பி.எம்.இந்தியா
தரைவிரிப்பு (கார்ப்பெட்) கண்காட்சி நடைபெறும் வாரணாசியில், கண்காட்சி தொடக்கவிழாவில் பங்கேற்றிருக்கும் எனது அமைச்சரவை சகா ஸ்மிருதி இராணி அவர்களே, தரைவிரிப்பு தொழில்துறையுடன் தொடர்புடைய தொழில்முனைவோரே, எனது நெசவாளர் சகோதர, சகோதரிகளே மற்றும் இங்கு கூடியுள்ள புகழ்பெற்ற மக்களே, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலகின் பல நாடுகளில் இருந்தும் புண்ணிய பூமியான காசியில் கூடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 38 நாடுகளில் இருந்து 250 விருந்தினர்கள் வந்திருப்பதாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமின்றி, ஜம்மு&காஷ்மீர், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தரைவிரிப்பு தொழிலுடன் சம்பந்தப்பட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். வாரணாசி தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் இந்தக் கண்காட்சிக்கு வந்துள்ள அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
நண்பர்களே,
இந்தியாவில் இப்போது திருவிழாக் காலம் நடைபெறுகிறது. தசரா மற்றும் துர்கை பூசைக்குப் பிறகு, இப்போது தான் முதல் முறையாக வாரணாசி மக்களுடன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. நீங்கள் அனைவரும் இப்போது தண்டேராஸ் மற்றும் தீபாவளி திருநாளுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருப்பீர்கள். இது தான் இந்த ஆண்டில் நீங்கள் மிகவும் பணிச்சுமையுடன் இருக்கும் காலம் ஆகும். இந்த நேரத்தில் தேவை அதிகரிக்கும் என்பதால் நீங்கள் மிகவும் தீவிரமாக பணியாற்ற வேண்டிய காலமாக இருக்கும். அதுமட்டுமின்றி, உங்களின் கடுமையான உழைப்புக்கும், உங்கள் கலைக்கும் வெகுமதிகள் பெறுவதற்கான சிறந்த நேரமும் இது தான்.
நண்பர்களே,
வாரணாசி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வணிகர்களுக்கும், நெசவாளர்களுக்கும் இது போன்ற திருவிழாக்கள் தான் இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. தீன்தயாள் கைவினை வளாகத்தில் இந்தியாவின் முதல் தரைவிரிப்பு கண்காட்சியை ஏற்பாடு செய்ததற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டில் உள்ள தரைவிரிப்பு தொழில்துறையினர், நமது நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், நமது வணிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தங்களின் திறமையையும், தயாரிப்புகளையும் வாரணாசியில் வைத்து உலகுக்கு காட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நண்பர்களே,
வாரணாசியில் தீனதயாள் கைவினை வளாகம் எந்த நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதோ, அவற்றை நோக்கி நாம் மிக அதிக வேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பகுதி தரைவிரிப்பு தொழிலின் மையம் என்பதாலும் இது மிகவும் முக்கியமானதாகும். நாட்டிலுள்ள நெசவாளர்கள், கைவினைத் தொழில்களுடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், வணிகர் சகோதர, சகோதரிகளில் நான்கில் ஒரு பங்கினர் இந்தப் பகுதியில் தான் வாழ்கின்றனர். வாரணாசியாக இருந்தாலும், பதோஹியாக இருந்தாலும் அல்லது மிர்சாப்பூராக இருந்தாலும் அவை தரைவிரிப்பு தொழில் மையமாக திகழ்கின்றன. இப்போது ஒட்டுமொத்த கிழக்கிந்தியாவும் நாட்டின் ஜவுளி ஏற்றுமதிக்கான உலக மையமாக மாறி வருகிறது. அதுமட்டுமின்றி, கைவினைப் பொருட்கள் உற்பத்தித் துறையில் நமக்கு கிடைக்கும் உலக அங்கீகாரத்தை வலுப்படுத்துவதில் தீனதயாள் கைவினை வளாகமும் முக்கியப் பங்காற்றுகிறது.
