Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐ.நா. சூழல் திட்டத்தின் சிறந்த புவிக் காவலர் விருது வழங்கும் விழாவில் பிரதமரின் உரை

ஐ.நா. சூழல் திட்டத்தின் சிறந்த புவிக் காவலர் விருது வழங்கும் விழாவில் பிரதமரின் உரை

ஐ.நா. சூழல் திட்டத்தின் சிறந்த புவிக் காவலர் விருது வழங்கும் விழாவில் பிரதமரின் உரை

ஐ.நா. சூழல் திட்டத்தின் சிறந்த புவிக் காவலர் விருது வழங்கும் விழாவில் பிரதமரின் உரை


ஐ.நா. மன்றத்தின் தலைமைச் செயலர் மேதகு ஆண்டனியோ குட்ரஸ் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், டாக்டர் ஹர்ஷ்வர்தன், டாக்டர் மகேஷ் சர்மா, ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் (United Nations Environment Programme) செயல் இயக்குநர் திரு. எரிக் சோல்ஹைம் அவர்களே, நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்துள்ள பிரமுகர்களே!

பெரியோர்களே, தாய்மார்களே,

இந்த கவுரவத்தை அளித்ததற்காக ஐநா மன்றத்துக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த நிகழ்ச்சி இந்திய மண்ணில் நடைபெறுவது குறித்து பெருமைப்படுகிறேன். ஐ.நா. தலைமைச் செயலர், எரிக் சோல்ஹைம் மற்றும் குழுவினர் வந்து கலந்து கொள்வது குறித்தும் பெருமைப்படுகிறேன். ஏற்கனவே நான் கூறியதைப் போன்று, இது இந்தியாவின் 125 கோடி மக்களின் உறுதிப்பாட்டின் விளைவுதான். புவிப் பாதுகாவலர் விருதுகள், பாரம்பரியம் மிக்க இந்தியாவுக்குக் கிடைத்துள்ள கவுரவம் ஆகும். இந்தியா இயற்கையைக் கடவுளாகப் போற்றுகிறது. இயற்கையின் படைப்புகளான நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு ஆகிய ஐம்பூதங்களில் கடவுளைக் கண்டு வழிபட்டு வருகிறது.

இது இந்திய வனங்களில் வசித்துக் கொண்டு, காடுகளைத் தங்களது வாழ்க்கையை விட மேலாகக் கருதி வாழும் பழங்குடியின சகோதர சகோதரிக்களுக்குக் கவுரவம் அளிப்பதாகும். இது நமது ஆறுகளிலிருந்து தேவையானவற்றை மட்டும் தங்களது வாழ்வாதாரத்துக்கு எடுத்துக் கொண்டு வாழும் இந்திய மீனவர்களுக்கு உரிய கவுரவம் ஆகும். இத்தகைய மனிதர்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ படித்திருக்காவிட்டாலும், மீன்களின் இனப் பெருக்க காலத்தில் கடலுக்குச் சென்று மீன் பிடிக்காமல் இருக்கிறார்கள்.

இந்த விருது கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளுக்கு உரியது. அவர்களது வாழ்க்கையோடு பருவ காலமும் பின்னிப் பிணைந்ததாக உள்ளது. அவர்கள்தான் மண்ணைத் தங்களது உயிரை விட மேலானதாக நேசிக்கிறார்கள்.

இந்த விருது இந்தியப் பெண்மணிக்கு உரியது. அவர்கள்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக பொருட்களை மறுசுழற்சி செய்கிறார்கள். மறுபயன்பாடு செய்கிறார்கள். அவர்கள்தான் செடிகொடி, மரங்களைத் தெய்வங்களாக வழிபடுகிறார்கள். அவர்கள்தான் துளசியைச் சரியாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள்தான் தானியங்களை எறும்புகளுக்கும் போடுவது புண்ணியமாகக் கருதி செயல்படுகிறார்கள்.

