Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டைம் இதழுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அளித்த நேர்காணல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி: முதலில் இந்தியாவுக்கு வரவேற்கிறேன். இது இந்தியாவுக்கு நீங்கள் மேற்கொள்ளும் முதல் பயணம். உங்களது முதல் பயணத்திலேயே நாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது இந்த பயணம் மற்றும் இந்த வாய்ப்பின் மூலம், இந்தியாவுக்கு நீங்கள் அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று நம்புகிறேன்.

டைம்: நன்றி, நாங்களும் இதையே எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு  வாழ்த்துகளைத் தெரிவித்து நேர்காணலைத் தொடங்க விரும்புகிறேன். நீங்கள் ஆட்சிக்கு வந்து, ஓராண்டு நிறைவடைய உள்ளது. இதனால், உங்களை அதிக அளவில் ஆச்சரியப்படுத்தியது என்ன என்பதை தெரிந்துகொள்ள நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். வெளிஆளாக இருப்பது குறித்து நீங்கள் அடிக்கடி பேசுகிறீர்கள். தற்போது முற்றிலும் உள்நபராக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் தொடர விரும்பும் பணியில், பலம், வாய்ப்புகள் மற்றும் தடைகள் என்று எதனைப் பார்க்கிறீர்கள்?

மோடி: 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியா முழுமைக்கும் பயணம் மேற்கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் உள்ள 400 மாவட்டங்களுக்கும் மேலாக சென்று, தலா ஓர் இரவை கழித்துள்ளேன். எனவே, இந்தியாவின் பலத்தை நான் முழுமையாக அறிவேன். நாம் எதிர்கொண்டுவரும் சவால்களை முழுமையாக அறிந்துள்ளேன். அவற்றை நான் அறிந்துகொள்ளாமல் இல்லை. எனக்கு புதிது எது என்றால், மத்திய  அரசின் அமைப்பு, வழிமுறை, மத்திய அளவில் நாம் செயல்படும் விதம் ஆகியவையே. நான் இந்த அரசுக்கு வரும் வரை, எனக்கு தெரியாத பகுதி அதுதான்.

மிகப்பெரும் சவாலாக நான் கருதியது, மத்திய அரசு அமைப்புக்கு நான் புதியவன் என்பதுதான். அவர்கள் எனக்கு புதியவர்களாக இருந்தார்கள். நான் அவர்களுக்கு புதியவனாக இருந்தேன். எனவே, ஒவ்வொருவரும் மற்றவர்களின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வதில் பாதிப்பு இருந்தது. எனினும், மிகவும் குறுகிய காலத்தில், மிகவும் உன்னிப்பான நடவடிக்கைகள் மூலம், இந்த இடைவெளியை பூர்த்திசெய்தேன். தற்போது, மனங்களின் இணைப்பாக மாறியுள்ளது. அவர்களை நான் நன்றாக புரிந்துகொண்டுள்ளேன். அவர்கள் என்னை நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். இதன்மூலம், மிகவும் குறுகிய காலத்தில், மத்திய அரசு அமைப்பிற்குள் இயல்பான மற்றும் தடையில்லாமல் பணியாற்றும் வழிமுறைகளை உருவாக்க முடிந்தது.

குஜராத் மாநில முதலமைச்சராக நான் நீண்டகாலம் இருந்துள்ளேன். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் குறித்து மத்திய அரசு என்ன நினைக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். மேலும், மத்திய அரசைப் பற்றி மாநில அரசுகள் என்ன நினைக்கும் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒருவருக்கொருவர் என்ன நினைக்கிறார்கள் என்பதை மாற்ற விரும்பினேன். மத்திய அரசும், மாநில அரசுகளும் நாட்டுக்காக ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். மத்திய அரசு என்பது மாநில அரசுகளுக்கு வழங்குவது, மாநில அரசு என்பது மத்திய அரசிடமிருந்து பெருமளவில் வாங்குவது என்ற சிந்தனையை முற்றிலும் மாற்ற விரும்பினேன். மிகவும் குறுகிய காலத்துக்குள், இந்த நோக்கத்தை மிகப்பெரிய அளவில் நிறைவேற்றிவிட்டதாக கருதுகிறேன்.

இதற்கு ஒருங்கிணைந்த கூட்டாட்சி அமைப்பு என்று அழைத்தேன். உண்மையில், இதில் மேலும் ஒரு அடி எடுத்துவைத்து, ‘கூட்டுறவு போட்டி கூட்டாட்சி அமைப்பு’ என்று அழைத்தேன். நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறுபட்ட மாநில அரசுகளும் ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டும் என்பதே இதன் நோக்கம். நாட்டை ஒரு தூண் மூலம் வளரும்  நாடு என்ற நிலையிலிருந்து வளர்ச்சிக்கான 30 தூண்களைக் கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்று நான் மேற்கொண்ட முயற்சியை நிறைவேற்ற முடிந்தது என்று நான் கருதுகிறேன். இந்த 30 தூண்களில், 29 மாநிலங்கள், ஒன்று மத்திய அரசு.

இதேபோல, நான் மத்திய அரசுக்குள் நுழைந்தவுடன், இந்திய அரசின் பல்வேறு துறைகளும், தனித்தனியாக பணியாற்றிவந்ததை நான் பார்த்தேன். ஒவ்வொரு துறையும், தானே அரசு என்பதைப் போல பணியாற்றின. இதற்கு காரணம், கடந்த 30 ஆண்டுகளாக, மத்தியில் பெரும்பான்மை பெற்ற அரசு இல்லாதது தான். கூட்டணி அரசுகளே உருவாகி வந்ததால், அரசு அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், ஒவ்வொரு துறையும் தனிமைப்படுத்தப்பட்டன. இந்த தனித்தனி அமைப்புகளை உடைத்தெறிந்து, மத்திய அரசில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சி மேற்கொண்டேன். மிகவும் குறுகிய காலத்தில் இந்த இலக்கை எட்டியதாக கருதுகிறேன். அனைவரும் ஒருங்கிணைந்து சிந்திக்கிறோம். அனைவரும் ஒன்றாக பணியாற்றுகிறோம். பிரச்சினைகள் வரும்போது, அதனை தனித்தனியாக எதிர்கொள்வதைவிட, ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும்போது, மத்திய அரசின் நிர்வாக அமைப்பில் ஊக்கத்தை அளிக்கிறது.

மத்திய அரசு என்பதை வடிவமைக்கப்பட்ட அமைப்பாக நான் பார்க்கவில்லை. உயிரோட்டமுள்ள அமைப்பாகவே பார்க்கிறேன். இதன்மூலம், ஒவ்வொருவரும், மற்றவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு, அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்து பணியாற்ற முடியும்.

0.13613600_1431079373_time-202 [ PM India 78KB ]

டைம்: அமெரிக்க விவகாரத்துக்கு செல்வோம். அமெரிக்க – இந்திய நல்லுறவை பார்ப்போம். உங்களைப் பற்றி அதிபர் ஒபாமா மிகவும் சிறப்பாக கூறியுள்ளார். பிரபலமான 100 உலகத் தலைவர்கள் குறித்து டைம் இதழில் வெளியான பட்டியலில் உங்களை அவர் பாராட்டியுள்ளார். மாற்றமிகு இந்தியாவை உருவாக்க விரும்புகிறீர்கள். மாற்றமிகு அரசு என்று நீங்கள் கூறுகிறீர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்களை அமெரிக்கா கூட்டாளியாக, பொருளாதார போட்டியாளர் என எவ்வாறு பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? உதாரணமாக, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) என்றால், அமெரிக்காவிலிருந்து பணிகள் இங்கு வர வேண்டுமா? நாம் சேவைத் துறையில் இருந்து, உற்பத்தித் துறைக்கு மாறக் கூடாதா என்ற விவாதம் எழுகிறது. எனவே, உங்களை அமெரிக்கா எவ்வாறு பார்க்க வேண்டும்?

