பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விண்வெளியை அமைதிவழி தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது குறித்து இந்தியாவுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கெனவே ஏப்ரல் 2017-ல் கையெழுத்திடப் பட்டுள்ளது.
விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பூமி குறித்த தொலையுணர்வு தகவல்கள் உள்ளிட்ட அம்சங்களில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. செயற்கைக்கோள் மூலமாக தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் சார்ந்த கடல்சார் வழிகாட்டுதல், விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் குறித்த ஆராய்ச்சி, விண்கலம் மற்றும் விண்வெளி வசதிகள் மற்றும் தரைபரப்பில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துதல், விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றிலும் ஒத்துழைப்பு அளிக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
கூட்டு பணிக் குழு அமைப்பதற்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. விண்வெளி/ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (DOS/ISRO), மற்றும் ஆர்மீனிய குடியரசின் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகத்தின் அறிவியல் துறைக்கான அரசுக் கமிட்டி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை குறித்த கால வரம்புக்குள் செயல்படுத்துவதற்கான திட்டத்தை இந்தக் குழு உருவாக்கும்.
பூமி குறித்த தொலைவு உணர்வுத் தகவல்கள், செயற்கைக்கோள் மூலமான தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் மூலமான கடல்சார் வழிகாட்டல், விண்வெளி அறிவியல் மற்றும் புறவெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் வாய்ப்புகள் குறித்தும், புதிய ஆராய்ச்சி செயல்பாடுகள் குறித்த முயற்சிக்கும் இது உத்வேகம் அளிக்கும்.
விண்வெளி தொழில்நுட்பத்தை மனிதகுலத்தின் நன்மைக்காக பயன்படுத்துவதில் கூட்டு செயல்பாடு ஒன்றை உருவாக்கவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. அந்த வகையில் நாட்டின் அனைத்துப் பகுதிகளும், பிராந்தியங்களும் பயன்பெறும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான நிதி, அந்தந்த அரசுகளில் செயல்பாட்டில் உள்ள பட்ஜெட் ஒழுங்குமுறைகள் தொடர்பான தேசிய நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு, அந்தந்த நிர்வாக அமைப்புகளால் அளிக்கப்படும். தங்களிடம் உள்ள ஆதாரவளத்திற்கு உள்பட்டு இது வழங்கப்படும்.
செயல்பாட்டின் வகை மற்றும் களத்தைப் பொருத்து, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கூட்டுத் திட்டங்கள், வணிகம்- சாராதவையாக அல்லது வணிக அடிப்படையிலானதாக இருக்கலாம். பரஸ்பரம் நிதி அளிக்காமலோ அல்லது ஈடான ஏற்பாடுகள் அல்லது ஒப்பந்தங்களின் அடிப்படையிலோ இவை நிறைவேற்றப்படலாம்.
பின்னணி :
விண்வெளி துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு ஏற்படுத்திக் கொள்ள ஆர்மீனியா விருப்பம் தெரிவித்திருந்தது.அதன்படி விண்வெளி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான வரையறை, அரசாங்க அளவில் பரிசீலனைக்காக அளிக்கப்பட்டது. அதற்கு ஏப்ரல் 2017-ல் ஆர்மீனியா ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்தியக் குடியரசு அரசுக்கும், ஆர்மீனியக் குடியரசு அரசுக்கும் இடையில், விண்வெளியை அமைதிவழி தேவைக்காக பயன்படுத்துவதில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மதிப்புமிக்க இந்திய குடியரசு துணைத் தலைவரின் பயணத்தின்போது ஏப்ரல் 25, 2017 -ல் எரெவனில் கையெழுத்திடப்பட்டது.
*****