பி.எம்.இந்தியா
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும், சுதந்திரமான, வெளிப்படையான, செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய விரிவான உத்திசார் ஒத்துழைப்பு நாடுகளாக உள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் சூழல், நமது பிராந்தியத்தில் அதன் விளைவுகள் ஆகியவை குறித்து ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில், எரிசக்தி, வளங்கள், பிற முக்கியப் பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் , விலைகள் மீதான இடையூறுகளின் நீடித்த தாக்கமும் அடங்கும். இந்த இடையூறுகளுக்கு மத்தியில், வெளிப்படையான சந்தை அடிப்படையிலான வர்த்தகத்திற்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இக்கொள்கைகளே நமது செழிப்புக்கும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் அடித்தளமாக அமைகின்றன.
நிலையான, நம்பகமான எரிசக்தி விநியோகங்களுக்கு, நம்பகமான தனியார் துறை ஒத்துழைப்புகள், உத்திசார் முதலீடுகள் ஆகியவற்றின் பங்கை ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் அங்கீகரிக்கின்றன. இதற்கு இணையாக, மேம்படுத்தப்பட்ட தனியார் துறை ஈடுபாட்டிற்கு ஆதரவாக, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நோக்கிய தற்போதைய பணிகள் மூலம் இருதரப்பு எரிசக்தி வர்த்தகத்தையும் முதலீட்ட்டையும் மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. எரிசக்தித் துறையில் திறன் மேம்பாடு, அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மீண்டும் வலியுறுத்துகின்றன.
இந்தியாவிற்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்கும் ஒரு முக்கிய நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு திரவ எரிபொருட்கள், அது தொடர்பான பிற மூலப் பொருள் தயாரிப்புகளை வழங்கும் ஒரு முக்கிய நாடாக இந்தியா உள்ளது. இவற்றின் பங்கை அங்கீகரித்து, ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் எரிசக்திப் பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை ஆதரிக்கவும், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தவும் உறுதிபூண்டுள்ளன. எரிசக்தி மதிப்பு நடவடிக்கைகள் முழுவதும் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மீண்டும் வலியுறுத்துகின்றன.
ஆஸ்திரேலியா-இந்தியா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (2015) கீழ் வழங்கப்பட்டுள்ளபடி, பிரத்தியேகமாக அமைதியான நோக்கங்களுக்காகவும் சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்புகளின் கீழும், ஆஸ்திரேலிய யுரேனியத்தை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான நிர்வாக ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இறுதி செய்துள்ளன. பிராந்திய ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல், எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல், எரிசக்தி திரவ எரிபொருட்களுக்கான வர்த்தக ஏற்பாடுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்டவற்றின் மூலம் எரிசக்தி விநியோக நடவடிக்கைகளின் மீள்திறனை வலுப்படுத்த இணைந்து செயல்பட ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் உறுதிபூண்டுள்ளன. தத்தமது எரிசக்தி அமைப்புகளின் மின்மயமாக்கலை அதிகரிப்பது, எதிர்காலத்தில் எரிசக்திப் பாதுகாப்பிற்கு ஒரு மதிப்புமிக்க ஆதாரமாக இருக்கும் என்பதை இரு நாடுகளும் அங்கீகரிக்கின்றன.
எரிசக்தியில் மீள்திறன் கொண்ட வர்த்தக சந்தைகளுக்கான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பு விரிவடைகிறது என்பதை ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் அங்கீகரிக்கின்றன. பசிபிக் தீவு நாடுகளுக்கான குறிப்பிட்ட எரிசக்தி வளப் பாதுகாப்பு, அவற்றின் மீள்திறன், விநியோகம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்கின்றன.
இந்தப் பின்னணியில், நிலக்கரி, டீசல், பிற திரவ எரிபொருட்கள், இயற்கை எரிவாயு போன்ற எரிசக்திப் பொருட்களின் நிலையான, பாதுகாப்பான, நம்பகமான விநியோகத்தைப் பாதுகாப்பது உட்பட, எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்கான தங்களது உறுதிப்பாட்டை ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மீண்டும் வலியுறுத்துகின்றன. மேலும், பசுமை எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், குறைந்த கார்பன் எரிபொருட்கள் மீதான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இரு நாடுகளும் தங்களது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தின. இந்தச் சூழலில், இந்தியாவின் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு முன்முயற்சியை ஆஸ்திரேலியா குறிப்பிட்டது.
நமது மக்களின் பாதுகாப்புக்கும் செழிப்புக்கும், ஏற்ப உலகளாவிய எரிசக்தி வள விநியோக நடவடிக்கைகள் இருப்பதை உறுதி செய்வதில் இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் அழைப்பு விடுக்கின்றன.
***
(Release ID 2282689)
SS/PLM/SH