பி.எம்.இந்தியா

மாண்புமிகு வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசினா அவர்களே, மரியாதைக்குரிய விருந்தினர்களே, மாண்புமிகு முதல்வர், மேதகு ஆளுநர் மற்றும் நண்பர்களே!
பங்களாதேஷ் பவன் என்பது, இந்தியாவுக்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான பண்பாட்டுப் பிணைப்பின் ஒரு குறியீடாகும். இந்தக் கட்டிடமானது, இரு நாடுகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் கலை, மொழி, பண்பாடு, கல்வி, குடும்ப உறவுகள் ஆகியவற்றைக் குறிக்கும் ஆழ்ந்த உறவின் ஒரு குறியீடாகும். சித்திரவதைகளுக்கு எதிராக இணைந்து மேற்கொண்ட போராட்டங்களால் பலப்படுத்தப்பட்ட உறவை அது குறிக்கிறது. இந்தக் கட்டிட நிர்மாணத்திற்காக ஷேக் ஹசீனா அவர்களுக்கும் வங்காளத் தேச மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்தியா, வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் தேசிய கீதத்தை இயற்றித் தந்த குருதேவ் தாகூர் பணியாற்றிய பூமியில், புனித ரமலான் மாதத்தில் இந்தக் கட்டிடத்தைத் தொடங்கிவைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே,
இந்தப் பல்கலைக்கழகம், இந்தப் புனித பூமி ஆகியவற்றின் வரலாறு வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் சுதந்திரத்தை விடவும், காலனியச் சகாப்தத்தின்போதைய பிரிவினையை விடவும் பழமையானதாகும். அது ஆங்கிலேயர்களால் பிரிக்க முடியாத அல்லது ‘பிரித்தாளும் ‘ அரசியல் சூழ்ச்சியாலும் பிளவுப்படுத்த முடியாத நமது பின்னிப் பிணைந்த பாரம்பரியத்தின் ஓர் அடையாளமாகும். கங்கை நதியின் எண்ணிறந்த அலைகள் இரு நாடுகளின் கரைகளையும் ஆரத் தழுவுகின்றன. நமது ஒற்றுமைக் கூறுகள் நமது உறவைப் பலப்படுத்துகின்றன. வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்காளத் தேசத்தைப்போலவே இந்தியாவிலும் பெரிதும் போற்றப்படுகிறார். அதைப்போலவே, ஸ்வாமி விவேகானந்தர், சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி போன்ற மாபெரும் ஆளுமைகள் இந்தியாவைப் போலவே வங்காளதேசத்திலும் மதிக்கப்படுகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளும் பாடல்களும் வங்காளத் தேசத்தின் கிராமங்கள்தோறும் எதிரொலிக்கின்றன. அதைப்போல காஸி நஸ்ருல் இஸ்லாமின் பாடல்கள் மேற்கு வங்காளத்தின் மூலைமுடுக்கெல்லாம் பிரசித்தி பெற்றுள்ளன.
வங்காளத் தேசத்தின் பற்பல பிரமுகர்களின் பெயர்கள் இந்தப் பல்கலைக்கழகத்துடன் பின்னிப்பிணைந்தவை. ரெஸ்வானா சவுத்திரி பன்யா, அதிதி மோசின், லில்லி இஸ்லாம், லினா தபோஷி, ஷர்மிளா பானர்ஜி, நிஸார் ஹுசைன் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். ரவீந்திரநாத தாகூரின் தொலைநோக்கின் விளைவாக, இந்த நிறுவனமானது நமது அரசியல் எல்லைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு அப்பால் செயல்படுகிறது. குருதேவரே தன்னளவில் சுதந்திரச் சிந்தனையாளராக, எல்லைகள் எதற்குள்ளும் தம்மைக் குறுக்கிக் கொள்ளாதவராக இருந்தார். அவர் எந்த அளவுக்கு இந்தியாவைச் சேர்ந்தவரோ அந்த அளவுக்கு வங்காளத் தேசத்தைச் சேர்ந்தவராகவும் விளங்கினார். அவர் வங்காளத் தேச மண்ணில் ககன் ஹர்க்காரா, லாலன் ஃபகிர் ஆகியோரின் வங்காள நாட்டுப்புறப் பாடல்களுக்கு அறிமுகமானார். ‘அமர் சோனா பங்களா’ என்னும் அவருடைய பாடலின் இசைவடிவம் ககன் ஹர்க்காராவின் தாக்கத்தினால் விளைந்ததாகும். பவுல் பாடலின் செல்வாக்கை நாம் ரவீந்திரச் சங்கீதத்திலும் காணலாம். குருதேவரின் லட்சியங்களிலும் கலையிலும் வங்கபந்து பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். தாகூரின் உலகளாவிய மனிதநேயம் வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் மீது செல்வாக்கு செலுத்தியது. வங்கபந்துவின் கருத்தைக் கவரும் பேச்சுக்களில் குருதேவரின் ‘சோனார் பங்களா’ முக்கிய இடம் பெற்றது. தாகூரின் உலகளாவிய மனிதநேயம் என்னும் கருத்து நமக்கும் ஓர் ஆதர்சம் ஆகும். நம்முடைய வார்த்தைகளில் சொல்வதானால், நமது ‘அனைவரும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி’ என்னும் கருத்துருவில் அதனைப் பிரதிபலித்திருக்கிறோம்.