இந்த விருது இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்றுவதற்காக, வாழ்க்கையையே தியாகம் செய்த முகமறியாத மனிதர்களுக்கு உரியது. ஏதோவொரு கிராமத்தில், மலையில், காட்டில் எந்த ஆதாயமும் இழப்பும் பார்க்காமல், எந்த மகிழ்ச்சியையும் வளத்தையும் கவனிக்காமல், தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்போருக்கு உரியது இந்த விருது.

இந்தச் சிறப்புக்கு உரிய கவுரவத்துக்காக உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த நிகழ்வு இந்தியாவுக்கு இரு கவுரவங்களைப் பெற்றுத் தந்துள்ளது. ஒன்று கொச்சி விமான நிலையத்திற்கு விருது கிடைத்துள்ளது. நீடித்த எரிசக்திக்காக நாம் காட்டும் உறுதிப்பாட்டின் அடையாளம். இந்தச் சூழலில் இத்தகைய சிறப்பு விருதுகளைப் பெறும் இதர நாடுகளைச் சேர்ந்த எனது சகாக்களுக்கும் நிறுவனங்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

சுற்றுச்சூழல், இயற்கை குறித்து பேசும்போது, இந்திய தத்துவத்தை இணைத்துப் பேசுகிறேன். காரணம், பருவ நிலையும், இயற்கைப் பேரிடரும் நமது பண்பாட்டுடன் இணைந்தவை.

இன்று, சுற்றுச்சூழல் குறித்த இந்தியாவின் கவலைகளை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும், ஏற்கெனவே நான் கூறியதைப் போல் நான்காயிரம் ஆண்டுகளாக இது நமது வாழ்வியலுடன் கலந்துவிட்டது. இதைத்தான் நமது அமைச்சர் திருமதி சுஷ்மா சற்று நேரம் முன்பு குறிப்பிட்டார். காலையில் கண் விழித்தவுடன் செய்த, செய்கிற, செய்யப் போகிற காரியங்களுக்காக பூமித் தாயிடம் மன்னிப்புக் கேட்கிறோம். அந்தப் பூமித் தாயை மிதித்தபடிதான் செயல்படுகிறோம். நமது சுமைகளை ஏற்றப் போகிறோம்.

நம் பாரம்பரியத்தில் சம்ஸ்கிருத மொழி சுலோகம் உண்டு:

ஸமுத்ர வஸனே தேவி பர்வத ஸ்தான மண்டேதே

விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்ஸம் க்ஷமஸ்வா மே

இதன் பொருள், “ஓ, பூமாதேவியே, விஷ்ணுவின் மனைவியே, கடலையே சேலையாகவும், மலைகளையே உடலாகவும் கொண்டிருக்கிறாய், உனக்குத் தலை வணங்குகிறேன். உன் மீது என் காலைப் பதிப்பதற்கு மன்னித்தருள்வாய்!” என்பது ஆகும்.

இந்த உணர்வு நமது வாழ்வின் ஓர் அங்கமாகும். செடிகளையும் மரங்களையும் வழிபடுவது, பருவ காலங்களைக் கொண்டாடுவது, விரதங்கள் இருப்பது, பண்டிகைகள், இயற்கை சார்ந்து வாழ்வு என பல வழிகளில் இயற்கையை ஓர் உயிரினமாகக் கருதிப் போற்றி வருகிறோம். அதை ஓர் உயிரினமாக மட்டும் கருதுவதில்லை. நமது வாழ்வின் ஓர் அங்கமாக கருதுகிறோம். இயற்கையோடு நாம் கொண்டிருக்கும் உறவினால், பிரபஞ்சமே நன்றாக இருக்க வேண்டும் என்று கருதுவது நமது பாரம்பரியமாகும்.