மோடி: என்னைப் பற்றி, சிறப்பான முறையில் கருத்துகளைத் தெரிவித்த அதிபர் ஒபாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டைம் இதழில் அண்மையில் அவர் எழுதியதற்காக, அவருக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா – அமெரிக்கா நட்புறவை ஒரே வார்த்தையில் நான் குறிப்பிட வேண்டுமென்றால், நாம் இயற்கையான கூட்டாளிகள் என்று கூறுவேன். இந்தியா – அமெரிக்கா இடையேயான நல்லுறவு, இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உலகம் முழுமைக்கும் ஜனநாயக மதிப்பை வலுப்படுத்துவதில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்திய-அமெரிக்க நல்லுறவு எவ்வாறு இருக்க வேண்டும், அமெரிக்காவுக்கு இந்தியா என்ன செய்ய முடியும், இந்தியாவுக்கு அமெரிக்கா என்ன செய்ய முடியும் என்று சிந்திப்பது மிகவும் குறுகிய மனப்பான்மை என்று நான் கருதுகிறேன். இதனை நாம், இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றாக இணைந்து உலகுக்கு என்ன செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன். இந்த நிலைப்பாட்டிலேயே, அமெரிக்காவுடனான நமது நல்லுறவை அணுகுகிறோம்.

டைம்: இந்த ஆண்டில் ஏற்கனவே 16 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளீர்கள். உங்களது மற்ற இயற்கையான கூட்டாளிகள் என்று யாரை கூறுவீர்கள்?

மோடி: இதனை பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்வியாக கருதுகிறேன். ஒவ்வொரு நாடும், தங்களுக்கு என்று தனி முக்கியத்துவத்தை வைத்துள்ளன. ஒவ்வொரு நட்புறவையும், அதன் சொந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளுடனும் இந்தியா பாதுகாப்பு அடிப்படையில் நட்புறவு வைத்துள்ளது. மற்ற சில நாடுகளுடன், மற்ற விவகாரங்களில் ஒருங்கிணைந்த நட்புறவு உள்ளது. சில நாடுகள், இயற்கை கூட்டாளிகளாக மாற வேண்டியிருக்கும். எனினும், இயற்கையான கூட்டாளியாக மாறுவதற்கு சில இடைவெளிகளை நிரப்ப வேண்டியிருக்கும். எனவே, ஒவ்வொரு நாட்டுடனான நட்புறவையும் ஒட்டுமொத்த கண்ணோட்டத்திலும், ஒவ்வொரு நாட்டுடனும் நட்புறவை இந்தியா எவ்வாறு அணுகுகிறது என்ற அடிப்படையிலும் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, இந்திய-அமெரிக்க நல்லுறவை நீங்கள் பார்த்தீர்களானால், இந்த நல்லுறவுக்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆம், ஜனநாயக மதிப்புகளை பகிர்ந்துகொள்கிறோம். இந்தியா, அமெரிக்கா இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான ஜனநாயக மதிப்புகளையும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், நமது உலகளாவிய பார்வை… நமது ஜனநாயக மதிப்புகளுடன், நமது உலகளாவிய பார்வை என்பது உலகின் பல்வேறு சூழ்நிலைகளிலும் ஒரே மாதிரியாக உள்ளது. எனவே, மற்ற நாடுகளுடன் நமது உறவை விளக்க வேண்டுமானால், மற்ற நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒவ்வொரு நல்லுறவையும், சூழ்நிலை மற்றும் கண்ணோட்டம் அடிப்படையில் பார்க்க வேண்டும். இது ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் வேறுபடுகிறது.

டைம்: பிரதமர் அவர்களே, சீனாவுக்கு விரைவில் நீங்கள் பயணம் மேற்கொள்ள உள்ளீர்கள். தெற்காசிய பிராந்தியம் உள்ளிட்ட உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சீனாவும், இந்தியாவும் இதற்கு முன்னதாக எல்லைப் போரில் ஈடுபட்டுள்ளன. சில நேரங்களில் நல்லுறவு இருந்துவருகிறது. சூழ்நிலை பதற்றமாகவும் இருந்துள்ளது. சீனாவுக்கு நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தின்போதும், சீனத் தலைவர்களை சந்திக்கும்போதும், சீனாவுடன் எந்த மாதிரியான நல்லுறவை ஏற்படுத்த நீங்கள் விரும்புகிறீர்கள்? சீனத் தலைவர்களுடன் வர்த்தகம் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? சீனாவும், இந்தியாவும் எப்போதுமே நண்பர்களாக இருக்க முடியுமா?

மோடி: இந்தியா-சீனா இடையே 1962-ம் ஆண்டில் ஏற்பட்ட போருக்குப் பிறகு, 1990-களின் தொடக்கத்தில், எல்லைப் பகுதியில் அமைதியையும், போர் இல்லாத சூழலையும் ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டது. மேலும், கடந்த 30 ஆண்டுகளாக, 21-ம் நூற்றாண்டுக்கு வந்துள்ள தற்போதுவரை, இந்தியா – சீனா எல்லையில் பெரும்பாலும் அமைதி நிலவிவருகிறது. இது பதற்றமான எல்லை கிடையாது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக எந்தவொரு துப்பாக்கிச்சூடும் நடத்தப்படவில்லை. இது இரு நாடுகளுமே வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம் என்பதற்கான ஆதாரம்.

இந்தியா – சீனா நல்லுறவைப் பொருத்தவரை, இந்தியா-சீனா இடையே நீண்ட எல்லைப் பகுதி உள்ளது, அதில், பெரும்பகுதி சர்ச்சைக்குரியது என்பது உண்மையே. கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளும் மிகவும் தெளிவான நிலையை எட்டியுள்ளன. இதன்மூலம், இரு நாடுகளுக்கும் பொருளாதார ஒத்துழைப்பு ஏற்பட்டு, கடந்த 20-30 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தற்போது, இரு நாடுகளுக்கும் இடையே விரிவான வர்த்தகம் மற்றும் முதலீடுகளுடன், திட்டங்கள் அடிப்படையிலான நல்லுறவும்  நீடித்து வருகிறது. உலகின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், சர்வதேச அரங்கில் சீனாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். வர்த்தகம் மற்றும் தொழில் என்று வரும்போது, சீனாவுடன் போட்டியிடுகிறோம்.

இந்தப் பிராந்தியத்திலும், உலக அளவிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதை நீங்கள் குறிப்பிட்டீர்கள். உலகில் உள்ள நாடுகளில் 10 லட்சம் மற்றும் அதற்கும் மேலான மக்கள் தொகையைக் கொண்ட எந்த நாடும் சர்வதேச அரங்கில் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க விரும்புவதில்லை என்றே நான் உறுதியாக நம்புகிறேன். பல்வேறு நாடுகளுடன் சர்வதேச உறவுகளை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளும் நாடுகள், சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்த விரும்புவது இயற்கையானதுதான் என்று கருதுகிறேன். சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், மனிதர்களுக்கு முழு மதிப்பு அளிப்பது ஆகிய இரண்டு காரணிகளை மனத்தில் கொண்டு, ஒவ்வொரு நாடும் சர்வதேச சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில், தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்த உரிமை உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

டைம்: இதன் தொடர்ச்சியாக ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். சீனாவுக்கு நீங்கள் பயணம் மேற்கொள்வதையொட்டி, அதிபர் ஜி-க்கு ஏதாவது சிறப்பு செய்தியை அனுப்ப விரும்புகிறீர்களா? உங்களது பயணத்தையொட்டி, அவருக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

மோடி: இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு, அதாவது, இந்தியா-சீனா உறவு நீங்கள் குறிப்பிட்டதைப் போல, பரஸ்பரம் தகவல் பரிமாற்றத்துக்கானதாக இருக்க வேண்டும். இதற்காக மூன்றாவது நாடு எங்களுக்குத் தேவையில்லை. இந்த நிலையிலான நல்லுறவை, தற்போது நாங்கள் கொண்டுள்ளோம்.