நண்பர்களே,
நாம் இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. என்றால் மட்டுமே எதிர்காலச் சந்ததியினர், இந்தியா மற்றும் வங்காளத் தேசம் ஆகிய நாடுகளின் இந்த மாபெரும் ஆளுமைகளால் உருவாக்கப்பட்ட பங்களிப்புகளையும் நமது செழுமையான பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் அறிந்துகொள்ள முடியும். இந்தியத் தூதரகம் போன்ற இது தொடர்பான அனைத்துத் துறைகளும், பிற அமைப்புகளும், தனிநபர்களும், இந்தியக் கலாச்சார உறவுக் குழு ஆகியவையும் இந்தப் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளன. இன்று, பங்களாதேஷ் பவன் இங்குத் தொடங்கப்பட்டுள்ளதால், வங்காளத் தேசத்தின் குஷ்தியா மாவட்டத்திலுள்ள குருதேவர் தாகூரின் இல்லமான “குதிபாரி” யைப் புதுப்பிக்கும் பொறுப்பை நாம் மேற்கொண்டுள்ளோம்.
நண்பர்களே,
ரவீந்திர சங்கீதத்தின் இனிமையும் இருநாட்டு மரபுரிமையும் நமது உறவை மகிழ்ச்சியின்போதும் துயரத்தின்போதும் பூந்தேனால் மணம் பரப்பிவைத்திருக்கிறது. இதன் காரணமாகவே, வங்காளத் தேசத்தின் விடுதலைப் போராட்டம் நமது எல்லைக்கு அப்பால் நடந்த ஒன்று என்ற போதும் இந்த நாட்டில் அதற்கான உத்வேகத்தின் விதைகள் விதைக்கப்பட்டன. எதிரிகளின் சுயநல எண்ணங்களால் வங்காளத் தேச மக்களுக்குக் காயங்கள் ஏற்பட்டன என்றாலும், இந்திய மக்களும் அதன் வலியை உணர்ந்தனர். அதனால்தான் வங்காளபந்து விடுதலையின் தலைவராக ஆனபோதும், அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் தாமாகவே தம்மை இணைத்துக்கொண்டனர். நமது ஒன்றிணைந்த தீர்மானமும் கொடுங்கோன்மை, பயங்கரம் ஆகியவற்றுக்கு எதிரான அதன் வரலாறும் இந்தக் கட்டிடத்தின் மூலமாக எதிர்காலச் சந்ததியினருக்குத் தொடர்ந்து உத்வேகத்தை ஊட்டும்.
நண்பர்களே,
கடந்த ஆண்டு தில்லியில் இந்திய ராணுவத்தினரை வங்காளத் தேசம் கவுரவித்தபொழுது அந்நிகழ்வு எவ்வளவு உணர்வு ததும்பியதாக இருந்தது என்பதை நான் நினைவுகூர்கிறேன். அது வங்காளத் தேச விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த 1,661 இந்திய வீரர்களுக்குக் கவுரவம் அளிக்கும் நிகழ்வாக மட்டும் அல்லாமல், வங்காளத் தேசத்தின் விடுதலைப் போராளிகள் ஒவ்வொருவரின் உணர்வுக் குவியலாகவும் விளங்கியது. அண்டை நாடுகள் இவ்வாறு பிறர் வீரர்களைக் கவுரவிப்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.
நண்பர்களே,
இந்திய, வங்காளத் தேச உறவுகளின் பொன் அத்தியாயங்கள் கடந்த சில ஆண்டுகளாக எழுதப்பட்டுவருகின்றன. ஒரு காலத்தில் தீர்க்க முடியாத பிரச்சினைகளாக நம்பப்பட்ட நில எல்லை, கடல் எல்லை போன்ற சிக்கலான இருதரப்புப் பிரச்சினைகள் இப்போது தீர்க்கப்பட்டுவருகின்றன. சாலைகள், ரயில்வே, உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் கடல்போக்குவரத்து ஆகிய இணைப்புத் துறையிலும் நாம் வேகமான முன்னேற்றத்தைக் கண்டுவருகிறோம். இணைப்பில் புதிய பரிமாணங்களும் முகிழ்த்துள்ளன.
