பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, 2020ம் ஆண்டு 36வது சர்வதேச புவியியல் மாநாடு நடத்தி இந்திய துணைக்கண்டப் பகுதியில் புவியியலை வளர்ப்பதற்காக கூட்டுறவு சங்க பதிவுச் சட்டம் 1860ன் படி, ஒரு கூட்டுறவு சங்கத்தை உருவாக்க ஒப்புதல் அளித்தது. இந்த மாநாடு 2020ம் ஆண்டு மார்ச் 2 முதல் 6 வரை புதுதில்லியில் நடைபெறும். 2018-19ம் ஆண்டு வரை இம்மாநாட்டுக்கான தயாரிப்பு வேலைகளை நடத்துவதற்காக 52 கோடி ஏற்கனவே ஒதுக்கப்படுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநாட்டுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பாக கூடுதலி நிதி தேவைக்கேற்ப ஒதுக்கப்படும்.
36வது புவியியல் மாநாடு சுரங்கத் துறை அமைச்சகம் மற்றும் பூமி அறிவியல் அமைச்சகத்தால் இணைந்து நடத்தப்படும். இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் உள்ள அறிவியல் அறிஞர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படும். உலகெங்கிலும் இருந்து 7000க்கும் மேற்பட்ட புவியியல் விஞ்ஞானிகள் வருவார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது. இந்த மாநாட்டை சர்வதேச புவியியல் அறிவியல் சங்கம் அதன் சட்ட விதிமுறைகளின்படி நடத்துகிறது. கூட்டுறவு சங்கத்தின் பதிவு முடிந்தவுடன், உள்ளூர் அமைப்புக் குழு அமைப்பது மற்றும் 27 ஆகஸ்ட் முதல் 4 செப்டம்பர் 2016 வரை கேப் டவுன், தென் ஆப்ரிக்காவில் 35வது சர்வதேச புவியியல் மாநாட்டில் கலந்து கொள்வது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும். மாநாடு முடிந்ததும் இந்த கூட்டுறவு சங்கம் கலைக்கப்படும்.
ஒட்டுமொத்த புவியியல் சமூகத்துக்கே இந்த மாநாடு பெரிய பலன் தரும். மேலும் கனிமம் எடுத்தல், சுரங்கம் தோண்டுதல், சுற்றுச் சூழலை பேணுதல், தட்பவெட்ப மாறுதல், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளுதல் போன்ற துறைகளுக்கும் இம்மாநாடு உதவும். புவியியல் சார்ந்த சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் இம்மாநாடு உதவும். அந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடக்க உள்ள ஜியோ எக்ஸ்போ 2020 சுரங்க நிறுவனங்களின் ஆர்வத்தைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரங்கம், கனிமம் எடுத்தல், உட்கட்டமைப்பு மேம்படுத்தல் போன்ற நிறுவனங்களை ஜியோஎக்ஸ்போ ஆர்வப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கனிமவளத்தை உலகத்துக்கு காட்சிப்படுத்துதல் இந்தியாவில் அந்நிய முதலீடுகளை அதிகரிக்கும்.
36வது சர்வதேச புவியியல் மாநாடு “நிலையான எதிர்காலத்துக்கு புவியியல்தான் அடிப்படை அறிவியல்” என்பது அடிப்படை கருத்தாக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மாநாடு நடைபெறுவது, புவியியல் துறையை மேம்படுத்துவது, அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேம்படுத்துவது, எப்போதும் தணியாத இயற்கை வளங்களை பயன்படுத்துவது போன்றவற்றுக்கு பெரிதும் உதவும். கனிமம் எடுத்தல், புவியியல் தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள், பல்வேறு தேசிய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நடவடிக்கைகள், தொழில்துறை மற்றும் தனியார் துறை ஆகியவற்றில் 10,000த்துக்கும் மேற்பட்ட புவியியல் விஞ்ஞானிகள் உள்ளனர். எண்ணை வளம், கனிமம், சுற்றுச்சூழல், தட்பவெட்ப மாற்றம், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளுதல் போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி நடைபெறுகிறது. உலகெங்கும் இருந்து வரும் இத்துறையின் வல்லுனர்களோடு இந்திய விஞ்ஞானிகள் கலந்துரையாடி தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள இந்த மாநாடு உதவும்.
பின்னணி :
ஆகஸ்ட் 2012ல், ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடைபெற்ற 34வது சர்வதேச புவியியல் மாநாட்டில் 36வது மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டுமென்று இந்தியா அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையோடு சேர்ந்து கோரிக்கை வைத்தது. சர்வதேச புவியியல் விஞ்ஞானிகளின் ஏகோபித்த ஆதரவோடு 36வது மாநாட்டை இந்தியாவில் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
சர்வதேச அறிவியல் மையத்தின் கீழ் செயல்படும், சர்வதேச புவியியல் அறிவியல் சங்கத்தால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சர்வதேச புவியியல் மாநாடு ஒரு பெருமை தரக்கூடிய மாநாடாகும். 1878ம் ஆண்டு தொடங்கிய சர்வதேச புவியியல் மாநாடு, உலகின் பல பகுதிகளில் நடைபெற்ற கடந்த ஐந்து மாநாடுகளில் 6000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை பங்கேற்க வைத்துள்ளது. இதற்கு முன் 1964ம் ஆண்டு இந்தியா 22வது சர்வதேச புவியியல் மாநாட்டை ஆசியாவிலேயே முதல் நாடாக நடத்தியது.
அறிவியல் பயன்பாட்டில் மனிதவளம் அதிகம் கொண்ட ஒரு நாடாக இந்தியாவை உலக அரங்கில் காட்டுவதற்கு இந்த மாநாடு உதவும். தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியங்களில் இந்தியாவின் மதிப்பை நீண்ட கால அடிப்படையில் உயர்த்த இது உதவும். வருவாய் அதிகரிப்பிற்கும், புவியியல் சுற்றுலா வளர்வதற்கும் இது உதவும்.