பி.எம்.இந்தியா
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின்படி (MGNREGA) ஒரு இல்லத்திற்கு வழங்கப்பட்ட 100 நாட்கள் வேலைவாய்ப்பில் வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட கூடுதல் 50 நாள் பணிக்கு ஒப்புதலை பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை அளித்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் வாழும் கிராமப்புற ஏழை மக்கள் கூடுதல் வேலைவாய்ப்பைப் பெற்று அதற்கான கூடுதல் ஊதியத்தைப் பெறுவார்கள். குறிப்பிட்ட பருவங்களில் வேலை இல்லாமல் இருக்கும் மிகவும் ஏழை கிராமப்புற மக்கள் இதனால் மிகுந்த பயன் அடைவார்கள்.
இந்த ஆண்டு காரீப் பருவத்தில் குறைவான அளவு பருவ மழை பெய்ததால் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு ஏற்கனவே பல முடிவுகளை எடுத்துள்ளது. எல்லா மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வருமாறு:
1. பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு டீசல் மானியம் வழங்குதல்: வறட்சி மற்றும் குறைந்த அளவு மழை பெய்துள்ள இடங்களில் நீர்ப்பாசனத்தை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு அவர்கள் பயிரிட்ட தற்போதைய பயிர்களை காப்பாற்றுவதற்காகவும், டீசல், பம்புசெட்டுகளை பயன்படுத்தவும் மானிய விலையில் டீசல் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (100 கோடி ரூபாய் ஒதுக்கீடு) 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இதில் அடங்கும். இத்திட்டத்தின்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை செயல்படுத்தும். நீர்ப்பாசன வசதியை மேலும் அதிகரிக்க ஆகும் செலவை டீசல் மானியம் உதவும். 2015 ஆம் ஆண்டு ஜூலை 15 தேதி வரை 50 சதவீத குறைவாக மழை பெய்துள்ள மாவட்டங்கள் / வட்டங்கள் / பகுதிகள் ஆகியவற்றிற்கு இத்திட்டம் பொருந்தும். (இந்திய வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கையின்படி) மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்த இடங்கள், 15 நாட்களுக்கு தொடர்ந்து குறைவாக மழை பெய்த இடங்கள் (60 சதவீதத்திற்கும் குறைவாக) ஆகியவற்றிற்கும் இது பொருந்தும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் டீசல் மானியமாக 50 சதவீதம் அளவிற்கு (ஒரு ஹெக்டேருக்கு 2000 ரூபாய்) அளிக்கப்படும். ஒவ்வொரு விவசாயிக்கும் அதிக பட்சம் இரண்டு ஹெக்டேர் அளவுக்கு மானியம் வழங்கப்படும். இதற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிதியுதவி அளிக்கும்.
2. விதைகளுக்கான மானியம் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது: வறட்சி பாதித்த மாவட்டங்களில் விவசாயிகள் விதைகளை வாங்குவதற்காகவும் அவற்றை பயிரிடுவதற்காகவும் ஆகும் அதிகபடியான செலவை இந்த மானியம் அவர்களுக்கு உதவும். வறட்சி பாதித்த இடங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளின் விதைகளுக்கான மானியத்தின் உச்ச வரம்பு மேலும் 50 சதவீதத்திற்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது 31.12.2015 வரை செல்லுபடியாகும்.
3. தோட்டக்கலை பயிர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை: தண்ணீர் அதிகமாக தேவையுள்ள தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான ஆதரவை அளிக்க 150 கோடி ரூபாய் மேலும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வறட்சி பாதித்த மாவட்டங்கள் மற்றும் வட்டங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பயிர்கள் மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்தி வரும் வேளாண்துறைக்கு பொருந்தும். இத்திட்டத்தின் மூலம் வறட்சி பாதித்த மாவட்டங்கள் மற்றும் வட்டங்களில் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 6000 ரூபாய் வழங்கப்படும். அதிக அளவாக இரண்டு ஹெக்டேர் அளவுக்கு மானியம் வழங்கப்படும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவை 50:50 என்ற அடிப்படையில் மானிய நிதியுதவியை அளிக்கும்.
4. கால்நடை தீவனத்தை மேம்படுத்தும் செயல் திட்டம்: வறட்சி பாதித்த பகுதிகளில் கால்நடை தீவனத்தை மேம்படுத்த இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. (ரூ.50 கோடி ஒதுக்கீடு) வறட்சி பாதித்த மாவட்டங்கள் மற்றும் வட்டங்களில் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 3200 ரூபாய் வரை நிதியுதவி அளிக்கப்படும். அதிக பட்சமாக இரண்டு ஹெக்டேருக்கு கால்நடை தீவனங்களை மேலும் உற்பத்தி செய்வதற்காக நிதியுதவி அளிக்கப்படும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவை 50:50 என்ற அடிப்படையில் மானிய நிதியுதவியை அளிக்கும்.