டைம்: ஆப்கானிஸ்தானில் தங்களது படைபலத்தை அமெரிக்கா படிப்படியாக குறைத்து வருகிறது. தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

மோடி: நீங்கள் இரண்டு விதமான கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதிலளிக்க முயற்சி மேற்கொள்கிறேன். முதலாவது, இந்தியா – ஆப்கானிஸ்தான் நல்லுறவு. இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் பழமையான நட்பைக் கொண்டுள்ளன. மேலும், மிகவும் நெருங்கிய நட்புறவு உண்டு. தற்போதைய காலகட்டத்தில், கட்டமைப்பு வளர்ச்சி குறித்து மக்கள் பேசுகிறார்கள். நீங்கள் வரலாற்றைப் பார்த்தீர்களானால், இந்தப் பிராந்தியத்தின் முன்னாள் மன்னர்களில் ஒருவரான ஷெர் ஷா சூரி, கொல்கத்தா-காபூல் இடையே கிராண்ட் டிரங் சாலையை அமைத்தார்.

இந்தியா – ஆப்கானிஸ்தான் நல்லுறவு நெருக்கமாக இருப்பதற்கு புதிய முயற்சிகள் காரணமில்லை. பழங்காலம் முதலே இது நீடித்து வருகிறது. நெருங்கிய நண்பர் என்ற முறையில், இந்தியா சுதந்திரம் பெற்றது முதலே, ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் என்ன தேவையோ அதனை செய்துவருகிறோம். இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

அதிபர் அஷ்ரப் கனி, கடந்த வாரத்தில் இங்கு வந்திருந்தார். எங்களுக்கு இடையே சிறந்த சந்திப்பு நடைபெற்றது. விரிவாக ஆலோசனை நடத்தினோம். இந்தப் பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தினோம். கடந்த காலத்தில் அளித்த உறுதிமொழிப்படி செயல்பட்டு வருகிறோம். உண்மையில், மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளிக்கும் நிதியுதவி, சுமார் 2.2 பில்லியன் டாலர்களாகும். ஆப்கானிஸ்தானின் மேம்பாட்டுக்கு என்ன தேவையோ, அதனை செய்வோம் என்று உறுதி அளித்துள்ளோம். நாங்கள் வாக்குறுதி அளித்ததோடு மட்டுமல்லாமல், இந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்காக உறுதியான மற்றும் குறிப்பிட்ட வழிமுறைகளை உருவாக்கியுள்ளோம்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் விவகாரத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்கு நான் சென்றிருந்தபோது, அதிபர் ஒபாமாவுடன் இதுகுறித்து விரிவாக விவாதித்தேன். அப்போது அவரிடம் நான், படைகளை திரும்பப் பெறுவது என்பது அமெரிக்க அரசின் தனிப்பட்ட முடிவு. இருந்தாலும், ஆப்கானிஸ்தானில் நிலையான அரசு அமைவதற்காக, அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும்போது, ஆப்கானிஸ்தானுக்குத் தேவையான பாதுகாப்பு தேவைகள் குறித்து அந்நாட்டு அரசுடன் ஆலோசனை நடத்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டேன். மேலும் நான் அவரிடம், அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்ற பின்பு, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு தேவைகளை நிறைவுசெய்ய நாம் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறினேன். மற்றபடி, முடிவுகளை அமெரிக்க அரசுதான் எடுக்க வேண்டும். எனினும், ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நிலைத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.  இதற்காக என்ன தேவையோ, அதனை செய்வோம்.

நீங்கள் குறிப்பிட்டதுபோல, தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் விவகாரத்தில், தீவிரவாதத்தை சர்வதேச அளவில் எவ்வாறு பார்க்கிறோம் என்பது குறித்து சர்வதேச சமூகம் விரிவான சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உதாரணமாக, 1993-ம் ஆண்டுவரை, இந்த கொடுமையின் முழு பலத்தை பல்வேறு நாடுகள் முழுவதுமாக உணரவில்லை. தீவிரவாதத் தாக்குதல்களைப் பார்த்து, சட்டம்-ஒழுங்கு என்பது தனிப்பட்ட நாடுகளின் பொறுப்பு என்று மட்டும் அந்த நாடுகள் கருதின. சர்வதேச அளவில் இதன் தாக்கத்தை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

இந்த சூழ்நிலையை நெருங்கி நீங்கள் ஆய்வுசெய்தால், மனித மதிப்பு மீது நம்பிக்கை கொண்டுள்ள நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டியது அவசியம். தீவிரவாதத்தை அதன் பெயர் அடிப்படையில் நாம் பார்க்கக் கூடாது. அவர்கள் எந்தக் குழுவை சேர்ந்தவர்கள், அவர்களின் பெயர் என்ன, அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்றெல்லாம் பார்க்கக் கூடாது. அவர்களை தனிநபர்களாக பார்க்கக் கூடாது என்று நான் கருதுகிறேன். மாறாக, தீவிரவாதத்தின் கொள்கைகள் குறித்து ஒருங்கிணைந்து பார்க்க வேண்டும். மனிதசமூகத்துக்கு எதிராக தீவிரவாதிகள் போரிடுகிறார்கள் என்பதை உணர்ந்து மனித மதிப்புகளுக்காக நாம் போராட வேண்டும்.

மனிதமதிப்புகள் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து இந்த சமூகவிரோத சக்திக்கு எதிராக போராட வேண்டும். தீவிரவாதிகளை ஒருங்கிணைந்து தான் பார்க்க வேண்டும். மாறாக, தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் அல்லது தனிநபர் குழுக்கள் அல்லது பெயரிட்டு பார்க்கக் கூடாது. இந்த தனிநபர் குழுக்கள் அல்லது பெயர்கள் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும். இன்று நீங்கள் தாலிபான் அல்லது ஐஎஸ்ஐஎஸ் என்று பார்ப்பீர்கள். நாளை, வேறு பெயரில் அவர்கள் செயல்படுவார்கள்.

எனவே, தீவிரவாதத்தை குழுக்கள், தனிநபர் பெயர்கள், அவர்கள் எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதையெல்லாம் விடுத்து, தீவிரவாதத்தை எதிர்த்து நாடுகள் ஒருங்கிணைந்து போரிட வேண்டும்.

டைம்: நீங்கள் குறிப்பிட்டதைப் போல, இந்த அச்சுறுத்தல் அதிகரிக்கும் நிலையில், அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதால், வித்தியாசமாக நம்மால் என்ன செய்ய முடியும்? அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் என்ன மாற்றம் ஏற்படும்?

மோடி: சர்வதேச சமூகம் இணைந்து முதல் நடவடிக்கையாக, சர்வதேச தீவிரவாதம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் ஒருங்கிணைந்த உடன்பாட்டை நிறைவேற்ற வேண்டும். இது ஐக்கிய நாடுகள் சபையில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுவே நாம் மேற்கொள்ள வேண்டிய முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இது குறைந்தபட்சம், தீவிரவாதியாக யாரைக் கருதலாம், தீவிரவாதியாக யாரை கருதக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தும். தீவிரவாதம் குறித்த வரையறை தெளிவுபடுத்தப்படும்.

இரண்டாவதாக, நாம் முக்கியமாக செய்ய வேண்டியது, தீவிரவாதத்தை அரசியல் அடிப்படையில் மட்டுமே பார்ப்பதோ, ஆய்வுசெய்வதோ கூடாது. நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று, மனித மதிப்புகளையும், மனிதநேயத்தையும் எவ்வாறு தாக்குகிறது என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும். சிரியாவில் நிலவும் தீவிரவாதத்தை ஒரு கோணத்திலும், சிரியாவுக்கு வெளியே உள்ள தீவிரவாதத்தை மற்றொரு கோணத்திலும் பார்ப்பது பிரச்சினையை ஏற்படுத்தும். மேலும், தீவிரவாதத்தை நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்று பிரித்துப் பார்ப்பதும் கூட, சவால்களையே ஏற்படுத்தும். இதேபோல, தாலிபான்களை நல்ல தாலிபான்கள் அல்லது கெட்ட தாலிபான்கள் என்று நீங்கள் பார்த்தாலும், அது பிரச்சினையையே ஏற்படுத்தும்.

