பி.எம்.இந்தியா
பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியா கென்யா இடையேயான தேசிய வீட்டுவசதி கொள்கை மேம்பாடு மற்றும் மேலாண்மை துறையில் (NHPDM) ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்தேதியிட்ட ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை11, 2016ல் பிரதமரின் கென்யா பயணத்தின்போது நைரோபியில் கையெழுத்தான ஒப்பந்தம் இது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இருதரப்பும் வீட்டுவசதித்துறையில், தனிமனித பயிற்சி, பரஸ்பர பயணங்கள், கண்காட்சிகள், சந்திப்புகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் ஆகியவற்றின் மூலம் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
இருதரப்புக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பின்படி இருநாடுகளுக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள அனுபவங்களை வைத்து சேரிகளை முன்னேற்றுதல், புதிய சேரிகள் உருவாவதை தடுத்தல் ஆகியன செயல்படுத்தப்படும். வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் தரவுகள், சந்தை நிலவரங்கள், முதலீடு வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றும்.
குறைந்த விலையில் உள்ளூரிலேயே கிடைக்கும் கட்டுமான பொருட்களை வைத்து வீடுகளை அமைக்கும் தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வதை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கும். அரசு/பொது ஊழியர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கான வீட்டுவசதிகளை மேம்படுத்தவும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டுவசதி திட்டங்களின் மூலம் அரசு ஊழியர்களுக்கு வீடுகளை வழங்குவதில் புதிய முறைகளை கண்டுகொள்ளவும், வீடுகளை வழங்குவதில் தனியார் துறைகள் எவ்வாறு ஆக்கபூர்வமாக பங்குகொள்ளலாம் என அறியவும் இதன் மூலம் முடியும்.