பலன்கள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கான முதலீடு உயர்ந்துகொண்டிருப்பதாகவும், குறிப்பாக, இந்தியாவில் தயாரிப்போம் முயற்சிகளுக்கு வெளிநாட்டு முதலீடு கிடைத்துவருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். திறன் இந்தியா திட்டத்துக்கு ஜெர்மனியுடனான நட்புறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் தெரிவித்தார். சர்வதேச மதிப்பீடாக ஜெர்மனியின் அளவுகோல் இருப்பதால், இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார். விளையாட்டுத் துறையிலும், குறிப்பாக கால்பந்து விளையாட்டில் ஒத்துழைப்பு ஏற்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
விவாதம் நடைபெற்ற வானிலை பாதுகாப்பு, பொலிவுறு நகரங்கள் ஆகிய தலைப்புகள் குறித்து பிரதமர் பேசினார். அப்போது அவர், ஜெர்மனியின் புத்தாக்கமும், இந்திய இளைஞர்களும் இணைவதன் மூலம், புதிதாக தொடங்கும் திட்டங்களுக்கு மிகப்பெரும் ஊக்குவிப்பு கிடைக்கும் என்றார்.
நாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட மற்றும் ஒன்றையொன்று சார்ந்துள்ள இந்த உலகில், ஜனநாயக அடிப்படையில், சர்வதேச நிலைத்தன்மை ஏற்பட வேண்டியது தற்போதைய அவசியத் தேவை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, இந்தியாவும், ஜெர்மனியும் ஒன்றுக்கு ஒன்று உருவாக்கப்பட்டது என்று தெரிவித்தார். ஜெர்மனியின் திறமைக்கும், இந்தியாவின் தேவைக்கும் மிகப்பெரும் ஒற்றுமை இருப்பதாக பிரதமர் விளக்கினார். பொறியியல், கட்டமைப்பு, திறன் மேம்பாடு போன்ற துறைகளில் சிறந்துவிளங்க இந்தியா ஆர்வமாக இருப்பதை பிரதமர் குறிப்பிட்டார். புத்தாக்கம் மற்றும் ஜனநாயக மதிப்புகள், மனித சமுதாயத்துக்காக படைக்கப்பட்டவை என்று விவரித்த பிரதமர், இந்த மதிப்புகளை இந்தியாவும், ஜெர்மனியும் பகிர்ந்துகொள்வதாக தெரிவித்தார்.
வானிலை மாற்றம் குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பிரதமர், இயற்கையைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அளப்பரிய பணிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம், 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட்கள் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்திசெய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்திருப்பதை நினைவுகூர்ந்தார். இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், எதிர்கால சந்ததியினரின் நலனில் விளையாடுவது நெறியற்ற மற்றும் குற்றச் செயல் என்று தெரிவித்தார்.
முன்னதாக, அரசுகளுக்கு இடையேயான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், விதிகள் அடிப்படையிலான சர்வதேச நிலைத்தன்மையை ஏற்படுத்துவதில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மிகப்பெரும் பங்கு இருப்பதை வலியுறுத்தினார். உலகுக்கே அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதம் குறித்த கவலைகளை இரு தலைவர்களும் பகிர்ந்துகொண்டனர். மேலும், தீவிரவாத ஒழிப்புக்கான பரஸ்பர நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் முடிவுசெய்தனர்.
ஏற்றுமதி கட்டுப்பாடு அமைப்பில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஜெர்மனிக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். தூய்மையான நிலக்கரி, மின் கடத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்பு, வான்வழி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பிற சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகளும் 12 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. பேச்சுவார்த்தையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.
The deliberations at the IGC Plenary Meeting were fruitful. Various facets of India-Germany cooperation were discussed. pic.twitter.com/0rINSmoaZv
— Narendra Modi (@narendramodi) May 30, 2017