இந்த கேள்விகளைத் தனித்தனியாக பார்க்கக் கூடாது என்று நான் கருதுகிறேன். இந்த பிரச்சினைக்கு ஒரே குரலில் தீர்வுகாண வேண்டும். தனித்தனியாக குரல் கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்வதால், தீவிரவாதத்தை எதிர்கொள்ளும்போது, சர்வதேச கவனத்தை குறைத்துவிடும். எனவே, ஒரே குரலில் எதிரொலிப்பது என்பதை நம்மால் எளிதில் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

நாம் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு விவகாரம், பிராந்திய அடிப்படையில் தீவிரவாதத்தைப் பார்க்கக் கூடாது. அதிபர் ஒபாமாவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும், இந்த ஆண்டு ஜனவரியிலும் நான் சந்தித்தபோது, குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில் சந்தித்தபோது, தீவிரவாதத்தை பிராந்திய அளவில் மதிப்பிடுவதை கைவிடுவதற்கான  பணிகளுக்கு தலைமை வகிக்குமாறு கோரிக்கை விடுத்தேன். இதனை நாம் நிறைவேற்றிவிடுவதுடன், இந்தப் பாதையில் செல்வதால், குறைந்தபட்சம் பிராந்திய அடிப்படையில் விடுக்கப்படும் உணர்வுப்பூர்வமான மிரட்டல்களுக்கு முடிவுகட்ட முடியும். இந்த நடவடிக்கை மூலம், தீவிரவாதத்தையும், பிராந்தியத்தையும் இணைத்துப் பேசும் தீவிரவாதிகளை முற்றிலும் தனிமைப்படுத்திவிட முடியும்.

தீவிரவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதில், நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் தகவல் தொழில்நுட்பம். தீவிரவாதிகள் பயன்படுத்தும் தகவல் தொழில்நுட்ப முறைகள் மற்றும் நிதியை பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவை பண மோசடி, போதைப் பொருள் விற்பனை, ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுடன் தீவிரவாதிகளுக்கு தொடர்பு உண்டு. நமக்குள்ளேயே சில கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும். அதாவது, தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன? தகவல் தொழில்நுட்பங்களை எங்கிருந்து பெறுகிறார்கள்? தேவையான நிதி எங்கிருந்து கிடைக்கிறது? என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும். இந்த விவகாரங்களில் ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு எளிதில் கிடைக்கும் தகவல் தொழில்நுட்பம், நிதி, ஆயுதங்கள் ஆகிய மூன்றையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

சர்வதேச தீவிரவாதம் குறித்து ஐநா-வில் ஒருங்கிணைந்த உடன்பாட்டை நிறைவேற்றிவிடுவதுடன், நான் குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால், தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளைத் தனிமைப்படுத்த சர்வதேச சமூகத்துக்கும், நம் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

டைம்: பிரதமர் அவர்களே, தீவிரவாதத்தை பிராந்திய அடிப்படையிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். தாலிபான் குறித்தும், ஐ.எஸ்.ஐ.எஸ். குறித்தும் நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆப்பிரிக்காவில் செயல்படும் போகோ ஹரம், அல்-சபாப் ஆகிய இரண்டு தீவிரவாத இயக்கங்கள், தங்களது செயல்பாடுகள் மூலம், உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகின்றன. இவை அனைத்துமே, தாங்கள் செய்வது இஸ்லாமுக்காகவே என்று கூறுகின்றன. இஸ்லாமிய உலகமும், இஸ்லாமிய உலகத் தலைவர்களும் தீவிரவாதப் பாதையில் உள்ள தங்களது மதத்தினரை நல்வழிப்படுத்தவும், கல்வியளிக்கவும் செய்வார்களா? தீவிரவாதத்துக்கு எதிராக போராட ஒருங்கிணைந்து செயல்பட முன்வருவார்கள் என்று கருதுகிறீர்களா?

மோடி: உங்களது தொடக்க கேள்வி, தாலிபான்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். பற்றி குறிப்பிட்டதைப் பற்றியது. இதன் காரணமாகவே, நான் பதில் அளிக்கத் தொடங்கும்போதே, தீவிரவாதிகளைத் தனிக் குழுக்களாக பார்க்கக் கூடாது என்று கூறினேன். நான் தாலிபான்கள் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்து தனிப்பட்ட முறையில் பதிலளிக்கவில்லை. எனினும், நான் குறிப்பிட்டதைப் போல, பெயர் அல்லது குழு அடிப்படையில் தனியாக பார்க்காமல், இந்தப் பிரச்சினையை தீவிரவாதம் என்ற மிகப்பெரும் அளவில் சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டியது அவசியம்.

தீவிரவாதம் என்பது சிந்தனை நடவடிக்கை என்று கருதுகிறேன். இது சர்வதேச சமூகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனுடன் எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையோ அல்லது மதத் தலைவர்களின் நடவடிக்கையையோ நான் தொடர்புபடுத்தவில்லை. நான் குறிப்பிட்டதைப் போல, மனித மதிப்புகள் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து, ஒன்றாக போராட வேண்டும். தனிப்பட்ட மதங்களைச் சேர்ந்த தனிநபர் குழுக்கள் என்று பார்க்கக் கூடாது என்றே நான் கருதுகிறேன்.

டைம்: நீங்கள் முன்னதாக கூறிய இரண்டு விஷயங்களுக்கு மீண்டும் செல்கிறேன். பிரதமர் அவர்களே, ஒவ்வொரு நாடும் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கவும், ஆதிக்க வரம்பை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்வதாக நீங்கள் கூறினீர்கள். சில நேரங்களில் இது சாதகமானதாக இருக்காது. மற்றொன்று, அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றுசேர்ந்து உலகில் என்ன செய்ய முடியும் என்பது. ஆனால், உக்ரைனில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை முறியடிக்க தற்போது அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவுக்கு சர்வதேச தடைவிதிக்க நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்களா?

மோடி: ஜி20 நாடுகள் மாநாட்டில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது, அதிபர் ஒபாமாவும் இருந்தார். அதிபர் புதினும் இருந்தார். இரண்டு அதிபர்கள் முன்னிலையில் எனது கருத்தை எடுத்துரைத்தேன். எனது கருத்து என்னவென்றால், ஐக்கிய நாடுகள் அமைப்பின் வழிமுறைகள் உள்ளன. ஐநா அமைப்பில், விதிமுறைகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் வழிமுறைகளுக்குள் ஏற்படுத்தப்பட்ட உடன்பாடுகளை சர்வதேச சமூகம் பின்பற்ற வேண்டும் என்பது தான்.

டைம்: மற்றொரு மிகப்பெரும் சர்வதேச விவகாரம், இந்த ஆண்டு இறுதியில் பாரீஸில் நடைபெற உள்ள வானிலை மாற்றம் குறித்த  மாநாடு. இதில், அதிகபட்ச கரியமில வாயு வெளியேற்றம் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்தும் அளவு இலக்கு குறித்தும் இந்தியா தெரிவிக்குமா?

மோடி: ஒட்டுமொத்த உலகையும், பல்வேறுபட்ட நாடுகளின் கலாசாரம் மற்றும் நாகரீக வரலாற்றையும் உன்னிப்பாக நீங்கள் ஆய்வுசெய்தால், குறிப்பாக, பல நூற்றாண்டுகளாக பின்பற்றிவரும் வாழ்க்கை முறைகளைப் பாருங்கள். அப்போது, உலகின் இந்தப் பகுதி, குறிப்பாக இந்தியா, தனது வரலாற்றின் பல ஆயிரம் ஆண்டுகளாக இயற்கையுடன் இணைந்து பொருளாதார வளர்ச்சியை மேற்கொண்டு வருவதை அறிவீர்கள். உலகின் இந்தப் பகுதி, குறிப்பாக இந்து நாகரிகத்தின்படி, இயற்கையை அழிப்பது குற்றமாகும். உங்களது தேவைகளை நிறைவேற்ற, இயற்கையிலிருந்தே நாம் எடுக்க வேண்டும். அதற்கும் மேலாக அழிக்கக் கூடாது.

இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால், இந்திய கலாசாரத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளைக் கூறுகிறேன். காலையில் நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்தவுடன், பூமி அன்னையின் மீது கால் வைக்கிறீர்கள். வலியை ஏற்படுத்துகிறீர்கள். குழந்தைகளுக்கு நாங்கள் கற்றுக் கொடுக்கும்போது, பூமியாகிய உங்களது தாய், வழங்குபவர் என்று போதிக்கிறோம். பூமி அன்னையின் மீது கால் வைத்து, வலியை ஏற்படுத்துவதற்கு முன்னதாக, மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறுகிறோம்.

நமது கலாசார வரலாற்றை போதிக்கும்போது, ஒட்டுமொத்த பிரபஞ்சமுமே ஒரு குடும்பம் என்று கூறுகிறோம். உதாரணமாக, குழந்தைகளைத் தூங்கவைப்பதற்காக கதை சொல்லும்போதும், பாடப் புத்தகங்களிலும், சந்திரனை தாய்மாமா என்றும், சூரியனை தாத்தா என்றும் குறிப்பிடுகிறோம். எனவே, இந்த விவகாரத்தை ஒரே குடும்பம் என்ற அடிப்படையில் நாம் பார்க்கும்போது, இயற்கையின் மீதான நமது தொடர்பு ஆழமானதாகவும், வி்த்தியாசமானதாகவும் உள்ளது.

வானிலை மாற்றம் குறித்த 21-வது மாநாடு (COP21) குறித்த கேள்வியைப் பொருத்தவரை, ஒட்டுமொத்த உலகையும், வானிலை மாற்றம் குறித்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் நீங்கள் பார்த்தீர்களானால், இந்தக் காரணத்துக்காக இயற்கையான தலைமை வகிக்கும் உலகின் ஒரு பகுதி இருக்குமானால், அது உலகின் இந்தப் பகுதிதான். இந்த விவகாரத்தில், எனது குறிப்பிட்ட பங்களிப்பு மற்றும் பொறுப்பை, நான் தெளிவாக உணர்ந்துள்ளேன். உண்மையில், நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, உலகில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்குள் வானிலை மாற்றம் குறித்த துறையை உருவாக்கிய 4-வது மாநிலமாக எனது ஆட்சியில் இருந்த குஜராத் இருந்ததாக கருதுகிறேன். மாநிலத்தில் நாங்கள் உருவாக்கிய வளர்ச்சிக் கொள்கையுடன் இந்தப் பணிகளை இணைத்து செயல்படுத்தினோம்.

எதிர்காலத்திலும் கூட, நாங்கள் எடுக்கும் முயற்சிகளில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எரிசக்தியை பயன்படுத்த தீவிர கவனம் செலுத்தப்படும். உதாரணமாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் மாபெரும் முயற்சிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் 175 கிகாவாட் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதில், சூரிய சக்தி மூலம் 100 ஜிகாவாட்டும், காற்றாலை மூலம் 75 கிகாவாட்டும் உற்பத்தி செய்ய உள்ளோம். இது உண்மையில் எனது அரசின் மிகப்பெரும் முயற்சியாகும்.

நான் மேலும் ஒரு இலக்கு அடிப்படையிலான திட்டத்தை கொண்டுவந்துள்ளேன். இதனைக் கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டம் என்று அழைக்கிறோம். கங்கை நதிக்கு மறுவாழ்வு அளிக்க இது அவசியம். கங்கை நதி 2,500 கிலோமீட்டர் தொலைவுக்கு ஓடுகிறது. இந்திய மக்கள் தொகையில், சுமார் 40 சதவீதத்தினர், நேரடியாகவோ, மறைமுகவோ இந்த நதியுடன் தொடர்புடையவர்கள். இது வெறும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் மட்டுமல்ல, உண்மையில் மிகப்பெரும் வளர்ச்சி நடவடிக்கை. இதன் முக்கிய நோக்கம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான்.

உண்மையில், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் நான் கூறிக் கொள்வதெல்லாம், தங்களது நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வளர்ச்சிப் பணியை மேற்கொள்ள முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். அவர்கள் இங்கு வந்து, கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் சேரலாம். நான் ஏற்கனவே கூறியதுபோல, இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வளர்ச்சி நடவடிக்கை. இது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.

இந்த இலக்கை அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையை பல்வேறு அடுக்குகளாக செயல்படுத்தி வருகிறேன். உதாரணமாக, ஒரு அடுக்கு, எரிசக்தி பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது. எல்.இடி பல்புகளை விநியோகிக்கவும், பிரபலப்படுத்தவும், தேசிய அளவிலான பிரசாரத்தை மேற்கொண்டோம். இது கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கிறது. மேலும், கார்பனை அடிப்படையாகக் கொண்ட எரிசக்தி நுகர்வை தேசிய அளவில் குறைக்கிறது.

இந்தியாவில் விவசாயிகளுக்காக, மண் சுகாதார அட்டை என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தேன். இந்தத் திட்டத்தில், விவசாயிகளுக்கு, தாங்கள் விளைவிக்கும் மண்ணில் உள்ள நச்சுத்தன்மையை தெரிவிக்கிறோம். இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் அறிவியல்பூர்வமாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம். இதன்படி, ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும். இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதை அதிகரிக்கச் செய்து, மண்ணின் வளம் பாதுகாக்கப்படும். இதன்மூலம், நாட்டில் வேளாண் சாகுபடியால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் இயற்கையாகவே குறைக்கப்படும். இந்தியாவின் இமயமலைப் பிராந்தியத்தை, ஒட்டுமொத்த உலகுக்கும் இயற்கை வேளாண்மை தலைநகராக மாற்ற விரும்புகிறேன்.

எங்களது மற்றொரு நடவடிக்கை குறித்து கூறுகிறேன். இது சிறிய நடவடிக்கையாகத் தோன்றலாம். எனினும், நாட்டில் மிகப்பெரும் அளவில் சுற்றுச்சூழல் மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது, இந்தியாவில் வீடுகளுக்கு சமையல் செய்வதற்காக மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்களை வழங்குகிறோம். சில காலத்துக்கு முன்னதாக, சமையல் எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதற்காக, சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு செல்வந்தர்களுக்கு நான் கோரிக்கை விடுத்தேன். குறுகிய காலத்தில், 4 லட்சம் குடும்பத்தினர் மானியத்தை விட்டுக் கொடுத்தனர். இலவசமாக நிரப்பப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏழைக் குடும்பங்களுக்கு வழங்குவதே எனது நோக்கம். இது மூன்று இலக்குகளை நிறைவேற்ற உதவும்.

முதலாவது, சமையலுக்காக காட்டிலுள்ள மரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும். இதன்மூலம், வனப்பகுதி குறைவது தடுக்கப்படும். இரண்டாவது, கார்பன் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும். ஏனெனில், காட்டிலுள்ள மரங்களை எரிப்பதால், கார்பன் வாயு அதிக அளவில் வெளியேறும். மூன்றாவது, சமையலுக்காக மரங்களை ஏழைக் குடும்பத்தினர் எரிக்கும்போது, அவர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் குறையும். எனவே, மிகவும் எளிமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடவடிக்கை மூலம், கார்பன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது, காடுகள் அழிவதைக் கட்டுப்படுத்துவது, ஏழைக் குடும்பங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவது ஆகிய 3 இலக்குகளையும் நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

அண்மையில் நாங்கள் அறிவித்த மற்றொரு நடவடிக்கை, இரண்டு திட்டங்களை ஒருங்கிணைத்துள்ளது. அதாவது, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மற்றும் கிராமப்புறங்களில் பசுமையான  இடங்களை அதிகரிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது. கிராமப்புற நிலங்களை வனப்பகுதியாக மாற்றுவதற்கும், கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் ரூ.40,000 கோடி வழங்கியுள்ளோம். இதன்மூலம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

மற்றொரு நடவடிக்கையாக, இந்தியாவின் 50 நகரங்களில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து (Metro mass transportation) வசதிகளை ஏற்படுத்த உள்ளோம். இதேபோல, இந்தியாவின் 500 நகரங்களில் விரிவான கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். சர்வதேச போட்டி வழிமுறைகளைப் பயன்படுத்தி, அரசு மற்றும் தனியார் இணைந்து இந்த வசதிகளை ஏற்படுத்துவதே இதன் திட்டம். நான் குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும், கடந்த 10 மாதங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இதன் முக்கிய நோக்கம், நமது பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இருப்பதை உறுதிப்படுத்துவதே ஆகும்.

