பி.எம்.இந்தியா
நமது நட்பு வரலாற்றில், இன்றைய நாள் குறிப்பிடத்தக்கதொரு நாள்.
பதவியேற்ற பிறகு முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு, இங்கு வந்துள்ள மாண்புமிகு `பிரசண்டா’வையும், அவருடைய குழுவில் உள்ள உறுப்பினர்களையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே,
நம்முடைய இரு சமூகத்தவரிடத்திலும் ஆழமான வரலாற்று உறவுகளும், நாகரீகத் தொடர்புகளும் வேரூன்றி உள்ளன.
நதிகளைப் பகிர்ந்து கொள்வது, திறந்திருக்கும் எல்லைப் பகுதி, மக்களுக்கு இடையில் காலம் காலமாக உள்ள உறவுகள் நமது இரு தேசங்களையும் நெருக்கமாகப் பிணைத்துள்ளன.
நமது அரசுகளுக்கு இடையில் உள்ள தொடர்புகளுடன், நமது சமூகங்களுக்கு இடையே உள்ள தொடர்புகள் நமது பங்களிப்பை ஆழமாக்கி, பண்புகளை உருவாக்கியுள்ளன.
நம்முடைய சாதனைகளைக் கொண்டாடுவதைப் போலவே, கஷ்டமான நேரங்களில் நம்முடைய சுமைகளையும் நாம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
சொல்லப் போனால், நமது நட்பு என்பது காலங்கடந்தது மற்றும் தனித்துவமானது.
அடுத்தடுத்த பக்கத்து நாடுகள் மற்றும் நெருக்கமான நட்பு நாடுகள் என்ற வகையில், நேபாளத்தின் அமைதி, நிலைப்புத்தன்மை மற்றும் பொருளாதார வளமை ஆகியவை நமது கூட்டு நோக்கமாக இருக்கின்றன.
நேபாளத்தின் வளர்ச்சிப் பயணம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும், உங்களின் பங்குதாரராக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
நேபாளத்தில் ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்துவதில் தனிப்பட்ட முறையில் நீங்கள் ஆற்றிய பங்கையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
நேபாளத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் உந்துசக்தியாக நீங்கள் இருந்து வருகிறீர்கள். உங்களுடைய அறிவார்ந்த தலைமையின் கீழ், பங்கேற்புடன் கூடிய பேச்சு வார்த்தை மூலம், உங்களின் பன்முகத்தன்மையான சமூகத்தில் அனைத்து தரப்பினரின் விருப்பங்களுக்கும் இடம் கொடுத்து அரசியல்சாசனத்தை நேபாளம் வெற்றிகரமாக செயல்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்தப் பெருமுயற்சியில் அனைத்து வெற்றிகளும் பெற உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
நண்பர்களே,
இன்று நாங்கள் மேற்கொண்ட விரிவான மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில், பிரதமர் பிரசண்டாவும் நானும் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து முழுமையாகப் பேசினோம்.
நேபாளத்தின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதை பலப்படுத்த இந்தியா தயாராக இருப்பதையும் பக்கபலமாக இருப்பதையும் பிரதமர் பிரசண்டாவிடம் நான் தெரிவித்தேன்.
மேலும் நேபாள அரசாங்கம் மற்றும் மக்களின் முன்னுரிமை தேவைகளின் அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம்.
இந்த விஷயத்தின் அடிப்படையில், நேபாளத்தில் பூகம்பத்துக்குப் பிந்தைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி அளிக்க இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு பேரழிவை ஏற்படுத்தி பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு இது ஆறுதலைத் தரும் என்று நான் நம்புகிறேன்.
இதுதவிர டெராய் சாலைகளின் 2-ம் கட்ட பணிகள், மின்சார பகிர்மான வழித்தடங்கள், துணை மின் நிலையங்கள் அமைத்தல் மற்றும் காஸ்கியில் பாலிடெக்னிக் அமைத்தல் ஆகியவற்றுக்கு கூடுதல் கடன் அளிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
நண்பர்களே,
மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற கூட்டு நோக்கங்களை அடைவதற்கு, நமது சமூகங்களுக்கு இடையில் பிணைப்பு ஏற்படுதல் அவசியம் என்பதை பிரதமர் பிரசண்டாவும் நானும் பகிர்ந்து கொண்டோம்.