கடந்த ஆண்டு குளிரூட்டப்பட்ட ரெயில் சேவை கொல்கத்தாவிற்கும் குல்னாவிற்கும் இடையில் தொடங்கப்பட்டது. நாம் அதற்குப் ‘பந்தன்’ என்று பெயரிட்டோம். அதற்கு ‘நட்பு’ என்று அர்த்தம். இந்தப் ‘பந்தனின் உதவியுடன் நமது உறவை நாம் மேம்படுத்துகிறோம்.
வங்காளத் தேசத்திற்குத் தடையற்ற மின்சாரத்தை இந்தியா வழங்கிவருகின்றது. தற்போது 600 மெகாவாட் வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு அதனை 1,100 மெகாவாட் ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
வடகிழக்கு இந்தியாவானது, வங்காளத் தேசத்திலிருந்து இணையத் தொடர்பையும் பெற்றுக்கொள்கிறது. வங்காளத் தேசத்திற்காகப் பிரதமர் ஷேக் ஹசீனா அமைத்துள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்தியா ஒரு பில்லியன் டாலர் தொகையைக் கடனாக அளித்துள்ளது. அதன் அமலாக்கத்தில் சிறந்த முன்னேற்றத்தைக் காணமுடிகிறது. திட்டங்கள் இனங்காணப்பட்டு, சில திட்டங்களுக்குக் கடனும் வழங்கப்பட்டுவருகிறது.
வங்காளத் தேசமானது விண்வெளித் துறையிலும் வேகமாக முன்னேறிவருகிறது. அண்மையில், வங்காளத் தேசம் அதன் முதல் செயற்கைக்கோளான பங்கபந்துவை ஏவியுள்ளது. இந்தச் சாதனைக்காக வங்காளத் தேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் வங்காளத் தேச மக்களையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இன்று, இந்தியாவில் நாங்கள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகவும், அமைப்பு முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவருகிறோம். எதிர்காலத்தில் விண்வெளித்துறையில் இரு நாடுகளும் புதிய ஒத்துழைப்புப் பாதைகளைக் கண்டடையும் என நான் நம்புகிறேன்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்குப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் நமக்கும் இடையிலான தொடர்ந்த கலந்துரையாடல் வழிவகுக்கும் என்பதில் நான் மகிழ்கிறேன். அவர் கடந்த ஆண்டும் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். இந்த நிகழ்வில் அவருடைய வருகை ஒரு கவுரமாகும்.
நண்பர்களே,
நமது விழைவுகளும் சவால்களும் ஒரே மாதிரியானவை. பருவநிலை மாற்றத்தின் சிக்கல் நம் முன் எழுந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயில் நம் முன் சவாலை எழுப்பும்பொழுது, அந்தச் சூரியனின் சக்தியிலேயே அதற்கான தீர்வும் அடங்கியுள்ளது. பிரதமர் ஷேக் ஹஸீனா ஆற்றலின் தொலைநோக்கை 2021 ஆம் ஆண்டில் பெறும் வகையில் வங்காளத்தேசத்தினர் அனைவருக்குமாக அளித்துள்ளார். நாம் நமது நாட்டிலுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் இலக்கை ஏற்கெனவே எட்டிவிட்டோம். நமது தீர்மானங்கள் ஒரே மாதிரியானவை, அவற்றை அடையும் வழியும் அப்படியே.
நண்பர்களே,
இந்தியா சர்வதேசச் சூரியசக்தி கூட்டணிக்கான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தக் கூட்டணியில் உலகின் பல நாடுகள் பங்கு பெற்றுவருகின்றன. இந்தக் கூட்டணியானது உலகின் சூரியசக்தித் திறனைக் கண்டறியும். பல்வேறு நாடுகளுக்கு அளிக்கும் ஏற்பாட்டையும் அது தயாரிக்கும். இந்தச் சூரியச் சக்திக் கூட்டணியில் வங்காளத் தேசமும் பங்கு வகிப்பதில் நான் மகிழ்கிறேன். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தில்லியில் சர்வதேசச் சூரியக் கூட்டணியின் உச்சி மாநாடு நடைபெற்றது. மாண்புமிகு வங்காளத் தேசப் பிரதமர் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. சவால்களை வாய்ப்புகளாக உருமாற்றுவதற்கு வலிமையான விருப்புடன் இரு நாடுகளும் ஒத்துழைப்பதை இது காட்டுகிறது.
