Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.07.2026) ஆக்லாந்தில் உள்ள அரசு மாளிகையில் நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வருகை தந்த அவருக்கு, பாரம்பரிய மாவோரி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில், அமைதி, மரியாதை, வரவேற்பு ஆகியவற்றைக் குறிக்கும் மாவோரி சடங்குகள் இடம்பெற்றன. பாரம்பரிய வரவேற்பைத் தொடர்ந்து, பிரதமர் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

இரு பிரதமர்களும் நேரடியான, தூதுக்குழு அளவிலான வடிவங்களில் விரிவான இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினர். அவர்களின் பேச்சுவார்த்தைகள் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, வேளாண் தொழில்நுட்பம், விளையாட்டு, கல்வி, சுற்றுலா, கலாச்சாரம், மக்களுக்கு இடையே உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருந்தன. இருதரப்பு உறவை உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது இந்தியா-நியூசிலாந்து உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இரு பிரதமர்களும் 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்தனர். பிராந்திய, உலகளாவிய நிகழ்வுகள் குறித்து தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, விளையாட்டு, பேரிடர் மேலாண்மை, பால்வளம், சுற்றுலா, கடல்சார் பாரம்பரியம், கலாச்சாரம், உணவுத் தொழில்நுட்பம், கடல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டன.  இருதரப்பு ஒத்துழைப்புக்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த ஒரு கூட்டறிக்கையையும் இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

 நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனின் அன்பான உபசரிப்புக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்ததோடு, அவரை இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

***

(Release ID: 2283531)

TV/PLM/RJ