நண்பர்களே,
ஜவுளி உற்பத்தித் துறையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தொழில்நுட்பம் மற்றும் விளமபரத்தை பயன்படுத்த வேண்டும், ஜவுளி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளுக்கு இந்த வசதிகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வாரணாசியில் இந்த முறை ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இந்திய தரைவிரிப்பு கண்காட்சி, இந்த திசையை நோக்கி மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் நடவடிக்கை மட்டுமல்ல… இந்தத் துறையின் 5 முக்கிய ‘எஃப்’ குறித்த நமது தொலைநோக்குப் பார்வைக்கு முக்கியத் தூணும் ஆகும். ஐந்து முக்கிய எஃப் எனப்படுபவை தோட்டத்திலிருந்து இழைக்கு, இழையிலிருந்து தொழிற்சாலைக்கு, தொழிற்சாலையிலிருந்து நவநாகரீகம், நவநாகரீகத்திலிருந்து வெளிநாட்டிற்கு ஆகியவை ஆகும். விவசாயிகளையும், நெசவாளர்களையும் உலகம் முழுவதும் உள்ள சந்தைகளுடன் நேரடியாக இணைப்பதற்கான மிகப்பெரிய முயற்சி இதுவாகும்.
அடுத்த 4 நாட்களில் ஏராளமான புதிய வடிவமைப்புகள் இந்தக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படும், கோடி கோடியாக வணிகம் நடைபெறும், வணிகத்திற்கான புதிய வாசல்கள் திறக்கப்படும், நெசவாளர்களுக்கு புதிய வணிக வாய்ப்புகள் கிடைக்கும். இந்தக் கண்காட்சிக்காக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள வணிக நண்பர்கள் நமது கலாச்சாரத்தையும், காசியிலும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் மாறியுள்ள வணிகச் சூழலை புரிந்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
இந்தியாவில் கைவினைத் தொழிலுக்கான பழைய பாரம்பரியம் உள்ளது. இப்போதும் கூட இந்தியாவின் கிராமப் பகுதிகளில் நூல் நூற்பதற்காக இராட்டை தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் வாரணாசி மண் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. வாரணாசி கைவினைப் பொருட்களுக்கு மட்டுமின்றி, கபீர்தாசர் முனிவருக்கும் புகழ் பெற்றதாகும். கபிர்தாசர் நூல்களை நூற்கும் வழக்கம் கொண்டவர். அதன் மூலம் அவர் சொல்ல விரும்பும் செய்தியை சொல்வார். கபீர்தாசரின் கவிதை வருமாறு:
“KahiKabirSuno Ho Santo Charkha Lakhe Jo Koy,
Jo Yah Charkha LakhiBhaye, TakoAvagaman Na Hoy.”
‘‘நூற்கும் இராட்டை சக்கரம் தான் வாழ்க்கையின் சாரம் ஆகும். இதை எவர் ஒருவர் புரிந்து கொள்கிறாரோ, அவர் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்வார்’’ என்பது தான் அந்தக் கவிதையின் பொருள் ஆகும். இத்தகைய முக்கியமான வாழ்க்கைத் தத்துவத்துடன் கைவினைப் பொருட்கள் இணைக்கப்பட்ட இடத்தில் வாழும் விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக இத்தகைய வசதிகளை உருவாக்கிக் கொடுத்ததில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்.
நண்பர்களே,
நமது நாட்டில் கைவினைக் கலை என்பது வணிகம் மற்றும் வர்த்தகம் என்பதைக் கடந்து உத்வேகத்திற்கான மொழியாகவும், சுதந்திரம் மற்றும் தற்காப்புக்கான போராட்டமாகவும் விளங்குகிறது. காந்தியடிகள், அவரது சத்தியாகிரகம், இராட்டை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் நன்றாக அறிவோம்.
உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன், கைவினைப் பொருட்கள் மூலமாக தற்சார்பு அடைய வேண்டும் என்ற செய்தியை வலுப்படுத்த அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. உலகில் மிக அதிக எண்ணிக்கையில் தரைவிரிப்பு தயாரிக்கும் நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதற்கு இது தான் காரணம் ஆகும். கைகளால் நெய்யப்பட்ட தரைவிரிப்புகளைப் பொறுத்தவரை உலக நாடுகளில் நாம் தான் முதலிடத்தில் இருக்கிறோம். பல லட்சக்கணக்கான நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், வணிகர்கள் ஆகியோரின் கடுமையான உழைப்பாலும், அரசின் கொள்கைகளாலும் தான் இது சாத்தியமானது.
நண்பர்களே,
உலகின் ஒட்டுமொத்த தரைவிரிப்புகள் சந்தையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 35% இந்தியாவிடம் உள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் இது 50% ஆக உயரும். அதாவது அடுத்த சில ஆண்டுகளில் உலகின் ஒட்டுமொத்த தரை விரிப்பு சந்தையில் பாதியளவு நம்மிடம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் நாம் ரூ.9000 கோடி மதிப்புள்ள தரைவிரிப்புகளை ஏற்றுமதி செய்துள்ளோம்.இந்த ஆண்டில் சுமார் 100 நாடுகளுக்கு நாம் தரைவிரிப்புகளை ஏற்றுமதி செய்துள்ளோம். இது பாராட்டத்தக்கது ஆகும். இதை நாம் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 2022-ம் ஆண்டில் தரைவிரிப்பு ஏற்றுமதி இலக்கை ரூ 25 ஆயிரம் கோடியாக உயர்த்த தீர்மானித்திருக்கிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் தரைவிரிப்புகளின் ஏற்றுமதி மட்டுமின்றி, உள்நாட்டு விற்பனையும் 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூ 500 கோடியாக இருந்த உள்நாட்டு தரைவிரிப்பு விற்பனை, இப்போது ரூ.1600 கோடியாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் தரைவிரிப்புகள் சந்தை விரிவடைந்திருக்கிறது என்றால் அதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றில் முதலாவது, நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரண்டாவது, தரைவிரிப்புகள் உற்பத்தி தொழில் துறையில் கடந்த காலங்களில் இல்லாத வசதிகள் இப்போது நடத்தப்பட்டிருக்கின்றன. இது தவிர தரைவிரிப்புகள் தொழில் துறைக்கு இப்போது மிகப்பெரிய அளவில் விளம்பரம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி தரை விரிப்புகளை பிரபலமாக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
இதே போக்கை நாம் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நமது தரைவிரிப்புகள் தொழில்துறை, ஜவுளித்துறை ஆகியவற்றின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது உறுதி. இன்றைய நிலையில் இந்தியா மட்டும் தான் சிறியது முதல் மிகப் பெரியது வரையிலான அனைத்து வகையான தரைவிரிப்புகளையும் உற்பத்தி செய்யும் நாடு ஆகும். அதுமட்டுமின்றி, இந்திய தரைவிரிப்புகள் கலையிலும், கைவினையிலும் தலைசிறந்தவை ஆகும். இவை சுற்றுச்சூழலுக்கும் ஏற்றவை ஆகும். உங்களின் அறிவு மற்றும் திறமையால் இந்த அற்புதம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனால் தான் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரை விரிப்புகள் உலக சந்தையில் அதிக தரம் வாய்ந்தவையாக உருவெடுத்துள்ளன.
