Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்


விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரதமர், இந்த மங்களகரமான தருணத்தில் நாட்டு மக்களுக்கு தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்தியக் கலாச்சாரத்திலும், நமது முன்னோர்களிடத்திலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் ஸ்ரீ ராமபிரான் மீதான பக்தியைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த ஆழமான மதிப்பும் மரியாதையும், ராவணனுக்கு எதிரான அவரது வெற்றியைத் தாண்டி, நெடுந்தூரம் வரை நீண்டுள்ளது என்று கூறினார். ஸ்ரீ ராமபிரான் உலகிற்கு வழங்கிய காலத்தால் அழியாத மாண்புகளில்தான் இந்த தேசத்தின் உறுதியான நம்பிக்கை வேரூன்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அயோத்தி மன்னராக பகவான் ஸ்ரீ ராமர் திரும்பியபோது ராமராஜ்ஜியம் நிறுவப்பட்டதை விளக்கிய பிரதமர், பாகுபாடற்ற ஆட்சிமுறைக்கான உச்சபட்ச முன்மாதிரியாக அதனை விவரித்தார். அனைவருக்கும் நீதியும், சமவாய்ப்பும்  கிடைப்பதும், அதிகாரம் என்பது ஆளுமையை நிலைநாட்டுவதற்குப் பதிலாகப் பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதும் ராமராஜ்ஜியத்தின் சிறப்பம்சங்கள் என்று அவர் குறிப்பிட்டார். ‘குடிமக்களைக் கடவுளாகக் கருதுதல்’ என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், பொதுமக்களை இறைவனாகக் கருதி, மரியாதை புருஷோத்தமரான ஸ்ரீ ராமரின் உயரிய கொள்கைகளைப் பின்பற்றி நிர்வாகம் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “ஏழைகள், நலிவடைந்த பிரிவினருக்குச் சேவை செய்வதையே நாம் முதன்மையான கடமையாகக் கொள்ள வேண்டும்” என்று திரு மோடி வலியுறுத்தினார்.

கடல் கடந்து இலங்கைக்கு ஸ்ரீ ராமர் மேற்கொண்ட பயணத்திலிருந்து தன்னிறைவு குறித்த ஆழமான கருத்துக்களை எடுத்துரைத்த பிரதமர், ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் மற்றவர்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, ஸ்ரீ ராமர், மக்களின் பங்கேற்பை ஊக்குவித்து, நம்பிக்கை, திறமை, அசைக்க முடியாத உறுதியின் மூலம் சாத்தியமற்றதைச் சாதிக்க, தன்னிடம் இருந்த வளங்களைத் திரட்டினார் என்று விளக்கினார். பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், வளர்ச்சியடைந்த, தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் இலக்குகளை அடையவும், கடின உழைப்பு, சமயோசித புத்தி என்ற இந்த அடிப்படை மந்திரத்தைக் குடிமக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் வளர்ச்சியை, கலாச்சாரப் பாரம்பரியத்தில் வேரூன்றிய வலுவான சுயமரியாதை உணர்வுடன் தொடர்புபடுத்திய பிரதமர், இந்தியாவின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக கடந்த 12 ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட பழங்காலச் சிலைகளை மீண்டும் தாயகத்திற்குக் கொண்டுவரும் பணியை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதை விளக்கினார். இந்தியாவின் கலாச்சார மையங்களுக்கு உலகளவில் அதிகரித்து வரும் அங்கீகாரத்தைப் பாராட்டிய அவர், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இந்தியாவின் பல இடங்கள் இடம்பெற்றுள்ளதையும், கோடிக்கணக்கான இந்தியர்களின் கூட்டு முயற்சியால் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை யுனெஸ்கோவின் ‘மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியம்‘ பட்டியலில் சேர்க்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். “எதிர்காலத்திலும் இதே அர்ப்பணிப்பு உணர்வுடன் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்” என்று பிரதமர் திரு மோடி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325573&reg=48&lang=2

***

AD/RB/RJ