பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.08.2026) சேவா தீர்த்தில் 20 விண்வெளிப் புத்தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், நிறுவனர்களுடன் கலந்துரையாடினார்.
ராக்கெட்டுகளை உருவாக்குதல், மறுபயன்பாட்டு அரை-குளிர்நிலை ஏவுகணைகளை உருவாக்குதல், வானூர்தி மின்னணுவியல், செயற்கைக்கோள்கள், மேம்பட்ட உந்துவிசை அமைப்பு, விண்வெளி, பாதுகாப்பு உளவுத்துறை, விண்வெளிக் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் விண்வெளித் துறையின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். இந்தியாவின் விண்வெளித் துறை அடைந்துவரும் விரைவான முன்னேற்றத்தை அவர்கள் எடுத்துரைத்ததோடு, இத்துறையின் எதிர்காலம் குறித்த தங்களின் தொலைநோக்குப் பார்வையையும் பகிர்ந்துகொண்டனர். தங்களின் திறன்களையும் தேவையான தொழில்நுட்பங்களையும் உள்நாட்டிலேயே உருவாக்குவதில் கணிசமான நேரத்தையும் முயற்சியையும் செலவிட்டுள்ளதாக அவர்கள் பகிர்ந்துகொண்டதோடு, பிரதமரிடமிருந்து கிடைத்த ஆதரவிற்கு நன்றியையும் தெரிவித்தனர். மேலும், அரசின் வலுவான ஆதரவையும், தொழில்துறைக்குள் நிலவும் நல்ல ஒத்துழைப்பையும் அவர்கள் எடுத்துரைத்ததோடு, விண்வெளித் துறையில் லட்சிய இலக்குகளை அடைவதற்காக ஊக்கத்துடனும் உறுதியுடனும் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டனர்.
விண்வெளித் துறையைத் தனியார் பங்கேற்புக்குத் அனுமதித்ததன் மூலம் இந்த்த் தொழில்துறைக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
ஒரு புதிய துறையில் துணிச்சலுடன் முன்னின்று வழிநடத்தும் விண்வெளித் துறைத் தலைவர்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். இத்துறையில் நிலவும் நம்பிக்கை, தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். பல நாடுகள் விண்வெளித் துறையில் முதலீடு செய்ய இயலவில்லை அல்லது முதலீடு செய்ய விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் உலகளாவிய விண்வெளித் துறையில் இந்தியா தனது நிலையை விரைவாக வலுப்படுத்திக்கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்.
விண்வெளி நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பங்களின் புதிய பயன்பாடுகளை ஆராயுமாறும், அவை மக்களின் வாழ்க்கையை எவ்வாறு எளிதாக்கும் என்பதில் கவனம் செலுத்துமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.
விண்வெளித் துறை நிறுவனங்கள் மற்ற துறைகளில் செயல்படும் நிறுவனங்களுடன் அதிக ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என பிரதமர் கூறினார். விண்வெளிக் குப்பைகள் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள், தங்களின் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார். விவசாயத் துறையுடன் இணைந்து செயல்படும் விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனங்கள், விவசாயிகள் நன்கு அறிந்து முடிவெடுக்கவும், அவர்களின் விளைச்சலை அதிகரிக்கவும் உதவுவதற்காக, விவசாயப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படலாம் என பிரதமர் குறிப்பிட்டார்.
விண்வெளி குறித்து உலகம் சிந்திக்கும்போது, அது இந்தியாவை நோக்கும் வகையிலான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் எனப் பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் விண்வெளித் துறை, உலகளாவிய முதலீடுகளை நாட்டிற்கு ஈர்க்கும் ஒரு காந்தமாகச் செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.
அடல் டிங்கரிங் ஆய்வகங்களுடன் நெருங்கிய ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார். இது சிறு வயதிலிருந்தே இளம் குழந்தைகளிடையே விண்வெளித் துறையில் ஆர்வத்தையும் ஈர்ப்பையும் உருவாக்கும் என்று அவர் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ், பிக்சல், துருவா ஸ்பேஸ், கேலக்ஸ்ஐ, பியர்சைட், பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ், டிகந்தரா, சாட்சூர், சுஹோரா டெக்னாலஜிஸ் உள்ளிட்ட விண்வெளித் துறையில் செயல்படும் 20 புத்தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிறுவனர்கள் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301901®=3&lang=1
—-
SS/PLM/SH
It was wonderful to meet the Yuva Urja of India’s space sector…young entrepreneurs and innovators who have shown remarkable courage by entering a new and demanding domain. They have taken risks, trusted the reform process and remained consistent in their efforts. Due to this,… pic.twitter.com/RV1Nd4dUKm
— Narendra Modi (@narendramodi) August 21, 2026
I also urged the StartUps to think about how space technology can contribute immensely to agriculture, livestock management, dairy, environment and many other areas that touch everyday lives. They can engage with Atal Tinkering Labs, spark curiosity among schoolchildren and… pic.twitter.com/943qLc6shR
— Narendra Modi (@narendramodi) August 21, 2026