இரண்டாவதாக, நான் கூறும் வழிமுறை மீது, சர்வதேச சமூகத்தினர் இன்னும் கவனம் செலுத்தத் தயாராக இல்லை அல்லது இன்னும் கவனம் செலுத்தவில்லை. அதாவது, நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது. ஒவ்வொன்றையும் தூக்கி வீசும் கலாசாரம், குப்பைகளை ஏற்படுத்தும் கலாசாரத்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மறுசுழற்சி அல்லது பூமியின் வளங்களை மீண்டும் பயன்படுத்துவது என்பது முக்கியமான வழிமுறை. இதனை நமது தினசரி வாழ்க்கை முறையுடன் இணைக்க வேண்டும். அதாவது, நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

டைம்: பிரதமர் அவர்களே, இந்தியாவில் நீங்கள் அறிமுகப்படுத்திய பொருளாதார மற்றும் வளர்ச்சி சீர்திருத்தங்கள் குறித்து நீங்கள் பேசினீர்கள். ஆனால், வளர்ச்சிக்கு மற்ற குறியீடுகள் உள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் ஒபாமா கூறும்போது, இந்தியா வெற்றிபெற வேண்டுமானால், மத அடிப்படையில் பிளவுபடாமல் இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார். அதிபர் ஒபாமா-வின் கருத்துகளின் அடிப்படையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

மோடி: இந்தியா என்பது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட நாகரீகம். இந்தியாவின் வரலாற்றை நீங்கள் கவனமாக ஆய்வுசெய்தால், மற்றொரு நாட்டை இந்தியா தாக்கியதாக எந்தவொரு சம்பவத்தையும் பார்க்க மாட்டீர்கள். இதேபோல, எங்களது வரலாற்றில், இனம் அல்லது மத அடிப்படையில், போர் புரிந்ததாக எந்தவொரு குறிப்பையும் உங்களால் காண முடியாது. நமது நாகரிகமான வேற்றுமையான இந்தியா என்பது உண்மையில் அழகானது. இதனைப் பார்த்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். பல ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவரும் எங்களது வாழ்க்கை, அதாவது, இந்த வாழ்க்கை தத்துவம், எங்களது அரசியல் சாசனத்தில் பிரதிபலி்க்கிறது. எங்களது அரசியல்சாசனம், தனிமைப்படுத்தி உருவாக்கப்படவில்லை. எங்களது சொந்த நாகரிகமான அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற கொள்கையை பிரதிபலிக்கிறது. இந்திய புனிதநூல்களில், “உண்மை என்பது ஒன்று, அதனை முனிவர்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, உலக மத மாநாட்டில் கலந்துகொள்ள சிகாகோ சென்ற சுவாமி விவேகானந்தர் கூறும்போது, மதங்களுக்கு மதிப்பளிப்பது என்பது, அனைத்தையும் சகித்துக் கொள்வதா என்பதல்ல; அனைத்து மதங்களும் உண்மை என்பதை நம்புகிறார்களா என்பதுதான் என்று கூறினார். இந்தியாவும், இந்திய நாகரிகமும் மதத்தின் அடிப்படையில் செல்கிறது என்பது சாதகமான நிலைப்பாடு. உலகில் மிகவும் குறைவான அளவில் உள்ள சிறுபான்மையினரான பார்சி இனத்தவர்கள், இந்தியாவில் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளனர். நமது ராணுவத் தலைமைத் தளபதிகளில் ஒருவர், பார்சி இனத்தை சேர்ந்தவர். நமது மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவர் பார்சி இனத்தவர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவரும், இந்த மிகச்சிறிய சிறுபான்மை இனத்திலிருந்து வந்தவர். எங்களைப் பொருத்தவரை, அனைத்து மதங்களையும் ஏற்க வேண்டும் என்பது எங்களது ரத்தத்தில் கலந்துள்ளது. இது எங்களது நாகரிகத்தில் உள்ளது. ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பது எங்களது அமைப்பில் ஆழமாக பதிந்துள்ளது.

எனது தத்துவம், எனது கட்சியின் தத்துவம், எனது அரசின் தத்துவமும் கூட எதுவென்றால், நான் கூறும் “அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளர்ச்சி” என்பதுதான். எனவே, இந்த தத்துவத்தின் அடிப்படையில், எங்களது கொள்கை என்பது அனைவரையும் ஒன்றாக இணைத்து, உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி பயணிப்பதாகும்.

டைம்: அமெரிக்காவில் தேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும்போது, அமெரிக்காவின் பெரும்பாலான அரசியல் தலைவர்களும், தங்களது நம்பிக்கை முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தனர். நம்பிக்கையின்  கருத்துகளே தங்களுக்கு தலைவர்களாக தெரிவதாக கூறினர். உங்களது இந்து மத நம்பிக்கையின் படி, உங்களுக்கு இந்தியாவின் தலைவர் என்று யாரை கூறுவீர்கள் என்று சிறிதளவு கூறுங்கள்.

மோடி: மதமும், நம்பிக்கையும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். அரசைப் பொருத்தவரை, ஒரே புனித நூல், இந்திய அரசியல்சாசனம். உண்மையில், இந்துமதம் குறித்து பார்க்கும்போது, இந்திய உச்சநீதிமன்றம், தெளிவான வரையறை செய்துள்ளது. அதாவது, இந்து என்பது மதம் அல்ல. இது வாழ்க்கை முறை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனது சொந்த நம்பிக்கையை ஒருவர் பார்த்தால், நான் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த மதிப்புகளுடன் நான் வளர்ந்தேன். அந்த மதம் தான், வாழ்க்கை முறை. மேலும் நாங்கள், ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம், அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறுகிறோம். இந்த மதிப்புகளுடனேயே நான் வளர்ந்தேன்.

இந்து தத்துவம், அதாவது இந்திய தத்துவத்தின் சாராம்சம் என்னவென்றால், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அனைவரும் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்பதுதான். இது குறிப்பிட்ட ஒரு மதத்துக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கோ கூறப்பட்டது இல்லை. இதுவே தத்துவம். இந்த வாழ்க்கை முறை அனைத்து சமூகத்தினருக்குமானது.

மேலும், இந்து என்ற மதம், ஆழமான மற்றும் விரிவான வேற்றுமையைக் கொண்டது. உதாரணமாக, சிலைகளை வைத்து வழிபடுபவனும் இந்துதான். அதேபோல, சிலை வழிபாட்டை எதிர்ப்பவனும் இந்துதான்.

டைம்: திரு.பிரதமர் அவர்களே, இந்தியாவில் சிறுபான்மை மதங்கள் குறித்து தேவையில்லாத கருத்துகளை உங்களது கட்சியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதனால், தங்களது நம்பிக்கையை இந்தியாவில் பின்பற்ற முடியுமா என்று முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிலர், சந்தேகமடைந்துள்ளதாக நாங்கள் அறிகிறோம். உங்களது தலைமையிலான ஆட்சியில், அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நீங்கள் கூறியதாக தெரியவந்துள்ளது?

மோடி: இதுவரை பாரதிய ஜனதா கட்சி மற்றும் எனது அரசைப் பொறுத்தவரை, இதுபோன்ற கொள்கைகள் மீது எங்களுக்கு முற்றிலும் நம்பிக்கை கிடையாது. குறிப்பிட்ட சிறுபான்மை மதம் குறித்து யாராவது தங்களது தனிப்பட்ட கருத்துக்களை எங்காவது வெளிப்படுத்தியிருந்தால், உடனடியாக நாங்கள் மறுத்து வருகிறோம். பாரதிய ஜனதா கட்சி மற்றும் எனது அரசைப் பொறுத்தவரை, நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று, ஒரே ஒரு புனித நூல் உண்டு. அது இந்திய அரசியல்சாசனம். எங்களுக்கு நாட்டின் ஒற்றுமையும், நல்லிணக்கமும் அதிமுக்கியமானவை.

