பி.எம்.இந்தியா
மத்திய அரசு பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உட்பிரிவை பரிசீலிப்பதற்கான ஆணையத்தின் பதவிக் காலத்தை
2-வது மற்றும் இறுதி முறையாக 2018 மார்ச் 27-ந் தேதிக்கு பிறகும் 12 வாரங்கள் – 2018 ஜூன் 20-ந் தேதி வரை நீட்டிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பின்னணி–
இந்த ஆணையம் அரசியல் சாசனத்தின் 340-வது ஷரத்தின் கீழ் 2017 அக்டோபர் 2-ந் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அமைக்கப்பட்டது. நீதிபதி (ஓய்வு) திருமதி. ஜி.ரோகிணி தலைமையிலான இந்த ஆணையம் 2017 அக்டோபர் 11-ந் தேதி முதல் தனது பணியைத் தொடங்கியது. மத்திய பட்டியலில் இடம் பெற்றுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்/சமுதாயங்களுக்கு உரிய விகிதாச்சாரப்படி நலன்கள் கிட்டியுள்ளனவா என்பதை அறிவதற்காக உட்பிரிவை கொண்டுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுடனும் மாநில பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆணையங்களுடனும் தொடர்பு கொண்டது.
மத்திய பட்டியலில் இடம் பெற்றுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் உயர் கல்வி நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள விவரங்கள், அரசுத் துறைகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் தேர்வு செய்யப்பட்ட புள்ளி விவரங்களை கேட்டுள்ளது.
துறைகளிடமிருந்து கிடைத்த ஏராளமான புள்ளி விவரங்களை அறிவியல் ரீதியாக ஆணையம் ஆய்வு செய்து ஒருங்கிணைந்த அறிக்கையை தயார் செய்வதற்காக அதன் பதவிக்காலத்தை 2018 ஜூன் 20-ந் தேதி வரை நீட்டிக்குமாறு கேட்டிருந்தது.
***