இதையே யஜுர்வேதம் கூறுகிறது:

ஓம், தய்யா ஸாந்தி அந்தரிக்ஷம் சாந்தி,

ப்ருத்வி சாந்தி, ரப் சாந்தி ரோஷதயா சாந்தி,

வனஸ்படாயா சாந்திர், விஷ்வே தேவே சாந்தி,

பிரம்மம் சாந்தி, சர்வம் சாந்தி,

ஷந்திரேவ் சாந்தி, சா ம சாந்தி ரேதி

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி

 

நண்பர்களே,

கடவுளை வேண்டுவதாக அமைந்த இந்த சுலோகம், “காற்றில் அமைதி நிலவட்டும்; விண்வெளியில் அமைதி நிலவட்டும்; பூமியில் அமைதி நிலவட்டும்; தண்ணீரில் அமைதி நிலவட்டும்; தாவரங்களிலும், மூலிகைகளிலும் அமைதி நிலவட்டும்; மரம், செடி, கொடிகளிலும் அமைதி நிலவட்டும்; உலகில் அமைதி நிலவட்டும்; எல்லா கடவுளரும் அமைதி கொள்ளட்டும்” என்று வேண்டுகிறது.

நமது பாரம்பரியத்தில், வேள்வியோ, சடங்கோ உலக அமைதியை வேண்டும் சுலோகங்கள், பிரார்த்தனைகள் இல்லாமல் நிறைவு பெறுவதில்லை. மேலும், கடவுளே தன்னை அறிமுகம் செய்து கொள்வதாக அமையும் சுலோகத்தில், “நானே ஏரி, நானே நதி, நானே கடல்” (ஸ்ரோதஸ்ய அஸ்மி ஜானவி சன்சார் ஆஸ்மி சாகர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய காரணங்களால்தான் எனக்கு இந்த நிகழ்ச்சியில் தரப்படும் விருதினை இந்திய மக்களுக்காக அளிக்கப்பட்டதாகக் கருதி போற்றுகிறேன்.

நண்பர்களே,

இன்று இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வறுமையின் பிடியிலிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்த வளர்ச்சி மேலும் வேகமாக வேண்டும் என்பதில் உறுதிபூண்டுள்ளோம். இது யாருடனோ போட்டியிடுவதற்காகவோ, பொருளாசைக்காகவோ அல்ல. நம் நாட்டின் ஒரு பகுதி மக்கள் வறுமையில் தத்தளிக்க விட முடியாது என்பதுதான் காரணம். அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையைத் தர வேண்டியது நமது கடமையாகும்.

பல நாடுகளில் உள்ள மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால், அவர்கள் மிகுந்த கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். வறுமையும் வெள்ளமும் ஆண்டுதோறும்  அதிகரித்து வருகிறது. இவற்றினால், வறுமையில் சிக்கியுள்ள மக்கள், தேவைகள் போதாமல் வாடுகிறார்கள்.  அதனால்தான், இயற்கைக்கு அதிக ஊறு நேராமல் ஏராளமான மக்களையும் இணைத்துக் கொண்டு வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவர்களது கரங்களைப் பற்றிக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

அதனால்தான், பாரீசில் நடைபெற்ற மாநாட்டிலும் இத்தகைய நிலையை ஆதரித்தேன். கால நிலைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை வலியுறுத்தும் வகையில் ‘பருவ நீதி’ என்று உலகத்தின் முன் வலியுறுத்தினேன். இந்தப் பருவ நீதியைக் கடைப்பிடிக்காமல் பருவ மாற்றங்களை எதிர்கொள்ள முடியாது. இத்தகைய சூழ்நிலையைக் கடந்து வரவும் முடியாது. பாரிஸ் உடன்பாட்டில் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது குறித்தும் பருவ நீதியைக் கடைப்பிடிப்பதற்கான உறுதி குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனினும், இவையெல்லாம் நிறைவேறுவதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. அதையும் வேகமாகச் செய்ய வேண்டியுள்ளது.

மேதகு ஆண்டனியோ குட்ரஸ் காலத்தின் தேவையை ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். நீடித்த வளர்ச்சி நடைமுறைக்கு வருவற்காகவும், ஜப்பான் நாட்டின் க்யோட்டோ நகரில் கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகளைக் (Kyoto Protocol) கடைப்பிடிப்பதில் உறுதி பூண்டுள்ளதற்காகவும்   அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகளை வரவேற்கிறேன்.