அனைத்து மதத்தினருக்கும், அனைத்து சமூகத்தினருக்கும் சமமான உரிமைகள் உண்டு. அவர்களுக்கு முழுமையான, ஒட்டுமொத்தமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எனது பொறுப்பு. சாதி, இனம் மற்றும் மத அடிப்படையில், எந்தவொரு பாகுபாடு காட்டப்படுவதையும் எனது அரசு ஏற்றுக் கொள்ளாது அல்லது சகி்த்துக் கொள்ளாது.

எனவே, இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகள் குறித்து யூகத்தின் அடிப்படையில் சந்தேகம் கொள்ளத் தேவையி்ல்லை.

டைம்: பிரதமர் அவர்களே, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் குறித்து கேட்கிறேன். தேர்தல் நேரத்தில் பொருளாதாரம் குறித்து முக்கியமாகவும், அதிகமாகவும் பேசப்பட்டது. ஆனால், இப்போது, பெரும்பாலான முதலீ்ட்டாளர்களும் சீர்திருத்தத்தின் வேகம் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இந்த சீர்திருத்தம் போதுமான வேகத்தில் உள்ளதா? பெட்ரோலிய விலை வீழ்ச்சியால், பொருளாதாரம் பயனடைந்துள்ளது… சீர்திருத்தத்தின் வேகம் குறித்த கேள்விகளுக்கு உங்களது பதில் என்ன? உங்களது இரண்டாவது ஆண்டில், என்ன சீர்திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்?

மோடி: கடந்த ஆண்டு (2014) மார்ச்-மே காலகட்டத்தில் வெளியான  செய்தித்தாள்களை எடுத்துப் படித்தீர்களானால், நாங்கள் தேர்தலை எதிர்கொண்டபோது, நிலவிய சூழல்களை அறிந்துகொள்ள முடியும். அதில் ஒன்று, அரசில் எதுவுமே நடைபெறவில்லை என்பது தெரியவரும். அந்த நேரத்தில் கொள்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தன. இரண்டாவது, அரசு அமைப்பு முழுவதிலும் ஊழல் பரவியிருந்தது. மூன்றாவது, தலைமையே இல்லை. மத்தியில் பலவீனமான அரசு இருந்தது. இந்த பின்னணியிலும், சூழ்நிலையிலும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். தேர்தலுக்குப் பிறகு, கடந்த ஆண்டில் (2014) ஆட்சிக்கு வந்த எங்களது அரசை, நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியுடன் பார்க்க வேண்டும். இதற்காக கடந்த அரசின் 10 ஆண்டுகால ஆட்சியையும், எங்களது 10 மாத கால ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

சர்வதேச அளவில், ஒட்டுமொத்த உலகமும், இந்தியா குறித்து மிகவும் வியப்புடனும், எதிர்பார்ப்புடனும் பார்த்தது. அந்த அளவுக்கு வாய்ப்புகளை இந்தியா அளித்ததை உங்களால் நிச்சயமாக பார்க்க முடியும். வேறுவிதமாக இதனை கூறுவதென்றால், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 4 மிகப்பெரும் வளரும் பொருளாதாரங்கள் இணைந்து பிரிக் அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரிக் அமைப்பில் உள்ள நாடுகள் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. 2014-ம் ஆண்டுக்கு 6-7 ஆண்டுகள் முன்னதாக, பிரிக் (BRIC) அமைப்பில் உள்ள ஐ (இந்தியா) என்பது குறைந்த அதிகாரம் கொண்டதாக அல்லது பிரிக் குழுவுக்கு தடையாகவே இருந்தது.

கடந்த 10 மாதங்களில், பிரிக் அமைப்பில் ஐ என்பது தனது நிலையை மீண்டும் பிடித்தது. சர்வதேச அளவில், ஐஎம்எஃப், உலக வங்கி, மூடி அல்லது மற்ற கடன் மதிப்பீட்டு அமைப்புகள் என எதுவாக இருந்தாலும், இந்தியப் பொருளாதாரத்துக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக ஒரே குரலில் கூறின. இது வேகமாக முன்னேறி வருகிறது. சர்வதேச பொருளாதார அமைப்பில் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு காரணியாக மீண்டும் மாறியது. நாடுகளில் தற்போது உலகில் அதிவேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகளை, நாட்டுக்குள்ளும், சர்வதேச அளவிலும் பூர்த்திசெய்வதில் மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறோம். இதனை கடந்த 10 மாதங்கள் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.

5 ஆண்டுகளுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதற்கு தெளிவான வழிமுறைகளை மனதில் வைத்துள்ளேன். இந்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே கடந்த ஓராண்டாக செயல்பட்டுள்ளோம். அடுத்த 4 ஆண்டுகளுக்கு படிப்படியான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவோம். கடந்த 11 மாதங்களாக மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, கொள்கை சீர்திருத்தங்களை மட்டுமே அரசு மேற்கொள்ளவில்லை. நிர்வாக சீர்திருத்தங்களிலும் கவனம் செலுத்தினோம். மேலும்,

(அ) தொழில் செய்வதை எளிதாக்கினோம்.

(ஆ) அரசை அதிக நம்பகத்தன்மை உள்ளதாக மாற்றினோம்.

(இ) தொழில்நுட்பம் மற்றும் ஆளுமையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டோம்.

(ஈ) அரசின் அனைத்து நிலைகளிலும், உள்ளாட்சி அல்லது மாநில அரசு அல்லது மத்திய அரசு என அனைத்திலும் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தோம்.

ஒட்டுமொத்தமாக மாறுபட்ட அளவில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டோம். கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைப்பை  கொண்டுவந்து மத்திய அளவிலும், மாநில அளவிலும் பதிலளிக்க செய்தோம்.

இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரும் சீர்திருத்தம், வரிவிதிப்பு துறையில் மேற்கொள்ளப்பட உள்ளது. அது ஜிஎஸ்டி. இதனை 2016-ம் நிதியாண்டிலிருந்தே செயல்படுத்த தொடங்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.

மற்றொரு உதாரணம், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 49 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். இது கடந்த 7-8 ஆண்டுகளாக செயல்படுத்த முடியாமல் இருந்தது. எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது. எங்களது அரசின் முதல் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்றி நாங்கள் உறுதிப்படுத்தினோம்.

டைம்: பிரதமர் அவர்களே, பொருளாதார வளர்ச்சியில் சீனாவையும், இந்தியாவையும் சிலர் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். சீனப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருவதாகவும், வெற்றியடைந்ததாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். ஏனெனில், ஒரு கட்சி ஆட்சி என்பதால், கட்சியின் தலைவர் தனது மற்றும் தனது அமைச்சரவையின் கொள்கைகளை முடிவுசெய்கிறார் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் உண்டு. நாடாளுமன்ற கீழ்அவையில் உங்களுக்கு பலம் உண்டு. ஆனால், மேலவையில் பெரும்பான்மை பலம் இல்லை. இதனால், புதிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் போன்றவற்றை நிறைவேற்றுவதில் தடை உள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள அமைப்பு அவ்வாறு உள்ளது. எனவே, தேவையானவற்றை நிறைவேற்றுவதற்கு அதிபர் ஜி-வுக்கு இருப்பது போன்ற அதிகாரம் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தது உண்டா?

