Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரிக்ஸ் தலைவர்களின் முக்கிய அமர்வில் பிரதமரின் வரவேற்புக் குறிப்புகள்

பிரிக்ஸ் தலைவர்களின் முக்கிய அமர்வில் பிரதமரின் வரவேற்புக் குறிப்புகள்


மேதகு அதிபர் ஜி ஜின்பிங் அவர்களே, மேதகு அதிபர் ஜேக்கப் ஜுமா அவர்களே, மேதகு அதிபர் மிச்செல் டெமெர் அவர்களே, மேதகு அதிபர் விளாடிமிர் புதின் அவர்களே,

பிரிக்ஸ் செயல்பாட்டுக் கவுன்சிலின் மதிப்புமிக்க உறுப்பினர்களே.

கோவாவில் நடைபெறும் எட்டாவது (8வது) பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு உங்கள் அனைவரையும், 1.25 பில்லியன் இந்தியர்களுடன் சேர்ந்து நானும் அன்புடன் வரவேற்கிறேன்.

பிரிக்ஸ் தலைவர்களின் முக்கிய அமர்வுக்கு தலைமை ஏற்பதை நான் கவுரவமாகக் கருதுகிறேன். இந்த நாளின் முந்தைய நேரங்களில் நாம் செய்து கொண்ட கருத்துப் பரிமாற்றங்கள் ஆக்கபூர்வமாக இருந்தன.

அவற்றை மேம்படுத்துவதாகவும், பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்கான ஆக்கபூர்வ திட்டத்தை விவாதிப்பதாகவும் இந்த அமர்வு அமைய வேண்டும்.

பொருளாதார செயல்பாடுகளில் விரிவான பகுதிகளை உள்ளடக்கும் வகையில் பிரிக்ஸ் அமைப்புக்கு உள்பட்ட நாடுகள் கடந்து வந்த பாதைகள் காலப்போக்கில் விரிவடைந்துள்ளன.
இப்போது நம்முடைய கூட்டுமுயற்சிகளுக்கான வாய்ப்புகள் என்பது விவசாயத்தில் இருந்து தொழில் துறை மற்றும் புதுமைகள் வரையில் ; வர்த்தகம் முதல் சுற்றுலா வரையில் ; சுற்றுச்சூழல் முதல் எரிசக்தி வரையில் ; திரைப்படங்கள் முதல் கால்பந்து வரையில் ; தொழில்திறன் மேம்பாட்டில் இருந்து ஸ்மார்ட் நகரங்கள் வரையில் ; மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடுவது மற்றும் பண மோசடி முதல் சமூகங்களைப் பாதுகாப்பது வரை என விரிவாகியுள்ளது.

இந்த ஆண்டில், நாம் பிரிக்ஸ் அமைப்பை நமது நகரங்கள் மற்றும் மாகாணங்களுக்கு எடுத்துச் சென்று, பல்வேறு தரப்பு மக்களிடம் நேரடியாக தொடர்புபடுத்தி இருக்கிறோம்.

மாண்புமிகு தலைவர்களே,

பிரிக்ஸ் அமைப்பின் கீழ் நமது கூட்டுமுயற்சிகளுக்கு நாம் 10வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஒரு தசாப்தமாக நாம் கூட்டாக செயல்பட்டதால் நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன.

நமது முன்முயற்சிகள் மற்றும் சாதனைகளுக்காக பெருமைப்படக் கூடிய உரிமை நமக்கு இருக்கிறது.

புதிய வளர்ச்சி வங்கி மற்றும் அவசரக்கால ரிசர்வ் ஏற்பாட்டு அமைப்பு உருவாக்கம் ஆகியவை சிறந்த சாதனைகள்.

புதிய பாதுகாப்பு சவால்கள் மற்றும் தொடரும் நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலைகள் நிறைந்த உலகில், அமைதியை ஏற்படுத்தும் வாய்ப்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வழிகாட்டியாக பிரிக்ஸ் அமைந்துள்ளது.

வளரும் உலக நாடுகளில் நமது பணி மிகுந்த அர்த்தமுள்ளதாக உள்ளது.

மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கு உலகளாவிய திட்டத்தை வடிவமைப்பதில், கடந்த ஆண்டு பிரிக்ஸ் முக்கிய பங்காற்றியது.

2030 ஆண்டுக்கான திட்டம், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், வளர்ச்சிக்கான நிதியளிப்பு குறித்த அடிஸ் அபாபா செயல் திட்டம் ஆகியவற்றில் நம்முடைய கூட்டு செயல்பாடுகள் தேவையானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தன.

