பி.எம்.இந்தியா
விவசாயம் மற்றும் உணவு தொடர்பான தொழில்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான இந்தியா கிர்கிஸ்தான் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் சமர்ப்பித்திருந்த ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த்து.
இந்தியாவுக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையேயான இந்த உத்தேச உடன்பாடு வேளாண்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கியது. இதில் ஆராய்ச்சித் துறையில் தகவல்களையும் அனுபவத்தையும் பரிவர்த்தணை செய்து கொள்ளுதல், கால்நடை இனப்பெருக்கம் பறவைகள் காய்ச்சல் மற்றும் உணவு வாய்நோய், கால்நடை மருத்துவம், பயிர் வளர்ப்பு, நவீன தொழில்நுட்ப அடிப்படையில் விதை உற்பத்தி, விதை சான்றளிப்பு, பல்வேறு வகை பாசன முறைகளை அறிமுகப்படுத்துதல், இந்திய முன்னோடித் திட்டத்தை உருவாக்குதல், உணவுப் பதனீடு மற்றும் உணவு சிப்பம் கட்டும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தகவல் தொழில்நுட்ப்ப் பயன்பாடு உள்ளிட்ட துறைகள் அடங்கும்.
தகவல் பரிமாற்றம் தவிர பயிர் வகைகள் உரிமைகள் பாதுகாப்பு, வேளாண்மை, உணவு வர்த்தகம், தோட்டக்கலை, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி, தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் கல்வி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள், வேளாண்மை மற்றும் மீனளம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தும்.
இந்த உடன்பாட்டின்படி கூட்டுப் பணிக்குழு ஒன்று அமைக்கப்படும். இருநாட்டுப் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருக்கும். இந்தக்குழு ஒத்துழைப்பு திட்டங்களை தயாரித்து உடன்பாடு அமுல்படுத்தப்படும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குதல், சம்மந்தப்பட்ட தரப்பினர் நிர்ணயிக்கும் அமலாக்கப் பணிகளை செயல்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளும்.
இந்த ஒப்பந்தம் அது கையெழுத்திடப்பட்ட தேதியில் அமுலுக்கு வரும், 5 ஆண்டு காலம் இது அமலில் இருக்கும். தொடர்ந்து மேலும் 5 ஆண்டு காலத்திற்கு இது விரிவு படுத்தப்படும். சம்மந்தப்பட்ட தரப்புகள் ராஜீய வழியாக இதரத் தரப்புக்கு இந்த ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்ளும் விருப்பத்தை அது காலாவதியாவதற்கு குறைந்தது 6 மாத காலத்திற்கு முன்னதாக தெரிவிக்கும் தருணத்தில் மட்டும் அது முடிவுக்கு வரும்.