மோடி: இந்தியா இயற்கையாகவே ஜனநாயக நாடு. அரசியல்சாசன சட்டத்தின் காரணமாக மட்டும் ஜனநாயக நாடாக மாறவில்லை. இது நமது மரபணுவிலேயே உள்ளது. இந்தியாவில் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் இருக்கும் விவகாரத்தில், தேசத்தின் நலன் கருதி, முடிவெடுக்கும் வல்லமை, அரசியல் கட்சிகளுக்கு இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்களைப் பொறுத்தவரை, ஜனநாயகமும், ஜனநாயக மதிப்பின் மீதான நம்பிக்கையும், மதிக்கப்பட வேண்டியவை. இது நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பரவியுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலவையில் எங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பணிகளை நீங்கள் பார்த்தால், எங்களது அரசுக்கு சாதனைதான். நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையில், நிறைவேற்றப்பட்ட பணிகள் 124%. இதுவே மேலவையில் நடைபெற்ற பணிகள் 107%-ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக, சட்ட நடவடிக்கைகளில் சாதகமான செய்திகளையே தெரிவிக்கிறது. ஒட்டுமொத்தமாக, நாடாளுமன்றத்தில் 40 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தியாவை ஆட்சி செய்ய சர்வாதிகாரம் தேவையா என்று நீங்கள் கேட்டீர்கள். தேவையில்லை என்பதுதான் பதில். நாட்டை ஆட்சிசெய்ய சர்வாதிகார சிந்தனை தேவையா என்று நீங்கள் கேட்டால், இல்லை, தேவையில்லை. இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல ஏதாவது தேவை என்றால், அது ஜனநாயகம் மற்றும் ஜனநாயக மதிப்புகள் மீதான நம்பிக்கைதான். அதுவே தேவை என்று கருதுகிறேன், அது எங்களிடம் உள்ளது. தனிப்பட்ட முறையில் என்னிடம் நீங்கள், ஜனநாயக மதிப்புகளை ஒரு கையிலும், சொத்து, அதிகாரம், வளம் மற்றும் புகழ் ஆகியவற்றை மற்றொரு கையிலும் வைத்துவிட்டு எது வேண்டும் என்று கேட்டால், மிகவும் எளிதிலும், எந்த சந்தேகமும் இன்றியும், ஜனநாயகம் மற்றும் ஜனநாயக மதிப்புகள் மீதான நம்பிக்கையையே தேர்வுசெய்வேன்.

டைம்: ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று பேச்சுரிமை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கொடுமையான பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான ஆவணப் படத்துக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது. அரசு ஏன் இதனை செய்தது? உங்களைப் பொருத்தவரை, பேச்சுரிமையின் எல்லை என்ன? பேச்சுரிமைக்கு எல்லை தேவை என்று நினைக்கிறீர்களா?

மோடி: இந்த கேள்வியை எதிர்கொள்ளும்போது, இரண்டு மாறுபட்ட விஷயங்கள் உள்ளன. இரண்டு விஷயங்களுக்கும் பதிலளிக்க முயற்சி மேற்கொள்கிறேன். ஆனால், முதலாவது மேலோட்டமாக கூற முடியும். கலிலியோ குறித்த அனைவருக்கும் தெரிந்த சம்பவத்தை நான் நினைவுகூர்கிறேன். சூரியனை சுற்றி பூமி வலம்வரும் விதியை வெளியிட்டார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் சமூக அமைப்பில், அந்த விதி, பைபிளில் குறிப்பிட்டதற்கு மாறானதாக இருந்தது. எனவே, அந்த நேரத்தில் கலிலியோவை சிறையில் அடைக்க முடிவுசெய்யப்பட்டது.

தற்போது இந்தியா நாகரிகமானது. இங்கு தியாகத்தின் கொள்கை மற்றும் தத்துவம் ஆகியவை, நமது வளர்ப்பு முறையிலேயே கற்பிக்கப்படுகிறது. நமது வரலாற்றைப் பார்த்தோமென்றால், மாபெரும் சிந்தனையாளர் இருந்தார். அவர் சார்வாகா என்று அழைக்கப்பட்டார். இந்திய கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட தீவிர இன்பவியல் கோட்பாடுகளைப் பின்பற்றினார். அவர் கூறும்போது, நாளையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்றைய வாழ்க்கையை வாழுங்கள், உணவருந்துங்கள், மகிழ்ச்சியாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்திய கொள்கைகளுக்கு முற்றிலும் முரண்பாடான தீவிர கருத்துக்களை கொண்டிருந்தபோதும், அவர் முனிவருடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டார். இந்திய சமூகத்தில் கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பேச்சு சுதந்திரத்தைப் பொறுத்தவரை, நமது உறுதி மற்றும் நம்பிக்கையில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

நீங்கள் குறிப்பிட்ட ஆவணப் படத்தை ஒளிபரப்பும் விவகாரத்தை பார்க்கும்போது, இதில், பேச்சு சுதந்திரம் குறித்து கேள்வி எழவில்லை. இது சட்டரீதியான கேள்வி. இதனை இரண்டு அல்லது மூன்று விதமாக பார்க்க வேண்டும். ஒன்று, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடக் கூடாது. இந்த நேர்காணலை ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் தெரியவரும். இரண்டாவது, இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவரின் நேர்காணலுடன் கூடிய ஆவணப் படத்தை ஒளிபரப்பினால், நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படும். மூன்றாவது, பாதிக்கப்பட்டவரை பாதுகாக்க வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டியது நமது பொறுப்பும் கூட. ஆவணப் படத்தை ஒளிபரப்ப அனுமதித்திருந்தால், பாதிக்கப்பட்டவரின் மரியாதையை இழக்கச் செய்தவராக மாறிவிடுவோம்.

எனவே, இந்த வழக்கில், பேச்சு சுதந்திரம் என்று கருதவில்லை. சட்டம் தொடர்பானது. பாதிக்கப்பட்டவருக்கு மதிப்பளிக்க வேண்டும். மேலும், நீதி நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். பேச்சு சுதந்திரத்தைப் பொறுத்தவரை, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று, அதுகுறித்து கேள்வியே இல்லை. நமது ஜனநாயக மதிப்பில் முக்கியமான காரணியாக பேச்சு சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கிறோம்.

டைம்: மிகவும் ஆர்வமாக உள்ள பீட்டருக்கு வாய்ப்பு அளிப்பதற்கு முன்னால், கடைசியாக ஒரு கேள்வியை கேட்கிறேன். ஆதிக்கம் குறித்தும், டைம் 100 குறித்தும் அதிகமாக பேசினோம். இவர்கள், உலக அரங்கில் தற்போது தீவிர ஆதிக்கம் செலுத்தி வருபவர்கள். உங்களிடம் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துபவர் யார் என்று எங்களுக்கு கூற முடியுமா?

மோடி: நீங்கள் கேட்ட கேள்வி, உண்மையில் எனது ஆழ்மனதை தொட்டுவிட்டது. நான் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். குழந்தையாக இருக்கும்போது, ரயில் பெட்டிகளில் தேநீர் விற்றுள்ளேன். எனது தாய் வாழ்வாதாரத்திற்காக பாத்திரங்களைக் கழுவுவார். மற்றவர்களின் வீடுகளில் வீட்டு வேலைகளை செய்வார்.

வறுமையை மிக அருகில் நான் பார்த்துள்ளேன். நானும் வறுமையில் வாழ்ந்தேன். எனது ஒட்டுமொத்த குழந்தைப் பருவமும் வறுமையிலேயே கழிந்தது. எனக்கு வறுமை தான் எனது வாழ்க்கையில் முதலாவது ஊக்குவிப்பாக இருந்தது. ஏழைகளுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற உறுதியை ஏற்படுத்தியது. எனவே, எனக்காக வாழக் கூடாது, மற்றவர்களுக்காக வாழ வேண்டும், மற்றவர்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று முடிவுசெய்தேன். வறுமையில் வளர்ந்த எனது அனுபவம், குழந்தைப் பருவத்தில் என்னைக் கடுமையாகப் பாதித்தது. 12 அல்லது 13-வது வயதில் சுவாமி விவேகானந்தரின் பணிகளை படிக்கத் தொடங்கினேன். அதுவே, எனக்கு ஊக்கத்தையும், தொலைநோக்கு பார்வையையும் அளித்தது. மேலும், எனது உணர்வுகளை துல்லியமானதாகவும், ஆழமானதாகவும் மாற்றி, வாழ்க்கையை புதிய கோணத்துக்கு மாற்றியது. 15 அல்லது 16-வது வயதில், என்னை மற்றவர்களுக்காக அர்ப்பணிக்க முடிவுசெய்தேன். இதுநாள் வரை அந்த முடிவையே பின்பற்றி வருகிறேன்.