Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2019-ம் ஆண்டில் நடைபெறும் பொதுத் தேர்தலில் பயன்படுத்துவதற்காக வாக்காளர் சரிபார்ப்பதற்கான காகித அச்சு வழங்கும் கருவிகளை கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பயன்படுத்துவதற்காக, எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளர்கள் சரிபார்ப்பதற்கான காகித அச்சு வழங்கும் (Voter Verifiable Paper Audit Trail – VVPAT) இயந்திரங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது,

அ. பெங்களூருவில் உள்ள பாரத மின்னணுவியல் நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள இந்திய மின்னணுவியல் கழக நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து 2017-18, 2018-19 ஆண்டுகளில் 16,15,000 VVPAT இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும். ஒரு இயந்திரத்தின் விலை ரூ.19,650. இதன் ஒட்டுமொத்த செலவு ரூ.3,173.47 கோடி (வரி மற்றும் சரக்குகளை கொண்டுசெல்வதற்கான செலவு ஆகியவை தனி.)

ஆ. இயந்திரங்களின் இறுதி விலையை நியாயமான முறையில் விரைந்து நிர்ணயிப்பதற்காக பாரத மின்னணுவியல் நிறுவனம் மற்றும் இந்திய மின்னணுவியல் கழக நிறுவனம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு விலை பேச்சுவார்த்தை குழுவுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இ. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்) மற்றும் VVPAT இயந்திரங்கள் வாங்குவதற்கு தேவைப்படும் செலவை எதிர்கொள்ள கூடுதல் நிதியாக, நடப்பு நிதியாண்டில் துணைத் திட்டங்கள்/திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் மூலம் ரூ.1,600 கோடி ஒதுக்கப்படும். இதன்மூலம், உற்பத்தியாளர்களுக்கு 40% அளவுக்கு முன்தொகையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகையை 2018-19ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கலாம்.

ஈ. இரண்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும், அதன் உற்பத்தி திறனுக்கு ஏற்ப, பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான ஆணையை தேர்தல் ஆணையம் வழங்கும். இதன்மூலம், செப்டம்பர் 2018-க்குள் அனைத்து VVPAT இயந்திரங்களும் வாங்கப்படும்.

அரசின் இந்த முடிவு மூலம், 2019ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் சரிபார்ப்பதற்கான காகித அச்சு வழங்கும் VVPAT இயந்திரங்களை பயன்படுத்த முடியும். இது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை குறித்து வாக்காளர்களின் மனதில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து, வாக்காளர்களை திருப்திப்படுத்தி வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் கூடுதல் அம்சமாக இருக்கும். மேலும், கடந்த அக்டோபர் 8, 2013-ல் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பின்னணி:

கடந்த அக்டோபர் 4, 2010-ல் இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில், வாக்காளர்களை திருப்திப்படுத்தும் வகையில், வெளிப்படைத்தன்மைக்காக கூடுதல் அம்சமாக வாக்காளர்கள் சரிபார்ப்பதற்கான காகித அச்சு வழங்கும் முறையை பின்பற்றலாம் என்று அரசியல் கட்சிகள் பரிந்துரை செய்தன. இதையடுத்து, தேர்தல் நடத்துவதற்கான விதிகள் 1961-ல் திருத்தங்களைச் செய்து ஆகஸ்ட் 14, 2013-ல் வெளியிட்ட அறிவிக்கையின் மூலம், VVPAT-யை அறிமுகப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு, 2013-ம் ஆண்டில் 20,300 VVPAT இயந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையம் கொள்முதல் செய்தது. அப்போது முதலே, குறிப்பிட்ட சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதேநேரத்தில், 2015-ம் ஆண்டில் கூடுதலாக 67,000 இயந்திரங்களை தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதில், 33,500 இயந்திரங்களை உற்பத்தியாளர்கள் தயாரித்து வழங்கினர். மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையிலான VVPAT இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்குத் தேவையான நிதியை, தேர்தல் ஆணையம் கேட்கும்போதெல்லாம் அரசு வழங்கியது.

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட அச்சு இயந்திரம் போல VVPAT இயந்திரம் செயல்படும். இது வாக்குகளை பதிவுசெய்வதற்கான பகுதியிலேயே வைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர் தனக்கு பிடித்தமான வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பொத்தானை அழுத்தும்போது, VVPAT இயந்திரம், காகிதச் சீட்டை உருவாக்கும். அதனை வாக்குப்பதிவு சீட்டு என்று அழைக்கிறோம். இந்த சீட்டில் பெயர், வரிசை எண், தேர்வுசெய்யப்பட்ட வேட்பாளரின் சின்னம் ஆகியவை இருக்கும். இந்த சீட்டை வாக்காளர்கள், காட்சி திரையில் பார்க்கலாம். காட்சித் திரையில் 7 விநாடிகளுக்கு இந்த சீட்டு நிற்கும். பின்னர், அந்த சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, முத்திரையிடப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும். இந்த நடவடிக்கையில், வாக்குப்பதிவு சீட்டு, வாக்காளர்களின் கைகளுக்கு செல்லாது. மேலும், வேறு நபர்களும் பார்க்க முடியாது.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் VVPAT இயந்திரங்களை பயன்படுத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சிவில் வழக்கை (எண்.9093/2013) டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்தார். அந்த மனுவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது. எனவே, தான் பதிவு செய்த வாக்கு, தான் விரும்பிய வேட்பாளருக்கே பதிவாகியுள்ளது என்பதை வாக்காளர் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. மேற்குறிப்பிட்ட சிவில் மனு மீது பதிலளித்த தேர்தல் ஆணையம், தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்காக VVPAT இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தது. இந்த மனு மீது, அக்டோபர் 8, 2013-ல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், VVPAT முறையை படிப்படியாக அமல்படுத்த உத்தரவிட்டது. தேவையான எண்ணிக்கையில் VVPAT இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு போதிய நிதியுதவியை இந்திய அரசு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

***************