மேலும், உலகளாவிய ஆளுமை கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாம் முன்னணியில் இருக்கிறோம்.

மாண்புமிகு தலைவர்களே,

நமது சாதனைகள் கணிசமானவையாக இருந்தாலும், சரியான திசையையும், பிரிக்ஸ் நாடுகளுக்குள் பங்கேற்பின் வேகத்தை வலுப்படுத்துவதையும் நாம் தொடர்ச்சியாக பின்பற்றிட வேண்டும்.

இதில் இன்னும் விஷயங்களையும் நாம் சேர்க்க வேண்டியுள்ளது.

இதற்கு சில சிந்தனைகளை நான் அளிக்கிறேன்.

முதலாவதாக, முக்கிய விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு, பிரிக்ஸ் அமைப்பில் அமைப்பை உருவாக்கும் செயல்பாடு.

நாம் உருவாக்கக் கூடிய அமைப்புகள் நமது நாடுகளிலும், நமது பிராந்தியங்களிலும் வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பவையாக இருக்க வேண்டும்.

அவை அதிக அளவில் வளைந்து கொடுப்பவையாகவும், சுதந்திரமானவையாகவும் அமைந்து, வளர்ச்சிக்கான நமது முன்னுரிமைகளுக்கு பரந்த வாய்ப்புகளை அளிப்பதாக இருக்க வேண்டும்.
பிரிக்ஸ் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியின் சிந்தனைகளை நடைமுறைப்படுத்தி காட்டுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

பிரிக்ஸ் வேளாண்மை ஆராய்ச்சி மையம், பிரிக்ஸ் ரயில்வே ஆராய்ச்சி நெட்வொர்க் மற்றும் பிரிக்ஸ் விளையாட்டுக் கவுன்சில் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை நாம் விரைவுபடுத்த வேண்டும்.

வரி ஏய்ப்புகளைத் தடுக்கவும், கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடவும் விதிமுறைகளை ஏற்படுத்தி, கட்டமைப்புகளை உருவாக்கி, நமது திறன்களை ஒன்றுபடுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.

வரி ஏய்ப்பாளர்கள் மற்றும் பண மோசடியில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான நடைமுறைகளை நமது ஏஜென்சிகள் உருவாக்க வேண்டும்.

இப்போதைய யதார்த்தங்களை பிரதிபலிப்பதற்கு உலகளாவிய ஆளுமை அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கு பிரிக்ஸ் குரல் கொடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, பிரிக்ஸ் நாடுகளுக்குள் வர்த்தகத்தின் அளவு மற்றும் தரத்தையும், முதலீட்டு தொடர்புகளையும் மேம்படுத்த வேண்டும்.

2015 ஆம் ஆண்டில், பிரிக்ஸ் நாடுகளுக்குள் வர்த்தகம் 250 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

2020 ஆம் ஆண்டுக்குள் இதை இரட்டிப்பாக்கி 500 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டுவதற்கு நாமே இலக்கு நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு ஐந்து நாடுகலிலும் வியாபாரம் மற்றும் தொழில்துறையினர் பங்கேற்பை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

இந்தச் செயல்பாடுகளை அரசுகள் முழுமையாக ஊக்குவிக்க வேண்டும். வரி மற்றும் சுங்கத் துறையில் ஒத்துழைப்பு வரையறைகளுக்கு நாம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் நல்லதொரு தொடக்கமாகும்.

புதுடெல்லியில் இப்போது நிறைவடைந்துள்ள பிரிக்ஸ் வர்த்தகக் கண்காட்சி, வியாபார பரிமாற்றங்களுக்கு வழக்கமான தளமாக அமைந்திட வேண்டும்.

மேலும், இந்த நோக்கத்தை அடைவதில் பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி முக்கிய பங்காற்ற வேண்டும்.

நமது சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை (SME) உலக அளவிலான தொடர்புகளில் ஒருங்கிணைக்கவும் அது உதவலாம். தோஹா வளர்ச்சி ரவுண்ட் மற்றும் WTO மத்திய பங்களிப்பை தொடரச் செய்வதிலும் நாம் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படலாம்.

அத்துடன் ஜி-20, WTO மற்றும் இதர தளங்களில் நமது ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயல்பாடுகளையும் நாம் அதிகரித்திட வேண்டும்.

சேவைகளுக்கு வர்த்தக ஊக்குவிப்பு ஒப்பந்தத்தின் வரைவு ஒன்றை WTO-வில் இந்தியா சமர்ப்பித்துள்ளது.