நமது பாதுகாப்பு அக்கறைகள் நெருக்கமாக ஒருமித்துள்ளதையும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பதையும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
நமது நாடுகளுக்கு இடையே திறந்திருக்கும் எல்லைகள், நமது மக்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடலுக்கு அதிக வாய்ப்புகளை அளிக்கிறது.
ஆனால், எல்லையை தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கும் சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதிலும் நாம் தொடர்ந்து கவனமாக இருந்தாக வேண்டும்.
எனவே, நமது ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்புகளைத் தொடருவது, நமது வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் பங்களிப்பு மேம்பாட்டுக்கு முக்கியமானதாக உள்ளது. மேலும் இரு நாட்டு மக்களின் நலன்களுக்கும் அது முக்கியமானதாக உள்ளது.
நண்பர்களே,
நேபாளத்துடன் நமது பங்களிப்புக்கு வர்த்தகம், தொடர்புநிலை, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பரஸ்பர முதலீடு ஆகியவை முக்கியமான தூண்களாக உள்ளன.
வான்வெளியில் அனுமதி, எல்லைகள் கடந்த மின்சார வர்த்தகம், போக்குவரத்து வழித்தடங்கள், எல்லைகள் கடந்த தொடர்பு நிலை ஆகியவற்றில் இந்தியாவின் முயற்சிகள், நேபாளத்துக்கு நேரடியாக பயனளித்து, நமது பொருளாதார பங்களிப்பை பலப்படுத்த உதவியாக இருக்கும்.
எரிசக்தி மற்றும் நீர் வள துறைகள் உள்பட பொருளாதார பங்கேற்பில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து இந்தியாவும் நேபாளமும் நெருக்கமாக செயல்பாடுகள் கொண்டிருக்கின்றன.
தற்போது பணிகள் நடந்து வரும் நீர்மின் உற்பத்தித் திட்டங்களையும், மேம்பாடு மற்றும் பகிர்மான வழித்தடங்களை செயல்படுத்தும் திட்டங்களையும் வேகமாகவும், வெற்றிகரமாகவும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது என்று பிரதமர் பிரசண்டாவும் நானும் ஒப்புக்கொண்டோம்.
நேபாளத்தில் அதிக தேவையுள்ள மின்சாரத்துக்கும், வருவாய் பெருக்கத்திற்கும் இது ஓர் ஆதாரமாக அமையும்.
நமது சமூகங்களுக்கு இடையிலான தொடர்புகளுக்கு ஆழத்தையும் உயிர்ப்புத்தன்மையையும் அதிகரிப்பதற்கும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
புத்தமத பாரம்பரியத்தை இரு நாடுகளுமே பகிர்ந்து கொண்டிருப்பதை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளவும், ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் மற்ற முறைகள் மீதும் கவனம் செலுத்தி மேம்படுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களையும் நெருக்கமாக கண்காணிப்பு செய்து, குறித்த காலத்தில் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தவும் பிரதமரும் நானும் ஒப்புக்கொண்டோம்.
இன்று நாங்கள் மேற்கொண்டிருக்கும் முடிவுகள், நமது பொருளாதார பங்களிப்புகளை பலப்படுத்தி, அதை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்று பிரதமருக்கும் எனக்கும் நம்பிக்கை உள்ளது.
மாண்புமிகு பிரதமர் அவர்களே,
உங்களுடைய பயணம் மிகவும் பொருத்தமான நேரத்தில் அமைந்துள்ளது.
இன்றைய நமது பேச்சுவார்த்தைகள், நூற்றாண்டுகள் பழமையான நமது உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
மேலும், நமது பங்களிப்பில் புதிய மற்றும் ஒளிமிக்கதொரு அத்தியாயம் எழுதப்படும் என்றும் நம்புகிறேன். மாண்புமிகு பிரதமர் அவர்களே, இன்னொரு முறை கூறுகிறேன், இந்தியாவுக்கு உங்களை மிகுந்த அன்புடன் வரவேற்கிறோம். இந்தியாவில் நீங்கள் இனிமையான மற்றும் பயன்தரக்கூடிய பயணத்தை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி.
PM @narendramodi Nepal PM Pushpa Kamal Dahal Prachanda meet to discuss further strengthening of India-Nepal ties. pic.twitter.com/zkqqMeoqGu
— PMO India (@PMOIndia) September 16, 2016