அதனால்தான் “அனைவரும் இணைவோம், அனைவரும் வளர்வோம்” (Sabka Satha, Sabka Vikas) என்ற பாதையில் இந்தியா முன்னேறிக் கொண்டு வருகிறது. அனைவரும் வளர்ச்சி காண்போம் (Sabka Vikas) என்று நான் குறிப்பிட்டால், அதில் இயற்கையும் அடங்குகிறது என்பது பொருள். அனைவரும், அதாவது இந்தியாவின் 125 கோடி மக்களும் இதில் முனைப்போடு தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நமது பொருளாதாரத்துக்கு கிராமங்களும் நகரங்களும் மிக முக்கியமானவை. நம் நாட்டில், பெரும்பாலான வேலைவாய்ப்புகள் கிராமங்களையும் விவசாயத்தையும் சார்ந்தவை. நமது நகர்ப்புறங்கள் உற்பத்தித் தொழில்களையும், சேவைத் தொழில்களையும் சார்ந்தவை. அதனால், ஒட்டுமொத்த அணுகுமுறையை அரசு கடைப்பிடித்து வருகிறது.

நாட்டில் தற்போதும், எதிர்காலத்திலும் ஒவ்வொரு அரசும் தனது கொள்கையை தூய்மையான, பசுமையான சூழலைச் சார்ந்ததாகவே அமைத்துக் கொள்ளவேண்டும்.

நண்பர்களே,

நமது கிராமங்கள் எப்போதும் இயற்கை குறித்தே கவனத்தில் கொள்கின்றன. இயற்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் நம் நாட்டின் கிராமப்புறங்கள் பெரிதாக விரிவடைந்துள்ளன. ‘குப்பையிலிருந்து செல்வம்’ (waste to wealth), உயிரிக் கழிவுகளிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் முறையை ஒட்டிய ‘குப்பையிலிருந்து மின்சாரம்’ (waste to energy) ஆகிய திட்டங்கள் கிராமங்களில் செயல்படுத்தப்படுகின்றன. அதைப் போல் சொட்டுநீர்ப் பாசனத்தை வலியுறுத்தும் வகையில் ‘துளி நீரில் அதிக பயிர்’ (More crop Per Drop) என்ற திட்டத்துக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக மண் ஆரோக்கிய அட்டைகள் (Soil heath Cards) வழங்கப்படுகின்றன.

இவையெல்லாம், நமது மண்ணும், நீரும் விஷத்தன்மை கொண்ட ரசாயனத் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்க உதவுகின்றன. நீரையும் மண்ணையும் முறையாகப் பயன்படுத்தவும் துணை புரிகின்றன. அதே சமயம் தொழில், உற்பத்தி ஆகியவற்றில் சிறிதும் பாதிப்போ, தீங்கோ நேராமல் (Zero Defect and Zero Effect) இருப்பதை வலியுறுத்துகிறோம். வேளாண் குறித்துப் பேசும்போது, ‘துளி நீரில் அதிக பயிர்’ (More crop Per Drop) என்பதை வலியுறுத்துகிறோம்.

நண்பர்களே,

இன்றைய இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி வேகமாகிக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நகர்ப்புற வாழ்வு பொலிவான மற்றும் நிலையானதாக (smart and sustainable) இருப்பதை வலியுறுத்துகிறோம்.

இன்றைக்கு, நாட்டில் புதிய தலைமுறையினருக்குத் தேவையான கட்டமைப்பு, நீடித்த சுற்றுச்சூழல், அனைத்தும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய நோக்கங்களின் அடிப்படையில்தான் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, நாடு முழுதும் 100 பொலிவுறு நகரங்களை உருவாக்கி மேம்படுத்துவதற்கான பணி, வேகமாக நடைபெற்று வருகிறது. பொலிவுறு நகரங்களுக்குத் தேவையான சேவைகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்காக உள்ளூர் மக்கள் அளித்த யோசனைகளின்படி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆகிய முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளும் அதிவிரைவு நெடுஞ்சாலைகளும் சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளுடன் பசுமை வழிச் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. புதிய நெடுஞ்சாலைத் திட்டங்களுடன் உருவாகி வரும் இதர சேவைகளுக்குமான சூரியமின்சக்தி உள்பட  அனைத்து எரிசக்தித் தேவைகளையம் பூர்த்தி செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மெட்ரோ ரயில் போக்குவரத்து போன்ற நகர்ப்புற போக்குவரத்துக்கு சூரிய சக்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரயில்போக்குவரத்துக்கு டீசல், நிலக்கரி போன்ற புதைபடிம எரிமங்களின் (fossil fuels) பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்படும்.

