பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்துக்கும், உணவு மற்றும் வேளாண்மை அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், தீனதயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் அனுபவங்கள் அடிப்படையில், தெற்கு – தெற்கு ஒருங்கிணைப்புக்கு வழி ஏற்படும். இதன்படி, பரிமாற்றப் பயணங்களும், ஆலோசனைகளும் நடத்தப்படும். மேலும், சிறந்த செயல்பாடுகளை கற்றுக் கொள்ளும் மையம் உருவாக்கப்படும். இதன்மூலம், தீனதயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் பயனடையும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் வலுப்படும். இதில், முக்கிய விவசாயப் பயிர்கள், வேளாண்-தொழில் பொருட்கள், வேலைவாய்ப்பு விரிவாக்கம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் உள்ளடக்கிய மற்றும் நீடித்த இணைப்பு ஏற்படுத்தப்படும். குறிப்பாக, ஊரகப் பகுதி இளைஞர்களுக்கு, சமூக பாதுகாப்பு, இடர் மேலாண்மை வழிமுறைகள் வலுப்படுத்தப்படும். மேலும், வறட்சியான மற்றும் இடர் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் அதனை எதிர்கொள்வதற்கான திறன் வலுப்படுத்தப்படும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், பொது நலனுக்கான செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படும். ஊரகப் பகுதிகளில் வறுமையை குறைப்பதற்காக ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கப்படும். இதன்படி, கிராமப்புற பெண்களுக்கு பொருளாதார மேம்பாட்டை ஊக்குவித்தல், கிராமப்புற ஏழை மக்களுக்கு இயற்கை வளங்கள் கிடைக்கச் செய்தல், இயற்கை வளங்களை நீடித்த அளவில் பயன்படுத்தச் செய்வதோடு, சமூக பாதுகாப்புக்கும் வழிவகை செய்யப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், பரிமாற்றப் பயணங்களுக்கும், அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆலோசனைகளை நடத்தவும் வழி ஏற்படும்.
தீனதயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (DAY -NRLM) என்பது, கிராமப்புற வறுமை ஒழிப்புக்காக ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மிக முக்கியமான திட்டமாகும். இந்தத் திட்டம், சமூகத்தில் ஒன்றுசேர்த்தல், நிதி செயல்பாடுகளில் கிராமப்புற மக்களை உள்ளடக்குவது, வாழ்வாதாரத்தை நீடித்த அளவில் ஊக்குவிப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில், நாடு தழுவிய அளவில் தொடங்கப்பட்டது. தீனதயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் இலக்கு, கிராமப்புற ஏழை மக்களுக்கு நீடித்த வாழ்வாதார ஊக்குவிப்பு மற்றும் நிதி சேவைகள் கிடைப்பதை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் திறமையான மற்றும் வலிமையான அமைப்புசார்ந்த தளத்தை ஏற்படுத்துவதாகும். தீனதயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தில் மிகவும் முக்கியமான பகுதி என்பது, கிராமப்புற ஏழைகளுக்கு வாழ்வாதாரமாக உள்ள பண்ணை மற்றும் பண்ணைசாரா துறைகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும். எனவே, நீடித்த வருமானத்தை ஏற்படுத்துவதற்காக விவசாய செயல்பாடுகள் குறித்த புலமையை பகிர்ந்துகொள்தல் மற்றும் மேம்படுத்துவதன் மூலம், வறுமையை ஒழிக்கவும், உயர் வருவாய் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் முடியும் என்று கருதப்படுகிறது.
கிராமப்புற வறுமையை குறைத்தல், நீடித்த ஊரகப் பகுதி வாழ்வாதாரம், கிராமப்புற வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு, சிறந்த ஆளுமை, பாலின சமத்துவம் ஆகியவை தொடர்பான 2015-ம் ஆண்டுக்குப் பிந்தைய திட்டங்கள், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை தீனதயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் அங்கீகரித்துள்ளது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கிராமப்புற வறுமை குறைப்பு திட்டங்கள், விரிவான ஊரக வளர்ச்சியை இலக்காக கொண்டு, கிராமப்புற ஏழைகள் எதிர்கொண்டு வரும் தடைகளை எதிர்கொள்ளவும், வேளாண் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புக் கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் செய்கின்றன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பது, கிராமப்புற ஏழைகளுக்கு இயற்கை வளங்களை கிடைக்கச் செய்தல், இயற்கை வளங்களை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தல், சமூக பாதுகாப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு ஊரக வறுமை ஒழிப்பில் பொது நலனுக்கான ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் ஊரக வளர்ச்சி அமைச்சகமும், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வழிவகைகள் ஏற்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், பரிமாற்றப் பயணங்கள் மற்றும் புலமை மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.