5. ரஷ்டிரிய கிரிஷி விகாஸ் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் ஐந்து முதல் பத்து சதவீத நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பருவமழை அளவு குறையும் போதும் அதனால் ஏற்படும் தாக்கத்திற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், மத்திய அரசால் நடத்தப்படும் திட்டங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் இருந்து 10 % அளவுள்ள நிதியை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
6. பயிர்களுக்கான பாதுகாப்புத் திட்டம், இந்தியாவில் உள்ள 600 மாவட்டங்களில் புன்செய் பயிர்களுக்கான மத்திய ஆராய்ச்சி நிலையமும் வேளாண் அமைச்சகமும் இணைந்து இந்த திட்டத்தை அமுல்படுத்தும். மாநிலங்கள் இந்த இரு அமைப்புகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பருவமழை தாமதமாக வரும் பகுதிகள் வறட்சி நீடிக்கும் பகுதிகள் குறைந்த அளவே மழை பெரும் இடங்கள் பேன்றவற்றை மாநிலங்களில் உள்ள விவசாய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தேவையான அளவு விதைகள் மற்றும் இடு பொருட்கள் ஆகியவற்றை அளிப்பது ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். சென்ற ஆண்டு கிடைத்த அனுபவங்களின்படி பருவ மழையின் போக்கு சரியான அளவு இல்லாத இடங்களில் இத்திட்டம் பயனுள்ளதாக அமைந்தது. இத்திட்டத்தின் தகவல்கள் விவசாய மற்றும் கூட்டறவு துறை, வேளாண் அமைச்சகம், புன்செய் பயிர்களுக்கான மத்திய ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றின் இணைய தளங்களில் கிடைக்கும்.
7. மாநிலங்களுக்கு அறிவுரை / விவசாயத் துறையில் முன்னதாகவே நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த தேவையான கட்டுமான பணிகளை மேற்கொள்ளுதல், குறைவாக நீர் தேவையுள்ள பயிர்களை பயிரிடுதல், வாய்க்கால்களை தூர்வாருதல், பம்புசெட்டுகளை மாற்றியமைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். காரிஃப் பருவ பயிர்களை பாதுகாப்பதற்கு அவ்வப்போது மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம் என்று மாநிலங்களுக்கு அறிவுரை தரப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீர்ப்பாசன நிர்வாகம் குறித்த திட்டம் உட்பட பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களுக்கு முதலீடு அளிப்பது குறித்தும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
8. இந்த ஆண்டு காரிஃப் பருவத்திற்கு தேவையான விதைகள் மற்றும் இடு பொருட்கள் கிடைப்பது. விவசாய துறையில் அவ்வப்போது நடைபெறும் வானிலை குறித்த கூட்டங்களில் விதைகள் மற்றும் இடு பொருட்கள் கிடைப்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு வாரமும் காணொளி காட்சி மூலம் மாநிலங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க தகவல்கள் பெறப்பட்டு மாநிலங்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
9. குறுந்தகவல்கள் மூலம் ஆலோசனை/ எம்-கிசான் இணைய தளம் மூலம் விவசாயிகளுக்கு அமைச்சகம் குறுந்தகவல்களை அனுப்பி வருகிறது. வானிலை சம்பந்தமான தகவல்கள், வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் அதன் தாக்கத்தை குறைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், போன்றவற்றிக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன. சென்ற ஆண்டு 700 கோடி குறுந்தகவல்கள் தரப்பட்டுள்ளன. இத்தகவல்களை விவசாயம் சம்பந்தப்பட்ட பல நிறுவனங்கள் அளித்துள்ளன.
10. இந்த ஆண்டு வறட்சி குறித்த கடினநிலை குறித்த நிர்வாகம்: வறட்சி பற்றிய கடினநிலை குறித்த நிர்வாக திட்டத்தின் தகவல்கள் வேளாண் அமைச்சகம் மற்றும் வேளாண் கூட்டுறவுத்துறை இணையதளத்தில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து இந்தத் திட்டம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது. வறட்சி குறித்த மாநில அளவிலான நிர்வாக திட்டங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்று அவற்றின் முதலமைச்சர்களுக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் (வேளாண்துறை அமைச்சர்) 12.05.2015 அன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
11. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அழிவுகளுக்கு மாநில / மத்திய நிதியங்கள் மாநில நிதியத்திற்கு முதல் தவணை விடுவிப்பு: இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அழிவுகளுக்கு நிவாரணம் அளிக்க மாநில அரசுகள் பொறுப்புடையவைகளாக இருக்கின்றன. மாநில அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநில அரசுகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, மேலும் நிதியை அளிக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து தேவையான நிதி அளிக்கப்படுகிறது. மாநில அரசு அளிக்கும் கடிதத்தின் மூலம் மத்திய அரசு தற்போதுள்ள நடைமுறை அடிப்படையில் தேவையான நிதியுதவியை அளிக்கும். இதன் முதல் தவணை மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஏற்கனவே விடுவிக்கப் பட்டுள்ளது. இந்த நிதியம் அவசரநிலை அடிப்படையில் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் குடிநீர் வசதியை வழங்க முடியும்.