நண்பர்களே,

இந்தியாவில் இன்றைக்கு எரிசக்தி மற்றும் நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. வீடுகள் தொடங்கி தெருக்கள் வரையிலும்; அலுவலகங்கள் தொடங்கி வீதிகள் வரையிலும்; துறைமுகங்கள் தொடங்கி விமான நிலையங்கள் வரையிலும் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை மிச்சப்படுத்த எல்இடி விளக்குகள் போன்றவையும், தண்ணீர் சேமிப்புக்கு மழைநீர் சேகரிப்பு போன்ற தொழில்நுட்பமும் அதிகரித்து வருகிறது.

இது மட்டுமல்ல, சமையலறைக் கழிவுகளை போக்குவரத்துக்கும் எரிபொருளுக்கும் பயன்படுத்துவது குறித்த பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளாக 10 கோடிக்கு மேற்பட்ட வீடுகளுக்கு எல்பிஜி எனப்படும் சமையல் எரிவாயு இணைப்புகள் அளிக்கப்பட்டுவிட்டன. அத்துடன் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 5 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இல்லங்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

வீடுகளில் புகையில்லாத நிலையை உருவாக்குவதுடன் காற்று மாசையும் கட்டுப்படுத்துவதற்காக, தேசிய தூய காற்றுத் திட்டத்தை (National Clean Air Programme) செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் மாசைக் கட்டுப்படுத்தவும் வாகன மாசுத் தரத்துக்கான அளவை  BS-4 என்பதிலிருந்து BS-6 ஆக உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இன்றைக்கு, வாழ்க்கையை எளிதாக்குவதில் இந்தியா கவனம் செலுத்தி வரும் நிலையில், எல்லோருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம், உணவு, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய இலக்குகளை அடைவதற்கு விழிப்புடன் செயல்பட்டு வருகிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் வாகன மாசு அளவில் 20 முதல் 25 சதவீதம் குறைப்பதற்கும், 2030ம் ஆண்டில் 30 முதல் 35 சதவீதம் வரையில் குறைப்பதற்கும் முயன்று வருகிறோம். இவை எல்லாவற்றிலும் மகத்தான வெற்றியைக் காண்போமானால், மக்களின் நடவடிக்கை, எண்ணப் போக்கு ஆகியவற்றின் மாற்றங்களே அதற்கு காரணமாக இருக்கும்.

இந்த நம்பிக்கையோடு, சுற்றுச்சூழல் சார்ந்த நமது செயல்களுக்கான அணுகுமுறையும் வலுப்பெற்று வருகிறது.

அதன் காரணமாக, 2022ம் ஆண்டில் பிளாஸ்டிக் இல்லாத நிலையை இந்தியா எட்டுவதற்கு வழியேற்படும்.

இந்தியா மகாத்மா காந்தியிடமிருந்து உந்துதலைப் பெறுவதன் மூலம் இந்த எண்ணங்களைச் செயல்வடிவமாக்கும் என்பதிலும், அதன் அடிப்படையில் உலகுக்கே வழிகாட்டியாகத் திகழும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது.

இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரித்து கவுரவித்ததற்காக ஐ.நா. மன்றத்துக்கு மீண்டும் ஒரு முறை நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் அனைவரும் இந்த முக்கியமான நிகழ்வில் உங்களது நேரத்தை ஒதுக்கி பங்கேற்றிருக்கிறீர்கள். எதை நோக்கி நகர்கிறோமோ அந்த இலக்குகளை அடைவதற்கான எந்த சிறிய முயற்சியும் வீணாகாமல் பார்த்துக் கொள்வது எனது தனிப்பட்ட கடமையாகும். எங்களை ஊக்கப்படுத்துவதற்காக உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

 

 

            ***