கடந்த மாதம் நான் வங்காளத் தேசத்திலிருந்து வந்த நூறு உறுப்பினர்களைக் கொண்ட இளம் பிரதிநிதிக் குழுவினரைச் சந்தித்தேன். அவர்களின் கனவுகளும் விழைவுகளும் இந்திய இளைஞர்களுடயதைப் போன்றே இருந்ததை நான் உணர்ந்தேன். இரு நாட்டு இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் மேம்பாட்டிற்கு ஒன்றிணைந்து பாடுபட நாம் உறுதி பூண்டிருக்கிறோம்.
இன்று பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையில் வங்காளத் தேசம் வளர்ச்சியின் புதிய பாதையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. அவர் ‘வளரும் பொருளாதாரத்தின்’ ஓர் நிலையை எட்டுவதற்கான அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றியிருப்பதற்கு வங்காளத் தேச மக்களைப் போல இந்தியாவும் பெருமைப்படுகிறது.
வங்காளத் தேசம் சமூகத் துறையிலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஏழை மக்களின் வாழ்க்கையையும் எளிதாக்கியுள்ளது. இந்தக் குறிப்பிடத் தக்க பணி நமது நாட்டின் மக்களுக்கும் உத்வேகமூட்டும் என நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
இன்று, இந்தியா மற்றும் வங்காளத் தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தின் நூலிழையானது ஓர் அழகிய மாலையாகப் பின்னிப்பிணைந்துள்ளது. உலகின் சில பகுதிகளில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. உலகின் புவிசார் அரசியல் தொடர்ந்து மாறிவருகிறது. எப்படியாயினும், கடந்த சில ஆண்டுகளில் தயக்கமற்ற உண்மை ஒன்று நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னேற்றம், மேம்பாடு, அமைதி, நிலைத்த தன்மை ஆகியவற்றுக்கான இந்தியாவுக்கும் வங்காளத் தேசத்திற்கும் இடையிலான வலிமையான நட்பு தான் அது. இந்த ஒத்துழைப்பு இருதரப்பு அளவில் மட்டும் அல்லாது பிராந்திய முன்னேற்றம் மற்றும் இணைப்பை ஊக்குவிக்கும் பிம்ஸ்டெக் (பல்துறைத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவுக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி) போன்ற தளங்களின் மூலமும் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இந்தப் பகுதி வளர்ச்சி பெற்றால் ஒவ்வொரு நாடும் முன்னேறும். இந்தக் காலகட்டத்தில் ஒரு நல்வாய்ப்பாக அது நம்மை வந்தடைந்துள்ளது. இன்றைய தினம், இந்தியாவுக்கும் வங்காளத் தேசத்திற்கும் இடையிலான நெருக்கமான நட்பும் ஒத்துழைப்பும் மற்றவர்களுக்கு ஆய்வு செய்யவும் மதிப்பிடவும் கூடிய ஒரு பாடமாகவும் இருக்கிறது.
நண்பர்களே,
2041 ஆம் ஆண்டுவாக்கில் வங்காளத் தேசத்தை ஒரு வளர்ச்சி பெற்ற நாடாக ஆக்க பிரதமர் ஷேக் ஹசீனா ஒரு தொலைநோக்கை அமைத்துள்ளார். இந்தத் தொலைநோக்கு அவருடைய தீர்க்கதரிசனத்திற்கும் ஒவ்வொரு வங்காளத் தேசக் குடிமகனின் நலம் தொடர்பாகப் பங்கபந்து அமைத்துத் தந்த பாரம்பரியத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த இலக்கை எட்டுவதில் இந்தியா முழு ஒத்துழைப்பையும் நல்கும்.
இங்கு வருகை தந்திருப்பதற்கு ஷேக் ஹசீனா அவர்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை என் இதயம் கனிந்த நன்றியைத் தெரியப்படுத்துகிறேன். பங்களாதேஷ் பவனின் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள். நன்றி.
PM Sheikh Hasina and I inaugurated the Bangladesh Bhavan at the Visva-Bharati University. The previous few years have been marked by a historic growth and strengthening of India-Bangladesh relations. This augurs well for the people of both nations. pic.twitter.com/XY6ozfRWQP
— Narendra Modi (@narendramodi) May 25, 2018
Bangladesh Bhavan is a symbol of the warm and deep-rooted cultural ties between India and Bangladesh. pic.twitter.com/Ssn2OXIjwJ
— Narendra Modi (@narendramodi) May 25, 2018
Gurudev Tagore connects India and Bangladesh.
— Narendra Modi (@narendramodi) May 25, 2018
Bangabandhu Sheikh Mujibur Rahman was greatly inspired by the teachings of Gurudev Tagore. pic.twitter.com/KKYJtkZB1U