நண்பர்களே,
இந்திய தரைவிரிப்புகள் தரமானவை என்ற நற்சான்றை மேலும் வலுப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. தரைவிரிப்புகளை ஏற்றுமதி செய்வோருக்கு தேவையான வசதிகளில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதற்காக, போக்குவரத்து உதவிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விற்பனையகங்களையும், கிடங்குகளையும் அமைப்பதற்கான பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. அவை மட்டுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் தரம் சார்ந்த வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தரை விரிப்புகளை சோதனை செய்வதற்கான உலகத்தரம் வாய்ந்த ஆய்வகம், பதோகியிலும், ஸ்ரீநகரில் உள்ள இந்தியா கார்ப்பெட் தொழில்நுட்ப நிறுவனத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. நமது தயாரிப்புகள் பழுதற்றவையாகவும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவையாகவும் திகழ வேண்டும் என்பதற்காக அவற்றில் எந்த குறையும் இல்லாமலும், அவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவை தவிர நெசவாளர்களுக்கு மற்ற உதவிகளை வழங்கவும், தரைவிரிப்புகள் தவிர, அவர்களின் பிற கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தவும் வசதியாக, மேலும் பல வசதிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. வாரணாசியில் மட்டும் 9 பொது வசதி மையங்கள், பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஆயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு பயனளிக்கக்கூடும்.
நண்பர்களே,
நெசவாளர்களும், பிற சிறு வணிகர்களும் பணம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக தரத்தை உறுதி செய்வது மட்டுமின்றி, மேலும் பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின்கீழ் எந்த உத்தரவாதமும் இல்லாமல் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும் கடனுதவி இவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நெசவாளர்களுக்கு கடன் அல்லது வேறு எந்த உதவிகள் வழங்கப்பட்டாலும், அது நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. நெசவாளர்களுக்கு அவர்களின் அடையாளப் பெயருடன் அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. இது இடைத்தரகர்களை ஒழிக்க மிகவும் உதவியாக உள்ளது.
பதோகி & மிர்சாப்பூர் தரைவிரிப்பு மண்டலத்தில் உள்ளவர்களுக்கும், ஸ்ரீநகர் தரைவிரிப்பு மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அதிநவீனத் தறிகள் வழங்கப்படுகின்றன. அவற்றை இயக்குவதற்கான திறனைப் பெறுவதற்காக அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நெசவாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக ஏராளமான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
நண்பர்களே,
இதற்கு முன்பெல்லாம், நெசவாளர் சகோதர, சகோதரிகளை நான் எப்போது சந்தித்து பேசினாலும் அவர்கள் என்னிடம் கூறுவது,‘‘எங்கள் குழந்தைகள் இந்த தொழிலில் சேர விரும்பவில்லை’’ என்பது தான். ஆனால், இன்று, தரைவிரிப்பு வணிகத்தில் நாம் உலகின் முன்னணி நாடாக முன்னேறியுள்ள நிலையில், இத்தொழிலில் ஈடுபடும்படி நமது வருங்காலத் தலைமுறையினரை ஊக்குவிக்க இதுவே சரியான நேரமாகும்.
பதோகியில் உள்ள இந்திய கார்ப்பெட் தொழில்நுட்ப நிறுவனத்தில், கார்ப்பெட் தொழில்நுட்பத்தில் பி.டெக் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற படிப்பை நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள பயிற்சி நிறுவனங்களிலும் தொடங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. ஏழை நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக் கட்டணத்தில் 75 விழுக்காட்டை அரசே ஏற்றுக் கொள்கிறது.
நண்பர்களே,
உங்களின் கலைநயம் மற்றும் உழைப்பை தேசிய வலிமையாக மாற்ற அரசு உறுதி பூண்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் வாரணாசி அதன் கலைநயத்தைக் காட்ட ஏராளமான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் காசியில் நடைபெறவிருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு மிகப்பெரிய விளம்பர வாய்ப்பாகும். அதில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வணிகர்கள், நமது கலாச்சார பாரம்பரியம், நமது கைவினைக்கலை மற்றும் மாறிவரும் காசி நகரம் குறித்து புரிந்து கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தண்டேராஸ், தீபாவளி, சாத்பூஜா ஆகிய விழாக்களையொட்டி உங்கள் அனைவருக்கும் நான் முன்கூட்டியே மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காகவும், காசி நகருக்கு உலக அளவில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்ததற்காகவும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தையும், நெசவாளர் சகோதர, சகோதரிகளையும் நான் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். காசி நகருக்கு வருகை புரிந்ததற்காகவும், காசிக்கு அங்கீகாரம் கொடுத்ததற்காகவும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
************