வளரும் நாடுகளுக்கு சேவைகள் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலின் பயன்களை அதிகபட்சமாக ஆக்கும் வகையில் அது அமைந்துள்ளது.

இந்த முன்மொழிவுக்கு பிரிக்ஸ் வலுவான ஆதரவு அளிப்பது, கூட்டாக நமது பொருளாதார நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

மூன்றாவதாக, நமது பொருளாதார மாற்றங்களில் முக்கியமான முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

நகரமயமாக்கல், கட்டமைப்பு மற்றும் புதுமை சிந்தனைகள் பிரிக்ஸ் பொருளாதாரத்தில் முக்கிய கவனத்துக்குரிய விஷயங்களாக அமைந்துள்ளன.

இந்தியாவின் தலைமையின் கீழ், நாங்கள் டிஜிட்டல் – தொழில்நுட்பம், ஸ்மார்ட் நகரங்கள், நகரமயமாக்கல் மற்றும் எங்கள் நகரங்களுக்கு இடையில் ஒத்துழைப்பு ஆகியவற்றை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அடுத்த ஒரு பில்லியன் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள், புதிதாக உருவாகும் சந்தையில் இருந்து சேருவார்கள்.

நமது பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி அமைப்பதில், நமது ஒத்துழைப்பு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நான்காவதாக, நமது சமூகங்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.

இன்றைக்கு நாம் வாழும் உலகில், நமது குடிமக்களை பாதுகாக்க வேண்டுமானால், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

நமது வளர்ச்சி மற்றும் பொருளாதார வளமையின் மீது நீண்ட நிழலாக பயங்கரவாதம் படர்ந்துள்ளது.

அது இப்போது உலகெங்கும் பரவியுள்ளது. தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் அது அதிக உயிர்களைப் பறிப்பதாகவும், நுட்பமானதாகவும் வளர்ந்துள்ளது.

எனவே ஒட்டுமொத்தமாக நாம் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிட வேண்டும். அதற்குக் குறைவானதாக இருக்கக் கூடாது.

மேலும், நாம் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் செயல்பட வேண்டும். பயங்கரவாத தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் விஷயத்தில் தேர்ந்தெடுத்த சில அணுகுமுறைகள் பயனற்றுப் போவதுடன், எதிர்மறையாகவும் அமைந்துவிடும்.

செயற்கையான அல்லது தன் சிந்தனைகளின் அடிப்படையில் மாறுபடு எதுவும் காட்டக் கூடாது.
பயங்கரவாதச் செயல்களுக்குப் பொறுப்பான தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தண்டனை அளிப்பதற்கு குற்றச் செயல் மட்டுமே ஒரே ஒரு அடிப்படையாக இருக்க வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப்பது, ஆயுதங்கள் கிடைப்பது, பயிற்சி கிடைப்பது மற்றும் அரசியல் ஆதரவுகளை திட்டமிட்டு துண்டிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் நமது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்திட வேண்டும்.

சர்வதேச பயங்கரவாதம் குறித்த ஒன்றுபட்ட கூட்டமைப்பு வரைவை விரைவாக அங்கீகரிப்பது, இந்தப் பிரச்சினைக்கு எதிராக போரிடுவதில் நமது உறுதிப்பாட்டைக் காட்டுவதாக இருக்கும்.
ஐந்தாவதாக, மக்களுக்கு இடையில் பரிமாற்றங்களை ஏற்படுத்துவது, பிரிக்ஸ் ரத்த ஒட்டமாக அமையும்.

அது நமது கூட்டு முயற்சியில் துடிப்பையும், உயர்நிலையையும் ஏற்படுத்தும். இந்தப் பரிமாணத்துக்கு இந்த ஆண்டில் முக்கியத்துவம் தருவதற்கு நாம் தேர்வு செய்திருக்கிறோம்.
பிரிக்ஸ் திரைப்பட விழா, வர்த்தகக் கண்காட்சி, சுற்றுலா மாநாடு, விளையாட்டுக் கவுன்சில், கால்பந்துப் போட்டி மற்றும் இவை தொடர்பான இதர செயல்பாடுகள் பல லட்சம் பங்கேற்பாளர்களை உருவாக்கி, இறுதியாக கூட்டு முயற்சிகளுக்குக் காரணமாக அமையும்.

மாண்புமிகு தலைவர்களே,

வலுவான, ஆழமான மற்றும் துடிப்பான பிரிக்ஸ் சமுதாயத்தை உருவாக்குவதில் எனது சக பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன்.

உங்களின் கவனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.