Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக, தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் பிரதமர் மரக்கன்று நட்டார்


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சியை வலுப்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் மரம் நடும் இயக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஒரு மரக்கன்று நட்டார்.

ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டத்தின் கீழ் ஆரவல்லி மலைத்தொடரில் காடுகளை மறுசீரமைத்து வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, தில்லி ஆகிய பகுதிகளில் பரவியுள்ளதைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பகுதிகள் பல சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், வற்றை எதிர்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார்.

ஆரவல்லி மலைத்தொடரிலும் அதற்கு அப்பாலும், பாரம்பரிய நடவு முறைகளைத் தாண்டி, இடப்பற்றாக்குறை உள்ள நகர்ப்புற, சிறு நகர்ப்புற பகுதிகளில் புதிய நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று திரு நரேந்திர மோடி கூறினார். மேரி லைஃப் தளத்தில் தோட்ட நடவடிக்கைகள் புவிசார் குறிச்சொற்களால் குறிக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

நாட்டின் இளைஞர்கள் இந்த இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று பூமியின் பசுமை பரப்பை மேம்படுத்த பங்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது;

“இன்று, உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, ஒரு சிறப்பு மரம் நடும் இயக்கத்துடன் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முயற்சியை வலுப்படுத்தினேன். தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் நான் ஒரு மரக்கன்றை நட்டேன். இது ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டத்தின் கீழ் ஆரவல்லி மலைத்தொடரில் மீண்டும் காடுகளை அதிக அளவில் வளர்ப்பதற்கான அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.”

“குஜராத், ராஜஸ்தான், ஹரியானா,  தில்லி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆரவல்லி மலைத்தொடர் நமது பூமியில் உள்ள மிகப் பழமையான ஒன்றாகும் என பரவலாக கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மலைத்தொடர் சுற்றுச்சூழல் தொடர்பான பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. அவற்றைத் தீர்க்க எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த மலைத்தொடருடன் இணைந்த பகுதிகளை புத்துயிர் பெறச் செய்வதில் எங்கள் கவனம் உள்ளது. நீர் அமைப்புகளை மேம்படுத்துதல், புழுதிப் புயல்களைத் தணித்தல், தார் பாலைவனம் கிழக்கு நோக்கி விரிவடைவதைத் தடுப்பது போன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தப் போகிறோம்.”

“ஆரவல்லி மலைத்தொடரிலும் அதற்கு அப்பாலும், பாரம்பரிய நடவு முறைகளைத் தாண்டி, இடவசதி உள்ள நகர்ப்புற, சிறு நகர்ப்புற பகுதிகளில் புதிய நுட்பங்களை ஊக்குவிப்போம். மேரி லைஃப் தளத்தில் தோட்ட நடவடிக்கைகள் புவிசார் குறிச்சொற்களால் குறிக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இந்த இயக்கத்தில் பங்கேற்று நமது பூமியின் பசுமைப் பரப்பை அதிகரிக்க பங்களிக்குமாறு நமது நாட்டின் இளைஞர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.”

***

(Release ID: 2134084)

AD/SM/PLM/AG/KR